செஞ்சி: 15 நாட்களுக்கும் மேலாக கிடைக்காத சிறுமி; கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது முதல் தற்போது வரை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன சம்பவத்தில், 15 நாட்களுக்கும் மேலாகியும் சிறுமி இன்னும் கிடைக்கவில்லை. ட்ரோன் தேடுதல் முதல் 7 தனிப்படை விசாரணை வரை காவல்துறை களம் இறங்கியிருந்தது. வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் சிறுமி பற்றி உதவிகரமான துப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர். இதுவரை நடந்த நிகழ்வுகளை காலவரிசையாகப் பார்ப்போம்.
அக்டோபர் 11 | மாலை 7 மணி
சிறுமியின் 6வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் விழா நடத்தப்படுகிறது.
அக்டோபர் 11 | இரவு 9 மணி
உறவினர்களுடன் இரவு 9 மணி வரை பேசிக் கொண்டிருந்ததாக பிபிசியிடம் முன்பு பேசிய தாய் கூறுகிறார். அப்போது சிறுமி ஏற்கெனவே தூங்கிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.
அக்டோபர் 11 | இரவு 9.30 மணி முதல் 11.45 மணி வரை
இரவு 9.30 மணியளவில் தாய் தூங்கச் செல்கிறார். இரவு 11.45 மணியளவிலும் தனது அருகிலேயே மகள் தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்ததாக அவர் கூறுகிறார்.
இரவு 11 மணி வரையில் தனக்கு தூக்கம் வரவில்லை எனக் கூறுகிறார் தாய். வீட்டின் முன்பக்க கதவைத் தாழிடும் வழக்கம் இல்லாததால் இரவு நேரத்தில் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது. சுமார் 11.45 மணியளவில் மகள் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததாக சிறுமியின் தாய் கூறுகிறார்.
"அன்று மாட்டின் கொம்பு உடைந்துவிட்டதால் அதற்கு மஞ்சள் பூசிவிட்டு இரவு சுமார் 11.30 மணியளவில் உறங்கிவிட்டேன். காலையில் எழுந்தபோது குழந்தையைக் காணவில்லை" என பிபிசியிடம் முன்பு கூறியிருந்தார், சிறுமியின் தந்தை. எப்போதும் வெளிபுறத்தில் உறங்கும் அவர், அன்றிரவு வீட்டின் உள்ளே உறங்கியதாகவும் சிறுமியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அக்டோபர் 12 | அதிகாலை 3 மணி
அக்டோபர் 12ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதாக அருகில் வசிக்கும் பெண் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "எனக்கு குழந்தையின் அழுகுரல் மட்டுமே கேட்டது. வண்டி சத்தமோ, ஆள் நடமாட்டமோ தெரியவில்லை. அவர்களின் வீட்டருகில் இருட்டாக இருந்தது. விளக்கு கிடையாது. எனவே வேறு எதையும் பார்க்கவில்லை. சிறுமியின் தாய் காலையில் குழந்தை காணவில்லை என்று கூறியபோது, அவர்களுக்கு அழுகுரல் கேட்கவில்லையா என்று கேட்டேன். அவர் கேட்கவில்லை என்றார்." என அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 12 | காலை 6 மணி
காலை 6 மணியளவில் எழுந்து பார்த்தபோது, மகளைக் காணவில்லை என தெரிவித்திருந்தார் சிறுமியின் தாய். 11 மணியளவில் உறங்கிய தந்தை, காலையில் எழுந்தபோது, தனது மனைவி கூறிய பிறகு தான் குழந்தை காணவில்லை என்பது தனக்கு தெரியவந்தது என்கிறார்.
அக்டோபர் 12 | புகார் பதிவு
அதே நாளில் காவல்நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளிக்கிறார். காணாமல் போன சிறுமி வழக்கை காவல்துறை பதிவு செய்கிறது.

அக்டோபர் 13 | தேடுதல் தொடக்கம்
மோப்ப நாய் உதவியுடன் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தேடுதல் நடக்கிறது. ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
வீட்டைச் சுற்றியுள்ள காடு, மலைப்பகுதி, பாறை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் மூலம் காவல்துறையினர் தேடுதல் நடத்துகின்றனர்.
அக்டோபர் 19 | 7 தனிப்படைகள் அமைப்பு
வழக்கில் முன்னேற்றம் இல்லாததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நேரடியாக விசாரணையை துரிதப்படுத்தினார்.
கூடுதல் எஸ்.பி., மூன்று டி.எஸ்.பிக்கள் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன.
சம்பவ நாளில் பதிவான சுமார் 600 செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
கிராமம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கிடைத்த 14 சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
சந்தேகத்துக்கிடமான நபர்களின் பின்னணி பற்றியும் விசாரணை தொடர்கிறது.

அக்டோபர் 21 I வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
10 நாட்கள் தேடுதலுக்குப் பிறகும் துப்பு கிடைக்காததால், தமிழக அரசு வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றியது.
அக்டோபர் 22 I சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
சிபிசிஐடி அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பல்வேறு நபர்களிடம் மீள் விசாரணை நடத்தினர்.
சிறுமியின் புகைப்படத்துடன் கூடிய 'காணவில்லை' விளம்பரம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பொது இடங்களில் காவல்துறை சார்பாக வைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 26 I கூடுதல் அதிகாரி நியமனம்
சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையை மேலும் தீவிரப்படுத்த சிபிசிஐடி டி.எஸ்.பி வேல்முருகன் கூடுதல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சிறுமியின் உறவினர்கள், பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்தவர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஊர் மக்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































