மெக்கா ஒப்பந்தத்தில் எகிப்து பங்கேற்காததற்கு இந்தியா காரணமா? நிபுணர்கள் பார்வை

எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2023ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அன்று புது டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு முன்னர் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.
    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகஸ்ட் 6-ஆம் தேதி அன்று சௌதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, அதிபர் ரெசெப் தாயிப் எர்துவானும் அங்கு செல்லவிருந்ததை துருக்கி ரகசியமாக வைத்திருந்தது.

இந்தப் பயணத்தை மட்டுமின்றி, சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணையவிருப்பதையும் துருக்கி முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.

இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட ராணுவப் பொறுப்புகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், நேட்டோவின் 5வது பிரிவைப் போன்ற கூட்டுப் பாதுகாப்பு விதி இதில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, ஒரு உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

இது மூன்று நாடுகளும் "கூட்டுப் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தவும், மூலோபாயத் தடுப்பை வலுப்படுத்தவும், தயார்நிலையை அதிகரிக்கவும், தங்களது பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தவும்" உதவும் என்று சௌதி அமைச்சர் ரயத் கிரிம்லி தெரிவித்தார்.

"மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது வெளியிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்" என்று கிரிம்லி கூறினார்.

துருக்கி மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளும் இதே கருத்தைத் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் கையெழுத்திட செய்ய துருக்கி முயன்று வந்ததாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கான் ஃபிடான் சனிக்கிழமை தெரிவித்தார்.

முன்னதாக, எகிப்தும் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணையலாம் என்று பேசப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை.

ஹக்கன் ஃபிடான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்

எகிப்து பங்கேற்காதது குறித்து துருக்கி என்ன கூறியது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆகஸ்ட் 8ஆம் தேதி துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கன் ஃபிடான் கூறுகையில், "அனைத்து விவகாரங்களிலும் எகிப்து நமது இயல்பான கூட்டாளி. அடுத்த கட்டத்தில் எகிப்தும் இந்தக் கூட்டணியில் எங்களுடன் இணையும் என்று நான் நம்புகிறேன். இதில் சில தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் உள்ளன. அவை தீர்க்கப்பட்ட பிறகு, எகிப்து இதில் இடம்பெறாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை" என்றார்.

ஆனால், இந்தக் கூட்டணியில் எகிப்து இணையாததற்கு துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் முன்வைத்த வாதம் மட்டுமே காரணமாகக் கருதப்படவில்லை.

சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுடன் துருக்கி பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைந்திருப்பது, இரான் தனது அரபு அண்டை நாடுகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பின்னணியில் நிகழ்ந்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் முக்கிய ராணுவ மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதுடன், உலகின் 20 சதவிகித எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொண்டு செல்லும் கடல்வழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பல மாதங்களாக துருக்கி, பாகிஸ்தான், எகிப்து மற்றும் சௌதி அரேபியாவைச் சேர்ந்த அதிகாரிகள் "ரீஜினல் ஃபோர் (நான்கு பிராந்திய நாடுகள்) " என்று அழைக்கப்படும் குழுவின் கீழ், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இந்த முயற்சிகள் இஸ்ரேலில் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட், சௌதி அரேபியாவை இஸ்ரேலுக்கு எதிராகத் திருப்பவும், அணு ஆயுதங்களைக் கொண்ட பாகிஸ்தானுடன் இணைந்து இஸ்ரேலுக்கு விரோதமான சன்னி கூட்டணியை உருவாக்கவும் துருக்கி முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

"கடந்த சில மாதங்களில், துருக்கியுடன் நெருக்கமான பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதில் எகிப்தும் சௌதி அரேபியாவும் தெளிவான தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன" என்று மத்திய கிழக்கு செய்தி மற்றும் ஆய்வு இணையதளமான 'மிடில் ஈஸ்ட் ஐ'-யின் துருக்கி பிரிவு தலைவர் ராகிப் சோய்லு தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஏமாற்றம் தெரிவித்த துருக்கிய அதிகாரி ஒருவர், கடந்த ஆண்டு மிடில் ஈஸ்ட் ஐ-யிடம், "இஸ்ரேலியர்கள் தொடர்ந்து அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், எகிப்தியர்களையும் சௌதியினரையும் இந்தக் கூட்டமைப்பில் வைத்திருக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்" என்று கூறினார்.

ஜி7 உச்சி மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியும் .

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிழக்கு பிரான்சின் எவியான் நகரில் கடந்த ஜூன் 16ஆம் தேதி நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியும் கைகுலுக்கினர்.

எகிப்துக்கான அபாயங்கள்

ராகிப் சோய்லு தனது கட்டுரையில், "இந்த ஒப்பந்தத்தில் எகிப்தை இணைத்துக்கொள்ள துருக்கி கணிசமான முயற்சிகளை மேற்கொண்டது. எகிப்து இதில் பங்கேற்க வேண்டும் என்றும் அதிகாரப்பூர்வமாக முன்மொழிந்தது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இணைய எகிப்து விரும்பவில்லை என்பது தெளிவானதும், எஞ்சிய நாடுகள் அந்நாடு இல்லாமலேயே முன்னேற முடிவு செய்தன" என்று எழுதியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் எகிப்து பங்கேற்காததற்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

"கிரீஸ் மற்றும் சைப்ரஸுடனான சிக்கலான உறவுகளை கருத்தில் கொள்ளும்போது, குறிப்பாக துருக்கியுடன் எந்தவொரு பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் எகிப்து இணையாது என்று முன்னாள் அரபு தூதர் ஒருவர் கருதுகிறார்" என்று எகிப்தின் சுயாதீன இணைய செய்தித்தளமான மாடா மஸ்ர் தெரிவித்துள்ளது.

"இதேபோல், இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து எகிப்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், பாகிஸ்தானுடனும் எகிப்து எந்தவொரு பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் இணைவது கடினம்" என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

"சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான தற்போதைய பதற்றத்தில் எகிப்து எந்தவொரு தரப்பையும் ஆதரிப்பதைத் தவிர்த்து வருகிறது. சௌதி அரேபியா, தனது பாரம்பரிய பிராந்தியத் தலைமைப் பங்கை அதிகளவில் சவால் செய்யும் நாடுகளிடம் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸை விலக்க முயற்சித்து வரலாம். ஆனால், இந்தப் பிராந்தியப் பிரிவுகளின் இரு தரப்பிலும் உள்ள பல நாடுகளுடன் எகிப்து தொடர்புகளைப் பேணி வருகிறது. எனவே, அது ஒரு தரப்பைத் தேர்வு செய்வதில் குறைந்த அளவே விருப்பம் கொண்டுள்ளது" என்று மாடா மஸ்ர் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் எகிப்து பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைக் கொண்டுள்ளது. மேலும், மே மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது இரான் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ரஃபேல் போர் விமானங்களையும் எகிப்து அங்கு நிறுத்தியது.

இந்தச் சூழல் காரணமாக, சௌதி அரேபியாவும் எகிப்தை ஓரளவுக்கு நம்பகத்தன்மை குறைந்த கூட்டாளியாகக் கருதத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மிடில் ஈஸ்ட் ஐ வெளியிட்டுள்ள கட்டுரையில், "துருக்கி, சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் அடங்கிய ஒரு அணிக்கும், மறுபுறம் இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா அடங்கிய அணிக்கும் இடையே எகிப்து ஒரு தரப்பைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை.

"பிராந்தியத்துக்கு அப்பாற்பட்ட விரிவான மூலோபாயப் பார்வை எகிப்திடம் இல்லை. மேலும், புதுடெல்லியுடனான தனது வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் அது ஆர்வமாக உள்ளது. அதுமட்டுமின்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிதியுதவியையும் எகிப்து சார்ந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி பட்டத்து இளவரசர், துருக்கி அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை, சௌதி பட்டத்து இளவரசர், துருக்கி அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் மெக்காவில் ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

எகிப்துக்கு இந்தியாவின் முக்கியத்துவம்

டெல்லியைத் தளமாகக் கொண்ட அனந்தா சென்டர் சிந்தனைக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி இந்திராணி பாக்சியும், மெக்கா ஒப்பந்தத்தில் எகிப்து இணையாததற்கு இந்தியாவும் ஒரு காரணம் என்று கருதுகிறார்.

ஆனால், அது கடைசி காரணம்தான் என அவர் கூறுகிறார்.

இந்திராணி பாக்சி கூறுகையில், "எகிப்து இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துள்ளது. இஸ்ரேலை அங்கீகரித்த முதல் அரபு நாடு எகிப்து தான். ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் எகிப்து வலுவான உறவைக் கொண்டுள்ளது.

"இஸ்ரேலின் இருப்பை அங்கீகரிக்காததும், இந்தியாவுடன் விரோதப் போக்கைக் கொண்டதுமான பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள ஒரு குழுவில் இணைவதை எகிப்து தவிர்த்துள்ளது. மற்றொரு உறுப்பு நாடான சௌதி அரேபியா மீது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உள்ள நம்பிக்கையின்மையும் அதிகரித்துள்ளது. எனவே, எகிப்து எந்தவொரு தரப்பையும் தேர்வு செய்ய விரும்பவில்லை" என்றார்.

இதுகுறித்து இந்திராணி பாக்சி கூறுகையில், "எகிப்து மெக்கா ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தாலும், அது இந்தியாவுடனான உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. ஆனால், அது நல்ல செய்தியை அனுப்பியிருக்காது" என்றார்.

எகிப்தில் 700-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 70 நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மொத்த முதலீடு 5.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. இந்த நிறுவனங்களில் சுமார் 40,000 எகிப்தியர்கள் பணியாற்றுகின்றனர்.

2025-26 நிதியாண்டில் இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 6.5 பில்லியன் டாலராக இருந்தது.

எகிப்துக்கான இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளில் பெட்ரோலியப் பொருட்கள், பொறியியல் பொருட்கள், ரசாயனங்கள், பருத்தி நூல், இறைச்சி மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

எகிப்தில் இருந்து இந்தியா முக்கியமாக பெட்ரோலியப் பொருட்கள், ரசாயனங்கள், உலோகங்கள் மற்றும் சிட்ரஸ் பழங்களை இறக்குமதி செய்கிறது.

எகிப்துக்கான ஏற்றுமதியில் இந்தியா ஐந்தாவது பெரிய நாடாகவும், எகிப்தில் இருந்து இறக்குமதி செய்வதில் 12-வது பெரிய நாடாகவும் உள்ளது.

எகிப்தின் ஆறாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும் இந்தியா உள்ளது.

எகிப்துக்கான ஏற்றுமதியில் இந்தியா ஐந்தாவது பெரிய நாடாகவும், எகிப்தில் இருந்து இறக்குமதி செய்வதில் 12-வது பெரிய நாடாகவும் உள்ளது. எகிப்தின் ஆறாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும் இந்தியா உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலை அங்கீகரித்த முதல் அரபு நாடு எகிப்து ஆகும்.

எகிப்தின் தனிச் சமன்பாடு

1973 ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த அரபு-இஸ்ரேல் போர் மூன்று வாரங்களுக்கும் குறைவாகவே நீடித்தது. ஆனால், அது உலகப் பொருளாதாரத்தை உலுக்கியது.

இறுதியில், இது கேம்ப் டேவிட் ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்தது. அதன் கீழ், இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திய முதல் அரபு நாடாக எகிப்து ஆனது.

இஸ்ரேலில் யோம் கிப்பூர் போர் என்றும், அரபு நாடுகளில் அக்டோபர் போர் என்றும் அழைக்கப்படும் இந்தப் போர், எகிப்தும் சிரியாவும் இஸ்ரேலுக்கு எதிராக இரு முனைகளில் தாக்குதல் நடத்தியபோது தொடங்கியது.

1967ஆம் ஆண்டு ஆறு நாள் போரில் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அந்தப் போரில், இஸ்ரேல் எகிப்தின் சினாய் பகுதியையும் சிரியாவின் கோலன் குன்றுகளையும் கைப்பற்றியிருந்தது.

1967ஆம் ஆண்டில், மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸா பகுதி உள்ளிட்ட பாலத்தீனத்தின் பெரும் பகுதிகளையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

அரபு நாடுகளுக்கும் பாலத்தீனர்களுக்கும் ஏற்பட்ட அந்தத் தோல்வி, "அல்-நக்சா" என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பின்னடைவு அல்லது தோல்வி என்று பொருள்.

எகிப்து சினாய் பகுதியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றது. ஆனால், சிரியாவின் கோலன் குன்றுகள் தொடர்ந்து இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளன.

அதன்பின்னர், எகிப்து அரபு லீக்கில் இருந்து வெளியேற்றப்பட்டது. இஸ்ரேலுடன் உறவுகளை இயல்பாக்கியதைத் தொடர்ந்து, அனைத்து அரபு நாடுகளும் எகிப்துடனான தூதரக உறவுகளைத் துண்டித்தன.

பாலத்தீன விவகாரத்தை எகிப்து புறக்கணிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை மாறியுள்ளது. தற்போது, மேலும் பல அரபு நாடுகள் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தத் தயாராக உள்ளன.

எகிப்தைப் போலவே, ஜோர்டானும் 1994ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதன்பின்னர், 2020ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ஆபிரகாம் ஒப்பந்தங்களின் கீழ் இஸ்ரேலை அங்கீகரித்தன.

இருப்பினும், கூட்டணி உருவாகி, பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நம்பகமான தடுப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நிலையில், எகிப்து இந்தக் கூட்டணியில் இணைய அதிக விருப்பம் காட்டும் என்று துருக்கி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சௌதி பட்டத்து இளவரசர், துருக்கி அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சௌதி பட்டத்து இளவரசர், துருக்கி அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றினர்.

மெக்கா ஒப்பந்தம் யாருக்கு முக்கியமானது?

மாடா மஸ்ர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய, துருக்கி விவகாரங்களிலும் அனுபவம் கொண்ட முன்னாள் அரபு தூதர் ஒருவர் கூறுகையில், மெக்கா ஒப்பந்தம் அடிப்படையில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தைவிட, சௌதி அரேபியாவின் செய்தியாகவே உள்ளது என்கிறார்.

அவரது மதிப்பீட்டின்படி, "ஏற்கெனவே உள்ள நடைமுறைகளையும் நிறுவப்பட்ட அமைப்பையும் புறந்தள்ளும் வகையில், புதிய பாதுகாப்பு உத்தியை உருவாக்கி செயல்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் செய்வோம்" என்ற செய்தியை சௌதி அரேபியா தெரிவிக்கிறது.

மாடா மஸ்ர் தனது அறிக்கையில், "பாகிஸ்தானின் அண்டை நாடான இந்தியா, துருக்கியின் அண்டை நாடான இஸ்ரேலுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்தியாவும் இஸ்ரேலும் கிரீஸுடன் உறவுகளைக் கொண்டுள்ளன. இதன் பொருள், இந்தியா, கிரீஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு கூட்டணி ஏற்கெனவே உருவாகி வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு காஸா போர் தொடங்குவதற்கு முன்பு, புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 கூட்டத்தின்போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (IMEC) இந்தியா அறிவித்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சௌதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் கிரீஸ் வழியாக கடல் மற்றும் ரயில் பாதைகளைப் பயன்படுத்தி, இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைப்பதே இந்த வர்த்தக வழித்தடத்தின் நோக்கமாக இருந்தது.

ஆனால், அடுத்தடுத்து ஏற்பட்ட போர்கள் கூட்டணிகள் மற்றும் போட்டிகளின் நிலவரத்தை மாற்றியுள்ளன.

அதன்பின்னர், பல நாடுகள் இந்த வர்த்தக வழித்தடத்தை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளன. தங்களது பொருளாதார நலன்களையும் செல்வாக்கையும் முன்னெடுத்துச் செல்ல வேறு வழிகளையும் அவை தேடி வருகின்றன.

இந்திராணி பாக்சி கூறுகையில், "ஐஎம்இசி தற்போது ஒரு கற்பனையாகவே தெரிகிறது. சௌதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேல் தனியாக ஒரு போரில் சிக்கியுள்ளது. இதனால், ஐஎம்இசியை செயல்படுத்துவது கடினமாகத் தெரிகிறது.

"இஸ்ரேலுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகள் இயல்புநிலைக்கு வரும் வரை, அது சாத்தியமில்லை என்று தெரிகிறது. அதுவரை ஐஎம்இசி செயல்பாட்டுக்கு வர முடியாது" என்றார்.

மெக்கா ஒப்பந்தத்தால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நாடுகளின் எதிர்வினைகள் பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் இல்லை.

இரான் உடனடியாக எதிர்வினை ஆற்றியது. ஆனால், அது ஆர்வமற்றதாகவே இருந்தது.

இரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஒருவர், இந்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக நிராகரித்தார்.

துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் கையெழுத்திடப்படும் ஓர் ஒப்பந்தத்தால் சௌதி அரேபியாவின் பாதுகாப்புக்கு ஏற்படும் பயன், பல ஆண்டு காலமாக அமெரிக்காவைச் சார்ந்திருந்ததன் மூலம் கிடைத்ததைவிட அதிகமாக இருக்காது என்று அவர் கூறினார்.

இஸ்ரேல் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், இஸ்ரேலிய ஊடகங்களும் ஆய்வாளர்களும் இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கான சுதந்திரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

மெக்கா ஒப்பந்தத்துக்கு முன்பே, சில இஸ்ரேலிய விமர்சகர்கள் துருக்கி-பாகிஸ்தான் கூட்டணியை , எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கு விரோதமான கூட்டணியாக இருக்கக்கூடியதாகக் கருதியிருந்தனர்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் நிதானமான பதிலை வெளியிட்டது. இது தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகளைத் தான் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அது தெரிவித்தது.

பாகிஸ்தானின் அணு ஆயுதத் திறன்கள் தொடர்பான எந்தவொரு முன்னேற்றத்தையும் இந்தியா வரலாற்று ரீதியாக மிகுந்த கவனத்துடன் அணுகி வரும் நிலையில், இந்தப் பதிலே ஒரு முக்கியமான சமிக்ஞையாக உள்ளது.

அதே நேரத்தில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் தொடக்க நாட்களில் அமெரிக்காவும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு