'உனக்கு 15 வயது இல்லை என்பார்கள்..' - வைபவ் சூர்யவன்ஷியை வியந்து கெய்ல் முதல் சச்சின் வரை கூறியது என்ன?

வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2026, கெய்ல், சச்சின்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்த சாதனையை சூர்யவன்ஷி செய்துள்ளார்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐ.பி.எல் 2026-ன் எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்ஷி, இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் பல சாதனை படைத்தார்.

இருப்பினும், 30 பந்துகளில் அதிவேக சதம் அடித்த கிரிஸ் கெய்லின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை நூலிழையில் சூர்யவன்ஷி தவறவிட்டார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய சூர்யவன்ஷி, இன்னிங்ஸ் முடிந்த பின்னரே இந்த சாதனை தவறிய விஷயம் தனக்கு தெரியவந்தது என்று கூறினார்.

இப்போட்டியில், சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி 97 ரன்கள் எடுத்ததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய நட்சத்திர பேட்ஸ்மேன்களைக் கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராயல்ஸ் அணி 2வது குவாலிஃபயர் போட்டிக்குத் தகுதி பெற்றது.

வெள்ளிக்கிழமை (மே 29) நடக்கும் அந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ஆர்சிபி-யை எதிர்கொள்ளும்.

"நான் ஆட்டமிழந்த பிறகுதான், அதிவேக சதம் அடிக்கும் சாதனையைத் தவறவிட்டேன் என்பது எனக்குத் தெரிந்தது. எனது கவனம் முழுவதும் சிக்ஸர்கள் அடிப்பதில் மட்டுமே இருந்தது. சதம் என்பதை நான் அடுத்தடுத்த போட்டிகளிலும் அடிக்க முடியும், ஆனால் அணியின் வெற்றிக்காக என்னால் முடிந்த அளவு பங்களிப்பை வழங்குவதே எனது நோக்கமாக இருந்தது" என்று சூர்யவன்ஷி தெரிவித்தார்.

சூர்யவன்ஷி தனது அதிரடி இன்னிங்ஸில் மொத்தம் 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளை விளாசினார். அதாவது, தனது மொத்த ரன்களில் 92 ரன்களை பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலமே எடுத்தார், வெறும் 5 ரன்களை மட்டுமே ஓடி எடுத்தார்.

கெய்லின் அதிவேக ஐபிஎல் சத சாதனையை சூர்யவன்ஷி தவறவிட்டிருந்தாலும், ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்து கிரிஸ் கெய்லை அவர் முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்லின் மற்றொரு சாதனை முறியடிக்கப்பட்டது

வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2026, கெய்ல், சச்சின்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, யுனிவர்ஸ் பாஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சூர்யவன்ஷி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்திருந்தாலும், அவர் விரைவில் அதைச் சாதிப்பார் என்று கெய்ல் நம்புகிறார். ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்த சாதனை புரிந்த கெய்ல் (30 பந்துகளில் சதம்)தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "துரதிர்ஷ்டம்! ஆனால் நீங்கள் நிச்சயமாக அதை செய்வீர்கள்" என்று எழுதியுள்ளார்.

மேலும், "வைபவ் என்னவொரு அற்புதமான வீரர். பிரமாதம். புதிய சிக்ஸர் மெஷின்" என்றும் கெய்ல் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது பதிவில், "பாஸ் பேபி, வேர்ல்ட் பாஸின் சாதனையை முறியடித்து விட்டார்! நம்ப முடியவில்லை, இந்த சிறுவனின் ஆட்டத்தைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று எழுதியுள்ளார்.

சூர்யவன்ஷியின் இந்த அதிரடி ஆட்டத்திற்குப் பிறகு அவருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல வீரர்கள் சூர்யவன்ஷியைப் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.

வைபவின் இன்னிங்ஸைப் பாராட்டி சச்சின் டெண்டுல்கர் தனது 'எக்ஸ்' பக்கத்தில், "வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் அற்புதம். குறிப்பாக, கால்பகுதியை நோக்கி வரும் பந்துகளுக்கு இடம் உருவாக்கும் வகையில் அவர் முன்காலை அழகாக நகர்த்துவது இன்னும் சிறப்பானது.இந்த அணுகுமுறைதான் அவர் நினைத்தபடி விளையாட உதவுகிறது. அவரது அந்த இன்னிங்ஸ் ஒரு மாபெரும் அதிசயத்திற்கு இணையானது." என குறிப்பிட்டுள்ளார்.

போட்டிக்கு பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், "சூர்யவன்ஷி மிகச் சிறப்பாக விளையாடினார். மைதானத்தில் வேறு வழியே இல்லாதது போன்ற உணர்வை அவர் ஏற்படுத்தினார். ஆடுகளம் மிகவும் நன்றாக இருந்தது உண்மைதான். ஆனால், நீங்கள் லேசாக யார்க்கரைத் தவறவிட்டால் கூட, அதை சூர்யவன்ஷி துளியும் தவறவிடாமல் சிக்ஸருக்குப் பறக்கவிட்டு விடுகிறார்." என்றார்.

சூர்யவன்ஷி டி20 போட்டிகளிலும் பெரிய சதங்களை அடிக்கும் திறன் கொண்டவர் எனக் கூறும் ஜோஃப்ரா ஆர்ச்சர்,"அவரால் 150 ரன்கள்கூட அடிக்க முடியும். அவர் அதிக ரன்கள் எடுப்பது அணிக்குப் பெரிய பலமாகும்" என்று தெரிவித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், ''சக வீரர்களோ அல்லது பயிற்சியாளர்களோ இந்த 15 வயது பேட்ஸ்மேனிடம் அதிகமாகப் பேச வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை'' என்றார்.

போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் பேசிய பராக், "விஷயம் என்னவென்றால், நாங்கள் அவருக்கு அதிகம் எதுவும் சொல்வதில்லை. நான் முன்பே கூறியது போல், அவருக்கு பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும், அதனால் நெட் பயிற்சியில் அவருக்கு நிறைய பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்கிறோம், அதன் பிறகு மைதானத்திற்குள் சென்று அவர் தன்னுடைய வேலையைக் கச்சிதமாக செய்கிறார்." என்றார்.

ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் மூன்றாவது இடத்தில் உள்ளார். தன்னை சூர்யவன்ஷியின் தீவிர ரசிகர் என்று குறிப்பிட்ட அவர், வைபவின் வயதைக் குறித்துக் கேள்வி எழுப்புபவர்களைப் புறக்கணிக்குமாறு கூறினார்.

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "வாழ்த்துகள் தம்பி! உன்னைப் பிடிக்காதவர்கள் உனக்கு 15 வயது இல்லை என்று சொல்வார்கள், ஆனால் அவர்களைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? 30 வயதுடைய வீரர்கள் பலர் களத்தில் தங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீயோ இப்போதே அதைச் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறாய். இதே உத்வேகத்துடன் தொடர்ந்து விளையாடு. நான் உனது தீவிர ரசிகன். பந்தைக் கூர்ந்து கவனித்து, அதைச் சிக்ஸருக்கு விளாசு!" என ரசல் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டிரைக் ரேட், வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி

'வைபவ் சூர்யவன்ஷி நிதர்சனமான ஓர் அற்புதம்'

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தனது 'எக்ஸ்' பக்கத்தில், "டி20 போட்டிகளில் 200 ரன்கள் அடிக்க வேண்டும் என்று வைபவ் என்னிடம் கூறியிருந்தார். அவர் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது!" என்று எழுதியுள்ளார்.

"நாம் ஓர் அற்புதத்தைக் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிறோம், ஒரு எதிர்கால நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம்மை பிரமிக்க வைக்கும் சிக்ஸர்கள். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கெய்லின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். 15 வயதேயான அந்த இளைஞரை, எதிரணி வீரர்கள், அணி உரிமையாளர்கள் என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே பாராட்டி வருகிறது. எதிர்கால கிரிக்கெட்டிற்குப் பல சுவாரசியமான விஷயங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன." என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் குறிப்பிட்டுள்ளார்

முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, "வைபவ் சூர்யவன்ஷி தான் இந்த ஐபிஎல் சீசனின் நிஜமான சூப்பர் ஸ்டார். ஐபிஎல் சீசனில், ஒரேயொரு தனிநபர் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் சமூகத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்ததாக எனக்கு நினைவிலேயே இல்லை." என குறிப்பிட்டுள்ளார்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் சூர்யவன்ஷியை, "இவர்தான் உலகின் மிகச் சிறந்த டி20 தொடக்க ஆட்டக்காரர். இந்திய அணி அவரை உடனடியாக தேசிய அணியில் தேர்வு செய்ய வேண்டும்." என பாரட்டியுள்ளார்.

இர்ஃபான் பதான் தனது பதிவில், "தனது 15 வயதிலேயே, ஐபிஎல் சீசன் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைப்பது வியக்கத்தக்க விஷயம். இப்படி ஒரு விஷயத்தை நாம் இதற்கு முன் பார்த்ததே இல்லை. வைபவ் சூர்யவன்ஷி ஒரு நிஜமான அற்புதம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சாகர் என்ற பயனர், "வைபவ் சூர்யவன்ஷி பள்ளிக்குச் சென்று, கணித வகுப்பில் வெறும் நாலாம் வாய்ப்பாட்டையும் ஆறாம் வாய்ப்பாட்டையும் (பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள்) மட்டும்தான் கற்றுக்கொண்டார் போலும்" என்று எழுதியுள்ளார்.

சாகருக்கு பதிலளிக்கும் பல்லவி திவாரி என்ற பயனர், "ஆமாம், அதுமட்டுமன்றி, தனது சீனியர்களால் கூட தீர்க்க முடியாத கணக்குகளைத் தீர்க்கவும் அவர் கற்றுக்கொண்டார், அதாவது மற்றவர்கள் அனைவரையும் விட மிக விரைவாகவே தனது தேர்வுகளை எழுதி முடிப்பது போல" என்று பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு