பசு காவலின் பெயரால் நடந்த தாக்குதலில் உயிர் பிழைத்த இருவரின் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது? பிபிசி கள ஆய்வு

    • எழுதியவர், சுபாங்கி மிஷ்ரா
    • பதவி, பிபிசி செய்தியாளர், காசர்கோடு (கேரளம்) மற்றும் மும்பையில் (மகாராஷ்டிரா) இருந்து
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

(எச்சரிக்கை: சில விவரங்கள் வாசகர்களை சங்கடப்படுத்தலாம்)

"என் கால் வேலை செய்யவில்லை. விரல்கள் அசையவில்லை. அவை அப்படியே நின்றுவிட்டன, செத்துப்போனது போல. ஆனால் கொசு கடித்தால் தெரிகிறது... அப்படியென்றால் உயிர்ப்புடன்தான் இருக்கின்றன!"

சுட்டெரிக்கும் வெயில் மற்றும் புழுக்கத்திற்கு இடையே, அப்துல் ஷமீர் தன் வேதனையை இப்படி விவரித்தார். 2014 ஆகஸ்ட் 23 அன்று இரவு அவர் மீது தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவரது உடலின் இடது பகுதி வேலை செய்வதில்லை.

அவரிடமிருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் மும்பையில் வசிக்கும் நசிர், 2023-ல் ஒரு பசு காவலர் குழு தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டுகிறார். இதில் அவரது நண்பர் அஃபான் உயிரிழந்தார்.

2026 மார்ச் மாதத்தில் தான் மீண்டும் ஒருமுறை பசு காவலர் குழுக்களின் இலக்காக மாறியதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இந்த முறை நடந்த தாக்குதலில் அவரது இடது கால் உடைந்தது.

இவர்கள் இருவரும் தங்களின் இந்த நிலைக்குக் பசு காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் காரணம் என்கிறார்கள்.

தெருக்களில் இறைச்சி அல்லது கால்நடைகளைக் கொண்டு செல்பவர்கள் மீது பசு காவலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் நடக்கும் தாக்குதல்களுக்குப் பலியாகும் நபர்களில் பெரும்பாலானோர் ஏழைகள்தான்.

கும்பல் வன்முறையால்(Mob lynching) பாதிக்கப்பட்டவர்கள் ஆழ்ந்த உடல் மற்றும் மன ரீதியான காயங்களைச் சந்திக்க நேரிடுவது மட்டுமல்லாமல், இத்தகைய சம்பவங்கள் அவர்களைப் பொருளாதார ரீதியாகவும் உடைத்துவிடுகின்றன. அதிகப்படியான மருத்துவ மற்றும் சட்டக் கட்டணங்கள், வேலை பறிபோதல் ஆகியவைதான் இதற்கு மிக முக்கியக் காரணங்கள்.

இவை கள ஆய்வு, வல்லுநர்கள் மற்றும் நசிர், ஷமீர் போன்ற பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் மூலம் நமக்குத் தெரியவந்தன.

ஊடக ஆய்வுகளின்படி, கடந்த சில ஆண்டுகளில் கும்பல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வன்முறைக் கும்பலிடமிருந்து உயிர் பிழைப்பவர்கள் எதிர்கொள்ளும் சட்ட, மருத்துவ மற்றும் சமூகச் சவால்கள் என்ன? என்பதுதான் கேள்வி. நசிர் மற்றும் ஷமீரிடம் பேசி இந்தக் கேள்விக்கான விடையைத் தேட முயன்றோம்.

உடைந்த வீடு

வாக்கர் உதவியுடன் குனிந்து மெதுவாக நடக்கும் ஷமீர், புன்னகையுடன் வணக்கம்(நமஸ்தே) என்றார். அவர் கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள உப்பலா கிராமத்தின் ஒரு குடியிருப்பில் வசிக்கிறார். இந்த முழு குடியிருப்பின் சுவர்களும் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. அங்குதான் அவரைச் சந்தித்தோம்.

பெரிய பழுப்பு நிறக் கண்கள் கொண்ட ஷமீர், தன் மீது நடந்த தாக்குதலைப் பற்றிப் பேசும்போது ஒரு விசித்திரமான சிரிப்பைச் சிரிக்கிறார். அவரது சிரிப்பில் கோபம் வெளிப்படுகிறது, அது பொதுவாகக் கண்ணீரில்கூடத் தெரிவதில்லை.

அவரும் அவரது இரண்டு கூட்டாளிகளும் கர்நாடகாவின் உப்பினாங்கிடியிலிருந்து சில கால்நடைகளை ஏற்றி வருகையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். மங்களூருவின் பம்பவேல் சந்திப்பில் பசு காவலர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

"50 பேர் வந்தார்கள், ஸ்ரீ ராம் சேனைக்கு ஜெய் என்று முழக்கமிட்டார்கள். நானும் 'அல்லாஹ் ஹூ அக்பர்' என்றேன். அதன் பிறகு அவர்கள் என்னை அடித்தார்கள்" என்று ஷமீர் கூறுகிறார்.

"என் கழுத்தில் திரிசூலத்தைச் செருகினார்கள், என்னைத் தூக்கினார்கள், என் தலையை முன்னால் இருந்த ஒரு மின்சாரக் கம்பத்தில் மோதச் செய்தார்கள்... பிறகு நான் மயக்கமடைந்தேன், 5 மாதங்கள் மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்தேன்" என்று அவர் கூறுகிறார்.

அவரது இந்தக் குற்றச்சாட்டுகளை பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், எஃப்ஐஆரில் ஷமீர் கூறிய விஷயங்கள் விரிவாக இல்லை. எஃப்ஐஆரின்படி, ஆகஸ்ட் 23 இரவு 10:30 மணியளவில், ஷமீர் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளைச் சிலர் காரில் பின்தொடர்ந்துள்ளனர்.

வாகனத்தை நிறுத்தி அதன் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அதன் பிறகு கெட்ட வார்த்தைகளால் திட்டி, ஷமீர் மற்றும் அவரது கூட்டாளி ஃபயாஸ் மீது கல் மற்றும் தடிகளால் தாக்குதல் நடத்தினர். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307 (கொலை முயற்சி) உட்படப் பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஸ்ரீ ராம் சேனை என்பது கர்நாடகாவில் உள்ள ஒரு இந்து அமைப்பு. காவல்துறை எஃப்ஐஆர் அல்லது நீதிமன்ற ஆவணங்களில் இவர்களின் பெயர் எங்கும் இல்லை. சுந்தரேஷ் நர்கல் என்பவர் ஸ்ரீ ராம் சேனையின் தெற்குப் பிரிவின் செயல் தலைவர். இந்த விவகாரம் குறித்து அவரிடம் பேசினோம்.

அவர், "எங்கள் அமைப்பில் பசு காவலர் பிரிவு இருப்பது உண்மைதான், ஆனால் நாங்கள் கடத்துபவர்களைப் பற்றிய தகவலைக் காவல்துறையிடம் மட்டுமே தெரிவிப்போம். அடிதடியில் ஈடுபடுவதில்லை. 2014 ஷமீர் வழக்கிற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கூறினார்.

இந்தக் கொடிய தாக்குதலில் ஷமீர் உயிர் பிழைத்தார், ஆனால் அவரது வாழ்க்கை அப்படியே முடங்கிப்போனது போலாகிவிட்டது.

அவரது உடலின் இடது பக்கம் இப்போது வேலை செய்வதில்லை. இடது கண்ணால் அவரால் பார்க்கவும் முடியாது.

அவர் காசர்கோடு உப்பலா கிராமத்தில் தன் மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் வசித்து வந்தார். தாக்குதலுக்கு முன்பு ஷமீர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்தார்.

முன்பு அவரால் பெரும்பாலான நேரம் அமரக்கூட முடியாமல் இருந்தது. இப்போது அவர் தன் நாட்களை சோபாவில் படுத்தபடியும், லூடோ விளையாடியும் கழிக்கிறார்.

வீட்டு வேலைகளில் எந்தப் பங்களிப்பும் செய்ய முடிவதில்லை, ஆனால் வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்களை அபார்ட்மெண்ட் அல்லது நில உரிமையாளர்களுடன் இணைக்கிறார். இதன் மூலம் அவருக்குச் சிறிய அளவில் வருமானம் கிடைக்கிறது.

அவரது ஆசைகள் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றன. அவர் செயற்கை நுண்ணறிவு மூலம் தன் வீடியோக்களை உருவாக்குகிறார். அதில் தனக்கென ஒரு தனி உலகத்தை உருவாக்குகிறார், அங்கே அவர் சிரிப்பது, சுற்றுவது, நடப்பது போன்றவற்றைத் தனக்குத்தானே பார்த்துக் கொள்கிறார்.

'என் பேரன்-பேத்திகளுடன் விளையாடுவேன் என்று நினைத்தேன்'

தாக்குதலுக்குப் பிறகு அவரது குடும்பத்துப் பெண்களின் மீது வீட்டின் முக்கியப் பொறுப்பு வந்துவிட்டது. அவரது தாயார் பாத்திமா ஓய்வு பெறும் வயதில் வேலையைத் தொடங்க வேண்டியதாயிற்று. கருப்பு நிற பர்தாவில், பாத்திமா மிகுந்த தன்னம்பிக்கையுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார், ஆனால் இப்போது அவருக்கு வயதானதன் சோர்வும் தெரிகிறது.

பாத்திமா சிரித்துக்கொண்டே, "முதுமையில் வீட்டில் நிம்மதியாக உட்கார்ந்து என் பேரன்-பேத்திகளுடன் விளையாடுவேன் என்று நினைத்தேன்... ஆனால் இப்போது நிம்மதி இல்லை" என்கிறார்.

வீட்டை நடத்த அவர் முதலில் பள்ளி பேருந்து ஓட்டுநரானார், இப்போது டிரைவிங் இன்ஸ்ட்ரக்டராகப் பணிபுரிகிறார். இரண்டு அறைகள் கொண்ட இந்தத் தரைத்தள வீட்டை பாத்திமா ஷமீருக்காகவே வாடகைக்கு எடுத்தார், ஏனெனில் அவரால் படிக்கட்டுகளில் ஏற முடியாது.

ஷமீரை முதலில் அவரது மனைவியும் கவனித்து வந்தார். ஆனால் இப்போது அவர் விவாகரத்து பெற விரும்புகிறார்.

தன் பெயர் வெளியில் தெரியக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவர் கூறும்போது, "அவர் மிகவும் கோபப்படுகிறார். தன் எல்லா விரக்தியையும் என் மீது காட்டுகிறார். என்னை அவமானப்படுத்துகிறார். திட்டுவார். அடிக்க மாட்டார், ஆனால் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் கத்துவார்."

மருத்துவ மற்றும் சட்டச் செலவுகளால் குடும்பம் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருந்தது.

ஷமீரின் தாயார் நம்மிடம், "எங்களுக்கு கர்நாடகாவில் வீடு இருந்தது. அதை விற்க வேண்டியதாயிற்று. தங்க நகைகளையும் விற்றோம். மருந்துக்காகப் பணம் செலவழித்து இப்போது நாங்கள் முழுமையாகக் காலி ஆகிவிட்டோம். ஒன்றும் மிஞ்சவில்லை" என்றார்.

குற்றவாளிகள் யார்?

பம்பவேல் சந்திப்பில் ஷமீர் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மங்களூரு ஊரகக் காவல்துறை விசாரித்தது. விசாரணையில் 6-7 பேர் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்தது, ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், சாட்சிகள் பிறழ்ந்ததன் காரணமாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியது. அதனால் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

கே.எஸ். சர்மா, ஐந்து பேரில் நான்கு குற்றம்சாட்டப்பட்டவர்களின் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்.

அவர் பிபிசி ஹிந்தியிடம், "நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று நிரூபிக்க அரசுத் தரப்பு எந்தவொரு வலுவான ஆதாரத்தையும் சமர்ப்பிக்கத் தவறியது. புனையப்பட்ட கதை முற்றிலும் பொய்யானது, கற்பனையானது. நான் விசாரணை அதிகாரியிடமும் மற்ற சாட்சிகளிடமும் குறுக்கு விசாரணை செய்தபோது, அவர்களில் எவரும் உண்மையாகவே இந்த குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்த நபர் மீது தாக்குதல் நடத்தியதைப் பார்க்கவில்லை என்பதை நிரூபித்தேன்" என்றார்.

ஷமீர் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் மீது கர்நாடக பசுவதை தடுப்புச் சட்டம் (1964) மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு உள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்த வழக்கில் அவரது கூட்டாளி ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நீதிமன்றம் யாரையும் குற்றவாளியாக அறிவிக்கவில்லை என்றாலும், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஷமீரின் குடும்பம் முற்றிலும் சிதைந்துவிட்டது.

நசிரின் மூச்சுத்திணறல்

24 வயது நசிர் உசேன், தான் மூச்சுத்திணறி வாழ்வதாகக் கூறுகிறார். அவரது மூச்சுத்திணறலுக்கு மும்பையின் வெப்பமோ அல்லது குறுகிய தெருக்களோ காரணமல்ல, அந்தத் தெருக்களிலிருந்து காணாமல் போன தன் நண்பர் அஃபானின் காலடிச் சத்தம்தான்.

நசிர் மும்பையின் குர்லா பகுதியில் உள்ள மக்கள் அடர்த்தியான பகுதியில் வசித்து வருகிறார். அங்குதான் அவரைச் சந்தித்தோம்.

அங்குள்ள தெருக்கள் மிகவும் குறுகியவை, ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது, புழுக்கமான வெப்பத்தில் இந்தச் சந்துகளில் சுவாசிப்பதுகூடக் கடினமாகிவிடுகிறது.

அருகில் ரயில் பாதை செல்கிறது. அதைச் சுற்றிப் பல தற்காலிகக் குடிசைகள் உள்ளன. தகரக் கூரைகளின் கீழ் அமைக்கப்பட்ட இந்த வீடுகள் கோடையில் சூளையைப் போல இருக்கும். குழந்தைகள் தண்டவாளத்தில் பயமின்றி விளையாடுகிறார்கள். எப்போதாவது கடந்து செல்லும் ரயிலும் அவர்களைப் பயமுடுத்துவதில்லை.

நசிர் 2023-ல் தன் நண்பர் அஃபானை ஒரு சம்பவத்தில் இழந்தார், அதை அவர் கும்பல் வன்முறை வழக்கு என்று கூறுகிறார்.

வழக்கில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரின்படி, நசிரும் அஃபானும் 24 ஜூன் 2023 அன்று அகமது நகரிலிருந்து ஒரு காரில் 450 கிலோ இறைச்சியை எடுத்துக்கொண்டு மும்பை சென்று கொண்டிருந்தனர். அப்போது சம்ருத்தி நெடுஞ்சாலையில் 10-15 பேர் அவர்களை வழிமறித்தனர். அதன் பிறகு நசிர் மற்றும் அஃபான் மீது தடிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்தக் காட்சியை நினைவுகூரும் நசிர், "நாங்கள் கறுப்புப் பொருள் (எருமை இறைச்சி) எடுத்துச் சென்றோம். அப்போது சிலர் சாலையில் ஆணிகளை வீசி காரை நிறுத்தினார்கள்" என்றார்.

அவர் குற்றம் சாட்டும்போது, "அவர்கள் எங்களை அடித்தார்கள், என் கண் முன்னாலேயே அஃபானை மிகவும் கொடூரமாக அடித்தார்கள்" என்றார்.

அவரது கூற்றுப்படி, "இரவு 7:30-8 மணிக்கு போலீஸ்காரர்கள் வந்து எங்களை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார்கள். மருத்துவமனையில் எனக்கு நினைவு திரும்பிய போது, அஃபான் எங்கே என்று கேட்டேன். அவர் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்."

இந்த வாக்கியத்தைக் கூறும்போது நசிர் தலைகுனிந்து தோல்வியுற்றவர் போலக் காட்சியளிக்கிறார்.

அவர், "அஃபான் என் சிறுவயது நண்பன். இருவரும் டியூஷன் கூட ஒன்றாகத்தான் படித்தோம். சிறு வயது முதலே ஒன்றாக இருந்தோம்... போகும்போதும் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டான்... என்ன சொல்வது?" என்கிறார்.

நசிர் மற்றும் அஃபான் மீது மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் (1995) மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் (1988) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் நசிக் ஊரகக் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) டி.எஸ். சுவாமியை நேரில் சந்தித்துப் பேச முயன்றோம். அவரது அலுவலகத்திற்குச் சென்றோம், ஆனால் அவர் அதைத் தவிர்த்துவிட்டார். பின்னர் பலமுறை முயற்சித்த பிறகும் தொலைபேசி அழைப்பு, வாட்ஸ்அப் செய்தி மற்றும் மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்கவில்லை.

பசு காவலர்களின் பக்கம்

நாசிக் நகருக்குள் நுழைவதற்கு முன்பு ஒரு கால்நடை மருத்துவமனை மற்றும் கோசாலை உள்ளது. அங்கே தெரு நாய்கள், ஒரு பூனை மற்றும் பல பசுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

அங்குதான் ஹேமந்த் பர்தேசியைச் சந்தித்தோம். அவர் நசிர் மற்றும் அஃபான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 14 பேரில் ஒருவர்.

இந்த கோசாலையில் உள்ள பெரும்பாலான பசுக்களை நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான நிலையில் மீட்டதாகவோ அல்லது கசாப்புக் கடைக்காரர்களிடமிருந்து மீட்டதாகவோ பர்தேசி கூறுகிறார்.

அவர், "சம்ருத்தி நெடுஞ்சாலையில் ஒரு சுங்கச் சாவடி உள்ளது. அங்கே மாட்டிறைச்சி இருப்பதாகப் பசு காவலர் ஒருவரிடமிருந்து எனக்கு போன் வந்தது. 30-40 கிமீ தொலைவில் உள்ள கிராமத்துப் பசு பாதுகாப்பு குழுவுக்குப் போன் செய்து, இப்படி ஒரு வண்டி வருகிறது, அதிலிருந்து இரத்தம் கொட்டுகிறது என்று சொன்னோம்" என்றார்.

அவரது கூற்றுப்படி, "அவர்கள் அந்த வண்டியை நிறுத்தி 112-க்கு போன் செய்தார்கள். வழியில் இருந்த பொதுமக்கள் அடித்ததில் அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். நான் சம்பவ இடத்தில் இல்லை, நான் குழுவுக்குத் தகவல் மட்டும்தான் கொடுத்தேன்."

மற்றொரு தாக்குதல்?

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு நசிர் ஓட்டுநர் வேலையை விட்டுவிட்டார். முதலில் ஒரு குடியிருப்பில் தோட்டக்காரராக வேலை செய்தார். பிறகு அருகில் உள்ள தேவநார் இறைச்சிக் கூடத்தில் ஆடு மேய்க்கும் வேலையைத் தொடங்கினார்.

ஆனால், சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ரமலான் மாதத்தில் கொஞ்சம் பணம் சம்பாதிப்பதற்காக மீண்டும் ஓட்டுநர் வேலையைத் தொடங்கினார். 2026 மார்ச் 6 அன்று மீண்டும் சம்ருத்தி நெடுஞ்சாலையில் நான்கு பேர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் கூறுகிறார். இந்தத் தாக்குதலில் அவரது கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டு, காலின் எலும்பு முறிந்தது.

இத்தகைய சம்பவங்களுக்குப் பிறகு நசிரின் வீட்டிலும், அந்தப் பகுதி முழுவதிலும் பயம் பரவியுள்ளது.

தேவநார் மண்டிக்கு அருகில் உள்ள இந்த பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் இறைச்சி கொண்டு செல்லும் வேலையைச் செய்கிறார்கள். இங்குள்ள டிரான்ஸ்போர்ட் அசோசியேஷனின் போலா ஷா, அடிக்கடி தங்கள் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடப்பதாக நம்மிடம் கூறினார். கடந்த ஆண்டுகளில் தங்கள் ஓட்டுநர்கள் நான்கு பேர் பசு காவலர் குழுக்களால் கொல்லப்பட்டதாக அவர் கூறுகிறார்.

"ஒவ்வொரு முறையும் வண்டியை எடுக்கும்போது, நான் உயிருடன் திரும்புவேனா என்று ஓட்டுநர் யோசிக்கிறார். அது அல்லாஹ்வுக்கு மட்டும்தான் தெரியும். வண்டியைச் சோதியுங்கள், சட்டவிரோதம் என்றால் போலீஸைக் கூப்பிடுங்கள். போலீஸ் நடவடிக்கை எடுக்கும். நாமே நீதிபதி, நாமே சட்டம் என்று சாலையில் இறங்குவதால் ஓட்டுநர்கள் மிகவும் அடி வாங்குகிறார்கள். பயந்துபோய் இருக்கிறார்கள். சட்டப்படியான வேலை என்றாலும், ஓட்டுநருக்குள் பயம் இருக்கிறது" என்கிறார் போலா ஷா.

இப்போது நசிரின் குடும்பம் மருத்துவச் செலவுகளால் பெரும் கடனில் மூழ்கியுள்ளது. வீட்டின் பெண்களின் நகைகள் விற்கப்பட்டுவிட்டன. அவரது தம்பியும் கல்லூரிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.

நசிர் மற்றும் அஃபான் மீது தாக்குதல் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் இன்னும் விசாரணை தொடங்கவில்லை.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் இன்னல்கள்

இந்து மதத்தில் பசு புனிதமாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் பசுவதை மற்றும் அதன் கடத்தலுக்குத் தடை உள்ளது.

பசு காவலர் குழுக்கள் மீது நாட்டில் பல இடங்களில் கும்பல் வன்முறை குற்றச்சாட்டுகள் உள்ளன.

ராஜஸ்தானில் பெஹ்லு கான், ஜார்க்கண்டின் அலிமுதீன் அன்சாரி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் முகமது அக்லாக் வழக்குகள் இதற்கு மிக முக்கிய மற்றும் பிரபலமான உதாரணங்கள்.

பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023-ன் பிரிவு 103 (2)-ல் முதன்முறையாக கும்பல் வன்முறை தண்டனைக்குரியதாக்கப்பட்டுள்ளது. என்சிஆர்பி (NCRB) 2024 தரவுகளின்படி, இந்தியாவில் இத்தகைய 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

'கார்வான்-ஏ-மொஹப்பத்' என்பது ஓர் இயக்கம். இது 2017-ல் கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவத் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கீழ் மனித உரிமை ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் பல பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பங்களையும் சந்தித்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு இத்தகைய வழக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகத் தாக்கங்கள் குறித்த ஆழமான புரிதல் உள்ளது.

கும்பல் வன்முறை மூலம் சில குழுக்கள் முஸ்லிம் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்த முயல்வதாக ஹர்ஷ் மந்தர் குற்றம் சாட்டுகிறார்.

அவர், "கலவரங்கள் நடக்கும்போது பாதிக்கப்பட்டவருக்கும் ஒரு சமூகம் இருக்கும். ஒரு கிராமத்தில் 50 பேர் இருப்பார்கள், அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க முடியும். ஆனால் கும்பல் வன்முறையில் தனிமை அதிகம். பயம் அதிகம்" என்கிறார்.

கும்பல் வன்முறை வழக்குகளில் எஃப்ஐஆர்களும் கூடப் பல நேரங்களில் மிகவும் பலவீனமாகவே பதிவு செய்யப்படுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

அவர் கூறும்போது, "நீதிமன்றத்திற்குள் ஒரு விசித்திரமான சூழ்நிலை உள்ளது, பாதிக்கப்பட்டவர் பயந்து நடுங்கிப் போகிறார், ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நுழைகிறார்கள்."

அவர் மேலும் கூறும்போது, "இது ஒரு இந்து நாடு என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் மற்றும் காவல்துறையின் ஆதரவும் இருக்கிறது" என்கிறார்.

ஒன்றிலிருந்து ஒன்று நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் நசிரும் ஷமீரும் தங்களுக்கு நேர்ந்த காயங்களின் வடுக்களுடன் வாழ முயன்று கொண்டிருக்கிறார்கள்.

2023-ல் தட்சிண கன்னட சட்ட சேவைகள் அமைப்பு ஒரு கடிதம் மூலம் ஷமீருக்கு 20,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அதே நேரத்தில், தன் இடது கால் உடைந்ததால் இனி எப்போதுமே வண்டி ஓட்ட முடியாது என்று நசிர் பயப்படுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு