'கொஞ்சம் அவகாசம் தாருங்கள்': முதலமைச்சரானதும் விஜய் பேசியது என்ன?

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதலமைச்சராக தனது உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.

முதல் கையெழுத்தாக500 யூனிட் வரை பயன்படுத்தும் மின்நுகர்வோருக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் உத்தரவு அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை, பெண்கள் பாதுகாப்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய உத்தரவுகளையும் விஜய் பிறப்பித்தார்.

'நான் தேவதூதன் அல்ல'

அதனைத் தொடர்ந்து முதலமைச்சராக விஜய் தனது முதல் உரையை ஆற்றினார்.

"வறுமை, பசி என்றால் என்னவென எனக்கு நன்றாக தெரியும். நான் மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. உங்களின் மகன், சகோதரனாகவே நான் என்னை உணர்கிறேன். இந்த பயணத்தில் எனக்கு எவ்வளவு கஷ்டங்கள், அவமானங்கள் வந்ததோ அதேபோன்று என்னுடன் நின்ற உங்களுக்கும் கஷ்டங்கள் வந்தன. அவற்றை பொருட்படுத்தாமல் என்னுடன் நின்றீர்கள். இப்போது 'சி ஜோசப் விஜய் எனும் நான்' என்பதை உண்மையாக்கியுள்ளீர்கள்.

நான் தேவதூதன் அல்ல, நானும் சாதாரண மனிதன் தான். பொய்யான வாக்குறுதிகளை அளித்து நான் ஏமாற்றமாட்டேன். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." என்று தெரிவித்தார்.

'கஜானா காலி, வெள்ளை அறிக்கை'

மேலும் தொடர்ந்த அவர், "முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டு போயுள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றிவைத்துவிட்டு சென்றுள்ளனர். அப்படிப்பட்ட நிலைமையில்தான் இந்த பொறுப்பை நாம் எடுத்திருக்கிறோம். உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும். என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என நினைக்கிறேன். அதைத்தான் நான் முதலில் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

மக்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் தந்தால் உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும். பெண்கள் பாதுகாப்பு கடுமையாக கடைபிடிக்கப்படும். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை இன்றிலிருந்தே எடுப்பேன். நம் பிள்ளைகளை அதிலிருந்து காக்க வேண்டியது அரசின் பொறுப்பு. எல்லோருக்கும் சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்வேன்." என்றார்.

'புதிய தொடக்கம், புதிய காலம்'

"என்னை கஷ்டப்படுத்தியவர்களாக இருந்தாலும், நண்பர்கள், எதிரிகள் யாராக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்களே. கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முதன்மை கவனம் செலுத்தப்படும். மக்களின் பணம் எனக்கு தேவையில்லை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், என் அரசில் இருப்பவர்களாக இருந்தாலும் விடமாட்டேன். 'நாம் ஜெயித்துவிட்டோம்' என ஆட்டம் ஆடலாம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இப்போதே மனதிலிருந்து எடுத்துவிடுங்கள். பெண்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மீனவர்கள் என எல்லோரும் இந்த அரசில் நன்றாக இருப்போம். சிறுபான்மை சகோதரர்களுடன் இந்த அரசு எப்போதும் உடன் இருக்கும். இந்து - கிறிஸ்தவ - இஸ்லாமிய முகம்தான் விஜய்.

எங்களுக்கு வாக்களித்த ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நன்றி. விஜய் (மாமாவின்) குட்டி நண்பர்களுக்கும் நன்றி. உங்களுக்காக எல்லா நல்ல விஷயங்களையும் நான் செய்வேன். தவெக தோழர்கள் இல்லாமல் எதுவுமே இல்லை. நிர்வாகிகள், தோழர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், விர்ச்சுவல் வாரியர்ஸ் அனைவருக்கும் நன்றிகள். எல்லோரும் சேர்ந்து புதிய அரசை கொடுப்போம். இதுவொரு புதிய தொடக்கம். உண்மையான சமூக நீதி, மதச்சார்பின்மையின் புதிய காலம் தற்போது தொடங்குகிறது." என்று விஜய் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு