'சௌதி சிறையில் சிவராசா அனோஜன் மீது தாக்குதல்' - காப்பாற்ற இலங்கை அரசு என்ன செய்கிறது?

பட மூலாதாரம், ANOJAN FACEBOOK
- எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் மீது சிறைச்சாலைக்குள் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இன்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சிவராசா அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமாம் சிறைச்சாலையில் வைத்தே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதையும் அமைச்சர் இதன்போது உறுதிப்படுத்தினார்.
சக கைதி ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
''சிவராசா அனோஜனுக்கும் அவருடன் ஒரே சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றுமொரு கைதிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன், அது பின்னர் மோதல் வரை வலுப்பெற்றுள்ளது. இதன்போது அனோஜனின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. நகத்தினால் ஏற்படுத்திய காயங்கள் முகத்தில் காணப்படுகின்றன. கத்தி உள்ளிட்ட வேறு எந்தவொரு ஆயுதங்களும் பயன்படுத்தி காயங்கள் ஏற்படுத்தப்படவில்லை. மற்றைய கைதியின் நகத்தினால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் என மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அனோஜனின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் கிடையாது என சிறைச்சாலை அதிகாரிகளினால் எமது தூதரக அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள், தூதரக அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். அனோஜன் தற்போது வேறொரு சிறைக்கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது."" என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இலங்கை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
அனோஜனின் விடுதலைக்கான நடவடிக்கை

பட மூலாதாரம், PMD SRI LANKA
சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.
இதன்படி, சௌதி அரேபியாவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
இலங்கையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற சட்ட வல்லுநர்களின் உதவியுடன், சௌதி அரேபியாவிலுள்ள சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று இந்த மேன்முறையீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸ்டர் நாயகமும் சிரேஷ்ட ஜனாதிபதி வழக்கறிஞருமான நவாலி, சிரேஷ்ட ஜனாதிபதி வழக்கறிஞர் பைசர் முஸ்தபா, அதேபோன்று, சிரேஷ்ட ஜனாதிபதி வழக்கறிஞர் உபுல் குமரபெரும ஆகிய மூன்று ஜனாதிபதி வழக்கறிஞர்களும் சௌதி அரேபியா நோக்கி பயணித்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு சௌதி அரேபியா சென்றுள்ள இந்த குழுவினர், அந்த நாட்டின் சட்ட வல்லுநர்களுடன் இன்று கலந்துரையாடல்களை நடாத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேன்முறையீடு செய்ய இன்னும் 10 நாட்கள் மாத்திரமே
சிவராசா அனோஜனின் மரண தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீடு செய்வதற்கு இன்னும் 10 நாட்கள் மாத்திரமே காணப்படுகின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனை வழங்கப்பட்ட தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இந்த நிலையில், எதிர்வரும் 17-ஆம் தேதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தில் உறுதி வழங்கினார்.
'பெரும்பாலும் இன்று அல்லது நாளைய தினத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் மேன்முறையீட்டை செய்ய எதிர்பார்த்துள்ளோம். எமது வழக்கறிஞர்கள் குழு, அங்குள்ள வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடல்களை நடாத்திய பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்."" என விஜித்த ஹேரத் கூறுகின்றார்.
சௌதியில் அனோஜனுக்கு மரண தண்டனை ஏன்?

பட மூலாதாரம், PMD SRI LANKA
இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாக விளங்கும் கதிர்காமத்திற்கு, நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து குழுவொன்று பாத யாத்திரை சென்றிருந்தது.
இந்த பாத யாத்திரை குழுவுடன், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாய் ஒன்றையும், பாத யாத்திரையில் ஈடுபட்டவர்கள் அழைத்து சென்றிருந்தார்கள். கல்முனை பகுதி ஊடாக பாத யாத்திரை பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாயின் மீது இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தாக்குதல் நடாத்தியிருந்தார்.
அந்த இளைஞர் நாயின் மீது தாக்குதல் நடாத்தும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை தொடர்ந்து, இந்த விடயம் நாட்டில் பாரிய பேசுப்பொருளாகியது.
இந்தநிலையில், குறித்த இளைஞன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, போலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டன.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில், குறித்த முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
நாயின் மீது தான் அறியாமல் தாக்குதல் நடாத்தியதாக தெரிவித்த இளைஞன், பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விவாதம் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பேசுபொருளாகி, பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வந்திருந்தன.
இந்நிலையில், சிவலிங்கம் தொடர்பாகப் பதிவிடப்பட்ட பதிவொன்றில் இஸ்லாமிய நபர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்குப் பதிலளிக்கும் வகையில், அனோஜன் நபிகள் நாயகம் தொடர்பான பதிவொன்றை வெளியிட்டு, பிறகு குறுகிய நேரத்தில் அந்தப் பதிவை நீக்கியிருந்தார்.
ஆனால், சிவராசா அனோஜன் வெளியிட்ட கருத்தை ஸ்கிரின் ஷோட் எடுத்த சிலர், அதனை பகிர்ந்து, மீண்டும் பேசுபொருளாக்கியிருந்தனர்.
அனோஜன் பதிவிட்ட பதிவு பின்னரான சந்தர்ப்பங்களில் அரபு மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு, பகிரப்பட்ட நிலையில், அந்த விடயம் சௌதியில் முறைப்பாடு செய்யும் அளவிற்கு பெரிதானது.
சௌதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த சிவராசா அனோஜன், இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த நாட்டு போலீஸாரினால் கைது செய்யப்பட்டார்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட அனோஜன், சௌதி அரேபியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவருக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் தண்டப் பணமும் விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இவ்வாறு அனோஜனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அவரது பெற்றோர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக, சௌதி அரேபியாவில் மேன்முறையீட்டை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர். இதன்படி, சௌதி அரேபியாவில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிலையில், அனோஜனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































