இலங்கையில் 6 தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் சேர்ந்து புதிய பேரவை உருவாக்கம் - இந்தியாவுடன் என்ன பேசினர்?

பட மூலாதாரம், CWC MEDIA UNIT
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இலங்கையிலுள்ள பிரதான 6 தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து, ''தமிழ் மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவை" என்ற பெயரில் இணைந்த அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்தப் பேரவையில் உள்ளனர்.
இந்தப் பேரவை ஜுலை மாதம் 13-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தற்போது அதன் செயற்பாடுகள் அடுத்தடுத்து விரைவுபடுத்தப்பட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேச்சுவார்த்தைகள் வரை வியாபித்துள்ளது.
இலங்கையில் மாத்திரமன்றி, இந்தியாவுடனும் இணைந்தவாறு தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை, அந்தப் பேரவையின் அண்மை கால செயற்பாடுகளை அவதானிக்கும் போது தென்படுகின்றது.
பேரவை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, முதல் கட்டமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடல்களை நடாத்தியிருந்ததுடன், அதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர்.
அதன்பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர்.
இந்த நிலையில், இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரியை, பேரவையிலுள்ள கட்சிகள், தனித்தனியாகச் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர்.

பட மூலாதாரம், HIGH COMMISSION (INDIA)
பேரவையின் நோக்கம் என்ன?
மூன்று முக்கிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தமிழ் மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். .
இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துதல் மற்றும் காணி பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு ஆகிய விடயங்கள் அடங்கிய கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இந்தப் பேரவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் உள்ளிட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்தப் பேரவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
''தமிழ் பேசும் அரசியல் பேரவையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்திற்குள் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு பேரவை. நாங்கள் 21 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் இருக்கின்றோம். இது சம்பந்தமாக ஒற்றுமையாக குரல் கொடுப்பதே எங்களுடைய நோக்கம். இந்த விடயம் தொடர்பாகவும் நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தியிருந்தோம்." என ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
புதிய அரசியலமைப்பு
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்து, நாடாளுமன்றத்திற்கு பொறுப்பு கூறும் வகையிலான அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தசாப்தங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படும் என தேர்தல் காலங்களில் உறுதிமொழி வழங்கினாலும் கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆட்சியாளர்களால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், ஆட்சி பீடத்திலுள்ள கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன உறுதிமொழியாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் காணப்பட்டது.
இந்த நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்கின்றமை தொடர்பிலும் தமிழ் மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவை தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
மாகாண சபை தேர்தல்

பட மூலாதாரம், Getty Images
1987-ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம், மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டிருந்ததுடன், அந்த காலத்திலிருந்து அமலில் இருந்த மாகாண சபை முறைமை தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இலங்கையிலுள்ள 9 மாகாண சபைகளின் பதவிக் காலங்களும் 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் வெவ்வேறு தினங்களில் நிறைவடைந்திருந்தன.
அந்த மாகாண சபைத் தேர்தல்களை அன்று முதல் இன்று வரை அடுத்தடுத்து ஆட்சி செய்த நான்கு ஆட்சியாளர்களும் நடாத்தவில்லை.
புதிய தேர்தல் முறைமை மற்றும் தொகுதிவாரி முறைமை தொடர்பான சிக்கல்கள் காரணமாக, மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படாமல் உள்ளதுடன், மாகாண சபைகள் முழுமையாக செயலிழந்துள்ளன.
இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை துரிதகதியில் நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இந்தப் பேரவையின் கோரிக்கையாக காணப்படுகின்றது.
காணி பிரச்னைகள்
காணி பிரச்னை என்பது வடக்கு, கிழக்கு மற்றம் மலையக மக்களுக்கு பாரியதொரு பிரச்னையாக காணப்படுகின்றது.
குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் குறிப்பிட்ட சில காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், மேலும் பல காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளன.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்களாகியுள்ள நிலையில், மக்கள் தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
எனினும், தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை முன்னிலைப்படுத்திய அரசாங்கம், இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் இருந்து வருகிறது.
அத்துடன், மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பான கோரிக்கை பல வருடங்களாக முன்வைக்கப்படுகின்ற போதிலும், அந்தக் கோரிக்கைகளும் இன்று வரை நிறைவேற்றப்படாத ஒரு நிலைமையிலேயே காணப்படுகின்றது,
இவ்வாறான பின்னணியில், காணி உரிமைகள் தொடர்பான போராட்டங்களையும் முன்னெடுக்க இருப்பதாக இந்தப் பேரவை தெரிவிக்கிறது.
ஜனாதிபதியுடன் முதல் சந்திப்பு

பட மூலாதாரம், PMD SRI LANKA
தமிழ் மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவையின் உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 3-ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருதல், மாகாணச் சபைத் தேர்தலை நடத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், தமிழ் மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவையின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
மாகாணச் சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து அந்தக் குழுவுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் தற்போதுள்ள அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதுடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
"அவசரப்பட்டு கொண்டு வரப்படும் அரசியலமைப்புத் திருத்தத்தை விட, புதிய மக்கள் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வதே அவசியமாகும். அதற்கான கருத்தாடலை தொடங்குவதன் முக்கியத்துவத்தை இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
காணி விவகாரத்தில், மலையக மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. தோட்ட கம்பனிகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டியுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, வெகுவிரைவில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மலையக மக்களுக்கு காணி உரிமையைச் சட்டப்பூர்வமாக வழங்குவது தொடர்பான சரத்துக்களை அதில் உள்வாங்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நீண்டகாலப் பிரச்னைக்கு தீர்வாக இரண்டு கட்டங்களாக 13,000 வீடுகளை நிர்மாணிக்க 2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற உறுதிமொழியையும் அவர் இதன்போது வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் பேரவையின் கருத்து

பட மூலாதாரம், PMD SRI LANKA
புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதகமான பதிலை வழங்கியிருந்ததாக அந்தப் பேரவையின் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக அங்கம் வகிக்கும் உறுப்பினர் பாரத் அருள்சாமி பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
''அரசியலமைப்பு மாற்றத்திற்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கியிருந்தார். காரணம் என்னவென்றால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு பொறுப்பு கூறுகின்ற ஒரு முறைமையை கொண்டு வருவதற்கும் இணக்கம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை புதிதாக ஆரம்பிக்க தேவையில்லை என நாங்கள் கேட்டுக்கொண்டோம். அரசியலமைப்பு மாற்றம் என்பது புதிய விடயம் கிடையாது. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காலத்திலிருந்தே இந்த முறை மாற்றப்பட வேண்டும் என்ற ஒருமித்த குரல் இருந்தது. 2015-ஆம் ஆண்டு மனோகணேசன், இப்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சுமந்திரன், ரிஷாட் பதியூதீன் ஆகியோர் இணைந்து தேர்தல் முறை மாற்றம் தொடர்பான குழுவொன்றை அமைத்து விடயங்களை ஆராய்ந்திருந்தார்கள்.
அதற்கான இடைக்கால அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார்கள். எந்த இடத்தில் விட்டோமோ அந்த இடத்தில் இருந்து ஆரம்பிப்போம் என்ற உறுதிமொழியை ஜனாதிபதியே வழங்கியிருந்தார். அந்த விடயங்களி;ல அவர் சாதகமாக இருந்தார்." என பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
மலையக மக்களின் காணி பிரச்னை தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து முழுமையான சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் பாரத் அருள்சாமி குறிப்பிடுகின்றார்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், HIGH COMMISSION (INDIA)
தமிழ் மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவை, கடந்த 4-ஆம் தேதி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தது.
இந்த சந்திப்பு இந்திய இல்லத்தில் நடைபெற்றது.
இதேவேளை, இலங்கைக்கு 5-ஆம் தேதி அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரியையும் இந்தப் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியாகச் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தன.
மலையகக் கட்சிகள் தனியாகவும், வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் தனியாகவும், முஸ்லிம் கட்சிகள் தனியாகவும் இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்து தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுப்படுத்தியிருந்தார்கள்.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், பிபிசி தமிழிடம் பேசுகையில், ''புயல் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் மலையகத்திலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் நிவாரணம் வழங்குவதாகக் கூறியிருக்கின்றார்கள். இந்த தருணத்தில் இந்திய அரசாங்கத்திற்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்திய அரசாங்கத்தின் மூலமாக இந்திய வீடமைப்பு திட்டம் எங்களுக்கு கிடைத்திருக்கின்றது.
தித்வா புயலினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குவதாக இந்திய அரசாங்கம் சொல்லியிருக்கின்றது. இலங்கையைப் பொருத்த வரைக்கும் இந்தியா ஒரு பலமான சகோதரர் என்று சொல்லலாம். பொருளாதார நெருக்கடியாக இருக்கட்டும், அல்லது பல்வேறு பிரச்னைகளாக இருக்கட்டும். இந்திய அரசாங்கம் தோலோடு தோலாக எங்களோடு இருந்திருக்கின்றார்கள். வெளியுறவு செயலாளர் வந்தது அதற்கொரு ஆதாரம்." என்றார்.

பட மூலாதாரம், PMD SRI LANKA
மேலும் தொடர்ந்த அவர், "இலங்கை பல்வேறு பிரச்னைகளை சந்தித்திருந்தாலும், எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. இந்திய அரசாங்கத்தோடு கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று நம்பிக்கை உள்ளது. புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுத் திட்டம், மக்களுக்கு சரியான முறையில் சென்றடையும் வரை இந்திய அரசாங்கமும், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம்.
அத்துடன், தமிழ் பேசும் மக்களின் பேரவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பிலும் நாங்கள் பேசியிருந்தோம். எங்களுடைய மூன்று கோரிக்கைகளையும் இந்திய வெளியுறவு செயலாளருடன் கலந்துரையாடி தெளிவுப்படுத்தியுள்ளோம்.
வடக்கு, கிழக்கில் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்குமாறும் கேட்டிருக்கின்றோம். இஸ்லாமிய சகோதரர்கள் சார்ந்த சில காணி பிரச்னைகளும் இருக்கின்றd. இந்த அனைத்து விடயங்களையும் நாங்கள் இந்திய வெளியுறவு செயலாளரிடம் கூறியுள்ளோம்." என்று தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































