இரான் போரால் உணவு விலை உயரும் ஆபத்து ஏன்? யாருக்கு அதிக பாதிப்பு?

உரத் தட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சைமன் ஜாக்
    • பதவி, வணிக ஆசிரியர்
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இரான் போரினால் உரங்கள் மற்றும் அதன் முக்கிய மூலப்பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால், உலகளவில் வாரத்திற்கு பத்து பில்லியன் உணவுகள் வரை இழப்பு ஏற்படக்கூடும் என்றும், இது ஏழை நாடுகளை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் உலகின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.

யாரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வைன் தோர் ஹோல்செதர் பிபிசியிடம் பேசுகையில், ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தைத் தடுத்துள்ள வளைகுடாவில் நிலவும் மோதல், உலகளாவிய உணவு உற்பத்தியை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறினார்.

குறைந்த அளவிலான உரப் பயன்பாட்டினால் பயிர் விளைச்சல் குறைவது, உணவிற்கான ஏலப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

மற்ற நாடுகளில் உள்ள "மிகவும் பாதிக்கப்படக்கூடிய" மக்கள் மீது இந்த போரின் தாக்கத்தை ஐரோப்பிய நாடுகள் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிரிட்டனில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், உணவு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்த செலவுகள், அடுத்த சில மாதங்களில் வாராந்திர உணவு செலவுகளில் தெரிய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தற்போதைய சூழ்நிலையால் உலகில் இப்போது அரை மில்லியன் டன் வரை நைட்ரஜன் உர உற்பத்தி செய்யப்படவில்லை," என்று ஹோல்செதர் கூறினார்.

"உணவு உற்பத்திக்கு இதன் விளைவு என்ன? உரங்கள் இல்லாததன் விளைவாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் வரை உற்பத்தி செய்யப்படாமல் போகும்."

நைட்ரஜன் உரத்தைப் பயன்படுத்தாவிட்டால், சில பயிர்களின் விளைச்சல் முதல் பருவத்திலேயே 50% வரை குறையும் என்று ஹோல்செதர் தெரிவித்தார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"உரச் சந்தை உலகளாவிய ஒன்றாகும், எனவே இந்த மூலப்பொருட்கள் பூமி முழுவதும் நகர்ந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இதன் உடனடித் தாக்கத்தை நீங்கள் ஆசியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற முக்கிய இலக்குகளில் காண முடியும்."

உலகம் முழுவதும் பயிரிடும் காலங்கள் மாறுபடுகின்றன. பிரிட்டனில் இது உச்சக்கட்ட பயிரிடும் காலம், அதே நேரத்தில் ஆசியாவில் விவசாயிகள் இப்போதே பணியைத் தொடங்கி வருகின்றனர்.

ஆசியாவில் உரத் தட்டுப்பாட்டின் விளைவுகள் ஆண்டின் இறுதி வரை உணவு விலைகளில் பிரதிபலிக்காது. இந்த வசந்த காலத்தில் நடப்பட வேண்டிய பயிர்கள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக வரும்போது அல்லது வராமல் போகும்போதுதான் அந்தத் தாக்கம் தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புத் துறையின் மூத்த ஆய்வாளர் பேராசிரியர் பால் டெங், ''சில நாடுகள் உடனடிப் பயிரிடும் காலத்திற்குத் தேவையான உரத்தை வைத்திருக்கலாம். ஆனால் இந்த நெருக்கடி இன்னும் நீடித்தால், வரும் மாதங்களில் அரிசி போன்ற பயிர்களில் இதன் தாக்கத்தைக் காண்போம்" என்றார்.

உலகெங்கிலும் உள்ள விவசாயிகள் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்று ஹோல்செதர் கூறினார். அவர்கள் உற்பத்தி செய்யும் உணவிற்கு கிடைக்கும் விலை, அவர்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான செலவுகளை ஈடுகட்டும் வகையில் இன்னும் மாறவில்லை.

"அவர்கள் அதிக எரிசக்தி செலவுகளை எதிர்கொள்கிறார்கள், டிராக்டருக்கான டீசல் விலை அதிகரிக்கிறது, விவசாயிகளுக்கான பிற உள்ளீடுகளின் விலையும் அதிகரிக்கிறது, உரச் செலவும் அதிகரிக்கிறது, ஆனால் பயிர்களின் விலை இன்னும் அந்த அளவிற்கு உயரவில்லை," என்று அவர் கூறினார்.


இரான் போரால் ஆசியா உட்பட உலகெங்கும் உணவு விலை உயரும் ஆபத்து ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஏலப் போட்டி

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகின் உரங்களான யூரியா, பொட்டாஷ், அம்மோனியா மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே செல்கிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரான் மீது போர் தொடுத்ததில் இருந்து உரத்தின் விலை 80% உயர்ந்துள்ளது.

இந்த மோதல் தொடர்வது பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையே உணவிற்கான ஏலப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று ஹோல்செதர் மேலும் கூறினார்.

"உணவிற்காக ஒரு ஏலப் போட்டி ஏற்பட்டு, அதைச் சமாளிக்கும் அளவுக்கு ஐரோப்பா வலுவாக இருந்தால், ஐரோப்பாவில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அத்தகைய சூழ்நிலையில் நாம் யாரிடமிருந்து உணவைப் பறித்து வாங்குகிறோம்?"

"வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் இதற்காக மிக உயர்ந்த விலையைக் கொடுக்கும் சூழல் இதுவாகும், அவர்களால் அந்தப் போட்டியைத் தாங்க முடியாது."

இது "உணவு வாங்கும் திறன், உணவுப் பற்றாக்குறை மற்றும் பசி" ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று யாரா தலைவர் கூறினார்.

பிரிட்டனில், உணவு மற்றும் பானங்களின் கூட்டமைப்பு சமீபத்தில் உணவு விலை உயர்வு டிசம்பர் மாதத்திற்குள் 10% ஐ எட்டக்கூடும் என்று கணித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் உணவு விலை 4.6% ஆக உயரக்கூடும் என்றும், ஆண்டின் பிற்பகுதியில் இது இன்னும் அதிகமாகக்கூடும் என்றும் இங்கிலாந்து வங்கி இந்த வாரம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மோதலின் கூட்டு விளைவுகளால் 2026 ஆம் ஆண்டில் கூடுதலாக 45 மில்லியன் மக்கள் கடும் பசிக்கு தள்ளப்படலாம் என்று ஐநா உலக உணவுத் திட்டம் மதிப்பிட்டுள்ளது.

ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில், உணவுப் பாதுகாப்பின்மை 24% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு