"நான் முதலிடம் பெறாமல் இருந்திருக்கலாம்" - தேர்வில் முதலிடம் பெற்றும் உருவகேலிக்கு ஆளான பெண் இப்போது கூறுவது என்ன?

பட மூலாதாரம், Himanshu Singh
- எழுதியவர், நீது சிங்
- பதவி, பிபிசிக்காக
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த பிராச்சி நிகாமை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிராச்சி நிகாம் தனது 10-ஆம் வகுப்புத் தேர்வுகளில் உத்தரப் பிரதேச மாநில அளவில் முதலிடம் பிடித்திருந்தார்.
ஆனால் அப்போது, அவரது மதிப்பெண்களை விட அவரது தோற்றம் குறித்தே அதிகம் பேசப்பட்டது.
அச்சமயத்தில் பிபிசி நியூஸ் இந்தி பிராச்சியிடம் பேசியபோது, தேர்வில் முதலிடம் பெற்றிருந்தபோதிலும் சமூக வலைதளங்களில் தான் எப்படி கேலி செய்யப்பட்டேன் என்பதை அவர் விவரித்தார்.
இத்தகைய சூழலில், இந்த ஆண்டு உ.பி போர்டு 12-ஆம் வகுப்பு முடிவுகள் வெளிவந்தபோது, இந்த முறை பிராச்சியின் தேர்வு முடிவு எப்படி இருந்தது என்பதை அறிய நான் ஆர்வமாக இருந்தேன்.
சமூக வலைதளங்களில் அவர் கேலி செய்யப்பட்ட விதம், அதை அவர் எப்படி எதிர்கொண்டார் மற்றும் தனது படிப்பை எப்படித் தொடர்ந்தார் என்ற கேள்வியும் என் மனதில் இருந்தது.
இதை அறிந்துகொள்வதற்காக, நான் ஏப்ரல் 26 அன்று மீண்டும் ஒருமுறை பிராச்சியின் வீட்டிற்குச் சென்றேன்.
அப்போது மதியம் 12 மணி இருக்கும், ஆனால் சீதாபூரில் உள்ள பிராச்சியின் வீடு அமைதியாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியானபோது இருந்த பரபரப்பு அங்கு இல்லை. அதற்குக் காரணம், இந்த ஆண்டு பிராச்சி மாநில அளவில் முதலிடம் பிடிக்கவில்லை. இருப்பினும், அவர் 12-ஆம் வகுப்பில் 91.20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்.
10-ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த பிறகு, 12-ஆம் வகுப்பிலும் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்ததா என்று கேட்டபோது, 19 வயதான பிராச்சி நிகாம் சாதாரணமாகப் பதிலளித்தார்.
"இந்த முறை என்னைப் பார்க்க யாரும் வரவில்லை. நான் இன்டர்மீடியட்டில் 91.20 சதவீதம் எடுத்துள்ளேன். எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் இருந்தன, ஆனால் ஆங்கிலத்தில் 73 மதிப்பெண்கள் கிடைத்தன. நல்ல மதிப்பெண்கள் தான், ஆனால் மொத்த மதிப்பெண் சற்று குறைந்துவிட்டது. சுமார் ஐந்து சதவீத மதிப்பெண்கள் வித்தியாசம் இருந்தது"என்றார்.
மதிப்பெண்கள் நன்றாக இருந்தாலும், பிராச்சியின் எதிர்பார்ப்பை விட மதிப்பெண் குறைவாகவே இருந்தன. உ.பி போர்டின் முதல் பத்து இடங்களுக்குள் கூட வர முடியாமல் போனது அவருக்கு வருத்தத்தை அளிக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் உ.பி போர்டு 10-ஆம் வகுப்புத் தேர்வில், சுமார் 55 லட்சம் மாணவர்களில் பிராச்சி முதலிடம் பிடித்தார்.
ஆனால் அவரது முதலிடத்தை விட அவரது முகத்தில் இருந்த முடி குறித்துத்தான் செய்திகளில் அதிகம் பேசப்பட்டது. அவர் கடுமையாகக் கேலி செய்யப்பட்டார்.
அப்போது பிபிசி நியூஸ் இந்தியிடம் பேசிய அவர், "இந்தக் கேலி கிண்டல்களையும் கூட்டத்தையும் பார்க்கும்போது, நான் இன்னும் இரண்டு மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. நான் முதலிடம் பிடிக்காமல் இருந்திருந்தால், மக்கள் எனது தோற்றத்தைக் கவனித்திருக்க மாட்டார்கள். நான் உயர்நிலைப் பள்ளித் தேர்வில் முதலிடம் பிடித்தபோது, எனது முகத்தில் அதிக முடி இருப்பதை முதன் முறையாக எனக்கு உணர்த்தியது என்னை கேலி செய்தவர்கள் தான்" என்று கூறியிருந்தார்.
சிகிச்சையில் எதிர்கொண்ட சவால்கள்

பட மூலாதாரம், Himanshu Singh
ஒன்பதாம் வகுப்பிலிருந்து பிராச்சியின் முகத்தில் முடி வளர்ச்சி அதிகரித்திருந்தது, இது ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்பட்டதாக அவரது மருத்துவர் தெரிவித்தார்.
இணையத்தில் அவர் கேலி செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பிராச்சி முகத்திற்கான சிகிச்சையை மேற்கொண்டார்.
இப்போது, அவரது முகம் முன்பைப் போல முடி இல்லாமல் இருக்கிறது. இது வெறும் சிகிச்சை மட்டுமல்ல, தன்னை ஏற்றுக்கொள்வதற்கும் மாற்றிக்கொள்வதற்கும் இடைப்பட்ட ஒரு மனரீதியான பயணமும் ஆகும்.
இந்த அனுபவம் குறித்து பிராச்சி கூறுகையில், "இவ்வளவு சீக்கிரம் நான் சிகிச்சை பெறுவேன் என்று ஆரம்பத்தில் நினைக்கவில்லை. ஏப்ரல் மாதம் தேர்வு முடிவுகள் வந்தன, நான் ஜூன் மாதத்திலிருந்து சிகிச்சையைத் தொடங்கினேன்." என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "நான் கேலி செய்யப்பட்ட காலத்தில், லக்னோவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் எனக்கு ஆறு-ஏழு முறைகள் இலவசமாகச் சிகிச்சை அளித்தார். நான் ஒவ்வொரு மாதமும் அங்கு செல்வேன். இப்போது, ஒருமுறை செல்வதற்கு சுமார் 10,000 ரூபாய் செலவாகிறது, அதனால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செல்கிறேன். இதுவரை சுமார் 1.5 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். 10 நாட்களுக்கு முன்புதான் முடிகளை அகற்றினேன்." என்றார்.
பிராச்சிக்கு இது வெறும் சிகிச்சை மட்டுமல்ல, அந்தப் பழைய கட்டத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு முயற்சியும் கூட.
அவரது இந்த மாற்றத்திற்குப் பிறகு மக்களின் நடத்தை மாறியதா? எனக் கேட்டால், "முன்பும் யாரும் கவலைப்படவில்லை, இப்போதும் அவர்கள் கவலைப்படுவதில்லை"என்று பிராச்சி புன்னகைத்துக்கொண்டே கூறுகிறார்.
பிராச்சி உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டம், மஹ்முதாபாத் பிளாக், பட்டா மொஹல்லாவில் வசிக்கிறார். இந்த ஆண்டு, பிராச்சி தனது 12-ஆம் வகுப்புத் தேர்வில் 500-க்கு 456 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் கணிதத்தில் 99, வேதியியலில் 95, இந்தியில் 96, இயற்பியலில் 93 மற்றும் ஆங்கிலத்தில் 73 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தனது பழைய புகைப்படங்கள் அடங்கிய பல பதிவுகளைக் காட்டியவாறு பிராச்சி கூறுகையில், "எனது பழைய புகைப்படங்கள் எனது ஃபீடில் வருகின்றன. அவர்கள் எங்களது புகைப்படங்கள் மற்றும் உடைகளை எடிட் செய்து, தங்களுக்குத் தோன்றுவதையெல்லாம் எழுதியும் பேசியும் பகிர்ந்து வருகிறார்கள்" என்றார்.
வார்த்தைகளுக்கு எவ்வளவு தாக்கம் உண்டு?

"இந்த முறை மக்கள் என்னை கேலி செய்யவில்லை, அவர்கள் எனது மதிப்பெண்களைப் பற்றி மட்டுமே விவாதிக்கிறார்கள். ஆனால் மக்கள் பதிவிடும் கருத்துகள் மிகவும் ஆபாசமாக உள்ளன. மக்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதை என்னால் சொல்லக்கூட முடியாது"என்றார் பிராச்சி.
நீங்கள் சிகிச்சையை முடித்துவிட்டீர்கள், ஆனால் மக்கள் இன்னும் உங்களது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிராச்சி, "மக்களிடம் எனது புதிய புகைப்படம் இல்லை, ஏனென்றால் நான் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இல்லை. புதிய புகைப்படங்கள் மூலம் அவர்களது பதிவுகளை நிறைய பேர் பார்வையிட மாட்டார்கள் என்பதால், தாங்கள் பிரபலமடைவதற்கு மக்கள் பழைய புகைப்படங்களைப் பயன்படுத்துகின்றனர்" என்றார்.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்திய பிராச்சி, "நான் இந்த முறை முதலிடம் பிடிக்கவில்லை, இருப்பினும் எனது புகைப்படம் பரவலாகப் பகிரப்படுகிறது. தங்களது பதிவுகள் பலரையும் சென்றடைய, மக்கள் எந்த நிலைக்கும் செல்கிறார்கள்.
பல ஊடகத்தினர் நாகரிகமாக கேள்வி எழுப்புவதில்லை. கேலி செய்வது தொடர்பான அதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். நான் இதையெல்லாம் மறந்து நீண்ட காலம் ஆகிவிட்டது, ஆனால் சமூக வலைதளங்கள் எனக்கு ஒரு காலத்தில் முகத்தில் நீண்ட முடிகள் இருந்ததை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. இது ஒரு நல்ல விஷயம் அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது" என்றார்.
நேரடியான கேள்விகளை எழுப்பி, சுயபரிசோதனைக்கு உட்படுத்தும் கடந்த கால அனுபவங்களிலிருந்து அவரது கோபம் பிறக்கிறது.
இருப்பினும், அவற்றைக் கடந்து வர தான் கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பிறர் உங்களை கேலி செய்வது உங்களை எப்படிப் பாதித்தது ? என்று கேள்வி எழுப்பினால்,
"இது என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. இந்தக் கேலிகளுக்குப் பிறகு நான் மிகுந்த புகழைப் பெற்றேன். எனக்குப் பயணம் செய்யப் பல வாய்ப்புகள் கிடைத்தன, மரியாதையும் கிடைத்தது. இப்போது கூட நான் வெளியே செல்லும்போது, மக்கள் என்னைத் தூரத்திலிருந்தே அடையாளம் காண்கிறார்கள்"என்று பிராச்சி புன்னகையுடன் கூறுகிறார்.
சுவாரஸ்யமாக, அவருக்குத் தொல்லை கொடுத்த அதே கேலிகள் அவருக்குப் புதிய அனுபவங்களையும் அளித்தன. புகழும் அசௌகரியமும் அவரது பயணத்தின் இரண்டு அங்கங்களாக உள்ளன.
குடும்பத்தில் மூத்த மகளான பிராச்சிக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு தம்பியும் உள்ளனர். அவரது தந்தை மாநகராட்சியில் பணிபுரிகிறார், அவரது தாய் ஒரு இல்லத்தரசி.
இதுகுறித்துப் பேசிய பிராச்சி, "யாரும் யாரையும் கேலி செய்யக் கூடாது. நான் இதைப் பற்றி நினைப்பதே இல்லை, ஆனால் பல குழந்தைகள் இதைத் தங்கள் மனதில் ஆழமாக ஏற்றிக்கொள்கிறார்கள். கேலி செய்யப்படுவதால் பலர் தற்கொலை கூட செய்துகொள்கிறார்கள்" என்றார்.
(தற்கொலை என்பது ஒரு தீவிரமான உளவியல் மற்றும் சமூகப் பிரச்னை. நீங்களும் மன அழுத்தத்திற்கு ஆளானால், இந்திய அரசின் உதவி எண்ணான 18002333330 மூலம் உதவி பெறலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் நீங்கள் உதவி பெறலாம்)
தன்னைக் கேலி கிண்டல்கள் பாதிக்கவில்லை என்று பிராச்சி தொடர்ந்து கூறினாலும், தற்போது அவர் எந்த ஊடக நிறுவனங்களுடனும் பேசுவதில் ஆர்வமில்லாமல் இருக்கிறார் என்பதும் உண்மை தான்.
சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் தன்னை நடத்திய விதம் குறித்து அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.
ஊடகங்களின் அணுகுமுறையை கேள்விக்குள்ளாக்கும் பிராச்சி

"எனக்குச் சமூக வலைதளங்களுக்கு வரும் விருப்பம் ஏதுமில்லை. அதிகமானோர் தங்களது பதிவுகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஊடகங்கள் கல்வி, சுகாதாரம் போன்ற நல்ல விஷயங்களை முன்னெடுக்க வேண்டும். ஆனால் இவற்றை எல்லாம் யார் பார்ப்பார்கள்? அதனால்தான் அதிகமானோரால் பார்க்கப்படும் இது போன்ற விஷயங்களை அவர்கள் கையில் எடுக்கிறார்கள்"என்கிறார் பிராச்சி.
பிராச்சியின் தாயார் மம்தா பிபிசி நியூஸ் இந்தியிடம் கூறுகையில், "நல்லவேளையாக என் மகள் எதையும் ஆழமாக எடுத்துக்கொள்வதில்லை. இருப்பினும், பல பேர் ஒரே விஷயத்தைச் சொல்லும்போது அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஊடகங்கள் அந்த அளவுக்கு அவளைக் கேலி செய்யாமல் இருந்திருந்தால், ஒருவேளை நாங்கள் ஊடகங்களிடம் பேசவே விரும்பாத இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம். பத்தாம் வகுப்பில் அவர் உ.பி அளவில் முதலிடம் பிடித்தபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம், அதனால் ஊடகங்களிடம் நிறையப் பேசினோம். ஆனால் பின்னர் மக்கள் அவளது முகத்தில் இருந்த முடியைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்." என்றார்.
ஆனால் இவை அனைத்திற்கும் இடையிலும், பிராச்சியின் கனிவான குணம் மாறவில்லை. "நான் பேசுபவர்கள் அனைவரிடமும் நட்பாகவே பழகுகிறேன். யாரையும் காயப்படுத்த எனக்குப் பிடிக்காது"என்கிறார் பிராச்சி.
'ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற கனவு'
தனது எதிர்காலத் திட்டங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கும் பிராச்சி, "கடந்த முறை நான் ஐஐடி ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று பொறியாளர் ஆக விரும்புவதாகக் கூறியிருந்தேன். இந்த முறை என்னால் முதலிடம் பிடிக்க முடியாமல் போனபோது, நான் பொறியாளர் ஆகத் தயாராகிக் கொண்டிருந்ததால் தான் முதலிடம் பிடிக்கவில்லை என்று பலரும் எழுதினார்கள். ஆனால் அது உண்மையல்ல." என்கிறார்.
"கனவுகள் மாறலாம். எனது கனவு என்னவென்று இனி யாரிடமும் சொல்ல நான் விரும்பவில்லை. இப்போது ஒரு நல்ல வேலையைப் பெறுவதைப் பற்றி மட்டுமே நான் யோசிக்கிறேன். எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க விரும்புகிறேன்"என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் மதிப்பெண்கள் முக்கியம் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பிராச்சி பதிலளிக்கையில், "நீங்கள் கல்வித் துறையில் தொடர விரும்பினால், மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். மக்கள் மதிப்பெண்களை மட்டுமே பார்க்கிறார்கள்." என்றார்.
இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்தி அடைந்துள்ளனர்.
அவரது தாயார் மம்தா நிகாம் கூறுகையில், "இந்த முறையும் அவரது மதிப்பெண்களால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் ஏன் முதலிடம் பிடிக்கவில்லை என்பது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவர் ஒவ்வொரு முறையும் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். இந்த முறை, எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்கள் இரண்டு பேர் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் முதலிடம் பிடித்தனர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டில் இருந்ததைப் போன்ற ஊடகக் கூட்டம் அவர்கள் வீட்டில் இல்லை. அந்தக் கூட்டத்திற்குக் காரணம் பிராச்சியின் முகத்தில் இருந்த முடிதான்" என்றார்.
பிராச்சியின் தந்தை சந்திர பிரகாஷ் நிகாம் கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் எதிர்கொண்ட கேலிகள் என்னையோ அல்லது என் மகளையோ பாதிக்கவில்லை. ஒருவேளை அவை எங்களைப் பாதித்திருந்தால், இன்று எங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த மதிப்பெண்கள் கிடைத்திருக்காது. இந்த முறை வீட்டில் கூட்டம் இல்லை, அவ்வளவுதான். பிராச்சி தனது படிப்பில் கவனம் செலுத்த விரும்புகிறார், எனவே நாங்கள் அனைவரும் ஊடகங்களிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறோம்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































