'இந்திய பயணத்திற்கு பிறகு என் மூளையில் 38 ஒட்டுண்ணிகள்' - இந்த பிரிட்டிஷ் பெண்ணுக்கு என்ன நடந்தது?

- எழுதியவர், நிக்கோலா பிரையன்
- பதவி, பிபிசி வேல்ஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு, கிட்டத்தட்ட ஒரு மீட்டர் நீளமுள்ள நாடாப்புழுவைப் பார்த்தபோது தான் தனக்கு ஏதோ பாதிப்பு இருப்பதாக லோரி டென்மன் முதன்முதலில் சந்தேகிக்கத் தொடங்கினார்.
"அதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. அது பார்ப்பதற்கு ஆங்காங்கே கோடுகள் போட்ட செல்லோடேப் போல இருந்தது," என்கிறார் கார்மர்தனைச் சேர்ந்த 42 வயதான லோரி.
இதுதான் 'நியூரோசிஸ்டிசெர்கோசிஸ்' பாதிப்பின் முதல் அறிகுறி.
இந்த நோயில், 38 ஒட்டுண்ணிகள் அவரது மூளையைத் தாக்கி, கடுமையான தலைவலி, வலிப்பு மற்றும் மனக்குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன.
பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் இந்த வகையான மூளைத் தொற்றால் சிலர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுள் லோரியும் ஒருவர்.
இந்தத் தொற்று பன்றி நாடாப்புழுவின் கூட்டுப்புழுக்களால் ஏற்படுகிறது.
பல ஆண்டுகால சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த லோரி இப்போது தனது வேதனையான அனுபவத்தைக் கொண்டு மற்றவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த நோய் குறித்து மக்கள் மேலும் தெரிந்துகொள்ள உதவவும் விரும்புகிறார்.
மூன்று மாத இந்தியப் பயணம்

பட மூலாதாரம், Lowri Denman
ஊடகத் துறையில் பணிபுரியும் லோரி, 2007 ஆம் ஆண்டில் மூன்று மாதங்கள் இந்தியாவுக்கு வந்திருந்தார்.
அவருக்கு அப்போது தான் இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அவரது மருத்துவரான தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் நிபுணர் மருத்துவர் பிரெண்டன் ஹீலி கருதுகிறார்.
உணவு நச்சுத்தன்மையைத் தவிர்ப்பதற்காக, லோரி தனது பயணத்தின் போது இறைச்சி சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார். இருப்பினும், பன்றி நாடாப்புழுவின் மிக நுண்ணிய முட்டைகளைக் கொண்ட உணவை அவர் அறியாமல் உட்கொண்டிருக்கலாம் என்று மருத்துவர் ஹீலி கருதுகிறார்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2010 இல், லோரி ஒரு உணவகத்தின் கழிப்பறையில் ஒரு நாடாப்புழுவைக் கண்டார்.
இதற்குப் பிறகு, அவர் ஒரு மருத்துவரிடம் சென்று தன்னை பரிசோதித்துக் கொண்டார், ஆனால் அவரது மலப் பரிசோதனை முடிவு சாதாரணமாக வந்தது. அப்போது அவரது ஆரோக்கியமும் நன்றாக இருந்ததால், அவரது வாழ்க்கை வழக்கம் போலத் தொடர்ந்தது.
இருப்பினும், அடுத்த ஒரு வருடத்திற்குள், அவர் கடுமையான தலைவலியால் அவதிப்படத் தொடங்கினார். 2011 இல், அவருக்கு முதல் முறையாக வலிப்பு ஏற்பட்டது.
"ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் நான் மிகவும் சிரமப்பட்டேன்," என்று கூறும் லோரி, "எனக்கு நினைவு திரும்பியபோது, நான் ஒரு ஆம்புலன்ஸில் இருந்தேன். இது எப்படி நடந்தது? ஏன் நடந்தது? என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்"என்கிறார்.

பட மூலாதாரம், Lowri Denman
பின்னர் லோரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
பரிசோதனைக்குப் பிறகு, முடிவுகளைக் கேட்பதற்காக லோரி அழைக்கப்பட்டார்.
"மருத்துவர் என்னை உட்கார வைத்து, 'நாங்கள் உங்கள் ஸ்கேன் அறிக்கையைப் பார்த்தோம், உங்கள் மூளையில் 38 ஒட்டுண்ணிகள் இருக்கின்றன' என்று கூறினார்" என்கிறார் லோரி .
"நானும் என் அம்மாவும் அதிர்ச்சியடைந்தோம். அது என்னவென்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை," என்கிறார் அவர்.
தொற்று பாதிப்புள்ள பூனைகளின் மலம் மூலமாகப் பரவக்கூடிய 'டாக்ஸோபிளாஸ்மோசிஸ்' என்ற தொற்று அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் முதலில் நினைத்தனர்.

பட மூலாதாரம், Lowri Denma
ஆனால், ஒரு வருடத்திற்கு முன்பு லோரி பார்த்த நாடாப்புழுவிற்கும், இப்போது அவருக்கு ஏற்படும் வலிப்பிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று லோரியின் தாய் கேட்டார்.
அதன்பின்னர் செய்யப்பட்ட விரிவான சோதனைகள், லோரிக்கு 'நியூரோசிஸ்டிசெர்கோசிஸ்' பாதிப்பு இருப்பதை இறுதியாக உறுதிப்படுத்தின.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தத் தொற்றானது சமைக்கப்படாத அல்லது அரைகுறையாக சமைக்கப்பட்ட பன்றி இறைச்சியை உண்பதாலும், நாடாப்புழு முட்டைகளால் அசுத்தமடைந்த நீர் அல்லது உணவை உட்கொள்வதாலும் அல்லது அசுத்தமான சூழலாலும் பரவக்கூடும்.
இந்த நோய் பிரிட்டனில் மிகவும் அரிதானது மற்றும் இந்தத் தொற்று பரவலாகக் காணப்படும் பகுதிகளிலிருந்து வந்தவர்களிடமே பெரும்பாலான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.

பட மூலாதாரம், Lowri Denman
"அப்போது என்னிடம் எண்ணற்ற கேள்விகள் இருந்தன. ஏனென்றால் என் உடல்நிலைக்கு என்ன ஆகப்போகிறது என்பது பற்றி எனக்கு தெரியவில்லை," என்று பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "அடுத்து என்ன நடக்கும்? நான் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? நான் என்ன மருந்துகளை உட்கொள்ள வேண்டும்? என்னால் மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியுமா? என்று நான் கவலைப்பட்டேன்"என்கிறார்.
லோரி இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அந்த நேரத்தில் அவருக்கு ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் மூலமும் ஸ்டீராய்டுகள் மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சில காலம் இந்த சிகிச்சை பலனளிப்பது போல் தோன்றியது.
அதற்குப் பிறகு பல வருடங்கள் அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார், அப்போது அவர் தனது சகோதரியுடன் நியூசிலாந்திற்குப் பயணம் செய்தார், பிரிஸ்டலில் வாழ்ந்தார், சர்க்கஸ் பயிற்சிகளை மேற்கொண்டார். ஹாஃப் மாரத்தான்களிலும் பங்கேற்றார்.
ஆனால் இதற்குப் பிறகு, ஒரு நாள் அவர் வேலையில் இருக்கும்போது திடீரென்று மயங்கி விழுந்தார்.

பட மூலாதாரம், Lowri Denman
மனநலத்தில் ஏற்படும் தாக்கம்

பட மூலாதாரம், Nicola Brown
லோரியின் மூளையில் இருந்த ஒட்டுண்ணிகளைச் சுற்றி கடுமையான வீக்கம் ஏற்பட்டிருப்பது பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்தது.
மயங்கி விழுந்த அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவர் அடிக்கடி குழப்பமடையத் தொடங்கினார்.
அவரது உடலில் மரத்துப்போதல் மற்றும் ஊசி குத்துவது போன்ற உணர்வு இருப்பதாகக் கூறத் தொடங்கினார்.
இதன் காரணமாக, லோரி தனது வேலையை விட்டுவிட்டு, கார்மர்தனில் உள்ள தனது தந்தையுடன் வசிக்கத் தொடங்கினார்.
அவருக்கு ஸ்டீராய்டு மருந்துகள் வழங்கப்பட்டதால், அது அவரது உடலிலும் முகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
அவரது உலகம் சுருங்கச் சுருங்க, அவர் கடுமையான மனச்சோர்வுக்குள் தள்ளப்பட்டார், அது இறுதியில் அவரது மனநலனைப் பாதித்தது.
லோரி ஒரு நரம்பியல் மனநல மருத்துவமனையில் ஆறு வாரங்கள் கழிக்க வேண்டியிருந்தது.
அதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்குத் தொடர்ந்து மாயத்தோற்றங்களும் மனக்குழப்பமும் ஏற்படத் தொடங்கின. நான் மிகுந்த பதற்றமடைந்து, பயத்தால் அவதிப்படத் தொடங்கினேன். எனது நிலைமை தொடர்ந்து மோசமடைந்து கொண்டே சென்றது," என்கிறார்.
"நிலைமை இவ்வளவு மோசமாக எப்படி மாறியது என்பதை என் குடும்ப உறுப்பினர்களால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. என் நண்பர்கள் என்னை வந்து பார்க்கும்போது, எனது இந்த நிலையைப் பார்த்து மிகவும் வருத்தமடைந்தனர்," என்று லோரி கூறுகிறார்.
அவரை வந்து சந்தித்தவர்களில், கடந்த 20 ஆண்டுகளாக அவரது தோழியாக இருக்கும் நிகோலா பிரவுனும் ஒருவர்.

சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு லோரியைப் பார்க்க வந்த நிகோலா, அவரது நிலைமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
"நான் அறைக்குள் சென்றபோது, அவர் ஒரு சிறு குழந்தையைப் போல நடந்து கொண்டிருந்தார்," என்கிறார் நிகோலா.
"அவர் தரையில் தவழ்ந்து கொண்டிருந்தார், ஜன்னல் திரைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார். ஒரு ஐந்து வயதுக் குழந்தையைப் போலத் தன் தந்தையின் மடியில் அமர்ந்திருந்தார்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகோலாவின் கூற்றுப்படி, சந்திப்பு முடிந்த பிறகு, லோரி அவரைத் திட்டி, இனிமேல் எப்போதும் வரவேண்டாம் என்று கூறியுள்ளார்.
பின்னர், லோரி அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார்.
அதில், "என்னை வந்து பார்த்ததற்கு மிக்க நன்றி. இன்று இரவு செய்திகளில் என்னை நீ பார்ப்பாய். காவல்துறை என்னைத் தேடி வருகிறது." என்று எழுதப்பட்டிருந்தது.
அந்தக் காலகட்டம் மிகவும் பயமுறுத்துவதாகவும், நிச்சயமற்ற தன்மை நிறைந்ததாகவும் இருந்தது என்று நிகோலா கூறினார்.
அவர், "லோரி எப்போதும் இப்படியேதான் இருப்பாரா? எங்கள் பழைய லோரியை நாங்கள் மீண்டும் பார்க்க முடியுமா? என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்," என்றார்.
இதற்குப் பிறகு, லோரி முழுமையாகக் குணமடைவதற்கான பயணம் மிகவும் நீண்டதாகவும் சவாலானதாகவும் இருந்தது.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் லோரியின் நிலைமை சரியாகாததால், அவர் மீண்டும் தனது தந்தையின் வீட்டிலேயே வாழத் தொடங்கினார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், "நான் முன்பிருந்ததைப் போல் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நான் பார்ப்பதற்கும் முன்பு போல இல்லை. வெளியில் எங்கும் செல்ல எனக்குப் பிடிக்கவில்லை." என்கிறார்.
பின்னர் லோரி, கார்மர்தனில் ஒரு கலை படிப்பை மேற்கொண்டார். 2018 ஆம் ஆண்டிற்குள், அவரது உடல் நலம் கணிசமாக மேம்பட்டதால், அவர் மீண்டும் கார்டிஃப் நகருக்குக் குடிபெயர்ந்து இன்டீரியர் டிசைனிங் படிக்கத் தொடங்கினார்.
இறுதியாக, 2022-இல் அவர் மீண்டும் பணியாற்றத் தொடங்கினார்.
அரிதான நோய்

லோரிக்கு சிகிச்சை அளித்த தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் பிரெண்டன் ஹீலி, தனது ஒட்டுமொத்தப் பணிக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு நோயாளியை எதிர்கொண்டது இதுவே முதல் முறை என்று கூறினார்.
அவர் கூறுகையில், "எனது பல ஆண்டுகால பணி வாழ்வில் , இப்படிப்பட்ட ஒரு பிரச்னையை ஒரே ஒரு முறை மட்டும்தான் பார்த்திருக்கிறேன்." என்றார்.
மருத்துவர் ஹீலியின் கூற்றுப்படி, லோரியின் இந்தப் பாதிப்பு குறித்து பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல முன்னணி நிபுணர்களும் விவாதித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் தொடர்ந்து பேசுகையில், "எனது மீதமுள்ள பணிக்காலத்தில் இதுபோன்ற மற்றொரு பாதிப்பை நான் காண்பேன் என்று நினைக்கவில்லை. நாடு முழுவதும் உள்ள பல தொற்றுநோய் நிபுணர்கள் தங்களது ஒட்டுமொத்தப் பணிக்காலத்திலும் இப்படி ஒரு பாதிப்பைக் கூடப் பார்க்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த நோய் மிகவும் அரிதானது." என்றார்.

பட மூலாதாரம், Lowri Denman
பல ஆண்டுகளாக உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்ட பிறகு, லோரியின் மூளையில் இருந்த ஒட்டுண்ணிகள் இப்போது கால்சியம் படிவங்களாக மாறிவிட்டன.
"அவற்றை என் மூளையிலிருந்து அகற்றுவதற்கு நான் எந்த அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை. அவை காலப்போக்கில் செயலற்றதாகி, கால்சியம் படிவங்களாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தற்போது அவை அந்த நிலையில் தான் இருக்கின்றன," என்று லோரி கூறினார்.
ஒட்டுண்ணியின் முட்டைகள் அனைத்தையும் அழிக்கும் வகையில் லோரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் நன்றாகக் குணமடைந்து வருவதாகவும் மருத்துவர் ஹீலி தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு லோரிக்கு வலிப்பு ஏதும் ஏற்படவில்லை, ஆனால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் வலிப்பு நோய்க்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும்.
தற்போது கார்டிஃப் நகரில் வசிக்கும் லோரி, தனது கடினமான அனுபவத்திலிருந்து ஏதேனும் ஒரு நல்ல விஷயம் கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறுகிறார்.
"இப்போது நான் எனது வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்லவும், இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எனது அனுபவத்தை ஏதேனும் ஒரு நல்ல காரியத்திற்காகப் பயன்படுத்தவும் விரும்புகிறேன்" என்று கூறும் லோரி,
"அடுத்த கணம் நம் வாழ்வில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இன்று நான் உயிருடன், ஆரோக்கியமாக, மீண்டும் ஒரு இயல்பான வாழ்க்கையை வாழ முடிகிறது. இதை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன்." என்கிறார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


























