உடல் எடையைக் குறைக்க மருந்துகளை உட்கொள்வது பயன் தருமா? பக்க விளைவுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மெலிசா ஹோகென்பூம்
- பதவி, மூத்த சுகாதார செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்துகள் ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதை சாரா லெ ப்ரோக் தனிப்பட்ட முறையில் அனுபவித்துள்ளார். அவர் தனது இளம் பருவ வாழ்க்கையின் பெரும்பகுதியில் உடல் பருமனுடன் போராடி, பலவிதமான உணவு முறைகளை முயன்று பார்த்துள்ளார்.
"எந்த மருந்தாக இருந்தாலும், அது வெளியானவுடன் 'இதை முயற்சி செய்து பார்க்கலாம், இது எனக்குப் பலனளிக்கலாம்' என்று நினைத்தேன்" என்று அவர் பிபிசியின் இன்சைட் ஹெல்த் நிகழ்ச்சியில் கூறினார்.
ஆனால், அவர் உடல் எடையைக் குறைத்தாலும்கூட, அது எப்போதும் மீண்டும் கூடிவிடும் என்பதுதான் பிரச்னை.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு, அவர் தற்போது கிட்டத்தட்ட 51 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
"திடீரென நான் உணவைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டேன்" என்கிறார் அவர்.
"எனக்கு அதிக ஆற்றல் கிடைத்துள்ளது. முன்பு என்னால் செய்ய முடியாத விஷயங்களை இப்போது செய்கிறேன். இது எனக்கு வாழ்வில் மீண்டும் ஒரு புதிய சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது," என்று கூறினார் சாரா.
சாராவை போன்ற லட்சக்கணக்கான மக்கள் செமாக்ளுடைட், டிரிசெபாடைட் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். இவை ஓசெம்பிக், மௌன்ஜாரோ என்ற அவற்றின் வணிக ரீதியிலான பெயர்களில் நன்கு அறியப்படுகின்றன.
இந்த மருந்துகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊசிகளுக்குப் பதிலாக மாத்திரைகள் போன்ற புதிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு வருவதால் இந்த அதிகரிப்பு நிகழக்கூடும்.
இந்த மருந்துகள் உடல் பருமனுக்கு சிகிச்சையளிக்கும் முறையைத் தெளிவாக மாற்றியமைக்கின்றன.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் கம்மிங்ஸ், உடல் பருமனை இப்போது "குறைக்க" முடியும், அதாவது முன்பைவிட சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறுகிறார்.
"நான் பார்த்தவரை, இவை அற்புத மருந்துகளுக்கு மிகவும் நெருக்கமானவை" என்கிறார் அவர்.
இருப்பினும், அனைவரும் இதை முழுமையாக ஒப்புக் கொள்வதில்லை. ஆரோக்கியமான உணவுகளை உண்பது, உடற்பயிற்சி செய்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை மக்கள் மறந்துவிடக்கூடும் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள். "மக்கள் இந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தும்போது, இழந்த எடை பெரும்பாலும் விரைவாக மீண்டும் கூடிவிடுகிறது."
எனவே, உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்த நினைக்கும் எவரும், அதைத் தொடங்குவதற்கு முன்பு சில முக்கியமான விஷயங்களை கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
எடை குறைப்பு மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன?
எடை குறைப்பு மருந்துகள் முக்கியமாக ஒருவரின் பசியைக் குறைப்பதன் மூலமாகச் செயல்படுகின்றன. நாம் எப்போது வயிறு நிரம்பிய நிலையை அடைகிறோம் என்பதை உணர்த்தும், நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் ஹார்மோன்களை இவை அப்படியே பிரதிபலிக்கின்றன.
இந்தச் செயல்பாட்டில் ஈடுபடும் மிகவும் பொதுவான ஹார்மோன்கள், குளுக்ககான்-லைக் பெப்டைட்-1 (GLP-1), குளுக்கோஸ்-சார்ந்த இன்சுலினோட்ரோபிக் பாலிபெப்டைட் (GIP) என அழைக்கப்படுகின்றன.
இந்த மருந்துகள், நம் உடலின் செல்களில் உள்ள 'ஏற்பிகள்' எனப்படும் சிறப்புப் பகுதிகளுடன் (GLP-1 மற்றும் GIP ஏற்பிகள்) இணைகின்றன. "நீங்கள் போதுமான அளவு உணவை உட்கொண்டுவிட்டீர்கள்" என்ற சமிக்ஞையை மூளைக்கு அனுப்பிய இந்த ஏற்பிகள் உதவுகின்றன.
இதன் காரணமாக, மக்கள் விரைவாகவே வயிறு நிரம்பிய உணர்வைப் பெறுகின்றனர். அதனால் அவர்கள் குறைவாகவே சாப்பிடுகின்றனர்.
பொதுவாக, இந்த மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கும் ஒருவருக்கு, சில வாரங்களிலேயே எடை குறையத் தொடங்குகிறது.
இந்த மருந்துகள் அதிகாரபூர்வமாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு இருந்தாலும், மருத்துவ ரீதியாக உடல் பருமன் இல்லாத பலரும் இப்போது இவற்றைத் தனிப்பட்ட முறையில் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
இந்த மருந்துகள் மிகச் சிறப்பாகச் செயல்படுவதாலேயே, இவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. சுமார் 72 வாரங்களில், மக்கள் தங்கள் உடல் எடையில் 14% முதல் 20% வரை குறைக்க முடியும்.
இருப்பினும், சுமார் 10% முதல் 15% வரையிலான மக்களிடம் எடைக் குறைப்பு பெரிதாக நிகழ்வதில்லை. இத்தகையோர், "மருந்துக்கு எதிர்வினையாற்றாதவர்கள்" என்று அழைக்கப்படுகின்றனர்.
கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நவீத் சத்தார் இதை, "GLP-1 மருந்துகள் ஒரு 'வேதியியல் கவசம்' போலச் செயல்படுகின்றன. ஆரோக்கியமற்ற, அதிக கலோரி கொண்ட உணவுகள் எங்கும் எளிதாகக் கிடைக்கும் இன்றைய சூழலில் இருந்து மக்களைப் பாதுகாக்கவே இந்தக் கவசம் உதவுகிறது," என்று விளக்குகிறார்.
மேலும் அவர், "எங்கும் உணவு நிறைந்து காணப்படுகிறது. அரை மணிநேரத்துக்குள் யார் வேண்டுமானாலும் கைபேசியை எடுத்து, 10,000 கலோரி அளவிலான உணவை ஆர்டர் செய்துவிட முடியும்," என்று குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், மருந்துகளை நிறுத்திவிட்டால் இழந்த எடை மீண்டும் கூடிவிடக்கூடும்.
இந்த மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கும் உடல் பருமன் உள்ளவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் பேராசிரியர் டேவிட் கம்மிங்ஸ்.
"அவர்கள் இந்த மருந்துகளை நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டியிருக்கலாம்."
இவர், மிக அதிக அளவிலான பி.எம்.ஐ (உடல் நிறை குறியீட்டெண்), அதாவது 50 மற்றும் அதற்கு மேல் பி.எம்.ஐ, கொண்டவர்களுக்கான எடை மேலாண்மை திட்டத்தை நடத்தி வருகிறார்.
அவரிடம் பல நோயாளிகள், இந்த மருந்துகளைத் தாங்கள் எவ்வளவு காலத்துக்குத் தொடர்ந்து எடுக்க வேண்டும் எனக் கேட்கின்றனர். பெரும்பாலானோர் சுமார் ஓராண்டு காலத்துக்குப் பிறகு மருந்துகளை நிறுத்திவிடுவதாகக் கூறுகிறார் அவர்.
சுமார் 9,000க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சராசரியாக 39 வாரங்களுக்கு சிகிச்சையைத் தொடர்ந்தது தெரிய வந்துள்ளது.
மருந்துகளை நிறுத்திய பிறகும், தங்கள் மன உறுதியை மட்டுமே கொண்டு தொடர்ந்து எடையைக் குறைக்க முடியுமென மக்கள் பெரும்பாலும் கருதுகின்றனர்.
ஆனால், நடைமுறையில் இது பெரும்பாலும் சாத்தியமாவதில்லை என்பதையே மருத்துவ ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதிக விலை, அவற்றை காப்பீட்டில் ஈடுசெய்ய இயலாமல் போவது, நீண்ட காலத்துக்கு மருந்துகளைச் சார்ந்திருக்க விரும்பாதது எனப் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்துகிறார்கள்.
ஆனால் மக்கள் நிறுத்தும்போது, அவர்களின் எடை பொதுவாக மீண்டும் கூடிவிடுகிறது.
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் உடல் எடையைக் குறைப்பவர்களுடன் ஒப்பிடும்போது, இந்த மருந்துகளை நிறுத்திய பிறகு எடை அதிகரிப்பு நான்கு மடங்கு வரை வேகமாக நிகழ்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
மருந்துகளை நிறுத்திய 8 வாரங்களுக்குப் பிறகு, மக்கள் 1.5 கிலோ எடை அதிகரித்ததாக மற்றோர் ஆய்வு காட்டியது. காலப்போக்கில் அவர்களின் எடை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்னைகளும் மீண்டும் வந்தன. ஓராண்டுக்குப் பிறகு, மக்கள் தாங்கள் இழந்த எடையில் சுமார் 60 சதவிகிதத்தை மீண்டும் பெறுகிறார்கள் என்றும் இந்தப் புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
எடை மீண்டும் கூடுவது எப்படி? இதற்குக் காரணம் "உணவு இரைச்சல்" (food noise) என்று அழைக்கப்படுவதாக பேராசிரியர் சத்தார் கூறுகிறார். இதன் பொருள், உணவைப் பற்றிய தொடர்ச்சியான எண்ணங்கள் புறக்கணிக்க முடியாதவையாக இருப்பதாகும்.
ஹார்மோன்களும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒருவர் உடல் எடையைக் குறைக்க முயலும்போது, உடல் கடுமையாக எதிர்வினையாற்றுகிறது. அது இழந்த எடையை மீண்டும் கொண்டு வர முயல்கிறது.
"குறைவான கலோரிகளை உட்கொள்வது ஆபத்தானது (ஆற்றல் பற்றாக்குறை) என்று மூளை கருதுகிறது. மருந்துகளை நிறுத்திய பிறகு, பசி ஹார்மோன்கள் அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் உடல் குறைவான கலோரிகளை எரிக்கிறது (வளர்சிதை மாற்றம் குறைகிறது)," என்று பேராசிரியர் கம்மிங்ஸ் விளக்குகிறார்.
மேலும் அவர், "இந்த உயிரியல் பாதுகாப்பு அமைப்புகள் போதுமான அளவு வலுவாக இருந்தால், அவை மருந்தின் செயல்திறனைக் குறைத்துவிடும்," என்றும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
வாழ்க்கை முறை மாற்றம்
சில நேரங்களில் உண்மையான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்பவர்களால், தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவைக் குறைக்க முடியும் என்கிறார் பேராசிரியர் நவீத் சத்தார்.
ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களால் குறைந்த அளவு மருந்தை எடுத்துக்கொள்ள முடிகிறது அல்லது எப்போதாவது மட்டுமே மருந்தைப் பயன்படுத்த முடிகிறது.
சிலர் உண்மையிலேயே "தங்கள் உணவில் அடிப்படை மாற்றங்களை" செய்கிறார்கள். அதாவது அவர்கள் உண்ணும் உணவைத் தீவிரமாக மேம்படுத்துகிறார்கள் என்றார் அவர்.
ஆனால் பெரும்பாலான மக்களுக்கு, "மற்றவர்களுக்கு, அவர்கள் மருந்தை உட்கொள்ளத் தொடங்கியபோது தேவைப்பட்டதைவிட குறைந்த அளவில் தேவைப்படலாம். ஆனால் பெரும்பான்மையானோருக்கு, சூழல் இன்னும் அப்படியே இருப்பதால், மருந்து ஏதேனும் ஓர் அளவில் தேவைப்படலாம்," என்று அவர் விளக்குகிறார்.
சிலர் தங்கள் வாழ்க்கை முறையை (உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் வாழ்வை மேம்படுத்துவது போன்றவை) மாற்றுவதற்குப் பதிலாக, எடை குறைப்பு மருந்துகளை மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால், மருந்தை எடுத்துக் கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது ஆகிய இரண்டும் இணைந்தால் சிறந்த முடிவுகள் கிடைக்கும் என்பதை ஆராய்ச்சி தெளிவாகக் காட்டுகிறது.
சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில், முறையான வாழ்க்கை முறை மற்றும் நடத்தையின் ஆதரவின்றி மக்கள் இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால், அது உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உதாரணமாக, அவர்கள் உணவில் இருந்து போதுமான ஊட்டச்சத்துகளைப் பெறாமல் போகலாம். "மக்கள் போதுமான புரதத்தையும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்," என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேரி ஸ்ப்ரெக்லி கூறுகிறார்.
மேலும், "பலவீனம் மற்றும் தசை இழப்பு போன்ற நீண்டகால எதிர்பாராத விளைவுகள் ஏற்படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஒரு உடல்நலப் பிரச்னைக்குப் பதிலாக மற்றொரு பிரச்னையை நாம் கொண்டு வர விரும்பவில்லை," என்று அவர் எச்சரித்தார்.
இது ஏன் நிகழ்கிறது? இந்த மருந்துகள் பசியை வெகுவாகக் குறைப்பதால், மக்கள் இயல்பாகவே மிகக் குறைந்த உணவையே உண்கிறார்கள். இது உடல் எடையைக் குறைக்க உதவினாலும், இதுவொரு பிரச்னையாகவும் மாறக்கூடும்.
மக்கள் மிகக் குறைவாகச் சாப்பிடுவதால், ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேர்வு செய்வதால், முக்கியமான ஊட்டச்சத்துகளை இழக்க நேரிடலாம்.
காலப்போக்கில் மக்களுக்குச் சரியான வழிகாட்டுதல் அளிக்கப்படாமல், அவர்கள் தொடர்ந்து தவறான உணவுத் தேர்வுகளைச் செய்தால், இதுவொரு "தவறவிடப்பட்ட வாய்ப்பாக" மாறிவிடும் என்று ஆயவாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
உடனடித் தீர்வு கிடையாது
மருந்துகள் மட்டுமே "உடல் பருமன் சவாலை மாற்றியமைக்க முடியாது" என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
GLP-1 மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்த அதன் வழிகாட்டுதல்களில், இந்தப் பிரச்னையைச் சமாளிக்க ஆரம்பகால நடவடிக்கை, வழக்கமான சுகாதாரப் பரிசோதனை, ஆரோக்கியமான சூழல்களை உருவாக்குதல் ஆகியவையும் அவசியம் என்று அந்த அமைப்பு விளக்குகிறது.
மக்கள் இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும்போதே வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது எளிதாவதாக பேராசிரியர் நவீத் சத்தார் கூறுகிறார்.
"உங்கள் உணவுமுறையைப் பற்றிச் சிந்திக்க உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கிறது. அதாவது பசி கட்டுப்படுத்தப்படும்போது மக்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும்," என்று பேராசிரியர் சத்தார் கூறுகிறார்.
இருப்பினும், நடத்தையை மாற்றும் மிகவும் கடினம் என்று லஃப்பரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமாண்டா டேலி கூறுகிறார். GLP-1 மருந்துகளை எடுத்துக் கொள்வதை நிறுத்திய பிறகு, எவ்வளவு விரைவாக அவர்கள் மீண்டும் உடல் எடையை அதிகரிக்கக்கூடும் என்பது குறித்து நோயாளிகளுக்குத் தெளிவான தகவல்கள் தேவையெனக் கூறுகிறார் அவர்.
உடல் பருமன் என்பது ஒரு நாள்பட்ட மற்றும் மீண்டும் மீண்டும் வரக்கூடிய நிலை என்றும், இதை மருந்துகள் மூலம் மட்டுமே "குணப்படுத்த" முடியாது என்றும் அவர் விளக்குகிறார். இதன் காரணமாக, கூடுதல் ஆதரவும், "முழுமையான கவனிப்பு" என்று அவர் அழைப்பதும் மிகவும் முக்கியமானவை. இதில், மக்கள் தங்கள் உணவுமுறையை மேம்படுத்தவும், உடல் செயல்பாடுகளை அதிகரிக்கவும் உதவுவது அடங்கும். இதன்மூலம் அந்த மாற்றங்கள் காலப்போக்கில் நீடித்திருக்கும்.
தனியார் வழங்குநர்கள் இந்த முக்கியமான ஆதரவை வழங்குகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் பேராசிரியர் டேலி கூறுகிறார். பலர் இந்த மருந்துகளைத் தனியாகப் பெறுவதாலும், அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து முறையான சிகிச்சையைப் பெறுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது கடினமாக இருப்பதாலும், இது கவலையளிப்பதாக உள்ளது என்கிறார்.
வாழ்க்கை முறை மாற்றங்களை மக்கள் எளிதாகச் செய்வதற்கு உதவும் வழிகளை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டறிய முயன்று வருகின்றனர். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில், GLP-1 எடைக் குறைப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது, மக்கள் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்ள, "மைக்ரோஸ்டெப்ஸ்" அல்லது "மைக்ரோ-நட்ஜஸ்" எனப்படும் சிறிய, எளிய மாற்றங்கள் உதவுமா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
சமீபத்திய ஓர் ஆய்வில், இந்த மிகச் சிறிய மாற்றங்கள் சிறந்த நடத்தையை ஊக்குவிக்க முடியுமா என்பதை அவர்கள் பரிசோதித்தனர். இந்த மாற்றங்கள் உணவு, உடல் செயல்பாடு, தூக்கம், மன அழுத்தம் போன்ற அன்றாட விஷயங்களில் கவனம் செலுத்தின.
இந்த வழிமுறைகளை மிகவும் சிறியதாகவும், பின்பற்றுவதற்கு எளிதாகவும் வைத்திருப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. உதாரணமாக, சர்க்கரை பானங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் அருந்தவும், மதிய உணவுக்குப் பிறகு காபி குடிப்பதை நிறுத்தவும், மன அழுத்தம் ஏற்படும்போது ஆழமாக மூச்சு விடவும் அல்லது ஐந்து நிமிடங்கள் வெளியே சென்று வரவும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்தச் சிறிய செயல்கள், மக்களின் மனநிலையையும், பழக்க வழக்கங்களை மாற்றுவது குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகளையும் மேம்படுத்த உதவியதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். ஸ்டான்ஃபோர்ட் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த மாயா ஆடம் கருத்துப்படி, இந்த "எதிர்பார்ப்பு" உணர்வே உண்மையான நடத்தை மாற்றத்தை நோக்கிய முதல் முக்கியமான படி.
"உங்கள் சிறந்த ஆரோக்கியத்தை அடைவதற்கு மருந்து சிகிச்சையை மட்டும் சார்ந்திருக்கவில்லை" என்கிறார் அவர். எளிதாகக் கூறுவதெனில், மருந்து மட்டுமே போதாது, உங்கள் அன்றாடப் பழக்க வழக்கங்களையும் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
மேலும் பேசிய அவர், "மக்களுக்கு இதுபோன்ற சிறிய தூண்டுதல்களைக் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்" என்று கூறினார்.
இந்த வழிமுறைகளை அவர், "தோல்வியடைய முடியாத அளவுக்கு மிகச் சிறியவை" என்று விவரிக்கிறார். அதாவது அவை மிகவும் எளிமையானவை என்பதால் மக்கள் அவற்றைத் தொடர்ந்து கடைபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். காலப்போக்கில், இந்தச் சிறிய தினசரி மாற்றங்கள்கூட ஒரு நபரின் ஆரோக்கியத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தலாம்.

பட மூலாதாரம், Getty Images
பக்கவிளைவுகள்
இந்த வகையான வாழ்க்கை முறை ஆதரவு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை, ஏனெனில் அவை மக்களுக்கு நீடித்த மாற்றங்களைச் செய்துகொள்ள உதவுகின்றன. குறிப்பாக உடல் எடை குறைப்பு மருந்துகளின் பக்க விளைவுகளை நாம் கருத்தில் கொள்ளும்போது இது மிகவும் முக்கியம் என்கிறார் அமாண்டா டேலி. வயிறு மற்றும் செரிமானப் பிரச்னைகள் சில பொதுவான பக்க விளைவுகளில் ஒன்றாகும். சில பயனர்களிடையே கணைய அழற்சி, பித்தப்பை கற்கள் போன்ற பாதிப்புகளும் அதிகரித்துள்ளன. மற்றொரு முக்கிய கவலை, தசை இழப்பு. குறிப்பாக எந்தவிதமான உடற்பயிற்சியும் செய்யாதவர்களிடையே இது காணப்படுகிறது. சமீபத்தில், ஓர் ஆய்வில், இந்த மருந்துகளுக்கும் எலும்பு மற்றும் மூட்டுப் பிரச்னைகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கண்டரியப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், சில நேர்மறையான விளைவுகளையும் இந்த ஆய்வுகள் காட்டியுள்ளன. அத்தகைய ஒரு முக்கிய ஆய்வில், இந்த மருந்துகள் சிறந்த இதய ஆரோக்கியம், குறைவான நோய்த் தொற்றுகள், போதைப் பொருள் துஷ்பிரயோகத்தின் குறைந்த ஆபத்து, குறைவான மறதி நோய் பாதிப்புகளுடன் தொடர்புடையவை எனக் கண்டறியப்பட்டது.
GLP-1 மருந்துகள் பயனுள்ளவை என்பதைக் காட்டும் பல ஆண்டுகால தரவுகள் விஞ்ஞானிகளிடம் இருந்தாலும், நீண்ட கால அளவில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இந்த நன்மைகள் பல ஆண்டுகளுக்குத் தொடருமா அல்லது காலப்போக்கில் குறையுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்த மருந்துகள் கர்ப்பத்தையோ அல்லது எதிர்கால சந்ததியையோ எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது குறித்தும் மிகக் குறைவான தரவுகளே உள்ளன. குறிப்பாக கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைப்பு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
இருப்பினும், உடல் பருமனுடன் வாழும் மக்களுக்கு, உடல் பருமனால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்களுடன் ஒப்பிடுகையில், இந்தப் பக்க விளைவுகள் ஒப்பீட்டளவில் சிறியவை என்று நவீத் சத்தார் மற்றும் டேவிட் கம்மிங்ஸ் கூறுகின்றனர். குறிப்பாக, ஏற்கெனவே உடல் எடை தொடர்பான பல உடல்நலப் பிரச்னைகளைக் கொண்டோர் விஷயத்தில் இது உண்மை. இதய நோய், புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்கள் உலகளவில் இறப்புக்கான முக்கியக் காரணங்களில் அடங்குகின்றன. மேலும் இவையனைத்தும் உடல் பருமனுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
மாறிவரும் சூழல்
உடல் எடை குறைப்பு மருந்துகளைச் சுற்றியுள்ள நிலைமை மிக வேகமாக மாறி வருகிறது. மேன்மேலும் புதிய மருந்துகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த மருந்துகள், மக்களுக்கு உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, பிற உடல்நலப் பலன்களையும் அளிக்கின்றன.
20 லட்சம் பேரை ஆய்வு செய்த ஒரு முக்கிய ஆய்வில், இந்த மருந்துகள் சிறந்த இதய ஆரோக்கியம், குறைவான நோய்த்தொற்றுகள், போதைப் பொருள் துஷ்பிரயோகத்தின் குறைந்த ஆபத்து, மறதி நோய் வருவதற்கான குறைந்த வாய்ப்புகளுடன் தொடர்புடையவை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். தூக்கத்தில் மூச்சுத் திணறல், மூட்டு வலி, போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற நிலைகளை மேம்படுத்த அவை உதவும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
ரெட்டாட்ரூடைட் என்ற புதிய மருந்தும் சமீபத்திய சோதனைகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளது. இந்த மருந்து, பசியைக் கட்டுப்படுத்தும் மூன்று ஹார்மோன்களின் செயல்பாட்டைப் பிரதிபலிப்பதன் மூலம் செயல்படுகிறது.
அதன் உற்பத்தியாளரான எலி லில்லியின் கூற்றுப்படி, ஆரம்பக்கட்ட முடிவுகள், மக்கள் இதை 68 வாரங்கள் பயன்படுத்திய பிறகு தங்கள் உடல் எடையில் கிட்டத்தட்ட 29% வரை குறைக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன.
இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், உடல் பருமனுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்த மருந்துகள் ஒரு பகுதி மட்டுமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பேராசிரியர் அமாண்டா டேலி, மக்கள் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திய பிறகும் நீடிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய உதவுவதே மிகவும் முக்கியமானது என்று விளக்குகிறார். தற்போது பலரும் மலிவான, அதிக கலோரி கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளால் சூழப்பட்டுள்ளனர். இது உடல் பருமனை ஒரு வளர்ந்து வரும் பிரச்னையாக ஆக்குகிறது.
மேலும், அனைவருக்கும் ஆரோக்கியமான தேர்வுகளை எளிதாக்கும் வகையில், ஒட்டுமொத்த உணவுச் சூழலை மாற்றுவதே உண்மையான நீண்டகால இலக்காக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் அவர். சிறந்த உணவுப் பழக்கங்களை ஆதரிக்கும் கொள்கைகளையும் அரசுகள் உருவாக்க வேண்டும். இது நடந்தால், அடுத்த தலைமுறை உடல் எடை குறைப்பு மருந்துகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போகலாம் என்கிறார் டேலி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























