கோடைக் காலங்களில் வீடுகளை நோக்கிவரும் பாம்புகள் - தடுக்க சில வழிகள்

இந்தியாவில் சுமார் 362 வகையான பாம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன ( கோப்புப்படம் )

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் சுமார் 362 வகையான பாம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன ( கோப்புப்படம் )

'பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்' என்பது பெரியவர்கள் சொல்லும் பழமொழி. இன்றளவும் இந்த வகை அச்ச உணர்வு நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். விஷமுள்ள பாம்பு விஷமற்ற பாம்பு என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி பாம்பைக் கண்டாலே அச்சம் கொள்வதுதான் இயல்பான மனிதர்களின் மனநிலை.

அந்த வகையில் பாம்பைக் கண்டால் தூரம் செல்லும் இயல்பான குணம் படைத்த நம்மை தேடி பாம்பு வந்தால் எப்படி இருக்கும்.

ஆம், அதுபோன்ற ஒரு காலம்தான் இந்த கோடைக் காலம், பாம்புகள் உணவுக்காகவும் உடல் வெப்பத்தை தணிப்பதற்காகவும் பெரும்பாலும் நீர்நிலைகளை சுற்றியோ, வயல்வெளிகள் போன்ற பகுதிகளில் உலாவும் ஒரு ஊர்வன வகையை சார்ந்த விலங்கு.

அவ்வாறு இருக்கும் பாம்புகள் கோடைக்காலங்களில் குடியிருப்புகளை நோக்கி வருவதற்கான காரணங்கள் என்ன? இதில் விலங்கியல் நிபுணர்களின் கருத்துகள் என்ன? பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள பாம்பு இனங்கள் எண்ணிக்கை

கோடைக் காலங்களில் குடியிருப்புகளை நோக்கி வரும் பாம்புகள் எவை? வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கண்ணாடி விரியன்

இந்தியாவில் சுமார் 362 வகையான பாம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சொல்லும் விலங்குகள் பாதுகாப்பு குழு அவற்றில் சுமார் 134 வகையான பாம்புகள் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் காணப்படுவதாக சொல்கிறது.

அவற்றில் 17 வகையான பாம்புகள் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அதிக நஞ்சுள்ள வகையை சார்ந்தது என்றும் தெரிவிக்கிறது.

நிபுணர்கள் சொல்வது என்ன?

சுருட்டை விரியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுருட்டை விரியன்

தென் இந்தியாவில் பாம்புக்கடியால் அதிக பாதிப்பை சந்திப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்கிறார், கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் விஞ்ஞானியுமான மனோஜ்.

"இந்தியாவில் பாம்புக்கடியால் உயிரிழப்பவர்களில் 5 சதவிகிதம் பேர் மட்டுமே அதிகம் நஞ்சுள்ள பாம்புகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பதாக அவர் சொல்கிறார்."

அதேநேரத்தில், கோடைக்காலங்களில் பாம்புகள் இருக்கும் இடங்களில் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்வதால் அவை குடியிருப்புகளை நோக்கி நகர்கின்றன என்கிறார், காட்டுயிர் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிர்வாகி சிராஜ்தீன். கோடை முட்டையிலிருந்து பாம்புகள் வெளிவரும் காலம் என்பதால், இந்தக் காலகட்டங்களில் குட்டி பாம்புகளே வீடுகளை நோக்கி அதிகம் படையெடுக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

பாம்புகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள்

சாரைப்பாம்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாரைப்பாம்பு
  • நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன் ஆகிய நஞ்சுள்ள பாம்புகள் மனித குடியிருப்புகளை ஒட்டி வாழக்கூடியவை.
  • அதிக நஞ்சுள்ள சுருட்டை விரியன் வகை பாம்புகள் வெப்பம் நிறைந்த பாறைப் பகுதிகளில் அதிகம் காணப்படும்.
  • சாரைப்பாம்பு, நீர்க்கோழி, பச்சைப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு போன்ற நஞ்சற்ற பாம்புகள் சமவெளிப் பகுதிகளில் வாழ்கின்றன.
  • ராஜநாகம், குழி விரியன் போன்ற வகைகள் மலை ஓடைகளிலும், தேயிலைத் தோட்டங்களில் கூனல் மூக்குக் குழி விரியன் போன்ற பாம்புகளும் அதிகம் தென்படும்.

கோடையில் குடியிருப்புகளுக்குள் பாம்புகள் வரக் காரணங்கள்

  • பாம்புகள் குளிர் ரத்தப்பிராணிகள் என்பதால், கோடையின் கடுமையான வெப்பத்தைத் தவிர்க்க குளிர்ச்சியான இடங்களைத் தேடி வீடுகளுக்குள் நுழைகின்றன.
  • காடுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், நீர்நிலைகள் பெரும்பாலும் அழிந்துவிட்டதால் தவளைகளுக்குப் பதில் எலிகளை வேட்டையாட குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன.
  • கோடைக்காலம் என்பது பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலம் என்பதால், இந்தச் சமயத்தில் குட்டிப் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
  • காடுகள் மற்றும் பாம்புகளின் இயற்கை வாழ்விடங்கள் சுருங்கி வருவதும் ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கான தற்காப்பு ஆலோசனைகள்

கோடைக் காலங்களில் குடியிருப்புகளை நோக்கி வரும் பாம்புகள் எவை?

பட மூலாதாரம், Getty Images

  • கோடையில் தரையில் படுத்து உறங்குபவர்கள் கண்டிப்பாகக் கொசுவலை போன்ற பாதுகாப்பைப் பயன்படுத்த வேண்டும்.
  • காலணிகளை வீட்டுக்கு வெளியே விடாமல், ஆணி போன்ற உயரமான இடங்களில் தொங்கவிட வேண்டும்.
  • வீட்டைச் சுற்றிலும் விறகுகள், அட்டைப் பெட்டிகள் மற்றும் தேவையற்ற குப்பைகளைக் குவிக்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • சமையலறை மற்றும் பாத்திரம் கழுவும் இடங்களில் உள்ள குழாய்கள் வழியாகப் பாம்புகள் வரக்கூடும் என்பதால் அவற்றுக்கு மூடி போடுவது அவசியம்.
  • தார் சாலைகள் இரவில் வெப்பத்தை வெளியிடும் என்பதால் பாம்புகள் அங்கிருக்க வாய்ப்புண்டு. எனவே, இரவில் டார்ச் லைட் இல்லாமல் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்

வீட்டிற்குள் பாம்பு வந்த பிறகு செய்ய வேண்டியவை என்ன?

மண்ணுளிப் பாம்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மண்ணுளிப் பாம்பு

கோடைக்காலங்களில் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி அதிகம் வருவதால், பாம்பு வந்த பிறகு செய்ய வேண்டியவை என்ன என்பதை மதுரையை சேர்ந்த பாம்பு மீட்பு வல்லுநர் சாம்சன் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

  • வீட்டுக்குள் பாம்பு வந்ததும் வீட்டை விட்டு வெளியேறி விடாமல், பாதுகாப்பான தூரத்தில் இருந்து பாம்பைக் கண்காணிக்க வேண்டும்.
  • பாம்பைப் பார்த்ததும் வனத்துறைக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
  • வீட்டு வளாகத்துக்கு வெளியே இருந்தால் அதனை கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • பாம்புகளை பார்த்ததும் அதனை தாக்க முயற்சிக்கக் கூடாது.
  • பாம்பை தாக்க முற்பட்டால் பாதுகாப்பு கருதி பாம்பும் கடிக்க முற்படும்.
  • இரையை தேடி குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் வருவதால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் பாம்புகள் வீட்டுக்கு புகாமல் இருப்பதை தடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழுக்காக ப.சிவசங்கர் வழங்கிய கூடுதல் தகவல்களுடன்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு