லிபியாவில் ரஷ்ய போர்க்கப்பலை யுக்ரேன் தாக்கி மூழ்கடித்ததா? ஜெலென்ஸ்கி தகவல்

ஜெலென்ஸ்கி, லிபியா, யுக்ரேன், டிரோன் தாக்குதல், ரஷ்ய கப்பல்
படக்குறிப்பு, துறைமுகத்தில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிவதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள்
    • எழுதியவர், ஹஃப்ஸா கலீல்
    • எழுதியவர், ஜோ இன்வுட்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

லிபியக் கடற்கரைப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை யுக்ரேனின் ஆளில்லா கடற்படை டிரோன் தாக்குதலில் ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ரஷ்யாவின் சரக்கு கப்பல் ஒன்றும் இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக யுக்ரேன் அதிபர் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை, கிழக்கு லிபியாவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, ரஷ்யாவுக்குத் திரும்புவதற்கு முன்னதாக எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுவதற்காக பெங்காஸி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த ரஷ்யப் போர்க்கப்பலில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

துறைமுகத்துக்கு அப்பால் கடலில் தாக்குதலுக்கு உள்ளான வர்த்தகக் கப்பலில் இருந்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக லிபிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், யுக்ரேன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் கப்பல் இதுதானா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்யா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஜெலென்ஸ்கி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவின் போருக்கு எதிரான யுக்ரேனின் இந்த நடவடிக்கையை ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார்.

ரஷ்யாவின் புதிய போர்க்கப்பல்களில் ஒன்றான 'மெர்க்குரி'யைத் தாக்கி மூழ்கடிப்பதற்காக ஏழு கடற்படை ஆளில்லா டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர், ரஷ்யாவின் கேஏ-27 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றும் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்ட இரண்டாவது கப்பல், ரஷ்யாவின் கொள்கலன் சரக்குக் கப்பலான 'எம்.வி. அங்காரா' என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கிழக்கு பின்லாந்து வளைகுடா பகுதியில் ரஷ்ய சரக்கு கப்பல் ஒன்று ஆளில்லா டிரோன் தாக்குதலுக்கு உள்ளான மறுநாளே லிபியக் கடற்கரையில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

சனிக்கிழமை காலை தாக்குதலுக்கு உள்ளானபோது, 'ஸ்பார்டா II' என்ற அந்தக் கப்பல், ரஷ்யாவின் பால்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள கலினின்கிராட் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.

இந்த தாக்குதலுக்குப் பின்னால் யுக்ரேன் இருக்கக்கூடும் என்று பின்லாந்து பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. எனினும், இதுகுறித்து கீவ் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், லிபியாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுப் பணிக்குழு, இந்தத் தாக்குதல்கள் குறித்து 'கடுமையான கவலை' தெரிவித்ததுடன், 'உடனடி, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை' நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

'லிபியா வெளிநாட்டு மோதல்களுக்கான போர்க்களமாக மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது; அவ்வாறு மாறவும் கூடாது' என்று ஐ.நா.வின் லிபியப் பணிக்குழு தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகளை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்து, அவை படமாக்கப்பட்ட இடங்களைப் புவியியல் அடிப்படையில் உறுதிப்படுத்தியுள்ளது. அந்தக் காணொளிகளில், தாக்குதலுக்கு உள்ளான கப்பல் தீப்பிழம்புகளாலும் அடர்ந்த புகையாலும் சூழப்பட்டிருப்பது தெரிகிறது.

பிளானட் லேப்ஸ் நிறுவனம் வழங்கிய செயற்கைக்கோள் படங்களை பிபிசி ஆய்வு செய்ததில், பெங்காசி துறைமுகத்தில் ஒரு கப்பல் தீப்பற்றி எரிவது பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த உளவுத் தகவல் நிறுவனமான 'வான்டர்' வெளியிட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள், ரஷ்யக் கடற்படைக்குச் சொந்தமான 'புராஜெக்ட் 20380 ஸ்டெரெகுஷ்சி' ரக போர்க்கப்பலான 'மெர்க்குரி', சனிக்கிழமை பெங்காஸி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்ததைக் காட்டுகின்றன. ஆனால், ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட படங்களில், அதே கப்பல் கவிழ்ந்து மூழ்கிய நிலையில் காணப்படுகிறது. அதன் முன்பகுதி மட்டுமே கடலுக்கு மேலே தெரிகிறது.

கிழக்கு லிபியாவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'தேசிய நிலைத்தன்மைக்கான அரசாங்கம்' (GNS), ரஷ்யக் கப்பல் ஒன்று ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கடல்சார் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெங்காஸி துறைமுகத்தைப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளது. எனினும், அந்த அறிக்கையில் கப்பலின் பெயரோ அடையாளமோ குறிப்பிடப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஜி.என்.எஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டது, இதற்குப் பின்னால் யார் உள்ளனர் என்பதைக் கண்டறிய ரஷ்யத் தரப்புடன் இணைந்து அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

லிபியத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ள ஜி.என்.எஸ், இது கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் செயல் மட்டுமல்லாமல், லிபியாவின் இறையாண்மை மீதான தாக்குதலும் ஆகும் என்று தெரிவித்துள்ளது. ரஷ்யா-யுக்ரேன் போரிலோ அல்லது லிபியாவின் எல்லைகளுக்கு அப்பால் நடைபெறும் வேறு எந்தவொரு மோதலிலோ தங்கள் நாடு ஒரு தரப்பாக இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.

தலைநகர் திரிபோலியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், சர்வதேச அங்கீகாரம் பெற்ற லிபிய அரசாங்கமான 'தேசிய ஒற்றுமை அரசாங்கம்', வெளிநாட்டுப் படைகள் நாட்டில் தங்குவதற்கும், லிபியாவின் துறைமுகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்துவதற்கும் எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அரசு ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு மோதல்களில் லிபியாவின் துறைமுகங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான வசதிகள் பயன்படுத்தப்படுவது 'தீவிர அச்சத்தை' ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களின் உயிருக்கும், நாட்டின் சொத்துகள் மற்றும் உள்கட்டமைப்புகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டு லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாடு வன்முறை மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையில் சிக்கியது. இதன் விளைவாக, லிபியா தற்போது இரு போட்டி அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் பிளவுபட்டுள்ளது.

பெங்காஸி நகரம், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ளது.

ஜெலென்ஸ்கி, லிபியா, யுக்ரேன், டிரோன் தாக்குதல், ரஷ்ய கப்பல்

கடந்த மார்ச் மாதம் மத்திய தரைக்கடலில் லிபியாவுக்கும் மால்டாவுக்கும் இடையே பயணித்துக் கொண்டிருந்த ரஷ்யாவின் 'ஆர்க்டிக் மெட்டாகாஸ்' எரிவாயு டேங்கர் கப்பலை ஆளில்லா கடற்படை டிரோன்களைப் பயன்படுத்தி யுக்ரேன் தாக்கியதாக ரஷ்யா குற்றம்சாட்டியது.

ஹர்சாவியின் கூற்றுப்படி, இத்தகைய தாக்குதல்கள் ரஷ்யாவின் 'நிழல் கப்பற்படை' மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் திறனைப் பாதிக்கின்றன. இதனால் ரஷ்யப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன், ரஷ்யாவிற்கும் அரசியல் ரீதியாகப் பின்னடைவு ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

எனினும், இந்தச் சமீபத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க விரும்புவது ரஷ்யா மட்டுமாக இருக்காது. ஏனெனில், லிபிய தேசிய ராணுவத்தின் தளபதி கலீஃபா ஹஃப்தாரின் கிழக்கு லிபிய அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அந்த ரஷ்யக் கப்பல் அப்பகுதியில் இருந்தது.

இந்தத் தாக்குதலை ஹஃப்தார் தனக்கு இழைக்கப்பட்ட தனிப்பட்ட அவமதிப்பாகக் கருதக்கூடும் என்று ஹர்சாவி தெரிவித்துள்ளார்.

"ஹஃப்தார் தரப்பிலிருந்து நிச்சயமாகப் பதில் நடவடிக்கை இருக்கும். உக்ரேனியர்களுக்கு யார் அடைக்கலம் அளித்தார்கள் என்பது குறித்து அவர்கள் கேள்வி எழுப்புவார்கள்" என்றும் அவர் கூறியுள்ளார்.

கூடுதல் தகவல்கள்: பெனடிக்ட் கார்மன் மற்றும் ஷயான் சர்தாரிசாதே .

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு