'த.வெ.க ஆட்சியில் முதல் காவல் மரணம்' - கன்னியாகுமரி மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழப்பில் என்ன நடந்தது?

கன்னியாகுமரி, காவல் மரணம், தவெக, நாகர்கோவில்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த சபரிவர்மன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

''இதற்கு முன்பு அவன் மீது எந்த வழக்குகளும் இல்லை. ஒருமுறை கூட சிறைக்குப் போனதில்லை. அவனுக்கு யாருடனும் பகை இல்லை. மாற்றுத் திறனாளியான அவனுக்குப் பிறவியிலேயே வலது கை செயல்படவில்லை. யாராவது அடித்தாலும் வாங்கிக் கொள்வான்"

நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் சிறையில் இருந்தபோது உயிரிழந்த சபரிவர்மனின் சகோதரி பிபிசி தமிழிடம் வேதனையோடு இவ்வாறு கூறினார்.

கைதி உயிரிழந்த விவகாரத்தில் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தென்மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிதாரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கைதியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும் பொதுமக்களும் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'த.வெ.க ஆட்சியின் முதல் காவல் மரணம் இது' என மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

கன்னியாகுமரி, ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன், தனது வீட்டை ஒட்டியுள்ள இடத்தில் பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வந்தார்.

"பி.இ பொறியியல் படிப்பில் அரியர்ஸ் இருந்ததால் வேறு வேலைக்கு அவனால் செல்ல முடியவில்லை. இதனால் என்னுடைய அப்பா நடத்தி வந்த பெட்டிக்கடையை சபரிவர்மன் நடத்தி வந்தான்," என்கிறார், அவரது சகோதரி கிருஷ்ண கவுதமி.

கைதானபோது என்ன நடந்தது?

கிருஷ்ண கவுதமியும் பிறவியில் இருந்து வலது கை செயல்படாத மாற்றுத் திறனாளியாக உள்ளார்.

"கடந்த வியாழக்கிழமை (ஜூலை 9) காலையில் சீருடை அணியாத ஐந்து போலீசார் என் தம்பி நடத்தி வரும் பெட்டிக் கடைக்கு வந்தனர். கடையில் அவர்கள் சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை." என்கிறார் கிருஷ்ண கவுதமி.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதேநேரம், தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்கு சபரிவர்மன் வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்ததாக அவரது சகோதரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"அதனைக் கையில் எடுத்த தெற்கு தாமரைக் குளம் காவல்நிலைய போலீஸார், இரு சக்கர வாகனத்தில் என் தம்பியைக் கூட்டிச் சென்றனர். அப்போது, 'என்னுடைய ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வா' என மனைவியிடம் தம்பி கூறினான்" என்கிறார் கிருஷ்ண கவுதமி.

காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சபரிவர்மனை சொந்த பிணையில் விடுவித்துவிட்டாலும், அவரின் செல்போனை ஸ்டேஷனில் வாங்கி வைத்துக் கொண்டதாக கிருஷ்ண கவுதமி குறிப்பிட்டார்.

சிறிது நேரத்தில், காவல்நிலையத்தில் இருந்து சபரிவர்மனின் மனைவியை தொடர்பு கொண்ட போலீஸார், ஸ்டேஷனுக்கு வந்து செல்போனை வாங்கிக் கொண்டு போகுமாறு கூறியுள்ளனர்.

"அதைக் கேட்டு என் தம்பி மட்டும் தனியாக காவல்நிலையம் சென்றார். பிறகு அங்கிருந்து வீட்டுக்குப் போன் செய்து, 'என்னை ரிமாண்ட் செய்யப் போகிறார்கள். வேறு ஆடைகளை எடுத்து வா' என மனைவியிடம் கூறினார்" என்கிறார் கிருஷ்ண கவுதமி.

கன்னியாகுமரி, காவல் மரணம், தவெக, நாகர்கோவில்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, சபரிவர்மனின் சகோதரி கிருஷ்ண கவுதமி.

இரவு சுமார் 8 மணியளவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சபரிவர்மனுக்கு மருத்துவப் பரிசோதனையை முடித்துவிட்டு, மாஜிஸ்திரேட் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

அன்று இரவு மாவட்ட சிறையில் நீதிமன்றக் காவலில் சபரிவர்மன் அடைக்கப்பட்டார்.

"அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லும்போது எங்கள் வழக்கறிஞரும் உடன் சென்றார். மறுநாள் (ஜூலை 10) மதியம் சுமார் 2 மணியளவில் தம்பி மனைவி, நான், வழக்கறிஞர் ஆகியோர் சிறையில் தம்பியைச் சந்தித்தோம்" என கிருஷ்ண கவுதமி தெரிவித்தார்.

இதைப் பற்றிப் பேசிய அவர், "அப்போது நன்றாக இருந்தான். காலையில் இரண்டு இட்லியும் மதியம் ரசம் சோறும் சாப்பிட்டதாகக் கூறினார். 'யாரும் அடிக்கவில்லை' எனக் கூறிவிட்டு, செவ்வாய், புதன்கிழமைக்குள் வெளியில் வந்துவிடுவதாகக் கூறினான்." என்கிறார்.

ஜூலை 12 ஆம் தேதி இரவு சுமார் 7 மணியளவில் நாகர்கோவில் சிறைக் காவலர் ஒருவர், சபரிவர்மன் காதில் அணிந்திருந்த கம்மலைக் கொடுத்துவிட்டுச் சென்றதாக அவரது சகோதரி தெரிவித்தார்.

'வழுக்கி விழுந்து மாரடைப்பு'

கன்னியாகுமரி, காவல் மரணம், தவெக, நாகர்கோவில்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, சபரிவர்மனின் குடும்பத்தினர்

திங்கள்கிழமை (ஜூலை 13) காலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சபரிவர்மன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவரின் மனைவிக்கு சிறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் சபரிவர்மன் வழுக்கி விழுந்துவிட்டதாகவும் அதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் சிறையில் இருந்து கூறப்பட்டதால் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

"நாங்கள் சென்றபோது, 'உடலை பிணவறைக்குக் கொண்டு போய்விட்டனர்' எனக் கூறினர். நாங்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்த காவலர்களிடம் வாக்குவாதம் செய்தோம். அவனை 'குடும்பம் இல்லாதவர்' எனக் கூறி அனுமதித்ததாக மருத்துவமனை ஊழியர்கள் கூறினர்," என கிருஷ்ண கவுதமி தெரிவித்தார்.

இதன்பிறகு சிறிது நேரத்தில் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் சபரிவர்மனின் உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் கூடிவிட்டனர். 'மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறி அவர்கள் முழக்கமிட்டனர்.

இதைப் பற்றிப் பேசும் கிருஷ்ணகவுதமி, "என் தம்பியின் உடலைப் பார்ப்பதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை. கன்னியாகுமரி எஸ்.பி ஸ்டாலின் வந்த பிறகு, அவர் தான் எங்களை உள்ளே கூட்டிச் சென்றார். என் தம்பியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன." என்கிறார்.

'த.வெ.க ஆட்சியின் முதல் காவல் மரணம்'

கன்னியாகுமரி, காவல் மரணம், தவெக, நாகர்கோவில்

பட மூலாதாரம், Henry Tiphagne

படக்குறிப்பு, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்.

இதற்கிடையில் சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது. அதனை பிபிசி தமிழ் சரிபார்த்தது.

வலது கை, இடது கை, மணிக்கட்டு உள்பட 19 இடங்களில் காயங்கள் உள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "ஆனால், இறப்புக்கான காரணம் குறித்து தெளிவாக சொல்லப்படவில்லை" என்கிறார், கிருஷ்ண கவுதமி.

"காவல்துறை சபரிவர்மனை காவலில் எடுத்தபோது, அவருக்கு உடலில் எந்தக் காயங்களும் இல்லை. சிறையில் அவரது சகோதரி பார்த்தபோதும் நல்ல உடல்நலனுடன் இருந்துள்ளார்," என்கிறார், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " ஞாயிற்றுக்கிழமை இரவு சிறையில் நடந்த தாக்குதலில் அவர் இறந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் மூன்று பேரை கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்." எனக் கூறுகிறார்.

"சம்பவத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதை ஆராய வேண்டும். காவல்துறையின் விசாரணையில் தான் முழு விவரங்கள் தெரியவரும்," எனக் கூறும் ஹென்றி திபேன், "த.வெ.க அரசு பதவியேற்ற பிறகு நீதிமன்றக் காவலில் நடந்த முதல் மரணமாக இது பார்க்கப்படுகிறது." என்கிறார்.

கன்னியாகுமரி, காவல் மரணம், தவெக, நாகர்கோவில்

பட மூலாதாரம், Handout

உதயநிதி, அன்புமணி விமர்சனம்

நீதிமன்றக் காவலில் கைதி உயிரிழந்த விவகாரம் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது. தி.மு.க இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

'மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துவிட்டதாகக் கூறி அவரின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,' என உதயநிதி தெரிவித்துள்ளார்.

மேலும், 'இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அ.தி.மு.க ஆட்சியில் சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ், தி.மு.க ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார் வரிசையில் த.வெ.க ஆட்சியில் சபரிநாதனின் மரணம் நிகழ்த்தப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.

'இதனை மூடிமறைப்பதற்கு முயற்சிகள் நடந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையினர் விசாரித்தால் நீதி கிடைக்காது. ஆகவே, சாத்தான்குளம், மடப்புரம் வழக்கின் விசாரணைகள் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதைப் போல இந்த வழக்கும் மாற்றப்பட வேண்டும்,' என்கிறார் அன்புமணி.

கன்னியாகுமரி, காவல் மரணம், தவெக, நாகர்கோவில்

பட மூலாதாரம், X/Anbumani/Udhayanidhi

கிளைச் சிறையில் என்ன நடந்தது?

இந்தநிலையில், சபரிவர்மன் இறப்பு தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையின் காவலர்கள் மூன்று பேர் புதன்கிழமையன்று இரவு கைது செய்யப்பட்டனர்.

"சிறையின் முதல்நிலை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், இரண்டாம் நிலை வார்டன் சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்கிறார், தென்மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிதாரி.

இதுதொடர்பாக குறிப்பு ஒன்றை அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.

அதில், 'காவல்துறை விசாரணையில் ஜூலை 12 ஆம் தேதி இரவு சிறைக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் உயிரிழந்தார். சிறை ஊழியர்களால் உடல்ரீதியாக தாக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்தன,' எனக் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை சேகரித்த சான்றுகளின் அடிப்படையில் சிறைக் காவலர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக, தென்மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார்.

'காவல்துறையால் முறையாக நடத்தப்பட்டார்'

'தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்து விற்பனை செய்த குற்றத்துக்காக காவல்துறையினரால் சபரிவர்மன் கைது செய்யப்பட்டார்' என விஜயேந்திர பிதாரியின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், 'ஆனால், காவல்நிலையத்தில் அவர் இருந்தபோது பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, அவர் முறையாக நடத்தப்பட்டது தெளிவாகப் பதிவாகியுள்ளது. காவல்துறையினர் தன்னை மோசமாக நடத்தியதாக எந்தப் புகாரும் சபரிவர்மன் தெரிவிக்கவில்லை. காவலில் அடைக்கப்பட்ட நேரத்தில் அவருக்கு உடலில் காயங்கள் எதுவும் இல்லை' என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கில் நீதித்துறை நடுவர் முன்பு அவரை ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனைக்கு சபரிவர்மன் ஆட்படுத்தப்பட்டார். இதைப் பற்றிக் கூறியுள்ள தென்மண்டல ஐ.ஜி, 'அவருக்குக் காயங்கள் எதுவும் இல்லை. அவர் உடல்நலத்துடன் உள்ளதாக மருத்துவ அதிகாரி சான்று கொடுத்தார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கள்கிழமையன்று நீதிமன்றக் காவலில் கைதி உயிரிழந்ததாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

"தொடர்ந்து, நீதித்துறை நடுவரால் விசாரணை நடத்தப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வீடியோ பதிவுடன் கூடிய பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது," என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

'சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு'

கன்னியாகுமரி, காவல் மரணம், தவெக, நாகர்கோவில்

பட மூலாதாரம், X/SouthZoneTNpol

படக்குறிப்பு, தென்மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிதாரி.

இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அமைத்துள்ளதாகவும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சிறையில் சிசிடிவி காட்சிகளை விரிவாக ஆய்வு செய்தல், சிறைவாசிகள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தல் மற்றும் தொடர்புடைய அனைத்து அறிவியல்பூர்வமான மற்றும் ஆவணச் சான்றுகளைச் சேகரிப்பது இந்த விசாரணையின் அங்கமாக இருக்கும்,' எனவும் தனது குறிப்பில் தென்மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார்.

சபரிவர்மனின் குடும்ப நிலை குறித்துக் கூறும் அவரது சகோதரி கிருஷ்ண கவுமதி, "சபரிவர்மனுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவன் வருமானத்தை நம்பித்தான் குடும்பமே இருந்தது. 'கொன்றால் கேட்க ஆள் இல்லை' என்பதால் இவ்வாறு செய்துவிட்டனர்," எனக் கூறுகிறார்.

"இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். என் தம்பியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரையில் உடலை வாங்க மாட்டோம்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு