You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் அரசில் இடம்பெற்றுள்ள 9 அமைச்சர்கள் யார்? முழு பின்னணி
தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். அவர்களின் பின்னணி என்ன?
ஆனந்த்
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 61), 2006 ஆம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் புஸ்சி தொகுதியில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றதால் புஸ்சி ஆனந்த் என்று அழைக்கப்படுகிறார். வேட்புமனுவில் அவர் தாக்கல் செய்த விவரங்களின்படி, அவர் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.
புதுச்சேரி விஜய் ரசிகர் மன்றத்தின் கெளரவச் செயலாளராக இருந்த ஆனந்த், புதுச்சேரி புஸ்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான பின்னும் விஜய் ரசிகர் மன்றத்தின் பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். அதனால் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு அறிமுகமாகி, பின்பு விஜய்க்கும் நெருக்கமானார். அதன்பின் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் என பல பதவிகளை வகித்த அவர், தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தார்.
விஜய் கட்சி துவங்கியவுடன் தனது குடியிருப்பை, செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கர் தொகுதிக்கு மாற்றிய ஆனந்த், தமிழக வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்த்துக்கொண்டார். ரசிகர் மன்றத்தில் பொறுப்பில் இருந்தபோதும், தவெக துவக்கப்பட்ட பின்பும் விஜய் சார்பில் மன்ற நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து விஜய் கூறும் தகவல்களைத் தெரிவிக்கும் நிலைக்கு உயர்ந்தார்.
தற்போது விஜய்க்கு அடுத்தபடியாக, தவெகவின் இரண்டாவது பெரிய தலைவராக அறியப்படும் அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி புஸ்சி சட்டப்பேரவை தொகுதியில் 2006 தேர்தலில் திமுக வேட்பாளரை வென்ற ஆனந்த், அதன்பின் புதுச்சேரி உப்பளம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2011 தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகவும், 2016 தேர்தலில் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் வேட்பாளராகவும் நின்று இரு முறையும் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
இந்த தேர்தலில் சென்னை தியாகராய நகரில் தவெக வேட்பாளராகக் களம் இறங்கிய ஆனந்த், 51,632 வாக்குகள் பெற்று, தன்னையடுத்து வந்த அதிமுக வேட்பாளர் சத்யநாராயணனை 13027 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இதன் மூலமாக புதுச்சேரி மற்றும் தமிழகம் என 2 மாநிலங்களில் சட்டப்பேரவை உறுப்பினரானவர் என்ற தனிப்பெருமையைப் பெறுகிறார்.
ஆதவ் அர்ஜுனா
சென்னை ஆழ்வார்பேட்டையில் தற்போது வசித்து வரும் ஆதவ் அர்ஜூனா (வயது 43), திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை (அரசியல் அறிவியல்) பட்டம் பெற்றுள்ளார். கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் (மகளின் கணவர்) ஆவார். அடிப்படையில் விளையாட்டு வீரர், உடற்பயிற்சியாளர் போன்ற அடையாளங்களைக் கொண்டிருந்த ஆதவ் அர்ஜூனா, தேர்தல் வியூக வகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரையிலும் திமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றி வந்த பிரசாந்த் கிஷோர் உடன் இணைந்து பணியாற்றினார் ஆதவ் அர்ஜூனா. மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மேற்கொண்ட 'நமக்கு நாமே' பயணத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்களில் இவரும் ஒருவர் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின், அந்தத் தேர்தலில் தன்னுடன் இணைந்து வேலை செய்தவர்களைக் கொண்டு, 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற தேர்தல் வியூக மற்றும் கொள்கை உருவாக்க நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்பின்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்காகப் பணியாற்றத் துவங்கினார். கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்ட அவர், 2024 ஆம் ஆண்டில் திருச்சியில் 'வெல்லும் ஜனநாயகம்' என்ற பெயரில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநாட்டை நடத்தியதில் முக்கியப் பங்காற்றினார்.
அதற்குப் பின்பு அவருக்கு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அங்கு இருந்தபோது, இவருடைய நிறுவனமும், விகடன் பிரசுரமும் இணைந்து 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூலை வெளியிட்டன. அந்த நூலை விஜய் வெளியிட்டார். அதில் பங்கேற்பதாக இருந்த தொல்.திருமாவளவன் பின்னர் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார்.
அந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ''மன்னர் பரம்பரை உருவாவதற்கு இனி ஒருபோதும் தமிழகம் இடம் தராது. 2026ஆம் ஆண்டுக்கான தேர்தல் பணிகள், மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். இங்கு பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆகக்கூடாது" என்று தி.மு.கவை மறைமுகமாக விமர்சித்தார். அதன்பின்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஒரு பேட்டியில், "நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர், துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுக்கால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் துணை முதல்வர் ஆகக்கூடாதா?" என்று அவர் கேள்வியெழுப்பியது, தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்பின் வி.சி.க.வை விட்டு விலகிய அவர், நிர்மல்குமார் சேர்ந்த அதே நாளில் தவெகவில் இணைந்தார்.
இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனம் ஆகியவற்றின் தலைவராகவும் தமிழ்நாடு ஒலிம்பிக் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வரும் ஆதவ் அர்ஜூனா மீது கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்கு மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளன. இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.440 கோடிக்கும் அதிகமாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவரின் மனைவி டெய்ஸி பெயரில் பல்வேறு மாநில அரசுகளுடன் லாட்டரி தொழில் ஒப்பந்தம் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. , இந்தத் தேர்தலில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 66445 வாக்குகள் பெற்று, தனக்கு அடுத்ததாக வந்த திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை 17302 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அருண்ராஜ்
நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தைச் சேர்ந்த அருண்ராஜ் (வயது 46) முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி. எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 2002 ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர். சில ஆண்டுகள் கிருஷ்ணகிரியில் மருத்துவராகப் பணியாற்றிய அவர், சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்று மத்திய அரசின் வருமான வரித்துறையில் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றியுள்ளார்.
தமிழகம், பீஹார், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பணியாற்றிய இவர், பாட்னாவில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த நிலையில், 2025 மே மாதத்தில் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வின் அடிப்படையில் விலக கடிதம் கொடுத்தார். அதற்குரிய அனுமதி கிடைத்ததும் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இவர் தவெகவில் இணைந்தபோது, கடந்த 2020 ஆம் ஆண்டில் விஜய் மீது வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் இவர் அதில் முக்கிய இடம் பெற்றிருந்ததாகவும், பின்பு அந்த வழக்கிலிருந்து விஜய் விடுபட ஆலோசனை கூறியதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் மறுத்துவிட்டார்.
தவெகவில் சேரும் முன்பு, இவருடைய சமூக ஊடகப்பக்கங்களில் இலவசங்களுக்கு எதிராகவும், 100 நாள் வேலைத் திட்டத்துக்கு எதிராகவும் கடுமையான கருத்துகளை வெளியிட்டதும், இவர் கட்சியில் சேர்ந்தபோது ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக வண்ணத்தொலைக்காட்சி போன்ற இலவசத் திட்டங்களை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும், 100 நாள் வேலைத்திட்டம் மக்களை சோம்பேறியாக்குகிறது, விவசாயிகளை பாதிக்கிறது போன்ற கருத்துகள் இப்போதும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
பணியிலிருந்து விலகும் முன்பே விஜய்க்கு அரசியல் ஆலோசனைகளை அருண்ராஜ் வழங்கிவந்தார் என்றும் கட்சி நிர்வாகிகள் தகவல் பகிர்கின்றனர். இந்தத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு, 79500 வாக்குகள் பெற்று, தனக்கு அடுத்ததாக வந்த அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை 28172 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
செங்கோட்டையன்
தவெகவில் மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவர் செங்கோட்டையன்தான். ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையம் அருகிலுள்ள குள்ளம்பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையனுக்கு இப்போது வயது 77. திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்து சென்று 1972 ஆம் ஆண்டில் அதிமுகவை துவக்கியபோதே, அதில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர்.
கோவையில் எம்ஜிஆர் தலைமையில் நடந்த அதிமுக மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களில் அவரும் ஒருவர் என்ற முறையில் தன்னை எம்ஜிஆர் பாராட்டி, 1977 ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் தொகுதியில் நிற்க வைத்து ஜெயிக்க வைத்தார் என்று செங்கோட்டையன் பலமுறை கூறியிருக்கிறார். அதன்பின்பு 1980, 1984, 1989 (அதிமுக – ஜெ. பிரிவு), 1991, 2006, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார்.
அதே தொகுதியில் தற்போது முதல் முறையாக தவெக வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1991–1996 அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். அப்போது போக்குவரத்துக் கழகத்திற்கு உதிரிபாகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாகக் கூறிய குற்றச்சாட்டின்பேரில் சென்னை சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை ரூ.1.05 லட்சம் அபராதமும் விதித்தது.
அதன் காரணமாக 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை. வழக்கில் மேல் முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அதிமுக மீண்டும் 2001 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பின்பு, அடுத்த ஆண்டில் அந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். 2011–2016 அதிமுக ஆட்சியின் போது, அமைச்சராக நியமிக்கப்பட்டு, இடையில் நீக்கப்பட்டார். பின்பு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மீண்டும் 2016 ஆம் ஆண்டிலும் அவருக்கு அதிமுக தலைமை, கோபியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின், அவருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்ற செங்கோட்டையன், கடந்த 2025 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்தார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டுமென்று பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். அவருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் வலுத்த நிலையில், 2025 அக்டோபரில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
அவர் திமுகவில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்ட நிலையில், 2025 நவம்பர் 27 அன்று விஜயை சந்தித்து தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார். அவருக்கு உயர்மட்ட மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மீண்டும் கோபி தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம் கண்டார். தேர்தலின்போது, அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மிகக்கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அதற்கு செங்கோட்டையன் பெரிதாக எதிர்வினையாற்றவில்லை.
தற்போது அந்தத் தொகுதியில் 82,612 வாக்குகள் பெற்று, தன்னையடுத்து வந்த திமுக வேட்பாளரை விட 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அத்தொகுதியில் அதிமுக மூன்றாமிடமே பிடித்தது.
வெங்கடரமணன்
மைலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கடராமன், தவெக கட்சியின் பொருளாளராக உள்ளார். இவருக்கு எந்த இலாகா ஒதுக்கப்படும் என்று இப்போதே சமூக ஊடகங்களில் விவாதங்கள் களைகட்டியுள்ளன.
சிடிஆர் நிர்மல்குமார்
தமிழகத்தில் இந்தத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதியான திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சிடிஆர் நிர்மல்குமார் (வயது 44), சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர். உசிலம்பட்டி நடுமுதலைக்குளம்தான் பூர்வீக ஊர் என்றும், அங்கு நிலங்கள் மற்றும் சொத்துக்கள் தனக்கும் தன் குடும்பத்துக்கும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
பொறியியல் பட்டதாரியான நிர்மல்குமார், சட்டப்படிப்பை முடித்து, குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். நிர்மல் குமார், பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு தலைவராக இருந்தார். பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி, அதிமுகவில் 2023 ல் இணைந்தார்.
அப்போது அண்ணாமலை மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்திருந்தார். அதிமுகவில் இணைந்த அவருக்கு அங்கும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அங்கும் அவர் தொடரவில்லை. கடந்த 2025 ஜனவரி 31 அன்று, அதிமுகவிலிருந்து விலகி, விஜய் முன்பாக தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.
அதிமுகவில் தடா பெரியசாமி உள்ளிட்டோரை சேர்த்தது தான்தான் என்றும், ஆனால் அக்கட்சி தன்னை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதால் தவெகவில் இணைவதாகவும் அவர் அப்போது கருத்துத் தெரிவித்திருந்தார். தவெகவில் இணைந்த அவருக்கு மாநில இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனந்துக்குப் பின்பு, கட்சியின் முடிவுகள் குறித்து வெளியில் பேசும் முக்கிய நபராக அறியப்படுகிறார்.
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, திமுகவுக்கும், பாஜகவுக்கும் கருத்துப் போர்களும், சட்டப்போராட்டங்களும் நடந்து வந்த நிலையில், அந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வெற்றி பெறுமென்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. நிர்மல்குமார், ''திருப்பரங்குன்றத்தின் அமைதியை குலைத்ததே திமுகவும், பாஜகவும்தான்'' என்று இரு கட்சிகளையும் குற்றம்சாட்டி பரப்புரை செய்தார்.
இந்தத் தொகுதியில் நிர்மல்குமார், 1,14,316 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியை விட 41,553 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை விட 64,451 வாக்குகளும் கூடுதலாக அவர் பெற்றுள்ளார்.
ராஜ்மோகன் ஆறுமுகம்
கட்சி துவங்கியதிலிருந்து விஜய் பேசிய இடங்களே குறைவு என்றால் அதில் அவர் பேசியதும் மிகவும் குறைவு. ஆனால் அவர் வருவதற்கு முன்பும், அவர் பேசி முடித்த பின்பும் பெரும் திரளாகக் கூடிய உற்சாகக் கூட்டத்தை மேலும் துள்ளிக்குதித்து விசில் அடிக்க வைக்கின்ற வகையில் அதிகமாகப் பேசியது ஒரே ஒருவர்தான். அவர்தான் ராஜ்மோகன். இப்போது எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர். அமைச்சரவை பட்டியலில் இருப்பவர்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்மோகன் (வயது 39), இதழியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு' என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பரிசு வாங்கியதுதான் இவருக்குக் கிடைத்த முதல் அடையாளம். அதன்பின் யூடியூப் சேனலில் அனிதா தற்கொலை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்து இவர் வெளியிட்ட பல்வேறு காணொளிகள் இவருக்கு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுத்தந்தன.
தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியின் (Standup comedy) நடுவராகவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், திரைப்படி நடிகர் என பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து இயங்கி வந்த ராஜ்மோகன், கடந்த 2023 ஆம் ஆண்டில் 'பாபா ப்ளாக் ஷீப்' என்ற படத்தையும் இயக்கினார்.
விஜய் கட்சி துவங்கியதும் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ராஜ்மோகன். ஆரம்பத்திலேயே அவருக்கு கொள்கை பரப்புச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் பேட்டியளித்தபோது, ''நான் இதை ஒரு பதவியாகப் பார்க்கவில்லை. பொறுப்பாகப் பார்க்கிறேன். அதிகாரமில்லாதவர்களின் குரலாக ஒலிக்க எனக்கு தளபதி கொடுத்திருக்கும் வாய்ப்பு இது.'' என்றார்.
தவெக கட்சி துவங்கிய பின்பு, சென்னையில் பல்வேறு உள்ளரங்க நிகழ்ச்சிகள் நடக்கும்போதும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுநிகழ்ச்சிகளிலும் விஜய் பங்கேற்றுப் பேசும்போது, அவருடைய வருகை குறித்து அறிவித்து, நிகழ்ச்சியை தொகுப்பவராக ராஜ்மோகன்தான் இருப்பார்.
இந்தத் தேர்தலில் எழும்பூர் (தனி) தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம் இறங்கிய ராஜ்மோகன், 53901 வாக்குகள் பெற்று, தனக்கு அடுத்ததாக வந்த திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னாவை 10804 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பிரபு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைத் தோற்கடித்த டி.கே. பிரபு ஒரு மருத்துவர் ஆவார்.
கடந்த ஏப்ரல் மாதம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "காரைக்குடி தொகுதியில் 80 முதல் 90% கிராமங்களில் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. உடனடியாக சரிசெய்ய வேண்டிய பிரச்னையாக அதனை நான் பார்க்கிறேன்."
"காரைக்குடி பகுதியில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு தான் இந்த ஊரின் பிரச்னை என்னவென்று தெரியும், அதை எளிமையாக அடையாளம் கண்டு என்னால் சரி செய்ய முடியும். மிஷன் 2030 என காரைக்குடிக்கு என்று தனியாக 15 முக்கிய செயல்திட்டங்களை வைத்துள்ளேன். வெற்றி பெற்று 4 ஆண்டுகளில் அதை நிறைவேற்றுவேன்." எனத் தெரிவித்திருந்தார்.
கீர்த்தனா
29 வயதான கீர்த்தனா எம்.எஸ்சி பட்டதாரி ஆவார். தனிநபர் ஆலோசகராக பணியாற்றிவருவதாக அவர் தன் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரமாண பத்திரப்படி, அவரது சொத்து மதிப்பு ரூ.22 லட்சத்து 57,710 ஆகும்.
சிவகாசி தொகுதியில் தவெக வேட்பாளர் கீர்த்தனா 11,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 57,039 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் இரண்டாம் இடத்தையும் 51,078 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
தேர்தலில் வென்றதும் தேசிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கீர்த்தனா இந்தியில் பேசியது சமூக ஊடகங்களில் பெருமளவில் விவாதத்திற்கு உள்ளானது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு