You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இணையத்தில் வைரலாகும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' - யார், எதற்காக தொடங்கினார்? முழு பின்னணி
- எழுதியவர், ஆஷய் யெட்கே
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இளைஞர்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து, 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janata Party) என்ற சமூக ஊடக பிரசாரம் பெரும் விவாதப் பொருளாக மாறி வைரலாகிறது.
இருப்பினும், நாட்டின் இளைஞர்கள் பற்றிய தமது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியுள்ளார்.
நீதிபதி சூர்யகாந்தின் கருத்துகளைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் நையாண்டிப் பிரசாரத்தை பலரும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த விவாதத்தின் மையப்புள்ளியாக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) உள்ளது.
இந்தப் பெயரில் இணையத்தில் ஓர் இணையதளம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் இது 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். அதுமட்டுமின்றி, இக்கட்சியில் உறுப்பினராகச் சேர்வதற்காக இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிஜேபி (CJP) என்றால் என்ன? இது எவ்வாறு தொடங்கியது?
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணையதளத்தில் அதன் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, அவரது பெயர் அபிஜித் தீப்கே.
இந்த வகையான சமூக ஊடக பிரசாரத்தை அவர் ஏன் தொடங்கினார் என்பது குறித்து அபிஜித் தீப்கே பிபிசிக்கு விரிவான பேட்டியளித்துள்ளார்.
"இத்தகைய சமூக ஊடக பிரசாரம் ஒன்றை முன்னெடுப்பதற்கான யோசனை உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?" என்ற கேள்விக்கு பதிலளித்த அபிஜித் தீப்கே, "எக்ஸ் வலைதளத்தில் இந்திய தலைமை நீதிபதி சொன்னதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவர், நாட்டின் இளைஞர்களை, குறிப்பாக அமைப்பை விமர்சிப்பவர்களையும் தங்கள் கருத்துகளைத் துணிச்சலாக வெளிப்படுத்துபவர்களையும் கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டார்" என்று கூறினார்.
"ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் வழங்கும் அரசியலமைப்பை பாதுகாப்பதையே கடமையாகக் கொண்ட தலைமை நீதிபதியே இப்படிப் பேசியது மிகவும் அபத்தமான ஒன்றாகத் தோன்றியது. கரப்பான் பூச்சிகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் அவர் இளைஞர்களை எப்படி ஒப்பிட முடியும்?"
"இது எனக்குள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது, அதனால்தான் எக்ஸ் தளத்தில் எனது கருத்தைப் பதிவிட்டேன். 'அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்?' என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு 'ஜென் ஸி' மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடமிருந்து ஆச்சரியமான பதில்கள் வந்தன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்."
"இளைஞர்களின் இந்த பதில்கள் தான், 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் ஆன்லைனில் நையாண்டி அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை எனக்குக் கொடுத்தது. 'எங்களை நீங்கள் கரப்பான் பூச்சி என்று அழைக்கிறீர்கள் என்றால், சரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியையே உருவாக்கலாம்' என்று முடிவு செய்தோம்.
இந்தக் கட்சியில் சேருவதற்கு சில தகுதிகளையும் நான் நிர்ணயித்தேன். அவை என்னவென்றால்:
- தலைமை நீதிபதி கூறியது போல் சோம்பேறியாக இருக்க வேண்டும்.
- வேலை இல்லாதவராக இருக்க வேண்டும்.
- தலைமை நீதிபதி குறிப்பிட்டது போல, நீங்கள் எப்போதும் ஆன்லைனிலேயே நேரத்தை செலவிடுபவராக இருக்க வேண்டும்."
"சுருக்கமாகச் சொன்னால், இளைஞர்களை இழிவுபடுத்தும் விதமாக இந்தியத் தலைமை நீதிபதி பயன்படுத்திய ஒவ்வோர் இழிவான கருத்துகளையும், நாங்கள் இந்தக் கட்சிக்கான உறுப்பினர் தகுதியாக வைத்துவிட்டோம்.
உறுப்பினர் பதிவு தொடங்கிய ஒருசில மணி நேரங்களிலேயே இதற்கு பிரமாண்டமான வரவேற்பு கிடைத்தது. பெரும்பாலான மக்கள் அனைவரும் இதற்குப் பதிலளிக்கத் தொடங்கியதோடு, தங்களை உறுப்பினர்களாகவும் பதிவு செய்துகொள்ளத் தொடங்கினர்."
"அதன் பிறகு, இது வெறும் நகைச்சுவையோ நையாண்டியோ மட்டுமல்ல, அதைவிடப் பெரிதாக மாறப்போகிறது என்பதை உணர்ந்தோம். மக்கள் மத்தியில் ஒருவித விரக்தி மனப்பான்மை மேலோங்கியிருந்தது. உடனே நாங்கள் ஒரு இணையதளத்தை உருவாக்கி, கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டோம்.
இன்ஸ்டாகிராமில் எங்களுக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் (எண்ணிக்கை தற்போது 4 மில்லியனைத் தாண்டிவிட்டது) கிடைத்துள்ளனர், மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் உறுப்பினர்களாகத் தங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்திய அரசியலில் நீண்ட காலத்திற்குப் பிறகு நடந்துள்ள ஒரு அபூர்வமான நிகழ்வு இதுவாகும்."
வெற்றிக்கான காரணம் என்ன?
பல பிரபலமான நபர்களும் அபிஜித் தீப்கேயின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அபிஜித் கூறும்போது, "முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்பியுமான கீர்த்தி ஆசாத், தாம் இக்கட்சியில் சேர விரும்புவதாகக் கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மெஹுவா மொய்த்ராவும் இதற்கு ஆதரவு அளித்தார். இவர்கள் தவிர இன்னும் பலர் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர், இன்று இது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதோடு, நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது" என்றார்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையைச் சேர்ந்தவர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, இது டிஜிட்டல் ஊடக உலகில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய 'திடீர் திருப்பம்', 'புரட்சிகரமான நிகழ்வு' என்று அவர்கள் கூறுகிறார்கள்.
"சமூக ஊடகங்களில் 40 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் சேர்ந்ததன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்னவாக இருக்கும்?" என்ற கேள்விக்கு பதிலளிக்கும் அபிஜித்,
"இதையெல்லாம் நான் மட்டுமே சாதித்தேன் என்று சொல்ல மாட்டேன். இந்த மக்கள் அனைவரும் தாங்களாகவே ஒன்றிணைந்துள்ளனர். அவர்களை ஒன்றாகக் கொண்டு வந்தது எது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று ஒரு டிஜிட்டல் நிறுவனமோ அல்லது ஏதேனும் ஓர் அரசியல் கட்சியோ இப்படிச் செய்திருந்தால், அவர்களுக்கு இவ்வளவு விரைவாக இந்த வெற்றி கிடைத்திருக்காது. அவர்கள் எவ்வளவு பணம் செலவழித்திருந்தாலும் அதற்குப் பலன் இருந்திருக்காது. கோடிக்கணக்கான ரூபாயை கொட்டித் தீர்த்திருந்தாலும் கூட, இப்படி ஒரு மக்கள் வரவேற்பை யாராலும் பார்த்திருக்க முடியாது."
"இளைஞர்களின் மனதில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் ஏமாற்றமும் கோபமும்தான் இவ்வளவு பெரிய வரவேற்பிற்குக் காரணம். அரசாங்கத்தின் தோல்விகளால் இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். தங்களின் ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதற்குத் தகுந்த ஒரு தளத்தை அவர்கள் இறுதியாக கண்டறிந்துள்ளனர்."
யார் இந்த அபிஜித் தீப்கே?
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது இயக்கத்திற்கும் ஒரு தலைவர் மிகவும் அவசியமானவர். அப்படியென்றால், இந்த அபிஜித் தீப்கே உண்மையில் யார்?
இந்தக் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "நான் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரை சேர்ந்தவன். கல்லூரிப் படிப்பிற்காக புனே சென்றேன். இதன் பிறகு, சில ஆண்டுகள் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு நான் தகவல் தொடர்பு குழுவில் இணைந்து பணியாற்றினேன்."
"அவர்களின் சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த பணிகள் என்னை மிகவும் கவர்ந்தன. இந்திய அரசியலில் முதன்முறையாக ஏதோ ஒரு புதிய விஷயம் நடப்பது போல அது இருந்தது. இன்று 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' எப்படி ஒரு புதிய முயற்சியாக இருக்கிறதோ, அதுபோலவே அவர்களும் ஏதோ ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்கள் என்றே நான் கருதினேன். நான் சில காலம் அவர்களுடன் பணியாற்றினேன், பின்னர் முதுகலைப் பட்டப்படிப்பிற்குத் தயாராகத் தொடங்கினேன். எனக்கு பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்குதான் இருக்கிறேன், எனது பட்டப்படிப்பையும் முடித்துள்ளேன்."
கவனம் ஈர்க்கும் தேர்தல் அறிக்கை
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இது குறித்து அபிஜித் கூறும்போது, "தற்போதைய இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலையை தெளிவாகப் பிரதிபலிக்கும் ஒரு விமர்சன ஆவணம் என்றே இந்தத் தேர்தல் அறிக்கையை நான் நினைக்கிறேன். நடுநிலைமையுடன் செயல்பட வேண்டியவர்களும், அரசாங்கத்துடன் எவ்விதத் தொழில்முறைத் தொடர்புகளையும் கொண்டிருக்கக் கூடாதவர்களுமான நீதிபதிகள், தங்கள் பணி ஓய்விற்குப் பிறகு அரசாங்கத்திடமிருந்து சலுகைகளையும் பயன்களையும் பெற்றுக்கொள்ளும் நிகழ்வுகளை நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். இது மிகவும் ஆபத்தான போக்காகும். ஏனெனில் நீதித்துறை எப்போதும் சுதந்திரமாக இயங்க வேண்டும். நீதித்துறையே அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இணங்கிச் செயல்படத் தொடங்கிவிட்டால், இந்த அமைப்பில் பிறகு என்னதான் மிச்சமிருக்கும்? அப்படியானால், நமது ஜனநாயகத்தை இனி யார் தான் பாதுகாப்பார்கள்?"
இரண்டாவது முக்கிய அம்சம், பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பானது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உறுதிமொழிகளை நான் சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறேன், ஆனால் அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே உண்மையான நோக்கமாக இருக்குமேயானால், அவர்களுக்கு முழுமையாக 50 சதவீத இட ஒதுக்கீட்டையே வழங்குங்கள்."
இந்தியாவின் 'ஜென் ஸி' தலைமுறை எப்படிப்பட்டது?
நேபாளம் மற்றும் இலங்கையில் 'ஜென் ஸி' தலைமுறையினரின் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. நேபாளத்தில், அந்த இயக்கம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அந்நாட்டு அரசாங்கமே பதவி விலக வேண்டிய சூழலையும் உருவாக்கியது. இலங்கை மற்றும் நேபாளத்தின் 'ஜென் ஸி' தலைமுறையினருடன் இந்திய இளைஞர்களை ஒப்பிடுவது குறித்து அபிஜித் என்ன நினைக்கிறார்?
இந்தக் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இந்திய 'ஜென் ஸி' தலைமுறையினரை இலங்கை, நேபாளம் மற்றும் வங்கதேசத்து இளைஞர்களுடன் ஒப்பிடுவது 'கடுமையான அவமதிப்பாகவே' இருக்கும் என்று கூறினார். ஏனெனில் இந்திய இளைஞர்கள் வன்முறையைத் தூண்டுவதில்லை.
"இந்திய 'ஜென் ஸி' இளைஞர்கள் நையாண்டி செய்தும் பகடியாக பேசியும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். கரப்பான் பூச்சி உடைகளை அணிந்துகொண்டு அவர்கள் யமுனை நதியை சுத்தம் செய்கிறார்கள், குப்பைகளை அகற்றுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த அமைப்பையும் கேலி செய்கிறார்கள். அவர்கள் வீதிகளில் இறங்கி வன்முறையைத் தூண்டுவதில்லை; ஒருவேளை நாளை அவர்கள் வீதிக்கு வந்தாலும், அதை ஜனநாயக மற்றும் அமைதியான முறையிலேயே செய்வார்கள். இந்த 'ஜென் ஸி' தலைமுறையினர், நமது மத்திய அமைச்சரவையில் உள்ளவர்களை விட மிகச் சிறந்த கல்வித் தகுதி பெற்றவர்களாகத் திகழ்கின்றனர். நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்: கல்வித்தகுதி அற்ற தனிநபர்களால் நாம் ஏன் ஆளப்பட வேண்டும்?"
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எதிர்காலம் என்ன?
இது வெறும் ஒரு நையாண்டி சமூக ஊடகப் பிரசாரமாக மட்டுமே நின்றுவிடுமா? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் அபிஜித், இது வெறும் தொடக்கமே என்றும்; வரும் நாட்களில், பிற இளைஞர் அமைப்புகளும் இத்தகைய முன்னெடுப்புகளில் களம் இறங்கும் என்றும் உறுதியாகக் கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், "தற்போதைய அரசியல் அமைப்பின் மீது இளைஞர்களுக்கு மிகுந்த சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அடுத்த சில ஆண்டுகளில், இளைஞர்கள் மாற்றத்தை வலியுறுத்திக் குரல் கொடுப்பதை நீங்கள் பார்க்கலாம். ஏனெனில் கடந்த 10-12 ஆண்டுகளாக 'இந்து-முஸ்லிம்' பிரிவினையை மையமாகக் கொண்ட வெற்றுப் பேச்சுகளைத் தவிர இளைஞர்கள் வேறு எதையும் கேட்கவில்லை."
"இந்த அரசியல் அமைப்பை, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாகவும், வேலைவாய்ப்புகளைப் பெருமளவில் உருவாக்கும் வகையிலானதாகவும் மாற்றியமைக்கவே இளைஞர்கள் விரும்புகின்றனர். இனிவரும் காலங்களில், உலகின் முன்னணி நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு நாம் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு காலத்திற்குத்தான் நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டிருப்பது? என்பதே இந்திய 'ஜென் ஸி' இளைஞர்களின் விருப்பமாக இருக்கிறது. தங்களை கரப்பான் பூச்சிகளைப் போல நடத்துவதை அவர்கள் விரும்பவில்லை."
அபிஜித் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவாரா?
"நான் நிச்சயமாக இந்தியா திரும்புவேன்" என்று கூறும் அவர்,
"நான் கடந்த வாரம் தான் எனது பட்டப்படிப்பை முடித்தேன். நான் இந்தியா திரும்பி இதை மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்வேன், ஏனெனில் மக்கள் எங்களுடன் இணைந்து வருகிறார்கள். அவர்கள் சிறப்பான மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்த அமைப்பு தொடங்கப்பட்ட நான்காவது நாளிலேயே பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இது 'ஜென் ஸி' இளைஞர்கள் தங்களுக்கென்று ஒரு தனி அரசியல் முன்னணியை விரும்புகிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும்" என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு