மேகேதாட்டு: புதிய நடுவர் மன்றம் கோருவது தமிழகத்திற்கு பாதகமா? விவசாயிகள் அச்சம் பற்றி சட்ட நிபுணர்கள் கருத்து

மேகேதாட்டு, புதிய நடுவர் மன்றம், தமிழ்நாடு - கர்நாடகா

பட மூலாதாரம், CMOTamilnadu

படக்குறிப்பு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவது என்பது புதிய பிரச்னை என்பதால் அதற்கு 'புதிய நடுவர் மன்றம்' அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடுவர் மன்றம் அமைப்பதால் தமிழ்நாட்டிற்குப் பின்னடைவு ஏற்படும் என விவசாய அமைப்புகளும் முன்னாள் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

புதிய நடுவர் மன்றம் என்பது ஒரு விதமான சட்டப்பாதுகாப்பு கொடுத்தாலும் முழுமையான தீர்வாகாது என்கிறார் வழக்கறிஞரும் பாஜகவைச் சேர்ந்தவருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

ஆனால் புதிய நடுவர் மன்றம் கேட்பதால் தமிழ்நாட்டிற்கு பின்னடைவு இல்லை என்கிறார் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞரான உமாபதி. என்ன நடக்கிறது?

புதிய நடுவர் மன்றம் கோரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரை தொடங்கி வைத்து பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆற்றிய உரையில், "கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்." எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மேகேதாட்டுவில் புதிய அணையைக் கட்டும் கர்நாடகாவின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பேசியது என்ன?

மேகேதாட்டு, புதிய நடுவர் மன்றம், தமிழ்நாடு - கர்நாடகா

பட மூலாதாரம், TNAssembly/Youtube

படக்குறிப்பு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "மேகேதாட்டு பிரச்னை தொடர்பாக கடந்த 13.1.2025 அன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு 4.3.2026 அன்று அன்றைய முதலமைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் மத்திய ஜல்சக்தி துறை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் 'கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டுவது ஒரு புதிய பிரச்னை என்பதால் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டத்தின்படி (1956) நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தோம்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

எனவே தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் தமிழ்நாடு அரசு மார்ச் மாதம் எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் பிரிவு 4-இன் படி புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது என்பதைச் சேர்க்க வேண்டும்." என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், "அரசின் தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அரசின் தனித் தீர்மானத்தில் ஒரு கருத்தைச் சேர்க்க கோரியுள்ளார். அது தொடர்பாக கீழ்கண்ட கருத்தினைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

மேகேதாட்டு பிரச்னை சம்மந்தமாக எனது தலைமையில் 26.05.2026 அன்று மேகேதாட்டு பிரச்னைக்காக பிரத்யேகமாக தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்கள் உடன் கலந்தாலோசித்து தனி நடுவர் மன்றம் அமைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்தை தீர்மானத்தின் 4வது பத்தியின் கீழ் சேர்க்கலாம்." எனத் தெரிவித்தார்.

தமிழக வேளாண் அமைப்புகள் எதிர்ப்பு

மேகேதாட்டு, புதிய நடுவர் மன்றம், தமிழ்நாடு - கர்நாடகா

பட மூலாதாரம், PRPandian/X

படக்குறிப்பு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

இந்தத் தீர்மானம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக உள்ளது என்கிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "காவிரியில் தன்னிச்சையாக எந்தப் புதிய அணையும் கட்டப்படக்கூடாது என்பதை காவிரி நடுவர் மன்ற தீர்ப்பும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படுகிறது." என்றார்.

கர்நாடக அரசு திட்ட அறிக்கைகளைத் தயார் செய்யலாம் என்று கூறும் பி.ஆர்.பாண்டியன், ஆனால் அவற்றைச் செயல்படுத்துவது அம்மாநில அரசின் கையில் மட்டுமில்லை என்றும் தெரிவித்தார்.

"இந்தத் திட்டத்தை நிராகரித்து தான் தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும். புதிய நடுவர் மன்றம் கேட்பது என்பது இந்தத் திட்டத்தைப் பகுதியளவு ஏற்றுக்கொண்டதாகவே அமையும்." என்றார்.

தீர்மானம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என்கிறார் பி.ஆர்.பாண்டியன்.

இந்த முன்மொழிவு தமிழ்நாட்டிற்குப் பின்னடைவாக அமையும் என்று கூறும் அவர், "அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை, சட்டப்பேரவையில் விவாதிக்கப்படவில்லை. விவசாயிகளின் கருத்துகள் கேட்கப்படவில்லை. இது தீர்ப்புகளை அவமதிப்பதோடு ஒரு வகையில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக அமைகிறது." என்றும் தெரிவித்தார்.

'தமிழ்நாட்டிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்'

புதிய நடுவர் மன்றம் கோருவது ஏற்கெனவே அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் மற்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகளை நீர்த்துப் போகச் செய்வதாக அமைந்துவிடக்கூடும் என்று தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரான அறச்சலூர் செல்வம் அச்சம் தெரிவித்துள்ளார்.

"காவிரி மேலாண்மை வாரியத்தில் இந்த விவகாரம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது என்பது ஏற்கெனவே தெளிவாக உள்ளது. ஏற்கெனவே உள்ள தீர்ப்புகளுக்கு இரு மாநிலங்களும் கட்டுப்பட்டவை." என்றார் அவர்.

இந்தத் திட்டத்தை தாமதப்படுத்துவதே இதனால் கிடைக்கும் ஒரே பலனாக இருக்கும் என்று கூறும் அவர், "காவிரி நீர்ப்படுகையில் உள்ள அனைத்து நீர் ஆதாரமும் கணக்கிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா என எங்குமே தன்னிச்சையாக புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாது." என்கிறார்

தொடர்ந்து பேசிய அவர், "ஏற்கெனவே உள்ள தீர்ப்பு எதற்குப் பொருந்தும், எதற்கெல்லாம் பொருந்தாது என்பது தெளிவாக உள்ளது. நாம் தீர்ப்பையும் அதைப் பற்றிய புரிதலையும் குழப்பிக் கொள்கிறோம். இந்தப் புதிய கோரிக்கை நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை நீர்த்துப் போகச் செய்து கடந்த காலங்களில் தமிழ்நாடு பெற்ற பலன்களில் பின்னடைவை ஏற்படுத்தலாம்." என்றும் தெரிவித்தார்.

தீர்மானத்துக்கு எதிராக நகல் எரிப்பு போராட்டம் அறிவிப்பு

மேகேதாட்டு, புதிய நடுவர் மன்றம், தமிழ்நாடு - கர்நாடகா
படக்குறிப்பு, தஞ்சாவூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மணியரசன் பேசினார்.

புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை காவிரி உரிமை மீட்புக் குழுவும் எதிர்த்துள்ளது. தஞ்சாவூரில் நேற்று நடந்த அந்த அமைப்பின் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , "மேகேதாட்டு அணை தீர்மானத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் 27-ஆம் தஞ்சாவூரில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தி தேதி நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சியினரும் ஆதரித்து உள்ளனர். இது தமிழ்நாட்டிற்குச் செய்யும் துரோகம். வெளிப்படையாகச் சொல்லாமல் கமுக்கமாக புதிய நடுவர் மன்றம் அமைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தீர்மானத்தை ரத்து செய்து புதிய நடுவர் மன்றம் தேவையில்லை எனக் கோரும் தீர்மானம் ஒன்றை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்." என்று தெரிவித்தார்.

'உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்'

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடக அரசு என்றுமே முழுமையாக அமல்படுத்தியதில்லை என்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் முன்னாள் பொறியாளர் அ.வீரப்பன்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தங்களின் அணைகள் நிரம்பினால் மட்டுமே தண்ணீரைத் திறப்போம் என்று கர்நாடகா கூறி வருகிறது. கர்நாடக அரசு ஏற்கெனவே கட்டியுள்ள அணைகளின் மூலம் சுமார் 70 டிஎம்சி காவிரி நதி நீரை சேமிக்கிறது. பழைய நடுவர் மன்றத்திலும் தமிழ்நாட்டிற்கு முழுவதும் சாதகமாக நிலை இருக்கவில்லை. முதல் தீர்ப்புக்கும் இறுதியாக வழங்கப்பட்ட தீர்ப்புக்கும் இடையே கூட தமிழ்நாடு தனது பங்காக கிடைக்க வேண்டிய காவிரி நதி நீர் ஒதுக்கீட்டு அளவை கணிசமாக இழந்துள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிலும் பெங்களூருவின் குடிநீர் தேவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. புதிய நடுவர் மன்றம் அவசியமற்றது மட்டுமல்ல தமிழ்நாட்டிற்குச் சாதகமாகவும் இருக்காது. மேகேதாட்டு அணை திட்டத்தை தாமதப்படுத்தும் உத்தியாக இதை நினைத்தாலும் தமிழ்நாட்டிற்கு அதனால் சிக்கல்களே ஏற்படலாம்." என்றார்.

கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் காவிரி விவகாரத்தில் ஒரே நிலைப்பாடு தான் எடுப்பார்கள் என்று கூறும் வீரப்பன், "காவிரி நடுவர் மன்றமும், காவிரி மேலாண்மை வாரியமும் அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்புகள் ஆகும். அவற்றை மத்திய அரசு நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது. அவை வழங்கும் தீர்ப்புகளை மாநில அரசுகள் முறையாக அமல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து குடியரசு தலைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். கர்நாடக அரசு தீர்ப்புகளை முறையாக அமல்படுத்தவில்லை என்றும் அவற்றை மீறுவதாகவும் வாதிட வேண்டும். தீர்ப்பை அமல்படுத்தக் கோரி உத்தரவு பெற வேண்டும். அதன்மூலம் மட்டுமே கர்நாடக அரசு தீர்ப்புகளை முழுமையாக அமல்படுத்த வைக்க முடியும்." எனத் தெரிவித்தார்.

'தற்காலிக சட்டப்பாதுகாப்பு தரலாம்' - கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

மேகேதாட்டு, புதிய நடுவர் மன்றம், தமிழ்நாடு - கர்நாடகா

பட மூலாதாரம், KSRadhakrishnan/Facebook

படக்குறிப்பு, கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

புதிய நடுவர் மன்றம் கோருவது தற்காலிகமாக சட்டப்பாதுகாப்பு தரலாம், ஆனால் அதன் மூலம் முழுமையான தீர்வு கிடைக்காது என்கிறார் வழக்கறிஞரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அரசியலில் திமுக, பின்னர் பாஜகவில் பயணிக்கும் அவர், காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆவார்.

"இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு ஏற்கெனவே உத்தரவுகளை உதாசீனப்படுத்தி வருகிறது. மேகேதாட்டு விவகாரத்தில் தற்போது எந்தவிதமான சட்டப்பூர்வ தடையும் அமலில் இல்லை. தமிழ்நாடு அரசு இடைக்காலத் தடை வாங்கி இருக்க வேண்டும். இந்தச் சூழலில் புதிய நடுவர் மன்றம் என்பது இந்த விவகாரத்தைத் தாமதப்படுத்த உதவலாம். ஆனால் அது தமிழ்நாட்டிற்குச் சாதகமாக அமையுமா என்பதற்கு தற்போது எந்த உத்தரவாதமும் வழங்க முடியாது." என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் புதிய நடுவர் மன்றம் கேட்பதால் தமிழ்நாட்டிற்கு பின்னடைவு இல்லை என்கிறார் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞரான உமாபதி.

"நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவை தெளிவாக உள்ளன. கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வேறு ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளது. அதன்படி மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீர் போக மீதமுள்ளது கர்நாடகாவிற்குப் பிரத்யேகமானது எனக் கூறுகிறது. ஆனால் காவிரி நீரில் எந்த மாநிலத்திற்கும் பிரத்யேக உரிமை கிடையாது என்பது தமிழ்நாட்டின் வாதம். அது தொடர்பான தமிழ்நாடு அரசின் மனுவும் நிலுவையில் உள்ளது. தற்போது எழுந்துள்ள புதிய விவகாரங்களுக்குத் தான் புதிய நடுவர் மன்றம் கேட்கப்படுகிறது.

மேகேதாட்டு அணைத் திட்டம் தற்போது தொடக்க நிலையிலே இருக்கிறது. இனி தான் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு சுற்றுச்சூழல் அனுமதி எனப் பல கட்டங்கள் உள்ளன. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசு புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை என்றால் புதிய நடுவர் மன்றத்தை அமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தை நாடுவது தான் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு