ஏமாற்றம் தந்த சூர்யவன்ஷி: ஆட்டத்தின் போக்கை மாற்றிய திலக், நிதிஷ் - இந்தியா மீண்டும் வெற்றி

பட மூலாதாரம், Getty Images
கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவலில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, கிளென் பிலிப்ஸின் அதிரடியான 70 ரன் மற்றும் பெவன் ஜேக்கப்பின் 58 ரன் உதவியுடன், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது.
இதற்குப் பதிலடியாக, இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில், இந்திய அணி இந்த ஆட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக தோன்றியது. ஆனால், அப்போது இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி, நியூசிலாந்தின் பிடியிலிருந்த வெற்றியை இந்தியா பக்கம் திருப்பியது.
181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்த போது, திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அணியைக் காப்பாற்றி கரைசேர்த்தனர்.
ஆட்டம் எப்படி மாறியது?

பட மூலாதாரம், Getty Images
திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இணைந்து 30 பந்துகளில் 59 ரன்களைக் குவித்து, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தனர்.
திலக் வர்மா 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அதிரடி காட்ட, மறுமுனையில் இருந்த நிதிஷ் குமார் வெறும் 13 பந்துகளில் 26 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
இந்தக் கூட்டணிதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு முன்பு வரை இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்களை அடிக்க முடியாமல் திணறி வந்தனர்; ஆனால், இந்த இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிதறடித்து, இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்தனர்.
இந்தியா மோசமான தொடக்கம்
181 ரன் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.
சஞ்சு சாம்சன் முதல் ஓவரில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில், 5-வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 27 ரன்களை எடுத்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 11 பந்துகளில் 7 ரன்களையும், அக்சர் படேல் 9 பந்துகளில் 11 ரன்களையும் எடுத்தனர்.
இந்தியா வெறும் 70 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு களமிறங்கிய நமன் தீர், திலக் வர்மாவுடன் இணைந்து அணியின் சரிவை தடுத்து நிறுத்த முயன்றார். இருவரும் ஒரு சிறிய கூட்டணியை அமைத்து, அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு மேல் உயர்த்தினர். ஆனால், நமன் தீர் ஆட்டமிழந்ததும் இந்தியா மீண்டும் நெருக்கடிக்குள்ளானது. நமன் தீர் 17 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார்; இதில் ஒரு பவுண்டரியும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
கடைசி 5 ஓவர்களில் இந்தியாவுக்கு 68 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது திலக் வர்மாவும் நிதிஷ் குமார் ரெட்டியும் களத்தில் இருந்தனர். இவர்கள் இருவரும், நியூசிலாந்தின் கையில் இருந்த வெற்றியைப் பறித்தனர்.
வெற்றி பெற கடைசி 3 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிதறடித்தனர்.
கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு பந்து மீதமிருந்த நிலையிலேயே திலக் மற்றும் நிதிஷ் அந்த ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இவர்கள் ஏழாவது விக்கெட்டுக்கு 69 ரன்களைச் சேர்த்தனர்.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 43 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். பெவன் ஜேக்கப்ஸ் 46 பந்துகளில் 58 ரன்களைச் சேர்த்தார்.
நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியைப் பொறுத்தவரை, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்; புவனேஷ்வர் குமார், பிரின்ஸ் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























