விவசாய நில பயன்பாட்டு மாற்றத்தில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தம் - எதிர்ப்பும் ஆதரவும் என்ன?

பட மூலாதாரம், Getty Images
மனைப்பிரிவு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கு நன்செய் விவசாய நிலங்களை நிலப்பயன்பாட்டு மாற்றம் செய்வதற்கு, மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவையில்லை, புஞ்சை நிலங்களை உபயோக மாற்றம் செய்வதற்கு வேளாண் துறை இணை இயக்குநரின் தடையின்மைச் சான்று தேவையில்லை என்று நகர ஊரமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ள தமிழக அரசு, அது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் நகரங்களில் வளர்ச்சிப்பணிகளும், தொழில் வளர்ச்சியும் வேகம் பெறும் என்று கட்டுமானத் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு வழங்குவதால் விவசாய நிலங்கள் வேகமாக அழியும் என்று குற்றம்சாட்டும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், இதற்குப் பதிலாக கால அவகாசத்தை நிர்ணயிக்கலாம் என்றும் ஆலோசனை கூறுகின்றனர்.
இந்த சட்டத்திருத்தத்தை கண்டித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, நிலங்களின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பறித்து மாநில அளவில் குவிக்கும் முயற்சி இது என்று கூறி, இதைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.
ஆனால் திட்ட அனுமதிக்கான காலதாமதத்தைத் தவிர்க்கவே இந்த சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக துறை அமைச்சர் ராஜ்குமார் விளக்கமளித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
நிலப்பயன்பாட்டு மாற்றம்
தமிழகத்தில் மனைப்பிரிவு, தொழில் கட்டமைப்பு மற்றும் பிற மேம்பாட்டுப் பணிகளுக்கு, விவசாய நிலங்களை நில உபயோக மாற்றம் செய்யும் அதிகாரம், தமிழ்நாடு நகரமைப்பு மற்றும் ஊரகத்திட்டமிடல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி நிலப்பயன்பாட்டு மாற்றம் செய்வதற்கு, பரப்பளவு அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கும், பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலகங்களுக்கும் அதிகாரப் பகிர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வருவாய்த்துறை, நீர்வள ஆதாரத்துறை, கனிம வளத்துறை, 'ஹாகா' எனப்படும் மலையிடப்பாதுகாப்புக் குழுமத்துக்குட்பட்ட பகுதிகளில் கூடுதலாக வனத்துறையிலும் தடையின்மைச் சான்று பெற்று, நகரமைப்புத் துறையிடம் நிலப்பயன்பாடு மாற்றத்துக்கு விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும்.
தாமதத்தைக் குறைக்கும் வகையில், ஒற்றைச்சாளர முறையில் திட்ட அனுமதியை வழங்க வேண்டும் என்பது கிரடாய், இந்திய கட்டுமானர் சங்கம், இந்திய தொழிற்கூட்டமைப்பு போன்ற கட்டுமானத்துறை மற்றும் தொழில் துறையினரின் நீண்டகால கோரிக்கையாகவுள்ளது. மற்றொரு புறத்தில் விவசாய நிலங்களை நில உபயோக மாற்றம் செய்வதைக் கட்டுப்படுத்துமாறு விவசாய அமைப்புகள் கோரி வருகின்றன.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் ராஜ்குமார், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டத்தில் சட்டத்திருத்தத்தை முன்மொழிந்து அது எதிர்ப்புகளுக்கிடையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் திட்டமில்லாத பகுதிகளில் நன்செய் நிலங்களுக்கு நில உபயோக மாற்றம் செய்வதற்கு இனிமேல் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலகத் தலைவராகவுள்ள மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறத்தேவையில்லை. ஒற்றைச் சாளர முறையில் நகர ஊரமைப்பு இயக்குநரே சம்பந்தப்பட்ட துறைகளிடம் கருத்துப் பெற்று ஒருங்கிணைத்து முடிவெடுக்க இந்த சட்டத்திருத்தத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக, உலர் நிலங்கள் மற்றும் புஞ்சை நிலங்களுக்கு நில உபயோக மாற்றம் செய்வது தொடர்பான அரசாணை மற்றும் சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, கடந்த ஜூலை 31 அன்றே, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையால் ஓர் அரசாணை (எண்:149) வெளியிடப்பட்டுள்ளது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ள அந்த அரசாணையின்படி, திட்டமிடப்படாத பகுதிகளில் விவசாய நிலத்திலிருந்து விவசாயம் சாராத பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கான 2017 ஆம் ஆண்டு விதிகளில் திருத்தம் செய்து, ''புஞ்சை நிலங்களைப் பொறுத்தவரை, விதி 3-இன் உட்பிரிவு (2)-இன் கீழ் விண்ணப்பதாரரால் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டு திருப்தியடைந்த பிறகு, முன் ஒப்புதல் வழங்குவது குறித்து இயக்குநர் தாமே முடிவெடுக்க வேண்டும்." என்று நகர ஊரமைப்பு இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு, அதற்கேற்ப விதிகளில் பல பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த அரசாணையின் அடிப்படையில், இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வை விளக்கி, ஆகஸ்ட் 17 அன்று, நகர ஊரமைப்பு இயக்குநர் கிரன் குராலா ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, உலர் நிலத்தை விவசாயப் பயன்பாட்டிலிருந்து விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கான விண்ணப்பங்களில் வேளாண்மைத் துறையின் இணை இயக்குநரிடமிருந்து தடையின்மைச்சான்று பெற வேண்டிய அவசியம் நீக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட நகரமைப்பு மற்றும் ஊரகத் திட்டமிடல் அலுவலரே ஆவணங்கள் மற்றும் கள ஆய்வின் அடிப்படையில் பரிசீலித்து முன் ஒப்புதல் வழங்கலாம்.
இதுவரை உலர் நிலங்களை பொறுத்தவரை வேளாண்மைத் துறையின் இணை இயக்குநரிடமிருந்து தடையின்மைச் சான்று பெறுவது கட்டாயமாக இருந்தது. தற்போது சில விதிகளின் பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டு, ''விதி 3-ன் துணை விதி (2)-ன் கீழ் விண்ணப்பதாரரால் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து திருப்தியடைந்த பின்னர், முன் ஒப்புதல் வழங்குவது குறித்து இயக்குநரே முடிவு செய்வார்." என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அதிகாரப்பகிர்வின் அடிப்படையில், இத்தகைய விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பொறுப்பு தற்போது மாவட்ட நகரமைப்பு மற்றும் ஊரகத் திட்டமிடல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒற்றைச் சாளர இணையதளம் மூலம் பெறப்படும் உலர் நிலங்கள் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களும் சம்பந்தப்பட்ட மாவட்ட நகரமைப்பு மற்றும் ஊரகத் திட்டமிடல் அலுவலரால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலங்களை நில உபயோக மாற்றம் செய்வதற்கு ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படுமென்று அரசு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
இந்த சட்டத்திருத்தத்தை காங்கிரஸ் ஆதரித்தது. ஆனால் பிற கட்சிகள் எதிர்த்துள்ளன.
இந்த சட்டத்திருத்த மசோதாவில், ''நகா்ப்புற வளா்ச்சியின் அளவும் அவை சார்ந்த சிக்கல்களும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தப் பணிகளுக்கு தொடா்ச்சியான மற்றும் அா்ப்பணிப்புள்ள கவனம் செலுத்துவதும், உரிய நேரத்தில் முடிவு எடுப்பதும் அவசியமாகிறது. எனவே நகா்ப்புற மேம்பாட்டுக் குழுமங்களின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் முழுநேரத் தலைவரையும், முழு நேர உறுப்பினா் செயலரையும் நியமிப்பது அவசியமாகிறது. அதேநேரத்தில், மாவட்ட ஆட்சியா், ஆணையத்தின் உறுப்பினராகத் தொடா்ந்து செயல்படுவாா்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை மாவட்டம் மற்றும் மாநகர அளவிலான திட்டக்குழுமங்களுக்குத் தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் இருந்த நிலையில், அந்த பொறுப்பில் அரசு நியமனம் செய்வதற்கு இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்துள்ளது. இதனால் முடிவெடுக்கும் அதிகாரம், மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இருந்து, குழுமத்தின் தலைவராக இருக்கும் அரசு சாரா ஒருவருக்கு மாற்றப்படும். இதைச் சுட்டிக்காட்டி அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளன. அதேபோன்று நிலஉபயோக மாற்றத்துக்கு உள்ளாட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்ற கட்டாயம் இனி இல்லாமல், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் பறிக்கப்படுமென்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
சட்டப்பேரவையில் இதை எதிர்த்துப் பேசிய அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ''மாவட்ட ஆட்சித்தலைவர் இப்போது மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்புக் குழுமத்துக்கு தலைவராகவுள்ளார். அதை மாற்றி அரசு நியமிக்கும் நபர் தலைவராகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுப்பினராகவும் இருப்பார் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பதால், தலைவர் அரசு சார்பற்றவராக இருந்தால் அவருக்கு எந்தப் பொறுப்பையும் ஏற்கத்தேவையில்லை. அதனால் தவறும் நடக்கும். தாமதமும் ஏற்படும். ஊரமைப்பு இயக்குநருக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் அதிகாரத்தைத் தருவதும் தவறு. அதனால் இந்த 3 சட்டத்திருத்தங்களையும் அதிமுக எதிர்க்கிறது.'' என்றார்.
பாமக சார்பில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ்குமார், ''நகர்ப்புறத் திட்டமிடலில் உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பங்களிப்பு இல்லை. மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தை துறை இயக்குநருக்கு தருவது தவறாகும். விவசாய விளை நிலங்களை எளிதாக நிலஉபயோக மாற்றம் செய்வது விவசாயத்தை வேகமாக அழித்துவிடும் என்பதால் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்க்கிறோம்.'' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து, ''நகர ஊரமைப்புச் சட்டத்திருத்தம், அரசியல் அமைப்பு சாசனம் அனுமதித்துள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கு எதிரானது. கிராமசபைகளில் முடிவு செய்ய வேண்டியதை, மாநில அளவிலான அதிகாரிக்கான அதிகாரமாக மாற்றுவதை ஏற்க முடியாது. இதை சட்டப்பேரவை தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.'' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ''இந்த திருத்தம் தேவையற்றதும் தவறானதுமாகும். நன்செய் நிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றுவதற்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் ஊராட்சி மன்றத்திற்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதனால் நகர திட்ட இயக்குநருக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை மாற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்க காலதாமதம் ஆகிறது என்றால் மாநிலம் முழுவதற்கும் இயக்குநர் ஒருவரே ஒப்புதல் வழங்குவது என்றால் மேலும் காலதாமதம் தானே ஆகும். எனவே, இது ஏற்புடைய காரணமல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.'' என்று கூறியுள்ளார்.
''நிலம் சம்பந்தமான விபரங்கள், ஆவணங்கள் அதற்குரிய பயிற்சி பெற்ற அதிகாரிகள் வருவாய்த்துறையில் தான் உள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் உள்ள அதிகாரத்தை இயக்குநருக்கு மாற்றுவதும் தவறானது. மேலும் உள்ளாட்சி மன்றங்களுக்கு உள்ள அதிகாரத்தை பறிக்கும் வகையில் இந்த திருத்தம் உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசால் முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும். முந்தைய நிலை தொடர வேண்டும்.'' என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, திமுக உறுப்பினர்கள் பேரவையில் இல்லை. இருப்பினும் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதாக திமுக உறுப்பினர்கள் ஊடகங்களில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
நகர ஊரமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு பல்வேறு கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தொழில் மற்றும் கட்டுமான அமைப்புகள் இதை வரவேற்றுள்ளன. இந்திய தொழிற்கூட்டமைப்பு தேசிய பணிக்குழுவின் இணைத்தலைவர் எம்.பொன்னுசாமி, ''1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறும் நடைமுறையை தற்போது நீக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கை ஒப்புதல் செயல்முறையை வெகுவாக விரைவுபடுத்துவதோடு, இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கும்," என்று கூறியுள்ளார்.
கட்டுமானம், தொழில்துறையினர் வரவேற்பு - விவசாய, சூழல் அமைப்புகள் எதிர்ப்பு!
பிபிசியிடம் பேசிய இந்திய கட்டுமானர்கள் சங்கத்தின் அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினர் சின்னச்சாமி, ''கட்டுமானத்துறையில் இருந்தாலும் எனக்கும் விவசாய நிலங்கள் இருக்கின்றன. எந்த விவசாயியும் விவசாயம் செய்யும் நிலத்தை லே அவுட் போடவும், தொழிற்சாலைக்கும் விற்பதில்லை. விவசாயம் செய்ய முடியாத நிலையில்தான் விற்கிறார்கள். வேளாண் துறையிடம் தடையின்மைச் சான்று பெறுவது விவசாய நிலங்களுக்கான நில மதிப்பையும் குறைப்பதற்கே காரணமாயிருந்தது.'' என்றார்.
''ஒரு நிலம் விவசாயத்துக்குப் பயன்படுகிறதா இல்லையா என்பதை நேரில் பார்க்கும் யாராலும் சொல்ல முடியும் என்றிருக்கும்போது, அதை ஒரு துறை அதிகாரிதான் சான்றாகக் கொடுக்க வேண்டுமென்பது தேவையற்ற நடைமுறை. வேளாண்துறையிடம் தடையின்மைச்சான்று பெறுவது தேவையற்ற தாமதத்தையும், செலவினத்தையும் ஏற்படுத்திவந்தது. மக்கள் தொகை பெருகி, குடியிருப்புகளின் தேவை அதிகரிக்கும் நிலையில், பயனற்ற விவசாய நிலங்களை மனைப்பிரிவாக மாற்றுவதைத் தவிர்க்க முடியாது.'' என்றார் அவர்.

இந்த கருத்தை கடுமையாக எதிர்க்கும் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமலநாதன், ''வருவாய்த்துறையினருக்கு ஒரு நிலத்தின் பரப்பளவு மட்டும்தான் தெரியும். ஆனால் வேளாண்துறையினருக்கு மட்டும்தான் ஒரு நிலத்தின் தன்மை, அதில் நடந்த விவசாயம் போன்ற விபரங்கள் தெரியும். அதனால் வேளாண்துறையிடம் சான்று வாங்கும் நடைமுறையை மாற்றுவது தவறானது. ஆனால் தடையின்மைச் சான்று தருவதற்கு காலஅவகாசத்தை நிர்ணயிக்கலாம் '' என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
''முதலில் இதுபோன்ற ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்பாக, விவசாய அமைப்புகளிடம் பேச வேண்டும். அதை எந்த அரசுமே செய்வதில்லை. நன்செய் நிலங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி தருவதிலேயே பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆனால் அவர்களிடம் பொறுப்பு இருக்கும்போது, அவர்கள் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து, அனுமதி தருவதற்கு முன் முறையாக ஆய்வு செய்வார்கள். ஆனால் சென்னையிலுள்ள ஓர் அதிகாரியிடம் அதிகாரத்தைத் தருவது பல தவறுகளுக்கு வழிவகுக்கும்.'' என்றார் அவர்.
ஒரு விவசாய நிலத்துக்கு அருகிலுள்ள பட்டா நிலத்தில் மிகப்பெரிய கட்டுமானத்துக்கு அனுமதி தரும்போது, அதன் நீர்வழித்தடத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட்ட அனுமதி தரவேண்டுமென்று பொறுப்பு, மாவட்ட ஆட்சியருக்கு இருக்கும் என்று சுட்டிக்காட்டும் விமலநாதன், ''கட்டடங்களுக்கும் திட்டங்களுக்கும் அனுமதி தரும் பொறுப்பிலுள்ள ஓர் அதிகாரி, நீர்வழித்தடத்தைப் பற்றி எதற்கு கவலைப்படுவார்.'' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மாற்றுக்கருத்தை முன் வைத்து பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ''விவசாயம் நடக்கும் நன்செய் நிலங்களைப் பாதிக்கும் வகையில் இந்த சட்டத்திருத்தத்தில் எதுவும் இல்லை. நன்செய் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பல பகுதிகளிலேயே சாலை அமைப்பதற்கான சரளைக்கற்கள் எடுக்கப்படுகின்றன. அத்தகைய பயன்பாடற்ற விவசாய நிலங்களை விவசாயிகள் பிற பயன்பாட்டுக்கு மாற்றும் வகையில்தான் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது நிச்சயமாக விவசாயிகளுக்கும் பலன் தரக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும்.'' என்றார்.
''எந்த ஊரிலும் வேளாண்துறையினர் வந்து விவசாய நிலத்தை ஆய்வு செய்வதில்லை. பெரும்பாலும் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் போன்ற வருவாய்த்துறையினருக்குதான் ஒரு நிலம் எந்த பயன்பாட்டில் உள்ளது என்பது தெரியும். நன்செய், புன்செய் நிலங்களை எளிதாக நில உபயோக மாற்றம் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் இருந்திருந்தால் இந்நேரம் விவசாய அமைப்புகள் பெரியளவில் போராட்டம் நடத்தியிருப்பார்கள். அப்படி இருப்பதாக எப்போது தெரிந்தாலும் விவசாயிகள் போராடுவார்கள்.'' என்றார் ரவிச்சந்திரன்.

விவசாய அமைப்புகள் மற்றும் அரசியல்கட்சிகளிடம் எதிர்ப்பும், ஆதரவும் கலந்துள்ள நிலையில், சூழல் அமைப்புகள் இதை எதிர்த்துள்ளன. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இந்த சட்டத்திருத்தத்தைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இதுதொடர்பான பதிவில், ''நிலங்களின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பறித்து மாநில அளவில் குவிக்கும் முயற்சி இது. வளர்ச்சித் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை மிக எளிதாக தாரை வார்த்துக் கொடுக்கும் வகையில் இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சட்டத் திருத்தத்தை ஆகஸ்ட் 3 அன்று 'தமிழ்நாடு நிலப் பயன்பாட்டு மாற்றம் (திட்டமிடப்படாத பகுதிகளில் விவசாய நிலத்தை விவசாயம் சாராத பயன்பாட்டிற்கு மாற்றுதல்) விதிகள், 2017ல்' மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இத்திருத்தங்களின் மூலம் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனருக்கு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாய நிலங்களையும் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான ஏகபோக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.'' என்று கூறப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட ஆட்சியர், வேளாண்துறை ஆகியோரின் ஒப்புதல் இல்லாமலே நிலப்பயன்பாட்டை மாற்றலாம் என்கிறது இத்திருத்தச் சட்டம் என்று அந்தப் பதிவில் கூறியுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, ''தமிழ்நாடு எதிர்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் இச்சட்ட மற்றும் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அரசு திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் எனக் கோருகிறோம்.'' என்று கூறியிருப்பதுடன் இதுகுறித்த விரிவான அறிக்கை பூவுலகு தளத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்திருத்தம் மற்றும் அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து கருத்துக் கேட்பதற்காக தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமாரை தொடர்பு கொண்டபோது அவரிடம் பதில் பெற முடியவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த சட்டத்திருத்தத் தீர்மானத்தை எதிர்த்தபின்பு, இதுதொடர்பாக அவர் சட்டப்பேரவையில் விரிவான விளக்கமளித்திருந்தார்.
அப்போது பேசிய அமைச்சர் ராஜ்குமார், ''தமிழ்நாடு நகர ஊரமைப்புச்சட்டத்தின்படி, மாவட்ட நகர ஊரமைப்புக் குழுக்களில் தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவரும், உறுப்பினர் செயலாளராக கூடுதல் ஆட்சியரும் இருப்பதால் பல்வேறு பொறுப்புகளுடன் இதையும் பார்க்க வேண்டியுள்ளது. நகர வளர்ச்சிக்குழுமத்துக்கு தனிப்பட்ட முழு நேர நிர்வாகத்தலைமை இல்லாததால், துறையின் செயல்திறனை வலுப்படுத்தும் வகையில் அரசால் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியவற்றை தனிப்பட்ட நிர்வாகப்பொறுப்புடன் கூடிய தலைமை அமைப்பை ஏற்படுத்துவது அவசியமாகிறது.'' என்று பேசியிருந்தார்,
நன்செய் நிலங்களுக்கு முன் ஒப்புதல் வழங்குவது மாவட்ட ஆட்சியரின் பல்வேறு பணிகளில் ஒன்றாகவுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்குமார், ''அதனால் கடந்த 3 ஆண்டுகளில் நன்செய் நிலங்கள் பயன்பாடு மாற்றத் தடையின்மைச் சான்று வழங்கும் காலம் சராசரியாக 297 நாட்களாகும். மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது கணிசமாக காலம் எடுத்துக் கொள்ளப்படுவது தெரிகிறது.'' என்றார்.
விதிமுறை அல்லாத சுற்றுச்சூழலுக்கு எதிரான எந்தத் திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது என்று உறுதி கூறிய அமைச்சர், ''திட்ட விதிமுறைகள், சம்பந்தப்பட்ட துறையின் அனுமதியைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஒற்றைச்சாளர முறை ஒருங்கிணைந்த பரிசீலனை, துறை இயக்குநர் தடையின்மைச்சான்று பெற்று ஒற்றைச்சாளர முறையில் சம்பந்தப்பட்ட துறைகளிடம் கருத்துப்பெற்று ஒருங்கிணைந்து முடிவெடுப்பார். இதனால் தாமதம் தவிர்க்கப்படும்.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























