அர்ஜென்டினா vs இங்கிலாந்து இடையே 60 ஆண்டுகளாக நீளும் மோதலின் வரலாறு

அர்ஜென்டினா, இங்கிலாந்து பரஸ்பர போட்டி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆண்டி கிரையர்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

2026 கால்பந்து உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்த இரு அணிகளுக்கும் இடையே பல தலைமுறைகளாக ஒரு போட்டித்தன்மை உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி 1962-ல் தொடங்கியது. அன்று முதல் இரு அணிகளுக்கும் இடையேயான மோதலில், அற்புதமான கோல்கள், சர்ச்சைகள், சிவப்பு அட்டைகள் என பல சுவாரஸ்ய மற்றும் பரபரப்பான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

அதே நேரம், இந்த இருதரப்பு போட்டி ஆடுகளத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் அரசியல் பதற்றங்கள், குறிப்பாக 1980-களில் நடந்த ஃபாக்லாண்ட்ஸ் போர் தொடர்பான விவகாரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றும் கூட அர்ஜென்டினா வீரர்களும் ரசிகர்களும் தங்கள் கால்பந்து பாடலில் அந்த மோதலை குறிப்பிடுகின்றனர்.

வரலாற்றில் இங்கிலாந்தின் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றுக்கு முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையிலான உலகக் கோப்பை போட்டி வரலாற்றை பிபிசி ஸ்போர்ட் திரும்பிப் பார்க்கிறது.

இரு அணிகளுக்கும் இடையே விளையாடப்பட்ட ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் இங்கிலாந்துதான் முன்னிலையில் உள்ளது என்பது பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம், ஆனால் அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போட்டியை வென்று நீண்ட காலமாகிவிட்டது.

கடந்த 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரு அணிகளும் உலகக் கோப்பையில் சந்திக்காததால், இரு நாடுகளின் இளைய தலைமுறையினர் பலருக்கு இந்த போட்டி வரலாறு நினைவிருக்க வாய்ப்பில்லை. கடந்த 60 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த மோதலின் முக்கிய தருணங்களை பிபிசி திரும்பிப் பார்க்கிறது.

1962: இங்கிலாந்து 3 - 1 அர்ஜென்டினா (சிலி - குரூப் ஸ்டேஜ்)

இரு அணிகளுக்கும் இடையேயான மற்ற போட்டிகளுடன் ஒப்பிடும் போது இந்த போட்டி சற்று சுமாரான போட்டியே.

ரோன் ஃப்ளவர்ஸ், பாபி சார்ல்டன் மற்றும் ஜிம்மி கிரீவ்ஸ் ஆகியோரின் கோல்களால் இங்கிலாந்து 3-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றது. அர்ஜென்டினா கடைசி நேரத்தில் ஓர் ஆறுதல் கோல் மட்டுமே அடித்தது.

இந்த தொடரில் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினாலும் காலிறுதியில் பிரேசிலிடம் தோற்று வெளியேறியது.

1966: இங்கிலாந்து 1 - 0 அர்ஜென்டினா (இங்கிலாந்து - காலிறுதிப் போட்டி)

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

1966-ல் காலிறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதின. ஜெஃப் ஹர்ஸ்ட் அடித்த வெற்றி கோல், 'ஆஃப்சைட்' முறையில் அடிக்கப்பட்டது என்று கூறி, அந்தப் போட்டியில் தாங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதாக அர்ஜென்டினா இன்றும் கூறுகிறது.

அந்த போட்டியில் இந்த சர்ச்சை மட்டுமல்ல. அர்ஜென்டினா கேப்டன் அன்டோனியோ ராட்டின், பாபி சார்ல்டனைத் தடுமாறச் செய்து கீழே விழ வைத்தது, ஜெர்மன் நடுவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது என வெறும் 3 நிமிட இடைவெளியில் செய்த 2 தவறுகளுக்காக ஆட்டம் தொடங்கிய 33 நிமிடங்களிலேயே மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அன்டோனியோ ராட்டின் மைதானத்தை விட்டு வெளியேற மறுத்ததால், ஆட்டம் சுமார் எட்டு நிமிடங்கள் தாமதமானது.

மிக கசப்பான மோதல் நிறைந்த அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வென்றது. இங்கிலாந்து பயிற்சியாளர் ஆல்ஃப் ராம்ஸி, அர்ஜென்டினா வீரர்களை மிருகங்கள் என வர்ணித்ததுடன், தனது வீரர்கள் அவர்களுடன் ஜெர்சிகளை மாற்றிக்கொள்ளக் கூடாது என்றும் கூறினார்.

1966-ல் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றபோது அணியில் இடம்பெற்றிருந்த தடுப்பாட்ட வீரர் ஜார்ஜ் கோஹன், 2009-ஆம் ஆண்டு தி கார்டியன் இதழிடம் அந்தப் போட்டி குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

"எதிராளியை தடுத்தல் பரவாயில்லை. ஆனால், துப்புவது, கழுத்தின் பின்புறம் உள்ள முடியைப் பிடித்து இழுப்பது, காதை பிடித்து இழுப்பது போன்ற சில மோசமான செயல்களே நடந்தன. அவர்கள் எங்களை அச்சுறுத்த முயன்றனர். பிரச்னை என்னவென்றால், தங்களுக்கு சாதகமாக போட்டி இல்லை என்பதை உணர்ந்தபோது, நான் பார்த்ததிலேயே மிக மோசமான அத்துமீறல்களில் ஈடுபட்டனர்" என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மெக்சிகோவில் நடைபெற்ற 1970 உலகக் கோப்பையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சிவப்பு அட்டை மற்றும் மஞ்சள் அட்டை வருகைக்கும் இந்த போட்டியே காரணமாக அமைந்ததாக நம்பப்படுகிறது. அதற்கு முன்பு, நடுவர்கள் வாய்மொழி எச்சரிக்கைகளையே நம்பியிருக்க வேண்டியிருந்தது.

1986: அர்ஜென்டினா 2-1 இங்கிலாந்து (மெக்சிகோ - காலிறுதி)

இரு நாடுகளும் ஃபாக்லாண்ட்ஸ் போரில் ஈடுபட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த காலிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி வெறும் கால்பந்து போட்டியாக மட்டும் இருக்கவில்லை, அரசியல் பதற்றங்களும் மிக அதிகமாக இருந்தன.

அர்ஜென்டினா ஊடகங்களும் பொதுமக்களும், அந்த போர் மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் ஒரு வழியாக இந்த போட்டியைச் சித்தரித்தனர். அதே நேரத்தில், இங்கிலாந்து தரப்பிலும் இரு நாடுகள் இடையிலான விரோதத்தை அதிகரிக்கும் வகையில் தேசியவாத மொழியைப் பயன்படுத்தினர்.

அந்தக் காலத்து இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு தருணம் அந்த போட்டியில் நிகழ்ந்தது. டியாகோ மாரடோனா இங்கிலாந்து கோல்கீப்பர் பீட்டர் ஷில்டனுடன் சேர்ந்து பந்திற்காக மேலே குதித்தார். ஆனால், யாருடைய கண்ணிலும் படாதவாறு, கையால் பந்தை குத்தி வலைக்குள் செலுத்தினார். அப்போது வீடியோ உதவி நடுவர் முறை இல்லை.

பின்னர், மற்றொரு கோலும் அடித்தார். இங்கிலாந்து அணியின் பாதி வீரர்களைத் தாண்டி பந்தை லாவகமாக எடுத்துச் சென்று, ஷில்டனைச் சுற்றி வந்து, அவர் அடித்த கோல் உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகச் சிறந்த கோலாகக் கருதப்படுகிறது.

ஆட்டத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்தின் கேரி லினெக்கர் ஒரு கோலை அடித்தார், ஆனால் அது பயனற்றுப் போனது. மிகவும் சர்ச்சைக்குரிய சூழலில் இங்கிலாந்து அணி வெளியேறியது. அந்த தொடரில் அர்ஜெண்டினா சாம்பியன் பட்டமும் வென்றது.

பின்னர் 2005-ல் மாரடோனா மன்னிப்பு கேட்டார். ஆனால், அந்த மன்னிப்பை ஷில்டன் நிராகரித்தார்.

1998: அர்ஜென்டினா 2-2 இங்கிலாந்து (பெனால்டி முறையில் அர்ஜென்டினா வெற்றி) ( பிரான்ஸ் - லாஸ்ட் 16)

இது இங்கிலாந்தின் டேவிட் பெக்கம் ஒருபோதும் மறக்க முடியாத போட்டி.

அர்ஜென்டினாவின் டியாகோ சிமியோனேவை அவர் உதைத்ததற்காகவும், அதைத் தொடர்ந்து அவருக்குக் காட்டப்பட்ட சிவப்பு அட்டைக்காவும் இந்தப் போட்டி எப்போதும் நினைவுகூரப்படும்.

அதற்கு முன்னதாக, கேப்ரியல் பாடிஸ்டூட்டாவும் ஆலன் ஷியரரும் பெனால்டி வாய்ப்புகளைப் பரிமாறிக்கொண்டனர். பின்னர், மைக்கேல் ஓவன் தனது நாட்டின் மிகச்சிறந்த கோல்களில் ஒன்றை அடித்து, இங்கிலாந்துக்கு 2-1 என்ற முன்னிலையை பெற்றுத் தந்தார். இறுதியில் இந்த ஆட்டம் சமநிலையானது.

டேவிட் பெக்கமின் சிவப்பு அட்டைக்கு பிறகு இங்கிலாந்து துணிச்சலுடன் போராடியது. 81-வது நிமிடத்தில் சோல் கேம்ப்பெல் தலையால் முட்டி கோல் அடித்தபோது, தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அவர்கள் நினைத்தனர். ஆனால், தள்ளியதற்காக அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் வரை செல்ல, அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

2002: அர்ஜென்டினா 0 - 1 இங்கிலாந்து (ஜப்பான் - க்ரூப் ஸ்டேஜ்)

இந்த போட்டி டேவிட் பெக்கம் மீண்டதற்கான தருணமாக நினைவுகூரப்படும். இந்த போட்டியில் இங்கிலாந்து அர்ஜெண்டினாவை 1- 0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

பின்னர் இந்த தொடரில் அர்ஜென்டினா, 1962-க்குப் பிறகு முதல் முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்பே வெளியேறியது.

இந்த போட்டி குறித்து கூறும் பிபிசி ஸ்போர்ட்டின் தலைமை கால்பந்து செய்தியாளர் ஃபில் மெக்நல்டி, இரு அணிகளுக்கும் இடையே ஜப்பானில் நடந்த 2002 உலகக் கோப்பை போட்டி பெக்கம் மற்றும் இங்கிலாந்து அணிக்கு மீட்சி கிடைத்த களமாக அமைந்தது என்கிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் அர்ஜென்டினாவுக்கு எதிராக பெக்கம் பெற்ற சிவப்பு அட்டை மற்றும் கடைசி 16 சுற்றில் பெனால்டி முறையில் ஏற்பட்ட வேதனையான தோல்வியைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கு இடையே நிலவிய தொடர் பதற்றம், இந்த போட்டியை மிகவும் பரபரப்பானதாக மாற்றியதாகவும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு