'விஷம் செலுத்திய பிறகும் உயிர் பிழைத்த ஒரே நபர்' - இருமுறை ஊசி போட்டும் உயிர் பிழைத்த கிறிஸ்டா பைக் எப்படி இருக்கிறார்?

கிறிஸ்டா
    • எழுதியவர், சரீன் ஹபேஷியன் & க்வாசி கியாம்ஃபி அசியேடு
    • பதவி, ‎
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கடந்த வாரம் மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், அமெரிக்காவின் மரண தண்டனைக் கைதி கிறிஸ்டா பைக் தற்போது "சுயநினைவுடன் இருப்பதாகவும் பேசுவதாகவும்" அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் கைவிலங்கிடப்பட்ட நிலையில், 50 வயதான பைக் தொடர்ந்து தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக அவரது வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

கடந்த 1995ஆம் ஆண்டு கொலீன் ஸ்லெம்மரை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பைக், கடந்த புதன்கிழமை டென்னசியில் மரண ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகளிலும் உயிருடன் தப்பினார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செலுத்தப்பட்ட ரசாயனத்தை அவரது உடலில் இருந்து மருத்துவப் பணியாளர்கள் அகற்றிய நிலையில், பல நாள்கள் அவர் சுயநினைவின்றி இருந்தார்.

அவர் தற்போது குணமடைந்து வருவது முன்னெப்போதும் நிகழ்ந்திராத சம்பவம் என்று மருத்துவ நிபுணர்களும் அவரது சட்டக் குழுவினரும் தெரிவித்துள்ளனர். மரண ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னரும் உயிர் பிழைத்த ஒரே நபராக இவர் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவரது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அவரது வழக்கறிஞர்கள் "மருத்துவ ரீதியாக முன்னெப்போதும் நிகழ்ந்திராதது" என்று குறிப்பிட்டுள்ளனர். அதேவேளையில், அவரது உடல்நிலை குறித்த கணிப்பு இன்னும் தெளிவாக இல்லை என்றும், "குறைந்தபட்சம், அவர் நீண்ட காலம் குணமடைய வேண்டியிருக்கும் என எதிர்பார்ப்பதாகவும்" அவர்கள் தெரிவித்தனர்.

ஃபோர்டாம் சட்டப் பள்ளியின் குற்றவியல் ஆய்வாளரும் பேராசிரியருமான டெபோரா டென்னோ, பைக் சுயநினைவுடன் பேசுகிறார் என்ற தகவலைக் கேட்டு "முற்றிலும் அதிர்ச்சியடைந்ததாக" தெரிவித்தார்.

மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சிகளில் இருந்து உயிர் பிழைத்த மேலும் ஏழு கைதிகளின் விவரங்கள் இருந்ததாக டென்னோ பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், அந்த வழக்குகளில் மரண தண்டனையை நிறைவேற்றியவர்களால் கைதிகளின் ரத்த நாளங்களுக்குள் எந்த மருந்தையும் செலுத்த முடியவில்லை.

"ஒரு வகையான நச்சுப் பொருள் செலுத்தப்பட்ட நிலையில் உயிர் பிழைத்த ஒரே நபர் பைக்" என்று அவர் கூறினார்.

"மரண தண்டனை நிறைவேற்றும் நடைமுறையில் செய்யப்பட வேண்டிய அனைத்தையும் அவர்கள் செய்தார்கள். ஆனால் அது செயல்படவில்லை. இதற்கு முன் இதுபோன்று நடந்ததில்லை," என்று டென்னோ கூறினார்.

கிறிஸ்டா பைக்

பைக்கிற்கு மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் முயற்சி செய்வார்களா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பென்டோபார்பிட்டால் என்ற ரசாயனம் அவருக்கு செலுத்தப்பட்ட பின்னர் என்ன தவறு ஏற்பட்டது என்பதற்கும் அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

டென்னசி ஆளுநர் பில் லீ, இந்த ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு அனைத்து மரண தண்டனை நிறைவேற்றங்களையும் நிறுத்தி வைத்துள்ளார். மேலும், அந்த மாகாண சிறைச் சாலைகளின் தலைமை அதிகாரி தான் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாக வார இறுதியில் தெரிவித்தார்.

பைக் 18 வயதாக இருந்தபோது, அவரது அப்போதைய காதலரான டடாரில் ஷிப்புடன் சேர்ந்து 19 வயதான ஸ்லெம்மரை அடித்து, சித்ரவதை செய்து கொலை செய்தார். சிக்கல்களுக்கு உள்ளான இளம் வயதினருக்கான வேலைப் பயிற்சி முகாமில் இருவரும் ஸ்லெம்மரை சந்தித்திருந்தனர்.

பைக்கின் வழக்கறிஞர்கள் புதன்கிழமை நாஷ்வில்லில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர். நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர் சந்திப்பையும் அவர்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

1995ஆம் ஆண்டு கொல்லப்பட்ட கொலீன் ஸ்லெம்மர்
படக்குறிப்பு, 1995ஆம் ஆண்டு கொல்லப்பட்ட கொலீன் ஸ்லெம்மர்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பைக்கின் பாதுகாப்புக் குழுவுக்கு ஆலோசனை வழங்கி வரும் மயக்கவியல் நிபுணர் மருத்துவர் ஜோயல் ஸிவோட், மரண ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒருவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

"மரண ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் பெரும்பாலானோர் உயிரிழக்கிறார்கள். உண்மையில், கிறிஸ்டா தவிர கிட்டத்தட்ட அனைவருமே உயிரிழந்துள்ளனர். எனவே, அவர் உயிர் பிழைத்தது மிகவும் அசாதாரணமானது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

ஆனால், இன்னும் பல விஷயங்கள் குறித்த நிச்சயமற்ற நிலையும், தெரியாத தகவல்களும் உள்ளதாகக் கூறுகிறார் அவர். அவற்றில், பென்டோபார்பிட்டால் எந்த அளவில் அவரது உடலுக்குள் சென்றது, ஊசி செலுத்தப்பட்ட பின்னர் அவரது ரத்தத்தில் அந்த மருந்தின் அளவு எவ்வளவு இருந்தது, அவரது உடல்நிலை எவ்வாறு குணமடையும் என்பனவும் அடங்கும்.

அதேவேளையில், "அனைத்து முக்கியமான ஆபத்துகளும் கடந்துவிட்டதாக நான் எந்த வகையிலும் கூற மாட்டேன்," என்று அவர் குறிப்பிட்டார். கடந்த வாரம் பைக்கிற்கு செலுத்தப்பட்ட பென்டோபார்பிட்டாலின் இரண்டு அளவுகளும், வழக்கமான ரத்த ஓட்டத்தில் கலந்திருந்தால் "அவர் நிச்சயமாக உயிரிழந்திருப்பார்" என்று ஸிவோட் முன்னதாகக் கூறியிருந்தார்.

ஆனால், பென்டோபார்பிட்டால் பைக்கின் ரத்த ஓட்டத்துக்குள் செல்லாமல், அவரது தோலுக்குக் கீழ் உள்ள திசுக்களில் பரவியிருக்க அதிக வாய்ப்புள்ளதாக ஸிவோட் கூறினார். மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்த கடந்த வாரம், அவருக்கு உயிர்ப்பிக்கும் சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பைக்கின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருக்க "சாத்தியம் அதிகம்" இருப்பதாக ஸிவோட் தெரிவித்திருந்தார். அவரது உடல்நிலையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ளவும், நரம்பியல் பரிசோதனை மேற்கொள்ளவும் சுமார் ஒரு வாரம் ஆகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்து தற்போது ஆறு நாள்கள் ஆகின்றன.

கிரிஸ்டா பைக் நீதிமன்றத்தில்

பைக்கின் மருத்துவ வரலாறும் உடல் அமைப்பும், ரத்தத்தில் அதிக அளவு பிளேட்லெட்டுகள் காணப்படும் த்ரோம்போசைட்டோசிஸ் (ரத்த உறைவு குறைபாடு) என்ற நிலை மற்றும் சிறிய ரத்த நாளங்கள் உள்ளிட்டவை, மரண ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றும்போது அவருக்கு "தேவையற்ற" வலியும் வேதனையும் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் முன்பு எச்சரித்திருந்தனர்.

அவரது கைகளில் "கடுமையான பாதிப்பு" ஏற்பட்டுள்ளதாக செவ்வாய்க் கிழமை அவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்கா முழுவதும் 2022ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை தோல்வியடைந்தவையாகவோ அல்லது கடுமையான பிரச்னைகளுடன் கூடியவையாகவோ இருந்ததாக, இதுபோன்ற வழக்குகள் குறித்த தகவல்களைத் திரட்டும் மரண தண்டனை தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மரண ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றும் சம்பவங்களில், ரத்த நாளங்களில் நம்பகமான முறையில் நரம்புவழி ஊசி செலுத்துவதில் ஏற்படும் சிரமம் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக நிகழ்ந்துள்ளன. எனினும், ஒவ்வொரு நபருக்கும் அடிப்படைக் காரணம் மாறுபடும்.

அந்த மையம் பதிவு செய்துள்ள வழக்குகளில், மரண மருந்துகள் கைதிகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்பே அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. தோல்வியடைந்த மரண ஊசி மரண தண்டனை முயற்சியாக அந்த மையம் பதிவு செய்துள்ள சமீபத்திய சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்தது. அதுவும் டென்னசியில்தான் நடந்தது.

கடந்த 1994ஆம் ஆண்டு மூன்று பேரைக் கடத்தி கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட டோனி காரத்தர்ஸுக்கு மரண ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சி, ஊசி செலுத்துவதற்கான ரத்த நாளத்தைப் பணியாளர்களால் கண்டறிய முடியாததால் மே மாதம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆளுநர் அவருக்கு ஓராண்டு கால ஒத்திவைப்பை வழங்கினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு