தவெகவை ஆதரிக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு காத்திருக்கும் 'இடைத்தேர்தல்' சவால்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது. அக்கட்சித் தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார்.

விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளில் காங்கிரஸ் மட்டுமே தவெக-வுடன் கூட்டணி அமைத்துள்ளது. விசிக, ஐ.யூ.எம்.எல் மற்றும் இடதுசாரிக் கட்சிகள், தவெக ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு அளிப்பதாகவும், மற்றபடி தாங்கள் திமுக உடனான மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நீடிப்பதாகவும் அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலரும் இந்த புதிய சூழல் தவெகவை ஆதரிக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 5 கட்சிகளுக்கும் அரசியல் ரீதியாக வளர்ச்சிக்கு கைகொடுக்குமா?

தவெகவை ஆதரித்தாலும் திமுக கூட்டணியில் நீடிக்கும் கட்சிகள்

தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் பாஜக அதிகாரம் செலுத்தும் நிலை வந்துவிடக் கூடாது என்றே தவெகவை ஆதரிப்பதாகவும், திமுக கூட்டணியில் நீடிப்பதாகவும் இடதுசாரிகளும், விசிகவும் அறிவித்துள்ளன.

"தவெக-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முறைப்படி எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளோம். அதை அவரும் ஏற்றுக்கொண்டார்," என்று விசிக தலைவர் திருமாவளவன் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

திமுகவின் முடிவே தங்கள் முடிவு என்று கூறி வந்த ஐயூஎம்எல் கட்சித் தலைவர் காதர் மொகிதீனும் பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவை அறிவித்தார். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அவர் கூறினார்.

கிட்டத்தட்ட விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகள் தங்களது முடிவை அறிவித்த அதேநேரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடக பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அதில், "எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், 'இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க தவெக-வுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்' என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

"கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சி ஒரே நாளில் திமுக உடனான உறவை முறித்துக்கொண்டு சென்றது. ஆனால், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து திமுக-வுடன் கைகோர்த்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் சண்முகம், வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிவித்து தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். இது திமுக மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

தவெகவை ஆதரிக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு காத்திருக்கும் சவால்

தவெக-வுக்கு ஆதரவளிப்பதன் மூலம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐந்து கட்சிகளும் அரசியல் ரீதியாக ஆதாயம் பெற முடியுமா என்பது குறித்துப் பேசியபோது, "இப்போதைய சூழ்நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இவர்களுடைய ஆதரவு தவெகவுக்கு மிகவும் கட்டாயமானதாக இருக்கிறது. ஆகையால் அவர்களுடன் முரண்பாடுகள் ஏற்படாமல் நல்லுறவைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது" என்று குறிப்பிட்டார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

விசிக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவளித்தாலும், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகக் கூறியுள்ளன. இந்தச் சூழலில், "திமுக-வுக்கு ஒரு நெருக்கடியான நிலைமையை தவெக உருவாக்கினால், இந்தக் கட்சிகள் எப்படி எதிர்வினையாற்றப் போகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். திமுக-வுக்கு எதிரான அரசியலைத்தான் அவர்கள் முன்னெடுத்துச் செல்லப் போகிறார்கள் என்றால் அது இவர்களுக்கு ஒரு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தும். அப்போது இவர்கள் எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கடைபிடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் எத்தகைய பயன்களைப் பெறுவார்கள் என்பதும் இருக்கிறது," எனக் கூறுகிறார் மாலன்.

இரு தொகுதிகளில் வென்றுள்ள விஜய் ராஜிநாமா செய்யும் தொகுதிக்கு வரப் போகும் இடைத்தேர்தல் திமுக கூட்டணியில் நீடிப்பதாக கூறும் கட்சிகளின் உறுதிப்பாட்டை பரிசோதிக்கும் களமாகக் கூடும். விசிக, ஐ.யூ.எம்.எல் மற்றும் இடதுசாரிகள், இப்போது கூறியிருப்பதைப் போலவே திமுக கூட்டணியில் நீடித்து, அதன் வேட்பாளரையே ஆதரிப்பார்களா அல்லது தவெக-வின் வேட்பாளரை ஆதரிப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

இவையனைத்துமே, "இந்த இரு தரப்புக்கும் இடையிலான உறவில் தாக்கம் செலுத்தக்கூடும்" என்பதுடன், "காங்கிரஸ் தவிர மற்ற 4 கட்சிகளும் தவெக-வுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளன. அதன் பொருள், அவர்கள் அக்கட்சியின் கொள்கைகளுடன் தங்களைப் பிணைத்துக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, எந்த நேரமும் அவர்கள் தங்களுடைய ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கூடும் என்பதுமாகும்" என்கிறார் மாலன்.

ஆகையால் அவரது கூற்றுப்படி, "இரு தரப்பினரும் எப்படி தங்களுக்கு இடையிலான உறவைப் பேணுகிறார்கள் என்பதன் அடிப்படையிலேயே இருவரும் எத்தகைய பலன்களைப் பெறுவார்கள் என்பது இருக்கிறது."

'ஆதரவை விலக்கிக் கொள்ளும் சூழல் ஏற்படலாம்'

தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, ஆறு விலையில்லா சிலிண்டர்கள், மணப்பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப் புடவை, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாணவர்களின் தாயார்களுக்கு ரூ.15,000 கல்வி உதவி, மகளிர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான வட்டியில்லா கடன் போன்ற திட்டங்களைக் கொண்டு வருவதாக வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4,000 ரூபாய் வரையிலான உதவித்தொகை, ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள், தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன் போன்ற வாக்குறுதிகளையும், விவசாயிகளைக் குறிவைத்து, நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி, பயிர்க்கடன்கள் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளையும் வெளியிட்டார்.

இப்படியான நலத்திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு "சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படக்கூடும். அந்த நிதியைத் திரட்டுவதற்கான வழிகளைக் கண்டறிவதே விஜய் முன் இருக்கும் முதன்மையான சவால்," என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன்.

இது, அவை அனைத்தையும் அமல்படுத்துவது கடினமாகும் என்று கூறும் அரசியல் நிபுணர்கள், அதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை விஜய் நாடக்கூடும் என்று கணிக்கின்றனர்.

அத்தகைய சூழலில், அவர் மத்திய அரசுடன் இணக்கமான அணுகுமுறையைக் கடைபிடித்தால், அது பாஜக எதிர்ப்பு கொள்கையில் இருக்கும் காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் மற்றும் இடதுசாரிகளை தவெகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்கு தள்ளக்கூடும் என்கிறார் மாலன்.

அதேநேரம், இந்தக் கட்சிகளுக்கு தவெக போன்ற புதிய கட்சியுடன் இணையும் போது மாநில அரசியலில் வளர்வதற்கான வாய்ப்பு அதிகமாகக் கிடைக்கும் என்கிறார் அரசியல் விமர்சகர் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

இந்தக் காரணத்தால், "அவர்கள் ஆதரவை திரும்பப் பெறும் அளவுக்குக் கடுமையான முடிவுகளை எடுக்காமல், சுமூகமான போக்கைக் கடைபிடிக்கலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

"அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இக்கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொள்ளாமல் தங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருக்கலாம். மறுபுறம், விஜய் பாஜக-வுடன் இணக்கமாகச் செல்லலாம். அதற்கும் வாய்ப்புள்ளது," என்கிறார் ராமு மணிவண்ணன்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், "திமுக ஆட்சியின் போது, இடதுசாரிகள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்காமல் இருக்கவில்லை. அதேபோல, தவெக ஆட்சியிலும், மதச்சார்பற்ற கொள்கைகள், மாநில உரிமைகள் தொடர்பான கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், அதையும் எதிர்க்கவே செய்வோம்," என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் வியூகம் என்ன?

திமுக-வுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே தங்களது உறவை முறித்துக் கொண்டு, தவெக-வுடன் கூட்டணி சேர்வதாக அறிவித்தன.

இது அக்கட்சியில் நிகழ்ந்துள்ள தலைமுறை மாற்றத்தைக் குறிப்பதாகக் கூறுகிறார் மாலன். "தேசிய அளவிலேயே ராகுல் காந்திக்கும் பிற மூத்த தலைவர்களுக்கும் இடையே, வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், ஒருவிதமான மோதல் நீடித்து வந்தது. அந்த நிலைமை தற்போது தமிழ்நாட்டில் ஓரளவுக்குத் தீர்ந்துள்ளதை இந்த நகர்வு காட்டுகிறது. ஏனெனில், இதில் முக்கியப் பங்காற்றியவர்கள் அனைவரும் அடுத்த தலைமுறை தலைவர்கள். இதன்மூலம் தலைமுறைகளுக்கு இடையே இருந்த மோதல் ஓரளவுக்கு முடிவுக்கு வந்து, அடுத்த தலைமுறையினரின் கைகள் ஓங்கியுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது" என்று அவர் விளக்கினார்.

அதோடு, "வட இந்தியாவில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ள காங்கிரஸ் தென்னிந்தியாவில் தனக்குள்ள ஆதரவை தக்க வைத்துக் கொள்ள தமிழ்நாட்டிலும் ஆட்சியில் பங்கு கிடைப்பது பலனளிப்பதாக இருக்கும் எனக் கருதக் கூடும். தென்னிந்தியாவில் தன் நிலையை இன்னும் வலுப்படுத்திக் கொண்டு பிறகு படிப்படியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகரலாம் என்பது காங்கிரசிஸ் வியூகமாக இருக்கலாம்," என்பது மாலனின் கருத்து.

ஆனால், தலைமுறைகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சிக்குள் நிலவியதாகக் கூறப்படும் மோதல் குறித்த கூற்றுகளுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை எனக் கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் கோபண்ணா, "ராகுல் காந்தி நேரடியாகத் தலையிட்டு, இந்தக் கூட்டணி குறித்த முடிவுகளை எடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.

தவெக உடனான கூட்டணி தொடர்பாகப் பேசிய அவர், "திமுக-வுடன் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணியில் இருந்துள்ளோம். சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம், நாடாளுமன்றத்திற்கு மொத்தமாக 40 எம்.பி.க்களை வழங்கியுள்ளோம். தற்போது 2026 தேர்தலில், தவெக ஆட்சி அமைய வேண்டுமென தமிழக மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, மக்களின் தீர்ப்பு நிறைவேறும் வகையில் தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக காங்கிரஸ் அமைச்சர்கள் மாநில ஆட்சியில் அமர்ந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அது கட்சிக்கு புத்துணர்வு அளிப்பதாக அமையும். திமுக பொதுவாக எப்போதுமே ஆட்சியில் பங்கு வழங்குவது இல்லை. பாஜக-வுக்கு எதிராக தவெக தலைமையிலான ஆட்சியில், மதச்சார்பற்ற கொள்கைகள், தமிழக மக்களின் நலன் போன்றவற்றில் உறுதியாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது," என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு