ஹாட்ரிக் கோலுடன் மேலும் ஓர் உலக சாதனை படைத்த மெஸ்ஸி - அர்ஜெண்டினாவின் வலுவான தொடக்கம்

மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கீஃபர் மெக்டொனால்ட்
    • பதவி, பிபிசி ஸ்போர்ட் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் பயணத்தை அல்ஜீரியாவிற்கு எதிரான ஒரு பலமான வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனது நாட்டிற்காக 200-வது போட்டியில் விளையாடிய மெஸ்ஸி, உலகக் கோப்பையில் தனது முதல் ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார்.

எட்டு முறை பாலன் டி ஓர் விருதை வென்ற மெஸ்ஸி தனது உலகக் கோப்பை போட்டிகளின் கோல் எண்ணிக்கையை 16 ஆக உயர்த்தியதன் மூலம், இது ஒரு புதிய வரலாறாக அமைந்துள்ளது. இதன்மூலம் இப்போட்டியின் வரலாற்றில் அதிக கோல் அடித்தவரான ஜெர்மனியின் மிரோஸ்லாவ் க்ளோஸேவின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.

மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பையை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்ட மூன்றாவது நாடு என்ற பெருமையைப் பெறும் நோக்கில் களமிறங்கியுள்ள மூன்று முறை உலக சாம்பியனான அர்ஜெண்டினா, கன்சாஸ் சிட்டி மைதானத்தில் இந்த வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.

இதற்கு முன்னர் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அணியாக களமிறங்கிய 1982 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் அர்ஜெண்டினா தனது தொடக்க ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக அர்ஜெண்டினா தனது தொடக்க ஆட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இதற்கெல்லாம் மெஸ்ஸியின் அசாத்திய திறமையே காரணமாக இருந்தது, அவர் 17-வது நிமிடத்தில் ஒரு அற்புதமான முதலாவது கோலை அடித்து அசத்தினார்.

மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

தனது 27-வது உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய இந்த 38 வயது வீரர், இன்டர் மியாமி அணியின் சக வீரரான ரோட்ரிகோ டி பாலிடமிருந்து பந்தைப் பெற்று, பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வீரர் ஜினெடின் ஜிடேனின் மகனான லூகா ஜிடேனைத் தாண்டி பந்தை வளைத்து கோல் அடித்தார்.

மூச்சுவிடக்கூட நேரமில்லாத அளவுக்கு விறுவிறுப்பாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே, கோல் அடிப்பதற்கு 12 நிமிடங்களுக்கு முன் மெஸ்ஸி அடித்த கோல் ஒன்று நடுவரால் மறுக்கப்பட்டது. தொடர்ந்த 3 நிமிடங்களில் அல்ஜீரியாவின் கோல் ஒன்றும் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்டம் ஆரம்பத்திலிருந்தே சூடுபிடித்தது.

ஆனால், ஆறு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற இந்த இரவில், முதலாவது பாதியின் பாதியில் அல்ஜீரியாவின் ஐசா மண்டி மீது மெஸ்ஸி செய்த கடுமையான நகர்வுக்கு தண்டனையிலிருந்து தப்பியது அவரது அதிர்ஷ்டமே.

மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

ஆட்டத்தின் ஒரு மணி நேரத்தை எட்டியபோது, ஜிடேன் செய்த ஒரு தவற்றைச் சாதகமாக்கிக் கொண்டு மெஸ்ஸி அடித்த கோல் மூலம் அர்ஜெண்டினாவின் இரண்டாவது கோல் மிக அருகிலிருந்து வந்தது. அதன் பிறகு 76-வது நிமிடத்தில், நிக்கோலஸ் கோன்சலஸிடமிருந்து பந்தைப் பெற்று, பெனால்டி பகுதியின் விளிம்பிலிருந்து மின்னல் வேகத்தில் உதைத்து கோல் ஆக்கியதன் மூலம், உலகக் கோப்பையில் தனது முதல் ஹாட்ரிக்கை மெஸ்ஸி உறுதி செய்தார்.

குரூப் ஜே-வில் (Group J) வெற்றிகரமான தொடக்கத்தைப் பெற்றுள்ள அர்ஜெண்டினா, அடுத்து ஆஸ்திரியா மற்றும் ஜோர்டான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடவுள்ளது.

மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

2022-ல் கத்தாரில் உலகக் கோப்பையை வென்ற பிறகும் மெஸ்ஸி ஏன் தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்று யாராவது கேள்வி எழுப்பியிருந்தால், அதற்கான அழுத்தமான பதிலை அவர் இங்கே வழங்கியுள்ளார்.

தனது 39-வது பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஒரு உலகக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற சாதனையைப் படைத்ததன் மூலம், தனது நீண்டகாலப் போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மற்றொரு சாதனையைத் தன்வசப்படுத்தி, பழைய ஃபார்முக்குத் திரும்பி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜெண்டினாவை உலகக் கால்பந்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்ற பிறகும், சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது என்ற மெஸ்ஸியின் முடிவு குறித்து பலவாறாகப் பேசப்பட்டது. ஆனால், இந்த கோடைகாலத்தில் அமெரிக்காவில் வெறும் எண்ணிக்கையை கூட்டுவதற்காக மட்டும் தான் வரவில்லை என்பதை இந்த ஆட்டம் நிரூபித்துள்ளது - அர்ஜெண்டினா தனது நான்காவது உலகக் கோப்பை வெற்றியைப் பெற உதவ வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவரான க்ளோஸேவின் சாதனையைச் சமன் செய்த பிறகு, அர்ஜெண்டினாவின் அடுத்த போட்டியான ஆஸ்திரியாவிற்கு எதிரான ஆட்டத்தின் இறுதி விசில் ஊதப்படுவதற்குள், மெஸ்ஸி அந்த சாதனையைத் மறுகேள்வியின்றி தன்வசமாக்கிக் கொள்வார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.

மீண்டுமொருமுறை, திங்கட்கிழமையன்று அனைவரின் பார்வையும் இந்த அர்ஜெண்டினாவின் சூப்பர் ஸ்டார் மீதே இருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு