You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவது இனி சாத்தியமா? - புதிய விதி அறிமுகம்
- எழுதியவர், நார்டின் சாத்
- எழுதியவர், சரீன் ஹபேஷியன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பெரும்பாலான கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவிற்கு வெளியே வேறு நாடுகளில் உள்ள தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற புதிய கொள்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர, தங்களின் குடியேற்றத் தகுதியை மாற்ற விரும்பும் நபர்கள் நாட்டின் எல்லைக்கு வெளியே உள்ள தூதரக நடைமுறைகள் மூலமாகவே அதைச் செய்ய வேண்டும் என்று அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளது.
அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் சட்டவிரோத குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, விசா வைத்திருப்பவர்கள் மற்றும் வருகை தந்தவர்கள் அமெரிக்காவில் இருக்கும்போதே கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கலாம் என்ற நிலைமையை மாற்றுகிறது.
இருப்பினும், நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த பழைய முறையின்படி, நீண்ட காலம் எடுக்கும் இந்த விண்ணப்ப செயல்முறையின் போது குடும்பங்கள் ஒன்றாகத் தங்கியிருக்க முடிந்தது, ஆனால் தற்போதைய புதிய கொள்கையை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.
"அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமையை வழங்கும் 'கிரீன் கார்டு' பெறும் நம்பிக்கையில் நாட்டை விட்டு வெளியேறும் சில குடியேற்றவாசிகள், மீண்டும் அமெரிக்கா திரும்புவதை இந்த புதிய முறை கடினமாக்கலாம் அல்லது சாத்தியமற்றதாக்கலாம்.
மாணவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் அல்லது சுற்றுலா விசாவில் வந்தவர்கள் போன்ற நபர்கள் அமெரிக்காவிற்கு வெளியில் இருந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை மூலமாகவே இந்த நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று 'அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள்' கொள்கை அறிக்கை கூறுகிறது.
'வெளிநாட்டினர் அமெரிக்காவிலிருந்தே விண்ணப்பிக்கும் போது, அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பிறகும் அவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தால் அதைக் கண்டறிந்து வெளியேற்ற வேண்டிய அவசியம் குறைகிறது' என்று கூறியுள்ள அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள், தற்போதைய நடவடிக்கை நிரந்தர குடியேற்ற முறையை 'மேலும் நெறிமுறையானதாகவும் திறம்பட செயல்படக்கூடியதாகவும்' மாற்றும் என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகளின் அமைப்பைக் கண்காணிக்கும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தனது எக்ஸ் தளத்தில்: 'நமது நாட்டின் குடியேற்ற முறையைத் தவறாகப் பயன்படுத்தும் காலம் முடிந்துவிட்டது' என்று பதிவிட்டுள்ளது.
'வெளிநாட்டினர் நமது நாட்டின் குடியேற்ற முறையைச் சரியான வழியில் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, சட்டத்தின் அசல் நோக்கத்திற்கு நாம் மீண்டும் திரும்புகிறோம்' என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகளின் செய்தித் தொடர்பாளர் சாக் காலர் தெரிவித்துள்ளார்.
'இனிமேல், அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கியிருக்கும் ஒரு வெளிநாட்டவர் கிரீன் கார்டு பெற விரும்பினால், அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர, அவர் விண்ணப்பிப்பதற்காகத் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்' என்றும் அவர் கூறினார்.
இந்த புதிய கொள்கை குடியேற்ற முறையை 'சட்ட விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, சட்டம் உத்தேசித்தபடி செயல்பட' அனுமதிக்கும் என்றும், அமெரிக்காவிற்கு தற்காலிகமாக வருவது என்பது, 'கிரீன் கார்டு பெறும் அதாவது நிரந்தரக் குடியுரிமைப் பெறும் செயல்முறையின் முதல் படியாக அமையக்கூடாது' என்றும் அவர் கூறினார்.
தற்போது பரிசீலனையில் இருக்கும் கிரீன் கார்டு விண்ணப்பங்கள் இதனால் பாதிக்கப்படுமா என்பது குறித்த தெளிவான தகவல் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை.
இருப்பினும், இந்த புதியக் கொள்கையை நடைமுறைப்படுத்தப்படும்போது, 'பொருளாதார ரீதியாகப் பயனளிக்கும் அல்லது நாட்டின் நலன் சார்ந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பவர்கள், தங்களின் தற்போதைய பாதையிலேயே தொடர்ந்து பயணிக்க முடியும்' என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
'தனிநபர்களின் சூழ்நிலைகளைப் பொறுத்து விதிமுறைகள் தளர்த்தப்படலாம், மற்றவர்கள் வெளிநாட்டிலிருந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படலாம்' என்று அவர் தெரிவித்தார்.
கிரீன் கார்டு பெறுவது என்பது பல மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு பல அடுக்கு செயல்முறையாகும்.
கேடோ இன்ஸ்டிடியூட்டின் குடியேற்ற ஆய்வுகளுக்கான இயக்குநரின் கூற்றுப்படி, தற்போது பத்து லட்சத்திற்கு அதிகமான சட்டப்பூர்வ குடியேற்றவாசிகள் தங்களது குடியேற்றத் தகுதியை மாற்றுவதற்காக கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றனர்.
சட்டத்தைப் பின்பற்றுவதன் மூலம் பெரும்பாலான விண்ணப்பங்களை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளிநாடுகளில் உள்ள தூதரக அலுவலகங்களில் கையாள முடியும் என்றும், இதன் மூலம் அமைப்பின் பணிச்சுமை குறைந்து, அதன் அதிகார வரம்பிற்குள் வரும் பிற விசயங்களை, வன்முறைக் குற்றங்கள் மற்றும் மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசாக்கள் மற்றும் குடியுரிமை விண்ணப்பங்கள் உள்ளிட்டவற்றை கையாள்வதில் கவனம் செலுத்த முடியும் என்றும் சாக் காலர் கூறுகிறார்.
இந்த நடவடிக்கை, நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் குடியேற்றச் சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு இணங்கவே எடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை முகமை தெரிவித்துள்ளது. மேலும், 'ஒரு வெளிநாட்டவருக்கு இந்த விதிவிலக்கான நிவாரண வடிவத்தை வழங்கலாமா என்பதைத் தீர்மானிக்கும் போது, அனைத்துத் தொடர்புடைய காரணிகளையும் தகவல்களையும் ஒவ்வொரு வழக்கின் அடிப்படையிலும் பரிசீலிக்குமாறு' குடியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
"கடந்த ஆண்டு தனது பதவியிலிருந்து விலகும் வரை, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு ஆட்சிகளின் கீழும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றிய மைக்கேல் வல்வெர்டே பிபிசியின் அமெரிக்க ஊடகக் கூட்டாளியான சிபிஎஸ் நிறுவனத்திடம் பேசுகையில், வெள்ளிக்கிழமை வெளியான இந்த அறிவிப்பு 'ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குடும்பங்கள் மற்றும் வேலை வழங்குபவர்களின் வாழ்க்கைத் திட்டங்களை சீர்குலைக்கும்' என்று கூறினார்.
'இது அமெரிக்காவிற்கான சட்டப்பூர்வ குடியேற்றத்தைப் பெருமளவில் கட்டுப்படுத்தும் முன்னெப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கையாகும்' என்று வல்வெர்டே கூறினார். மேலும், 'விதிமுறைகளை உண்மையாகப் பின்பற்றிய மக்கள் இப்போது மிகப்பெரிய நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்கின்றனர்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே கிட்டத்தட்ட 40 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு தடைகளையோ அல்லது கட்டுப்பாடுகளையோ விதித்துள்ளது.
இந்த ஆண்டு அந்த நிர்வாகம் கொண்டு வந்த மற்றொரு கொள்கை, 75 நாடுகளைச் சேர்ந்த குடியேற்ற விசா விண்ணப்பதாரர்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்க விசா காலாவதியான பிறகும் அங்கு தங்கியிருப்பது நாட்டை விட்டு வெளியேற்றுதல், எதிர்காலத்தில் அமெரிக்க விசா பெறுவதற்கான தகுதியை இழக்கச் செய்வது மற்றும் 10 ஆண்டுகள் வரை மீண்டும் நாட்டிற்குள் நுழைய தடை விதித்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு