கடலை எண்ணெயை விட தேங்காய் எண்ணெய், நெய் பயன்படுத்துவோருக்கு 'கெட்ட கொலஸ்ட்ரால்' அதிகமா?

தேங்காய் எண்ணெய், ஆரோக்கியம், ஐசிஎம்ஆர், இதய நோய்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சமீப காலமாக தேங்காய் எண்ணெய்க்கு கிடைக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது. சமையலுக்கு 'தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது ஆரோக்கியமானது' போன்ற கருத்துகளை கேட்க முடிகிறது.

'கீட்டோ, பேலியோ' போன்ற உணவுமுறைகளில் தேங்காய் எண்ணெய்க்கு பிரத்யேக இடம் உள்ளது.

இந்நிலையில் தான், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஎம்ஆர்) ஆய்வு ஒன்று தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் பயன்பாடு தொடர்பான விவாதங்களை எழுப்பியது.

கடலை எண்ணெயுடன் ஒப்பிடும்போது தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் பயன்படுத்துபவர்களிடம் அதிக எல்.டி.எல் கொலஸ்ட்ரால் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என அந்த ஆய்வு கூறுகிறது.

எல்.டி.எல் (குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன்) கொலஸ்ட்ரால் என்பது 'கெட்ட கொலஸ்ட்ரால்' என்றும் அழைக்கப்படுகிறது.

'எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது' என அமெரிக்காவின் தேசிய பொது சுகாதார நிறுவனமான சிடிசி கூறுகிறது.

ஐசிஎம்ஆர் ஆய்வு என்ன சொல்கிறது?

தேங்காய் எண்ணெய், ஆரோக்கியம், ஐசிஎம்ஆர், இதய நோய்
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இந்திய நீரிழிவு நோய் ஆய்வுத் திட்டமான 'ICMR-INDIAB' ஆய்வில் பங்கேற்ற 18,090 பேரின் தரவுகள் இந்த ஆய்வில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அவர்களின் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட வளர்சிதை மாற்றம் தொடர்பான அளவுகளுடன் ஒப்பிடப்பட்டன.

கடலை எண்ணெயைப் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது, மற்ற எண்ணெய்களைப் பயன்படுத்துபவர்களிடம் அதிக எல்.டி.எல் கொலஸ்ட்ரால் இருப்பதற்கான வாய்ப்புகள் பின்வருமாறு இருந்தன.

  • தேங்காய் எண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு 2.89 மடங்கு அதிக வாய்ப்பு.
  • நெய் அல்லது வெண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு 3.45 மடங்கு அதிக வாய்ப்பு.
  • சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு 1.49 மடங்கு அதிக வாய்ப்பு.
  • சோயா எண்ணெய் பயன்படுத்துபவர்களுக்கு 1.81 மடங்கு அதிக வாய்ப்பு.
  • பாமாயில் பயன்படுத்துபவர்களுக்கு 1.77 மடங்கு அதிக வாய்ப்பு.

இந்த ஆய்வு குறித்து விளக்கும் நீரிழிவு நோய் மருத்துவர் மோகன், "நிறையப் பேர் தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது, ஆயுளை நீட்டிக்கும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், அதற்கான தரவுகள் தெளிவாக இல்லை" என்கிறார்.

"நாங்கள் சமீபத்தில் செய்த ஐசிஎம்ஆர் இன்டியாப் ஆய்வைப் பார்த்தால், தமிழ்நாட்டில் அவ்வளவாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. கேரளம், கோவா போன்ற பகுதிகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய கொலஸ்ட்ரால் தமிழ்நாட்டை விடச் சராசரியாக 40 முதல் 50 மில்லிகிராம் அதிகமாக இருக்கிறது. இதற்கு எளிய விளக்கம் தேங்காய் எண்ணெய்தான்" என்றும் அவர் கூறுகிறார்.

அதேசமயம், "நீங்கள் தேங்காய் எண்ணெய் சாப்பிடவே கூடாது, இது மிகவும் ஆபத்து என்றெல்லாம் சொல்ல மாட்டேன். உங்களுக்குத் தேங்காய் எண்ணெய்தான் பிடிக்கும் என்றால் கொஞ்சம் குறைவாகப் பயன்படுத்துங்கள்" என்கிறார் மருத்துவர் மோகன்.

இந்த ஆய்வு நெய், தேங்காய் எண்ணெய் மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று நிரூபிக்கிறதா?

தேங்காய் எண்ணெய், ஆரோக்கியம், ஐசிஎம்ஆர், இதய நோய்
படக்குறிப்பு, மருத்துவரும் உணவு ஆலோசகருமான அருண்குமார்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த ஆய்வு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மக்களின் உணவுப் பழக்கங்களையும் அவர்களுடைய உடல்நல அளவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது.

இந்த ஆய்வு ஒரு தொடர்பைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், குறிப்பிட்ட எண்ணெய் நேரடியாக மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்று நிரூபிக்கவில்லை.

இது குறித்துப் பேசும் மருத்துவரும் உணவு ஆலோசகருமான அருண்குமார், "இந்த ஆய்வில் அனைவரிடமும் 14 கேள்விகள் கொண்ட ஒரு கணக்கெடுப்பு எடுத்துள்ளார்கள். 'நீங்கள் எந்த எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள்? தோராயமாக எவ்வளவு அளவு பயன்படுத்துவீர்கள்? வேறு ஏதாவது வெளியில் சாப்பிடுவீர்களா?' என்பது போன்ற சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, அவர்களுக்கு ஒருமுறை கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்கிறார்கள். அவர்கள் சொன்ன பதில்களுக்கு ஏற்ப அதை ஒப்பிட்டுப் பார்த்துள்ளார்கள்" என்கிறார்.

"கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களில் எத்தனை பேர் இந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள், எத்தனை பேர் அந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள் என்பது மட்டுமே இதன் அடிப்படை. இந்த ஆராய்ச்சியில் நமக்கு அடிப்படையாகத் தெரிய வேண்டியது 'மாரடைப்பு குறைகிறதா?' என்பதுதான். ஆனால் அதை இந்த ஆராய்ச்சியில் பார்க்கவே இல்லை" என்கிறார் அவர்.

தேங்காய் எண்ணெய், நெய்யில் உள்ள நிறை கொழுப்புகள்

தேங்காய் எண்ணெய், ஆரோக்கியம், ஐசிஎம்ஆர், இதய நோய்
படக்குறிப்பு, நீரிழிவு நோய் மருத்துவர் மோகன்

நாம் உணவில் எடுத்துக்கொள்ளும் கொழுப்புகளைப் பொதுவாக நிறை கொழுப்புகள் (சாச்சுரேட்டட்), நிறைவுறா கொழுப்புகள் (அன்சாச்சுரேட்டட்) எனப் பிரிக்கலாம்.

நிறைவுறா கொழுப்புகளில் ஒற்றை நிறைவுறா கொழுப்புகள் (மோனோ அன்சாச்சுரேட்டட்), பல்நிறைவுறா கொழுப்புகள் (பாலி அன்சாச்சுரேட்டட்) என இரண்டு வகைகள் உள்ளன.

தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய், பாமாயில் ஆகியவற்றில் நிறை கொழுப்புகள் அதிகம் உள்ளன.

உதாரணத்திற்கு, நெய்யில் 60% -65% நிறை கொழுப்பு, 20%-25% மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, 3%-4% பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் சில வைட்டமின்கள் உள்ளன.

தேங்காய் எண்ணெய் 100% கொழுப்பால் ஆனது, அதில் 80-90% நிறை கொழுப்பாகும்.

நிறை கொழுப்புகளை அதிகமாக எடுத்துக்கொள்வது எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடும் என்பது சில ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

"இந்த நிறை கொழுப்புகளில் கண்டிப்பாகக் கொலஸ்ட்ராலை ஏற்றக்கூடிய சக்தி இருக்கிறது" என்கிறார் மருத்துவர் மோகன்.

அவர் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளைச் சிறந்த தேர்வுகளாகக் குறிப்பிடுகிறார்.

"முதலில் கடலெண்ணெய், அதற்கு மிக நெருக்கமாக இரண்டாவதாக நல்லெண்ணெய் வரும். இவை இரண்டிலும் பெரும்பாலும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு தான் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்; மேலும் நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் எச்.டி.எல் கொலஸ்ட்ராலை உயர்த்தும்" என்கிறார் அவர்.

"இந்தியாவின் வடக்கு, கிழக்கு பக்கம் சென்றீர்களானால் கடுகு எண்ணெய் என்று ஒன்று இருக்கிறது. அது கிட்டத்தட்ட நம் கடலெண்ணெய் போல மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு தான். அங்கு அதைத்தான் பயன்படுத்துவார்கள்" என அவர் குறிப்பிடுகிறார்.

அதேபோல, "சூரியகாந்தி எண்ணெய், சஃப்ளவர் எண்ணெய் (Safflower oil) ஆகியவை பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளில் அடங்கும். இதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும் என்பதில் சந்தேகமே கிடையாது" என்கிறார்.

நெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்குமா?

தேங்காய் எண்ணெய், ஆரோக்கியம், ஐசிஎம்ஆர், இதய நோய்
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

"நிறை கொழுப்புகள் சிறிதளவில் எல்.டி.எல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கலாம்; ஆனாலும் வேறு பல நல்ல மாற்றங்களையும் உண்டாக்கும். தேங்காய் எண்ணெய் எல்.டி.எல் கொலஸ்ட்ராலைச் சிறிது அதிகரித்தாலும், எச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்கும்" எனக் கூறுகிறார் மருத்துவர் அருண்குமார்.

அதேபோல, "நெய்யிலும் உள்ள குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் (Short-chain fatty acids) வயிற்றில் உறிஞ்சப்பட்டுச் சில ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன. எனவே, சிறிதளவு கொலஸ்ட்ரால் அதிகமாவதை மட்டும் வைத்துக்கொண்டு இது நேரடியாக மாரடைப்பை அதிகரிக்கிறது என்று முடிவுக்கு வரக்கூடாது" என்றும் அவர் கூறுகிறார்.

2020-ஆம் ஆண்டு 'Circulation' இதழில் வெளியான ஓர் ஆய்வு, தேங்காய் எண்ணெய் குறித்த 16 மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளை ஒருங்கிணைத்துப் பகுப்பாய்வு செய்தது.

இதில், மற்ற தாவர எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தியவர்களின் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் சராசரியாக 10.47 மி.கி./டெசிலிட்டர் அதிகரித்திருந்தது. அதே நேரத்தில் எச்.டி.எல் கொலஸ்ட்ரால் 4 மி.கி./டெசிலிட்டர் அதிகரித்திருந்தது.

அதேபோல, 2020-ஆம் ஆண்டு வெளியான கொக்ரேன் ஆய்வு (Cochrane Review), நிறை கொழுப்புகளைக் குறைப்பதால் இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகிறதா என்பதை ஆராய்ந்தது.

15 ஆய்வுகளில் பங்கேற்ற 56,000-க்கும் மேற்பட்டவர்களின் தரவுகள் இதில் மதிப்பாய்வு செய்யப்பட்டன.

இதில், நிறை கொழுப்புகளைக் குறைப்பதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இதய ரத்தநாள நோய் நிகழ்வுகள் 17 சதவீதம் குறைந்ததாகக் கண்டறியப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை.

"அதாவது, மாரடைப்பினால் இறந்து போவதற்கான சதவீதமோ, ஒட்டுமொத்த இறப்பு விகிதமோ நெய், தேங்காய் எண்ணெய் போன்ற நிறை கொழுப்புகளை அதிகம் எடுப்பவர்களுக்கு அதிகமாகவில்லை என்பது அந்த ஆய்வில் தெரியவந்தது" என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

தேங்காய் எண்ணெய், ஆரோக்கியம், ஐசிஎம்ஆர், இதய நோய்
படக்குறிப்பு, 'கேரளத்தில் தேங்காய் எண்ணெயை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்'

எல்.டி.எல் கொலஸ்ட்ரால் ஏன் முக்கியம்?

எல்.டி.எல் ரத்தத்தின் வழியாகக் கொலஸ்ட்ராலை உடலின் பல்வேறு செல்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு வகை லிப்போபுரோட்டீன் துகள்.

நமது உடலின் செல்கள் செயல்படக் கொலஸ்ட்ரால் அவசியம். செல்களின் வெளிப்புறச் சவ்வு உருவாகவும் சில ஹார்மோன்கள் உற்பத்தியாகவும் இது தேவைப்படுகிறது.

ஆனால், ரத்தத்தில் எல்.டி.எல் துகள்கள் அதிகமாக இருக்கும்போது, அவை ரத்த நாளங்களின் சுவர்களில் கொழுப்புப் படிவங்கள் உருவாகக் காரணமாகின்றன. இதனால் ரத்த நாளங்கள் குறுகி, இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம்.

இதன் காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

2017-ஆம் ஆண்டு 'European Heart Journal' இதழில் வெளியான ஐரோப்பிய அதிரோஸ்கிளிரோசிஸ் சங்கத்தின் ஆய்வறிக்கை, பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் எல்.டி.எல் கொலஸ்ட்ராலுக்கும் இதய ரத்தநாள நோய்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தியது.

"எல்.டி.எல் என்பது புரதம்; அதிலுள்ள கொலஸ்ட்ரால் செறிவைத்தான் நாம் 'எல்.டி.எல்-சி' (LDL-C) என்று அளவிடுகிறோம். இது மிகவும் அதிகமாக இருந்தால் (உதாரணமாக, பரம்பரை ஹைப்பர் கொலஸ்ட்ராலீமியா போன்ற நிலைகளில் 190, 200 என்று மிக அதிகமாக இருக்கும்போது) சில சமயங்களில் மாரடைப்பு வருவதற்கான அபாயம் அதிகரிக்கலாம். அதனால்தான் இதைக் கொஞ்சம் குறைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளது" என விளக்குகிறார் அருண்குமார்.

எந்தச் சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவது சிறந்தது?

தேங்காய் எண்ணெய், ஆரோக்கியம், ஐசிஎம்ஆர், இதய நோய்
படக்குறிப்பு, கடலை எண்ணெய்

உலக சுகாதார அமைப்பு (WHO) 2023-ஆம் ஆண்டு வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, ஒருவர் தினமும் எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரியில் நிறை கொழுப்புகளின் பங்கு 10 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கொழுப்பு நிறைந்த இறைச்சி, வெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் மற்றும் பன்றிக்கொழுப்பு ஆகியவற்றில் காணப்படும் நிறை கொழுப்பை விட, மீன், அவகேடோ, கொட்டைகள், சூரியகாந்தி, சோயாபீன், கனோலா மற்றும் ஆலிவ் எண்ணெய்களில் காணப்படும் நிறைவுறாக் கொழுப்பே சிறந்தது என அது குறிப்பிடுகிறது.

"எண்ணெய் வாங்கும்போது மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அடிப்படையிலான கடலெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றிற்கு மாறலாம். அதேசமயம், எண்ணெயின் அளவை குறைத்துப் பயன்படுத்துவதும் முக்கியம்" என்கிறார் மருத்துவர் மோகன்.

"பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் கொண்ட சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றையும் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம், முடிந்தால் பாமாயில் போன்றவற்றை மாற்றிக்கொள்வது மிகவும் நல்லது" என்றும் அவர் கூறுகிறார்.

எண்ணெய் பயன்பாட்டில் வேறு எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

தேங்காய் எண்ணெய், ஆரோக்கியம், ஐசிஎம்ஆர், இதய நோய்
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதும், ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர் மோகன் அறிவுறுத்துகிறார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (ICMR-NIN) வெளியிட்டுள்ள உணவு வழிகாட்டுதல்களும் இதை வலியுறுத்துகின்றன.

"மீண்டும் மீண்டும் எண்ணெயைச் சூடுபடுத்தும்போது அதில் ஆக்சிஜனேற்ற மாற்றங்கள் ஏற்பட்டு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய சேர்மங்கள் உருவாகலாம். எனவே, தேவையான அளவு மட்டும் பயன்படுத்தி, மீதமிருந்தால் அதை அப்புறப்படுத்திவிடுங்கள்" என்கிறார் அவர்.

எண்ணெய் தேர்வுடன் சேர்த்து, நமது ஒட்டுமொத்த உணவுப் பழக்கத்தையும் வாழ்க்கை முறையையும் கவனிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

"'கடலை எண்ணெய் நல்லது' என்பதற்காக உடல் பருமனையும் சர்க்கரை நோயையும் மறந்துவிட்டு பஜ்ஜி, போண்டா போன்றவற்றை கடலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிடக்கூடாது. வெறும் எண்ணெயை மட்டும் மாற்றிவிட்டு நாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொள்ளக்கூடிய ஒருதலைப்பட்சமான அணுகுமுறை கூடாது" என்கிறார் அவர்.

உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புகைப்பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்றவை இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள் என்று குறிப்பிடும் அவர்,

"இவற்றைக் கவனித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே, எல்.டி.எல் கொலஸ்ட்ரால் சிறிது மாறுபட்டு இருந்தாலும்கூட இதய நோய் அபாயம் பல மடங்கு குறையும். அதில்தான் நாம் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டும். வெறும் எண்ணெயை மாற்றினால் இதய நோய் குறைந்துவிடும் என்று நினைக்கக் கூடாது" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு