நாகூர் தர்கா: இந்து, முஸ்லிம் மத நல்லிணக்கத்தின் வரலாற்றுச் சின்னமாக மாறியது எப்படி?

- எழுதியவர், க. மாயகிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்துக்களின் தேர்த் திருவிழாக் காலங்களில் முஸ்லிம்கள் நீர் மோர் வழங்குவது, சீர்வரிசைகள் கொண்டு வருவது, அதேபோல முஸ்லிம் பண்டிகைகளுக்கு இந்துக்கள் நேரில் சென்று இனிப்புகள் வழங்கி வாழ்த்து கூறுவது போன்ற செய்திகளை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கமாகப் பார்த்து வருகிறோம்.
ஆனால் இப்போது மட்டுமல்ல, சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்துக்களும் முஸ்லிம்களும் இணக்கமாக இருந்து வருவதற்குச் சான்றாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது நாகூர் (மினரா) கோபுரம்.
அங்கு அமைந்துள்ள நாகூர் தர்காவுக்கு இந்துக்கள் அதிக அளவில் வருகை தருவதாக பெருமிதத்துடன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தர்காவின் தலைமை அறங்காவலர் ஹாஜா நஜிமுதீன் சாகிப்.
"இந்த தர்காவில் அனைத்து மதம், சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வருகை தந்து வழிபடுகின்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் அவர்கள் அன்னதானம் செய்கிறார்கள். சிலர் காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்துகின்றனர்" என்று ஹாஜா நஜிமுதீன் சாகிப் கூறினார்.
அங்குள்ள கோபுரம் நாயக்க மன்னர் காலத்திலேயே கட்டப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் நாயக்க மன்னரும் நாகூர் தர்காவும்
இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு நாகூர் தர்காவில் இருக்கும் 'மினரா' (கோபுரம்) மற்றும் அதிலுள்ள அரிய கல்வெட்டு மிகச்சிறந்த சான்றாக விளங்குவதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த 17ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்ட கடைசி நாயக்க மன்னர் விஜயராகவ நாயக்கர் தீவிர வைணவப் பற்றாளர். அவர் நாகூர் தர்காவின் முகப்பில் ஓர் உயரமான மினராவை (கி.பி. 1645-1673 காலகட்டத்தில்) கட்டிக் கொடுத்துள்ளார் என்று தெரிவித்தார் இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணைக் கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம்.
இந்த மினராவின் பக்கவாட்டில் தமிழ் மற்றும் அரபு மொழியில் ஒரு கல்வெட்டு உள்ளது.
"பாத்திப வருஷம் ஆடி மீ ஸ்ரீ விசைய ராவுக..." என்று தொடங்கும் அந்தக் கல்வெட்டின் வரிகள், "இந்த மினராவுக்கு யாராவது தீங்கு செய்தால் அல்லது இதை அழித்தால், அவர்கள் மெக்காவில் பாவம் செய்ததற்குச் சமமான தண்டனையை அடைவார்கள். அதேபோல, கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கும் ஆளாவார்கள்" என்று கூறுவதாக முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம் விளக்கினார்.

அதோடு, மன்னர் விஜயராகவ நாயக்கர் இரு மதத்தினரையும் மனதில் வைத்து இந்த எச்சரிக்கையைக் கல்வெட்டாகப் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்தக் கல்வெட்டு, முஸ்லிம்கள் புனிதமாகக் கருதும் மெக்காவை குறிப்பிட்டும் இந்துக்கள் புனிதமாகக் கருதும் கங்கை நதி மற்றும் காராம் பசுவைக் குறிப்பிட்டும் அதைப் பாதுகாக்கும் பொருட்டு எச்சரிப்பதாக அவர் விளக்கினார்.
முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வத்தின் கூற்றுப்படி, "மத நல்லிணக்கம் என்பது மன்னர்கள் காலம் தொட்டு இருந்து வந்துள்ளது என்பதற்கு இந்த நாகூர் தர்கா கோபுரமும் கல்வெட்டும் சான்றாக இன்றும் விளங்குகின்றன."

இந்துக்களால் இசைக்கப்படும் இசைக் கருவிகள்
மசூதிகளில் தொழுகையைத் தொடங்குவதற்கு அடையாளமாக நகரா வாத்தியம் இசைக்கப்படுவது வழக்கம். நாகூர் தர்காவில் அந்த 'நகரா' வாத்தியத்தை வாசிப்பவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அதைத் தொடர்ந்து கோவில்களில் வாசிக்கப்படும் மேளதாளமும், நாதஸ்வரமும் இந்த தர்காவில் வாசிக்கப்படுகிறது.
நாகூர் தர்கா ஆலோசனைக் குழுவின் தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இங்கு மத நல்லிணக்கம் என்பது வெறும் பேச்சில் மட்டுமல்ல, மக்களுடைய வாழ்வியலின் ஓர் அங்கமாகவும் இருக்கிறது. இங்கு வேலை செய்பவர்களில் 70%க்கும் மேலாக இந்துக்களே உள்ளனர். நாள்தோறும் சராசரியாக 25 ஆயிரம் பேருக்கு மேல் வருகை தருகின்றனர். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எனப் பல தரப்பினரும் வருகை தருகின்றனர்" என்று தெரிவித்தார்.
இன்றும் தொடரும் இந்துக்களின் சீர் வரிசைகள்
"நாகூர் தர்காவில் நடைபெறும் கந்தூரி விழாவின் முதல் பிறை நாளன்று மீனவ மக்கள், அதாவது இந்து சகோதரர்கள் எடுத்து வருவதே இன்றளவும் முதல் சீராகத் தொடர்வதாக" செய்யது முஹம்மது கலீபா சாஹிப் குறிப்பிட்டார்.
அதேபோல "விழாக் காலங்களில் செட்டி பல்லாக்கு என்று கூறப்படும் நிகழ்வில் செட்டியார் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இன்னமும் கொடி எடுத்து வந்து வழங்குவது நடைமுறையில் உள்ளது. அந்தக் கொடிதான் கோபுரத்தில் கட்டப்படும். நாகூர் ஆண்டவர் காலத்தில் வாழ்ந்த பழனியாண்டி பிள்ளையின் வம்சத்தில் வந்த குடும்பத்தில் இருந்துதான் இப்போதும் ஆண்டவர் சமாதிக்கு போர்வை வழங்கப்படுகிறது. அந்தப் போர்வைதான் சமாதி மீது போர்த்தப்படுகிறது" என்றும் அவர் விளக்கினார்.

முஸ்லிம்கள் கலாசாரத்தில் மொட்டை அடிக்கும் பழக்கம் இல்லை என்றாலும் இந்துக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக தர்காவில் வந்து முடி காணிக்கை செலுத்தும் வழக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் கூறினார்.
நாகூர் தர்காவில் 16ஆம் நூற்றாண்டில் நாகூரில் வாழ்ந்த ஷாகுல் ஹமீத் (நாகூர் ஆண்டவர்) என்ற சூஃபி துறவியின் சமாதியைச் சுற்றிலும் தஞ்சை நாயக்க அரசர் அச்சுதப்ப நாயக்கர் கட்டிய தர்காவே இன்று நாகூர் தர்கா என அழைக்கப்படுகிறது.
செய்யது முஹம்மது கலீபா சாஹிப் கூற்றுப்படி, "17ஆம் நூற்றாண்டில் விஜயராகவ நாயக்கர் கட்டிய மினரா கோபுரத்தைத் தொடர்ந்து 18ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராத்திய அரசர் பிரதாப் சிங் கட்டியதுதான் இன்றுள்ள பெரிய மினரா என்றழைக்கப்படும் கோபுரம். இது 380 ஆண்டுகள் பழமையானது."
மேலும், "பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த இஸ்லாமிய நபர் ஒருவர் ஒரு மினராவை கட்டிக் கொடுத்துள்ளார். சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நபரும் மினரா ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். இப்படியாக, நாகூர் ஆண்டவரின் நினைவாக ஐந்து மினராவையும் ஐந்து நபர்கள் கட்டிக் கொடுத்தார்கள். அதில் மிகவும் உயரமானது தஞ்சை மன்னர் கட்டிக் கொடுத்த மினராதான்" என்று அவர் பிபிசி தமிழிடம் விளக்கினார்.

'நேர்த்திக் கடனாக அன்னதானம் செய்தேன்'
நாகப்பட்டினம் மாவட்டம் நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கொரோனா காலத்தில் தொற்றால் கடுமையாக அவதிப்பட்டேன். சிகிச்சைக்கு நடுவே நாகூர் ஆண்டவரையும் வேண்டிக் கொண்டேன். எனக்கு அது மிகவும் உறுதுணையாக இருந்தது" என்றார்.
கடந்த வருடம் வயிற்றுவலி, காய்ச்சலால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டபோதும் நாகூர் தர்காவுக்கு சென்று உப்பு தெளித்து பிரார்த்தனை செய்துகொண்டதாகக் குறிப்பிட்ட அவர், "அதன் நேர்த்திக் கடனாக அன்னதானமும் இங்கு வந்து செய்தேன். நான் மட்டுமல்ல என்னைப் போன்ற இந்து சகோதரர்கள் பலரும் பல்வேறு கோரிக்கைகளையும் வேண்டுதலாக வைத்து வருகின்றனர்" என்றார்.

'வேண்டுதல் நிறைவேறியதால் காணிக்கை செலுத்தினோம்'
நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்காரன் இருப்பு கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவரான தாஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில், "என் மகனுக்கு அடிக்கடி உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு மாதத்தில் 10 நாட்கள் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வேறு எந்தப் பணிக்கும் என்னால் செல்ல இயலவில்லை" என்று குறிப்பிட்டார்.
அந்தச் சூழலில், "நாகூர் தர்காவுக்கு நானும் எனது மனைவியும் குழந்தையுடன் சென்று வேண்டுதல் வைத்தோம். என் மகன் உடல்நிலை சரியானதும் குடும்பத்துடன் தர்காவுக்கு சென்று காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினோம்," எனத் தெரிவித்தார்.
இவ்வாறாக, பல்வேறு மதத்தினரின் வருகையுடன் நாகூர் தர்கா மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
























