'நான் சிரித்தால் தீபாவளி' உள்பட மறைந்த பாடகி ஜமுனா ராணி குரலில் பிரபலமான 10 பாடல்கள்

- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்த் திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்த ஜமுனா ராணி பெங்களூருவில் நேற்று(30-07-2026) காலமானார். அவருக்கு வயது 88. கல்லஹள்ளியில் அவரது இறுதிசடங்குகள் இன்று நடந்தன.
ஆந்திர பூர்வீகமாக கொண்டவர் ஜமுனா ராணி. வரதராஜுலு - திரௌபதி தம்பதிக்கு மகளாக 1938-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி பிறந்தார். அவர் குடும்பமே இசைக்குடும்பம்தான். அவருடைய தாயார் திரௌபதி வீணை இசைக் கலைஞர். பெண்களை மட்டுமே கொண்ட ஒரு வாத்தியக்குழுவை அந்த காலத்திலேயே நடத்தி வந்துள்ளார்.
ஏழு வயதில் பாட வந்த ஜமுனா ராணியின் முதல் பாடல் சித்தூர் நாகய்யாவின் 'தியாகய்யா' என்ற தெலுங்குப் படத்தில் இடம் பெற்றது. அதை தொடர்ந்து தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸின் 'கல்யாணி' படத்தில் 'சக்ஸஸ் சக்ஸஸ்', 'ஒன் டூ த்ரீ' ஆகிய இரண்டு பாடல்களைப் பாடினார்.
அதை தொடர்ந்து டி. எம். சௌந்தர்ராஜனுடன் இணைந்து 'வளையாபதி' என்ற படத்தில் இடம் பெற்ற 'குலுங்கிடும் பூவில் எல்லாம்' என்ற பாடலை, முதல் டூயட் பாடலாக பாடினார். எஸ்.தட்சிணாமூர்த்தியின் இசையில் இடம் பெற்ற அந்த பாடலை பாடும்போது ஜமுனாராணியின் வயது 13.
அவரை இந்தியா முழுக்க கொண்டு சேர்த்த பாடல் சி.ஆர். சுப்பராமனின் இசையில் 'தேவதாஸ்' படத்தில் சின்ன வயது பார்வதிக்காக இவர் பாடிய 'ஓ தேவதாஸ்' பாடல்தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்கள மொழிகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.
தேவதாசை தொடர்ந்து எம்ஜிஆரின் 'குலேபகாவலி'யில் இடம் பெற்ற 'ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் கலங்குவதைப் பாராயடா' என்ற அவரின் பாடலும் ஹிட்டானது. 'மகாதேவி' படத்தில் இடம்பெற்ற 'சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே', 'காமுகர் நெஞ்சில் நீதியில்லை' பாடலும் மக்கள் மத்தியில் அவருக்கு தனி அங்கீகாரத்தை பெற்று கொடுத்தன.
கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை படத்தில் இவர் பாடிய செந்தமிழ் தேன்மொழியாள் இன்றும் காதுகளில் ஒலிக்கிறது.

பட மூலாதாரம், Youtube/Rajshri Tamil
இந்த பாடல்களை தவிர 'தெய்வப் பிறவி'யில் 'தாரா தாரா வந்தாரா', 'காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு', மன்னாதி மன்னனின் 'நீயோ நானோ யார் நிலவே' 'பாசமலரி'ல் 'பாட்டொன்று கேட்டேன்' ஆகிய பாடல்களும் ஜமுனாராணியின் திறமைக்கு உதாரணம். 'உத்தம புத்திரன்' படத்தில் இடம் பெற்ற, இன்றும் பலரால் விரும்பி கேட்கப்படும் 'யாரடி நீ மோகினி' பாடலை ஜி. ராமநாதனின் இசையில் டி.எம்.எஸ் - ஜிக்கியுடன் இணைந்து ஜமுனா பாடியுள்ளார்.
கே.பாலசந்தரின் 'இருகோடுகள்' படத்தில் இடம்பெற்ற போட்டி பாடலான 'புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்' பாடல் அந்த காலத்தில் பிரபலம்.
பல ஆண்டுகள் சினிமாவில் பாடாமல், கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்த ஜமுனா ராணிக்கு ரீ என்ட்ரியாக வந்த பாடல் 1987-ல் இளையராஜாவின் இசையில் நாயகன் படத்தில் 'நான் சிரித்தால் தீபாவளி' என்ற பாடல். அதை எம்.எஸ்.ராஜேஸ்வரியுடன் இணைந்து பாடினார். இன்றைய தலைமுறைக்கு ஜமுனாராணியை நினைவுபடுத்தும் பாடல் அதுதான்.
கடைசியாக, 1992-ஆம் ஆண்டு 'அண்ணன் என்னடா தம்பி என்னடா' என்ற படத்தில் அவர் பாடியுள்ளார். பின்னர், பெங்களூருவில் ஒய்வெடுத்து வந்தார்.
ஜமுனாராணி பாடிய பாடல்களில் ரசிகர்களிடையே இன்று பிரபலமாக உள்ள 10 பாடல்களை பார்க்கலாம்.

பட மூலாதாரம், Youtube
1) ஓ தேவதாஸ்... (தேவதாஸ்)
தமிழ் சினிமாவின் காதல் படங்களில் தேவதாஸை தவிர்க்க முடியாது. 1952ல் வெளியான அந்த படத்தில் சின்ன வயது பார்வதிக்காக, சி.ஆர். சுப்பராமன் இசையில் ஜமுனாராணி பாடிய கிட்டத்தட்ட மழலை குரல் பாடல் இது.
இந்த பாடலை பாடியபோது ஜமுனாராணி பதின்பருவ சிறுமியாக இருந்தார்.
2) பாட்டொன்று... (பாசமலர்)
பாசமலர் படத்தில் கோட் சூட் அணிந்து ஸ்டைலாக சிவாஜிகணேசன் பியானோ வாசிக்க,
'பாட்டொன்று
கேட்டேன்...
பரவசமானேன்...
நான் அதை
பாடவில்லை...ஹோ...'
என்று பாட ஆரம்பிப்பார் எம்.என்.ராஜம். அதை கேட்டு சிவாஜி இன்னும் உற்சாகமாக முக பாவனை காண்பிக்க, கைதட்டாதவர்கள் இருக்க முடியாது.
பின்னணியில் ஒலிக்கும் அந்த காந்தகுரலுக்கு சொந்தக்காரர் ஜமுனாராணிதான். இந்த பாடலை அவரும் ஏகப்பட்ட மேடைகளில் பாடியிருக்கிறார்.

பட மூலாதாரம், Youtube
இந்த பாடலில் நடித்திருந்த பழம்பெரும் நடிகை எம்.என் ராஜம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "அந்த பாடலுக்கு அவர் குரல் அவ்வளவு பலம். அப்படி ஸ்டைலாக பாடியதால்தான் என்னால் அப்படி நடனம் ஆட முடிந்தது. என் சினிமா வாழ்க்கையில் அந்த பாடல் அவரால் பிரபலம் ஆனது. அந்த படம் தவிர, தெய்வபிறவி உள்ளிட்ட படங்களிலும் அவர் பாடியிருக்கிறார். அந்த குரலை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்கவும் முடியாது. அவர் சாதனைகளை மறுக்கவும் முடியாது' என்றார்.
3) யாரடி நீ மோகினி... ( உத்தமபுத்திரன்)
சினிமாவில் போட்டி பாட்டு என்றால் உத்தமபுத்திரன் 'யாரடி நீ மோகினி...' பாடலை மறக்க முடியுமா? அதில் ஜிக்கியுடன் சேர்ந்து கலக்கியிருப்பார் ஜமுனா.
சிவாஜிகணேசன், ஹெலன், ஜெமினி சந்திரா ஆட்டமும், ஜி.ராமநாதன் இசையும், ஜமுனா குரலும் பாடலை இன்றும் ரசிக்க வைக்கிறது
4) மாமா..மாமா... (குமுதம்)
அந்த கால குத்தாட்ட பாடல்களில் குமுதம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மாமா.மாமா.ஏம்மா.ஏம்மா...' பாடலை தவிர்க்க முடியாது. கே.வி.மகாதேவனின் துள்ளலான மெட்டு, ஜமுனாராணியில் வசீகர குரல் அந்த பாடலை இன்றும் பேச வைக்கிறது.இன்றும் கச்சேரிகளில் ஆட வைக்கிறது.
படம் வெளி வந்த ஆண்டு 1961..
5) காமுகர் நெஞ்சில் நீதியில்லை... (மகாதேவி)
1957 ஆம் ஆண்டு வெளிவந்த 'மகாதேவி' படத்தில் இடம் பெற்ற சோகப்பாடல். சாவித்ரி கைக்குழந்தையுடன் நடித்து இருப்பார். துள்ளல் பாடல் மட்டுமல்ல, இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான சோகப் பாடல்களையும் பாட முடியும் என நிரூபித்தார் ஜமுனாராணி
6) பாலாற்றில் சேலாடுது... (கொடுத்து வைத்தவள்)
எம்ஜிஆருக்காக சீர்காழி கோவிந்தராஜன் குரல் கொடுக்க, ஹீரோயின் ஈ.வி.சரோஜாவுக்காக ஜமுனாராணி குரல் கொடுத்த வித்தியாமான டூயட், மெலடி பாடல் இது. கே.வி.மகாதேவன் இசையில் 'கொடுத்து வைத்தவள்' படத்தில் இடம் பெற்ற பாடல் இது.
7) செந்தமிழ் தேன்மொழியாள்... (மாலையிட்ட மங்கை)
கண்ணதாசன் தயாரித்த இந்த படத்தில் டிஆர்.மகாலிங்கம் பாடிய இந்த பாடலில் ஆண் குரல் ரசிகர்களிடையே வெகு பிரபலம். பெண் குரலில் இந்த பாடலை ஜமுனா ராணியும் பாடி அசத்தியிருப்பார். மைனாவதிக்காக பாடும் இந்த பாடல் சற்றே சோக பி்ன்னணியில் இருக்கும்.
8) அத்திக்காய்...ஆலங்காய்... (பலே பாண்டியா)
பலே பாண்டியா படத்தில் இடம் பெற்ற பாடல் சிவாஜி, தேவிகா, பாலாஜி, வஸந்தி ஆகியோர் இந்த பாடலில் வருவார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வார்த்தைகளில், பொருளில் கண்ணதாசன் விளையாட, டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி ஆகியோர் பிரமாதமாக பின்னணி குரல் கொடுத்திருப்பார்கள்.
9) புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்... (இரு கோடுகள்)
பாலசந்தர் இயக்கத்தில் உருவான இரு கோடுகள் படத்தில் இடம் பெற்ற போட்டி பாடல் இது. கணவர் யாருக்கு சொந்தம் என கண்ணனை உருவகப்படுத்தி ஜெமினிகணேசன் மனைவியாக வரும் செளகார் ஜானகியும், ஜெயந்தியும் பாடுவார்கள். அதில் ஜெயந்திக்காக உருக்கமாக பாடியிருப்பார் ஜமுனாராணி. பாடலுக்கு இசையமைத்தவர் வி.குமார்.
10) நான் சிரித்தால் தீபாவளி
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் இடம் பெற்ற பாடல். புலமைப்பித்தன் வரிகளில் இந்த பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியுடன் இணைந்து பாடியிருப்பார் ஜமுனாராணி.
அந்த கால ஸ்டைலில் ட்யூன், அந்த கால காஸ்ட்யூமில் உருவான இந்த பாடல் ஜமுனாராணி குரலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தது.

பட மூலாதாரம், Youtube/Ayngaran Music
நான் சிரித்தால் தீபாவளி பாடலில் நடனம் ஆடிய பபிதா பிபிசி தமிழிடம் பேசுகையில் "அந்த ஒரு பாடலால் நான் இந்தியா மட்டுமல்ல, லண்டன், டென்மார்க், பாரிஸ், சுவிஸ், மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுக்கு சென்றேன். அங்கே தமிழர்கள் நடத்தும் கலைநிகழ்ச்சிகளில் ஜமுனாராணி அம்மா பாட, நான் அதே உடையில் நடனம் ஆடுவேன். ஒரே ஓட்டலில் தங்கியது, அவருடன் பயணம் செய்தது ஆகியவற்றை மறக்கவே மாட்டேன். ஓட்டலில், ரசிகர்கள் அளிக்கும் விருந்துகளில் என்னை பக்கத்தில் உட்கார வைத்து உபசரிப்பார் ஜமுனா அம்மா. அவர் குரல் மட்டுமல்ல, அவர் குணமும் அவ்வளவு இனிமை." என்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































