"நீட் மறுதேர்வு அச்சம்": அடுத்தடுத்து இரு மாணவிகள் உயிரிழப்பு - பெற்றோர், மாணவர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தமிழ்நாட்டில் இரண்டு மாணவிகள் தற்கொலை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தமிழ்நாட்டில் இரண்டு மாணவிகள் தற்கொலை
    • எழுதியவர், பெ. சிவசுப்ரமணியம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக கோவை மற்றும் சேலத்தில் அடுத்தடுத்து இரு மாணவிகள் தற்கொலை முடிவை தேடிக் கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

"ஜூன் 16 ஆம் தேதி என் மகளுக்குப் பிறந்தநாள். வழக்கம்போல கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால், மூன்றே நாளில் இப்படியொரு மோசமான முடிவை நாடுவாள் எனக் கனவிலும் நினைக்கவில்லை" எனக் கூறி கண்கலங்குகிறார் சேகர்.

சேலத்தில் முடிதிருத்தும் கடையை நடத்தி வரும் சேகரின் மகள் கோபிகா, நீட் தேர்வு அச்சம் காரணமாக வெள்ளிக்கிழமையன்று தற்கொலை முடிவை தேடிக் கொண்டார்.

கோவையில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி அனுகீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். வினாத்தாள் கசிவு, நீட் பயிற்சி மைய கட்டணம் போன்றவற்றால் மரணங்கள் அதிகரிப்பதாக, எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. நீட் தற்கொலைகள் அதிகரிப்பது ஏன்?

கோவை மாணவிக்கு நேர்ந்த துயரம்

”கோவை மாணவி அனுகீர்த்தனா உயிரிழப்புக்கு வினாத்தாள் கசிவு, நீட் மறுதேர்வு அச்சம் போன்றவை காரணமாக அமைந்துவிட்டது" என்கிறார், மா.கம்யூ கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் பத்மநாபன்.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, "கோவை மாணவி அனுகீர்த்தனா உயிரிழப்புக்கு வினாத்தாள் கசிவு, நீட் மறுதேர்வு அச்சம் போன்றவை காரணமாக அமைந்துவிட்டது" என்கிறார், மா.கம்யூ கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் பத்மநாபன்.

கோவை மாவட்டம் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த செந்தில்பிரபுவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் டாஸ்மாக் தொழிற்சங்கத்தின் (சிஐடியு)மாவட்ட செயலாளராக பொறுப்பில் உள்ளார்.

எட்டிமடையில் உள்ள தனியார் பள்ளியில் செந்தில் பிரபுவின் மூத்த மகள் அனுகீர்த்தனா பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய இவர், தேர்ச்சியடையாத நிலையில் இரண்டாவது முறையாக முயற்சி செய்து தேர்வு எழுதியதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

கடந்த மே 3 ஆம் தேதியன்று நடைபெற்ற நீட் (இளநிலை) 2026 நுழைவுத் தேர்வை அவர் எழுதியிருந்தார். ஆனால் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்களையடுத்து இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது மாணவி அனுகீர்த்தனாவுக்கு கடுமையான மனச்சோர்வை ஏற்படுத்தியதாக, அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை தனது சித்தப்பாவுக்கு தவறான முடிவை நாடுவதாக வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து பதறிப் போய் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மயங்கிய நிலையில் மாணவி அனுகீர்த்தனா இருந்துள்ளார்.

அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

கீர்த்தனாவின் குடும்பத்தினர் சார்பில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் பத்மநாபன், "வினாத்தாள் கசிவு, நீட் மறுதேர்வு அச்சம் போன்றவை மாணவி உயிரிழக்கக் காரணமாக அமைந்துவிட்டது" என்றார்.

"ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வை மாணவி எழுதியிருந்தார். கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வை நல்லமுறையில் எழுதியிருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை" எனவும் பிபிசி தமிழிடம் பத்மநாபன் தெரிவித்தார்.

மாணவி உயிரிழப்பைத் தொடர்ந்து கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில், வெள்ளிக்கிழமையன்று சேலத்தைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'இருமுறை நீட் தேர்வு எழுதியும்...'

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர், முடிதிருத்தும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண்கள், ஓர் ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவர்களின் இரண்டாவது மகள் கோபிகா, சேலம் அரசு கோட்டை மேல்நிலைப்பள்ளியில் 2024 ஆம் ஆண்டு பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்தார். மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருமுறை தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை.

கடந்த மே மாதம் கோபிகா எழுதிய நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 21 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கு அவர் தயாராகி வந்தார். சேலம் வாழப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்கு கோபிகாவுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் கொங்கணாபுரம் காவல்துறையினர் அளித்த தகவலின்படி, "வெள்ளிக்கிழமையன்று வீட்டில் யாரும் இல்லாத சூழலில் தற்கொலை முடிவை நாடியுள்ளார்." அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாணவியின் இறப்பு குறித்து கொங்கணாபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மாணவியின் இறப்பு குறித்துப் பேசிய அவரின் தந்தை சேகர், "எருமாபாளையத்தில் வசித்து வந்தோம். நேரம் சரியில்லை என உறவினர்கள் கூறியதால் எடப்பாடி அருகில் உள்ள வெள்ளாளபுரத்தில் மாமனார் வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறோம்" எனக் கூறினார்.

'மூன்றே நாளில் விபரீத முடிவு'

”ஜூலை 16ம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய சேலத்தை சேர்ந்த கோபிகா திடீரென தற்கொலை முடிவை எடுவித்துவிட்டார்” என அவரது தந்தை சேகர் கூறினார்.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, "ஜூலை 16ம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய சேலத்தை சேர்ந்த கோபிகா திடீரென தற்கொலை முடிவை எடுவித்துவிட்டார்" என அவரது தந்தை சேகர் கூறினார்.

அரசுக் கல்லூரியில் மருத்துவம் படிப்பது தனது மகளின் கனவாக இருந்ததாகக் கூறும் சேகர், " நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறாவிட்டால் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது என மகள் கூறினாள். மதிப்பெண் குறைந்தாலும் குறைவான கட்டணத்தில் மருத்துவப் படிப்பில் சேர்த்துவிடுகிறேன் எனக் கூறினேன்" என்கிறார்.

கடந்த ஜூன் 16 ஆம் தேதி கோபிகாவுக்குப் பிறந்தநாள். "கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு வழக்கம்போல மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால், என்ன நினைத்தாரோ இப்படியொரு மோசமான முடிவை அவர் எடுத்துவிட்டார்" எனக் கூறி கண்கலங்கினார் சேகர்.

தமிழ்நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் அரியலூரில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது இருந்தே நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டில் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி கடந்த தி.மு.க ஆட்சியில் மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை தீர்மானத்துக்கு ஆளுநரும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்கவில்லை.

'வினாத்தாள் கசிவே காரணம்'

நீட் வினாத்தாள் கசிந்ததையொட்டி மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, நீட் வினாத்தாள் கசிந்ததையொட்டி மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

தற்போது புதிதாக த.வெ.க அரசு பொறுப்பேற்ற பிறகு, 'பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே மருத்துவ சேர்க்கையை நடுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்' என, மே 13 ஆம் தேதின்று மத்திய அரசிடம் முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு குறித்து சாடியுள்ள முதலமைச்சர், 'தமிழ்நாட்டில் சுமார் 1.4 லட்சம் மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். வினாத்தாள் கசிந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.

தேர்வு ரத்து நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவப் படிப்பு ஆர்வலர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளதாகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, தேர்வுக் கூடங்களில் நடக்கும் பரிசோதனை ஆகியவற்றால் உயிரைக் கொல்லும் மோசடியாக மாறிவிட்டதாக சாடியுள்ளார்.

நீட் தேர்வு ஒழிப்புக்காக தி.மு.க எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் சட்டப் போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர வேண்டும் எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.

"மருத்துவப் படிப்பு மட்டுமல்லாமல் மருத்துவம் சார்ந்த பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. அவற்றை தேர்வு செய்யாமல் விபரீத முடிவுக்கு வருவது தவறானது" எனக் கூறியுள்ளார், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இதுபோன்ற தவறான வழிக்கு எந்தவொரு மாணவ, மாணவியும் செல்லக் கூடாது என தான் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

'கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக 40 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு வழிவகுத்ததைத் தவிர நீட் தேர்வால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை' என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், பா.ம.க தலைவர் அன்புமணி.

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கு மறுதேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் என்னவாகுமோ என்ற அச்சத்தில் சேலம் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டறிவது எப்படி?

மாணவர்கள் தற்கொலைக்கு ஒரு வித மனத்தாக்குதலே காரணம் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாணவர்கள் தற்கொலைக்கு ஒரு வித மனத்தாக்குதலே காரணம் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

நீட் மறுதேர்வு அச்சம் காரணமாகவே இரண்டு மாணவிகள் உயிரிழந்துவிட்டதாக அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்த விவகாரத்தில் பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆத்தூரில் வசிக்கும் மனநல மருத்துவர் மோகன்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"தற்கொலை எண்ணத்துக்குச் செல்லும் குழந்தைகள், உடனே அந்த முடிவுக்கு வரமாட்டார்கள். யாராவது தன்னைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற பரிதவிப்பு அவர்களுக்குள் ஏற்படும்" எனக் கூறுகிறார் அவர்.

"சரியாக சாப்பிடாமல் இருப்பது, தூங்காமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இவற்றை அறியலாம். இதைக் கவனிக்க முடியாத நிலையில் பெற்றோர் இருக்கும்போது தான் இறுதியாக தவறான முடிவை நாடுகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெற்றோருக்கு பொருளாதார சிக்கல், குடும்ப உறவில் சிக்கல், தொழில் போட்டி எனப் பல பிரச்னைகள் உள்ளதாகக் கூறும் மருத்துவர் மோகன்குமார், "இதனால் குழந்தைகளைக் கவனிப்பதில் சிரமம் ஏற்படும். இதுபோன்ற சூழல்களில் மனநல மருத்துவர்களை சந்திக்க வைப்பது நல்லது" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "தேர்வுக்கு சரிவர படிக்க முடியவில்லை. படிப்பின் மீது பயம், தொடர் தோல்விகள் என்ற நிலைக்கு மாணவர்கள் செல்லும்போது, மனநல மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற வைப்பது மாணவர்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்" எனத் தெரிவித்தார்.

'எதிர்மறை மதிப்பீடுகளே காரணம்'

ஒருவித மனத் தாக்குதலே தற்கொலைகளுக்கு முக்கிய காரணமாக அமைவதாகக் கூறும் மருத்துவர் மோகன்குமார், "தேர்வில் தோல்வி அல்லது பின்தங்கிவிடுவது ஆகியவை மட்டுமல்லாமல் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களால் எதிர்மறையாக மதிப்பிடுவது போன்றவவை பிரதானமாக உள்ளன" என்கிறார்.

தொடர்ந்து படிப்பதால் ஏற்படும் தூக்கமின்மை, மனச்சோர்வு, உடல் சோர்வு, எதிர்காலத்தின் மீது ஏற்படும் நம்பிக்கையின்மை போன்றவைகளே தவறான முடிவை நாடுவதற்கு முக்கியமானதாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"தனது குழந்தை இதைத் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருக்கக் கூடாது. அந்த எண்ணத்தைக் குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தாலே அவர்களுக்கு வாழ்க்கை மீதான வெறுப்பும் நம்பிக்கையின்மையும் ஏற்படாது" என்கிறார் மருத்துவர் மோகன்குமார்.

தற்கொலை தீர்வல்ல

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் : 044 2464 0050

help@snehaindia.org என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

கூடுதல் தகவல்கள் பிபிசி தமிழ் செய்தியாளர் சேவியர் செல்வகுமார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு