திமுக இந்தியா கூட்டணியை உடைத்து மூன்றாவது அணியை உருவாக்க நினைக்கிறதா?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள 'இந்தியா' கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது.

அதற்கான காரணமாக, அதில் காங்கிரஸ் பங்கேற்கும் என்பதைக் குறிப்பிட்டுள்ள திமுக, இதுதொடர்பான அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு இழைத்த துரோகத்தால் மனக்காயமுற்று இருக்கும் கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், திமுக இல்லாத 'இந்தியா' கூட்டணி எத்தகையதாக இருக்கும், தேசிய அரசியலில் இதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கப் போகிறது என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

தேசிய அளவில் காங்கிரஸ் தற்போது முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால், அடுத்த தேர்தல் வரும்போது என்ன ஆகும் என்பதைத் தெளிவாகக் கூற முடியாத நிலை நிலவுவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.

ஏனெனில், "கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை நம்பி, இணைந்து பணியாற்றிய கட்சிகள் ஏறத்தாழ சிதறிக் கொண்டிருக்கும் சூழலைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, நாட்டின் பல மாநிலங்களில், மாநிலக் கட்சிகளின் ஆதரவின்றி காங்கிரஸால் இயங்க முடியாது.

இப்படிப்பட்ட சூழலில்தான், 2027இல் உத்தர பிரதேச தேர்தல் வரவிருக்கிறது. அந்தத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, சமாஜ்வாதி, சிவசேனா (உத்தவ் தாக்கரே), ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணியை உருவாக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் தேசிய அரசியலில் காங்கிரஸ் இல்லாத ஓர் அணி என்பது சாத்தியமாகலாம்," என்று அவர் விளக்கினார்.

'காங்கிரஸை மன்னிக்க திமுக தயாராக இல்லை'

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஐந்து தொகுதிகளை வென்ற காங்கிரஸ் கட்சி, பின்னர் தவெக-வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது.

இதற்கு திமுக சார்பில் கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. "காங்கிரஸ் கட்சி முதுகில் குத்திவிட்டதாகவும் ஒரே இரவில் அணி மாறிச் சென்றதாகவும்" விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சி இந்த விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டு தவெக அமைச்சரவையிலும் இடம்பிடித்தது.

இந்த நிலையில், தற்போது இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கெடுக்கப் போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "மாநில அளவில் தவெக உடனும் தேசிய அளவில் திமுக-வுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள காங்கிரஸ் முயல்கிறது. ஆனால் திமுக காங்கிரஸை மன்னிக்கத் தயாராக இல்லை.

தற்போதைய நிலையில், அக்கட்சியிடம் இருந்து விலகியிருக்கவே திமுக நினைக்கிறது. இனி வரும் காலங்களில், பிரச்னைகள் அடிப்படையில் மட்டுமே இந்தியா கூட்டணிக்கு திமுக ஆதரவளிக்க வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவித்தார்.

காங்கிரஸுக்கு மாநிலக் கட்சிகள் முக்கியம் ஏன்?

இந்தியா கூட்டணி அமைக்கப்படும்போது, தனியாக ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு விடக்கூடாது, ஏனெனில் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுவிடும் என்று கூறப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே, காங்கிரஸ் உடனான முரண்களையும் கடந்து பல்வேறு கட்சிகள் அந்தக் கூட்டணியில் இணைந்தன.

தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள், அதற்கு முரணாக இருப்பதாகவும் அதற்கு காங்கிரஸ் கட்சியே காரணமாக இருப்பதாகவும் கூறுகிறார் ராதாகிருஷ்ணன்.

மேலும், "மே 4ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ராகுல் காந்தி அல்லது மல்லிகார்ஜுன கார்கே என யாரேனும் ஒருவர், நேரடியாக மு.க.ஸ்டாலினை தொடர்புகொண்டு, தங்களால் ஆட்சியமைக்க முடியாது என்பதால் தவெக-வுக்கு ஆதரவளித்து நிலையான ஆட்சியமையத் துணைபுரியப் போவதாகக் கூறியிருக்கலாம்.

ஆனால், அப்படி எதையுமே செய்யாமல் நேரடியாக கூட்டணியை முறித்துக்கொண்டு, தவெக-வுடன் இணைந்தார்கள். முந்தைய ஆட்சியில் இருந்த எம்.எல்.ஏ-க்களாக இருந்தாலும், தற்போது கிடைத்துள்ள ஐந்து இடங்களாக இருந்தாலும், அந்த வெற்றிக்கான காரணம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். பல ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்ட ஒரு முக்கியக் கட்சி இப்படியான அணுகுமுறையைக் கையாண்டுள்ளது. அது, மாநில கட்சிகளுக்கு அதன் மீதான நம்பிக்கையை உடைத்துள்ளது," என்று விவரித்தார் அவர்.

இந்தியா கூட்டணியில் இருந்து முழுதாக விலகுவதாகவோ நீடிப்பதாகவோ எந்தவிதத் தெளிவையும் திமுக வழங்கவில்லை, ஜூன் 8ஆம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பதால் தாங்கள் பங்கெடுக்கப் போவதில்லை என்று மட்டுமே கூறியுள்ளது.

இருப்பினும், "மாநில ஆட்சியில், ஒரு எதிர்க்கட்சி மட்டுமே என்றில்லாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இருக்கலாம் என்ற நிலை நிலவுகிறது. அதேபோல, மத்தியிலும் இருந்தால் என்ன என்பதே திமுக-வின் தற்போதைய பார்வையாக இருக்கிறது" என்கிறார் அரசியல் விமர்சகர் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

காங்கிரஸ் கட்சியுடனான உறவில் மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் எனப் பலருக்கும் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறிய அவர், "அதையெல்லாம் கருத்தில் கொண்டு திமுக பாஜக-வுக்கு எதிராக ஒரு மூன்றாவது அணியை உருவாக்க முயலக்கூடும்" என்றார்.

'காங்கிரஸ் கட்சியால் தக்கவைக்க முடியவில்லை'

இந்தியா கூட்டணியின் முகங்களாக, மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், மமதா பானர்ஜி போன்றவர்கள் இருந்தனர்.

நிதிஷ் குமார் பாஜக கூட்டணிக்கு சென்றுவிட்ட நிலையில், மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி இப்போது தோல்வியடைந்து உள்ளனர்.

இந்தச் சூழலில், காங்கிரஸ் மட்டுமே இந்தியா கூட்டணியை வழிநடத்தினால், அக்கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

"அதற்கு வாய்ப்பில்லை" என்கிறார் ராதாகிருஷ்ணன். "காங்கிரஸை பொறுத்தவரை, அது செய்த பல தவறுகளில் இதுவும் ஒன்று. மாநிலக் கட்சிகளைப் பெரிதும் அலட்சியப்படுத்தியது. இப்படியிருக்கும் சூழலில் அக்கட்சியால் இதைச் சாத்தியப்படுத்த முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

"அவர்களால் தங்களது கூட்டணியையே தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை என்னும்போது, பாஜக-வை எப்படி எதிர்க்க முடியும்? காங்கிரஸை பொறுத்தவரை, தங்களை மாநிலக் கட்சிகள் ஒரு முக்கிய சக்தியாகப் பார்க்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படியான சூழல் இல்லை. தேசிய அரசியலில், பாஜக-வை அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டுமென நினைத்தால், அதற்குரிய வலுவான கொள்கைத் திட்டமும் கட்டமைப்பும் இருக்க வேண்டும். அது இல்லாததால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது" என்றார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

மேலும் பேசிய அவர், "இந்தியா கூட்டணியையே காங்கிரஸ் கூட்டணியாகத்தான் அக்கட்சி பிரகடனப்படுத்த முனைகிறது. இந்த மாதிரியான நடவடிக்கைகள் அந்த பிம்பத்தை உடைக்கிறது" என்றும் கூறினார்.

இவை மட்டுமின்றி, நீண்ட காலமாகவே மாநிலக் கட்சிகளை ஓர் அலட்சியப்போக்குடன்தான் காங்கிரஸ் அணுகுவதாகக் குறிப்பிட்ட ராமு மணிவண்ணன், "சுமார் 12 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இல்லாத சூழலில், மாநிலங்களிலும் பெருவாரியான அளவில் தனது ஆதிக்கம் இல்லாத நிலையில், அந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால், அதற்குரிய இயல்பும் தலைமையும் அவர்களிடத்தில் இல்லை என்பதுதான் சிக்கல்," என்று விவரித்தார்.

எதிரெதிராக இருந்தாலும் பல கட்சிகள் நாட்டு நலனுக்காக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் லஷ்மி ராமசந்திரன் தெரிவித்தார்.

''அரசியல் வேறுபாடுகளை மறந்து கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டும். இந்தியா கூட்டணி எதிர்காலத்தில் மேலும் வலுவாக இருக்கும்'' என அவர் தெரிவித்தார்.

திமுக பாஜக-வை நோக்கி நகருகிறதா?

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் பாஜக-வின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக திமுக குரல் எழுப்பி வருகிறது.

இந்தச் சூழலில், அதிமுக உடனான கூட்டணியில் தமிழ்நாட்டில் பெரியளவில் பயனடைய முடியாத காரணத்தால், பாஜக திமுக-வுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை எடுக்கலாம் என்ற பேச்சுகள் எழுகின்றன.

ஆனால், அதற்கான முகாந்திரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறும் பேராசிரியர் ராமு மணிவண்ணன், இருந்தாலும், நிலைமை எப்படி மாறும் என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது என்கிறார்.

மறுபுறம், "பாஜக-வுடன் கூட்டணி அமைப்பது, இவ்வளவு ஆண்டுகளாகக் கட்டமைத்து வந்த பிம்பத்தைத் தானே உடைத்துக் கொள்வதற்குச் சமம். அது தனது வாக்கு வங்கி பெரிய சரிவைச் சந்திக்கக் காரணமாக இருக்கும் என்பதை திமுக நன்கு உணர்ந்தே இருக்கும்'' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு