நீலகிரி சாலையோரம் கிடந்த ஒட்டுண்ணி 'ஈ' இந்திய இயற்கை வரலாற்றில் இடம்பிடித்தது எப்படி?

நீலகிரி சாலையோரம் கிடந்த ஒட்டுண்ணி ஈ இந்திய இயற்கை வரலாற்றில் இடம்பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், N.Moinudheen

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் பனிமூட்டம் சூழ்ந்த நீலகிரி மலைப் பகுதியில் உயிரியலாளர் நிஜாமுதீன் மொய்னுதீன் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஒரு வழக்கமான களப் பயணம், ஓர் எதிர்பாராத அறிவியல் கண்டுபிடிப்புக்கு வித்திட்டது.

அவர்கள் அப்பகுதியில் உள்ள காட்டுயிர்களை ஆவணப்படுத்திக் கொண்டிருந்தபோது, ஊட்டிக்கு அருகில் சாலையோரத்தில் புதிதாக இறந்து கிடந்த ஒரு பறவையைக் கண்டனர். அவர்கள் அதைக் கவனித்தபோது, அதன் பிடரிப் பகுதியில் இருந்து ஒரு சிறிய ஒட்டுண்ணி ஈ ஊர்ந்து வந்து தரையில் விழுந்தது.

அது, இதுவரை இலங்கையில் மட்டுமே இருப்பதாக நம்பப்பட்ட, ஓரிடவாழ்வியாகக் கருதப்பட்ட 'மயோப்தீரியா ஸெய்லானிகா' என்ற அரிய வகை ஒட்டுண்ணி ஈ. அது "இந்தியாவில் பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை" என்கிறார் அதைக் கண்டறிந்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்த உயிரியலாளரான மொய்னுதீன்.

'ஹிஸ்டோரியா நேச்சுரலிஸ் பல்காரிகா' என்ற சர்வதேச ஆய்விதழில் சமீபத்தில் இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை வெளியானது. இந்தக் கண்டுபிடிப்பு, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான சூழலியல் தொடர்புகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

இந்த ஆய்வை, ஜோசஃப் ஒபோனா, ஆரோக்கியநாதன் சாம்சன், கேசவன் ரிஷி, அன்பழகன் அபினேஷ், இளங்கோவன் விக்னேஷ், மூர்த்தி சரண், முகமது ஷாஹிர், ஆசாத் காமில் ஆகிய ஆய்வாளர்கள் அடங்கிய குழு மேற்கொண்டது.

இந்தப் புதிய பூச்சியினம், பொதுவாக பேன் ஈக்கள் என்று அழைக்கப்படும் ஹிப்போபோசிடே என்னும் அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது என்று இந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

மேலும், இந்த அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த பூச்சிகள் பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் உடலில் வாழக்கூடிய ரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணி ஈக்களாகும். ஆனால், மயோப்தீரியா ஸெய்லானிகா ஒரு சாதாரண ஈ அல்ல. விஞ்ஞானிகள் மயோப்தீரியா பேரினத்தை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், பறக்கும் திறனற்றதாகவும், தோற்றத்தில் சிலந்தியைப் போல் இருப்பதாகவும் விவரிக்கின்றனர்.

சின்ன உழவாரன் பறவை குகைகளில் கூடு கட்டும் பறவையினமாகும்

பட மூலாதாரம், N.Moinudheen

படக்குறிப்பு, சின்ன உழவாரன் பறவை குகைகளில் கூடு கட்டும் பறவையினமாகும்

இந்த ஆய்வறிக்கைப்படி, மயோப்தீரியா பேரினத்திற்குள் உள்ள பூச்சியினங்கள், "குறிப்பிட்ட பறவை இனங்களுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருக்கின்றன." இவை தமது வாழ்நாளின் பெரும்பகுதியை பறவைக் கூடுகளுக்குள் மறைந்திருந்தோ அல்லது அவை ஒட்டியிருக்கும் பறவைகளின் உடலுக்கு உள்ளே ஒளிந்தபடியேவோ கழிப்பதால், அவற்றின் உயிரியல் அமைப்பை ஆய்வு செய்வது மிகவும் கடினமாக உள்ளது என்கிறார் மொய்னுதீன்.

ஆய்வுக் கட்டுரையின்படி, "நீலகிரியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒட்டுண்ணி ஈ, மயோப்தீரியா ஸெய்லானிகா இனத்தைச் சேர்ந்த பெண் ஈ என்பது ஆய்வில் அடையாளம் காணப்பட்டது. இதுவரை இந்த இனம் இலங்கையில் மட்டுமே காணப்படும் ஓரிடவாழ்வி என்று கருதப்பட்டது.

விஞ்ஞானிகள் முன்னதாக, ஹூனஸ்கிரியா, ஊவா மலைகள், எல்லா, பண்டலுயோயா, கிந்தோட்டா உள்ளிட்ட இலங்கையின் ஒரு சில பகுதிகளில் இருந்து மட்டுமே இந்தப் பூச்சியை ஆவணப்படுத்தியிருந்தனர்."

எனவே, நீலகிரியில் கிடைத்துள்ள இந்தக் கண்டுபிடிப்பு, இந்த உயிரினத்தின் வாழிடப் பரவல் இலங்கையுடன் சுருங்கிவிடவில்லை என்பதைக் குறிப்பதாகக் கூறுகிறார் மொய்னுதீன்.

நீலகிரி சாலையோரம் கிடந்த ஒட்டுண்ணி ஈ இந்திய இயற்கை வரலாற்றில் இடம்பிடித்தது எப்படி?
படக்குறிப்பு, உயிரியலாளர் நிஜாமுதீன் மொய்னுதீன்

'கண்ணில் படுவதே அரிது'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தச் சிறிய ஒட்டுண்ணி ஈயின் கண்டுபிடிப்பு மேலோட்டமாகப் பார்க்கையில் மிகவும் சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால், தெற்காசியா முழுவதும் உள்ள சூழலியல் உறவுகளையும் மறைக்கப்பட்ட பரிணாம வரலாறுகளையும் அறிந்துகொள்ள இத்தகைய கண்டுபிடிப்புகள் உதவுவதால் இது முக்கியமானது என்று பல்லுயிரிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஒட்டுண்ணி ஈ சேகரிக்கப்பட்ட ஓம்புயிரிப் பறவையான சின்ன உழவாரன் (Indian Swiftlet), மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் இலங்கையையும் பூர்வீகமாகக் கொண்ட ஒரு சிறு பறவையினமாகும்.

குகைகளில் கூடு கட்டும் பறவையினமான இவை, எதிரொலி இடமறிதல் (echolocation) திறனைப் பெற்றுள்ளன. ஆனால், வௌவால்களைப் போலன்றி இவை குகையினுள் அடர் இருட்டில் தமது கூட்டினைக் கண்டறிவதற்காக அதைப் பயன்படுத்துகின்றன.

அவற்றுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டு வாழக்கூடிய மயோப்தீரியா ஸெலானிகா என்ற இந்த ஒட்டுண்ணி ஈ, பொதுவாக சின்ன உழவாரன் பறவையின் உடலில் இருந்தோ அல்லது அவற்றின் கூடுகளில் இருந்தோ மீட்கப்படுவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த ஒட்டுண்ணி ஈக்கள் பறக்கும் திறன் இல்லாதவை என்றும் அதுகூட அவை ஒட்டி வாழும் பறவை அல்லது அவை கூடு கட்டும் இடங்களுக்கு வெளியே வெகு அரிதாகக் காணப்படுவதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் உயிரியலாளர் மொய்னுதீன்.

அதோடு, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சின்ன உழவாரன் பறவை பரவலாகக் காணப்பட்ட போதிலும், அவற்றில் ஒட்டி வாழக்கூடிய இந்தப் பூச்சியினம் இந்தியாவில் இதுவரை பதிவு செய்யப்படாமல் இருந்ததற்கும் இந்த அரிதான தன்மையே காரணமாக இருக்கலாம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

நீலகிரி சாலையோரம் கிடந்த ஒட்டுண்ணி ஈ இந்திய இயற்கை வரலாற்றில் இடம்பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

தனித்துவமான உருவ அமைப்பு

மயோப்தீரியா பேரினம் அதன் தனித்துவமான உருவ அமைப்புக்காக அறியப்படுவதாகக் கூறுகிறார் உயிரியலாளர் மொய்னுதீன்.

"இந்தப் பேரினத்தைச் சேர்ந்த ஈக்கள் அகலத்தைவிட நீளமான தலையையும், கணிசமாகச் சுருங்கிய கண்களையும் (அதன் தலையின் நீளத்தில் சுமார் ஏழில் இரண்டு பங்கு) கொண்டுள்ளன."

அதோடு, "இவற்றில் ஒசெல்லி எனப்படும் கண்மணிகள் இல்லை. அவற்றுடைய இறக்கைகள், எளிமையான நரம்பு அமைப்பைக் கொண்ட சிறு அமைப்புகளாகச் சுருங்கியுள்ளன. இது அவற்றின் ஒட்டுண்ணி வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கிறது. மயோப்தீரியா ஸெலானிகா என்ற இந்த ஒட்டுண்ணி ஈ, முன்னர் இலங்கையில் மட்டுமே காணப்படுவதாக அறியப்பட்டது. இந்நிலையில், தற்போது முதல்முறையாக இந்திய நிலப்பரப்பில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது" என்றும் இது குறித்தான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சின்ன உழவாரன் பறவை நகர்ப்புறங்களில் காணப்படுவதில்லை எனவும், அது காடுகளுக்கு உள்ளேதான் வாழ்கின்றன என்றும் கூறுகிறார் மெட்ராஸ் கால்நடை கல்லூரியின் இணை பேராசிரியரும் காட்டுயிர் ஆராய்ச்சியாளருமான முனைவர் ஸ்ரீகுமார்.

மக்கள் மத்தியில் அதிகமாகத் தென்படும் உயிரினங்கள் போலன்றி அவை காடுகளில் பெரிதும் தென்படாத நிலையில் வாழ்வதுகூட, இந்த ஒட்டுண்ணி இந்தியாவில் இதுவரை பதிவு செய்யப்படாமல் இருந்ததற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று விவரிக்கிறார் அவர்.

அவரது கூற்றுப்படி, "மயோப்தீரியா ஸெலானிகா என்ற இந்த ஒட்டுண்ணி ஈயின் வாழ்விடப் பரவல் இந்தியாவிலும் இருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, இந்த உயிரினம் ஏற்கெனவே இலங்கையில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது."

நீலகிரி சாலையோரம் கிடந்த ஒட்டுண்ணி ஈ இந்திய இயற்கை வரலாற்றில் இடம்பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், N.Moinudheen

படக்குறிப்பு, சின்ன உழவாரன் பறவையின் உடலில் ஒட்டி வாழக்கூடிய மயோப்தீரியா ஸெலானிகா என்ற ஒட்டுண்ணி ஈ

அதோடு, இத்தகைய ஒட்டுண்ணிப் பூச்சிகள் சூழலியலில் முக்கியமான பங்கைக் கொண்டிருந்தாலும், அவை பெரும்பாலும் கவனிக்கப்படாமலே போவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, அவற்றின் வாழ்வியல் தன்மையின் காரணமாக, அவற்றை அடையாளம் காண்பதும் விரிவாக ஆராய்வதும் கடினமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இருப்பினும், சுற்றுச்சூழலில் அவை சார்ந்து வாழக்கூடிய ஓம்புயிரிகளின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான குறிகாட்டிகளாகவும் கருதப்படுவதாகக் கூறுகிறார் முனைவர் ஸ்ரீகுமார். "ஏனெனில், அவற்றின் இருப்பு, நிலையான மற்றும் சீரான ஓம்புயிரிகளின் இருப்பைச் சார்ந்துள்ளது."

உதாரணமாக, சின்ன உழவாரன் பறவைகளின் எண்ணிக்கையும் செழுமையும் ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் அங்கு அவற்றைச் சார்ந்து வாழக்கூடிய ஒட்டுண்ணியான மயோப்தீரியா ஸெலானிகாவும் காணப்படும். அதாவது, இந்த ஒட்டுண்ணிகளின் இருப்பின் மூலம் சின்ன உழவாரன் பறவைகளின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

நீலகிரி போன்ற ஒப்பீட்டளவில் நன்கு ஆராயப்பட்ட நிலப்பரப்புகளில் கூட, எவ்வளவு விஷயங்கள் இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் உள்ளன என்பதை இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.

இந்தக் கண்டுபிடிப்பை மிகவும் சுவாரஸ்யமாக்குவது, இது ஒரு பெரிய ஆய்வுப் பயணத்தின் மூலம் வெளிப்படவில்லை என்பதுதான். ஆய்வாளர்கள் ஆய்வறிக்கையில் விவரிப்பது போல, ஒரு "வழக்கமான களப் பயணத்தின்" போது வெளிப்பட்டுள்ளது.

அதுகுறித்துப் பேசியபோது, இந்தக் குறிப்பிட்ட பறவையை பெரும்பாலும் எளிதாக ஆராய்ந்துவிட முடியாது என்றும், அதன் இறந்த சடலம் கிடைத்தது அதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, இந்த ஒட்டுண்ணியைக் காணும் சூழலை உருவாக்கியது என்றும் கூறினார் முனைவர் ஸ்ரீகுமார்.

அதேவேளையில், இந்த ஆய்வு வரம்புகளுக்கு உட்பட்டது என்று ஆய்வுக் குழுவினர் ஒப்புக்கொள்கின்றனர். "தற்போதைய ஆய்வறிக்கை ஒரேயொரு பெண் ஈயின் மாதிரியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. கூடுதலாக அதன் மாதிரிகளைச் சேகரித்து, விரிவாக ஆய்வு செய்யத் திட்டமிட்டு இருக்கிறோம்" என்று கூறுகிறார் மொய்னுதீன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு