20 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக பிரசவத்துக்கு மருத்துவமனைக்கு அனுப்பாததால் இருளர் பெண் சிசுவுடன் மரணமா? புகாரில் உள்ளது என்ன?

பட மூலாதாரம், Handout
காஞ்சிபுரத்தில் பழங்குடி கர்ப்பிணிப் பெண் மரணம் தொடர்பாக தனியார் மரக்கிடங்கு உரிமையாளர் மீது வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 10) எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
'20 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக, எனது மனைவியை பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு மரக்கிடங்கு உரிமையாளர் அனுமதிக்கவில்லை' எனப் புகார் மனுவில் இறந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.
சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த மரக்கிடங்கு உரிமையாளரின் கருத்தை பெறுவதற்கு பிபிசி தமிழ் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பட மூலாதாரம், Kanchi Makkal Manram
கொத்தடிமை முறையால் பெண் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக, பிபிசி தமிழிடம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் சிங்காடிவாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு இருளர் குடியிருப்பில் வசித்து வரும் ஆனந்தன், தனது மனைவி தேன்மொழியுடன் வெள்ளை கேட் என்ற இடத்தில் உள்ள மரக்கிடங்கில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர்களுடன் மகள் காவியா மற்றும் மருமகன் முத்து ஆகியோரும் வேலை பார்த்துள்ளனர். மரக்கிடங்கின் அருகில் ஓலைக் கொட்டகை ஒன்றை அமைத்து இவர்கள் தங்கியுள்ளனர்.
'20 ஆயிரம் முன்பணம்.. விறகு வெட்டும் வேலை'

பட மூலாதாரம், Handout
'கிடங்கின் உரிமையாளர் ஆறுமுகம் 20 ஆயிரம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்து விறகு வெட்டும் வேலைக்குக் கூட்டிச் சென்றார்' எனக் கடந்த 8 ஆம் தேதி பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் ஆனந்தன் கூறியுள்ளார்.
'என் மனைவி கருவுற்றிருப்பதை அறிந்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று அட்டை (பதிவேடு) போட வேண்டும் எனப் பலமுறை கூறியும் உரிமையாளர் அனுமதிக்கவில்லை' என்கிறார் ஆனந்தன்.
'சாப்பிடுவதற்கு நல்ல அரிசி வாங்குவதற்கு வழியில்லை. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அடிக்கடி விடுப்பு எடுப்பதாகக் கூறி ஆறுமுகத்தின் மகன் என்னை கழுத்தில் ஓங்கி அடித்தார்' எனப் புகார் மனுவில் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த 8 ஆம் தேதி காலை சுமார் 7 மணியளவில் விறகு வெட்டுவதற்காக ஆனந்தனும் அவரது மகளும், மருமகனும் சென்றுள்ளனர். மனைவி கர்ப்பிணியாக இருந்ததால் அவரைக் கொட்டகையில் விட்டுச் சென்றுள்ளார்.
'மதியம் சுமார் 1 மணியளவில் வந்தபோது, வயிறு வலிப்பதாக மனைவி கூறினார். சிறிது நேரத்துக்குப் பிறகு வலி சற்று குறைந்துள்ளது. இதனால் நான் வேலைக்குச் சென்றேன்' என புகாரில் குறிப்பிட்டுள்ளார் ஆனந்தன்.
புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது என்ன?

பட மூலாதாரம், FB/KanchiCollector
புகார் மனுவின்படி, சுமார் 2.30 மணியளவில் தண்ணீர் எடுப்பதற்காக கொட்டகைக்கு வந்தபோது பிரசவ வலியால் தேன்மொழி துடித்துக் கொண்டிருப்பதை அறிந்து உரிமையாளர் ஆறுமுகத்துக்கு ஆனந்தன் போன் செய்துள்ளார்.
மேலும், 'பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை' எனப் புகார் மனுவில் கூறியுள்ள ஆனந்தன், 'சிறிது நொடிக்குள் என் மனைவி பேச்சு மூச்சு இல்லாமல் போனார். ஆறுமுகத்துக்கு போன் செய்தபோது, 'செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்' என்றார். ஒருகட்டத்தில் 108 ஆம்புலன்ஸை அழைத்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த மருத்துவப் பணியாளர்கள், தேன்மொழியை பரிசோதித்துவிட்டு தாயும் சேயும் இறந்துவிட்டதாகக் கூறியதாகவும், "அப்போது என் கையில் இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு, 'விஷயத்தைப் பெரிதாக்க வேண்டாம்' என ஆறுமுகம் மிரட்டினார்" எனப் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக தேன்மொழியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. ஆனந்தன் அளித்த புகாரின் அடிப்படையில் பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 194ன்படி 'சந்தேக மரணம்' என்ற பிரிவில், பொன்னேரிக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காவல்நிலையம் முன்பாக போராட்டம்
" கொத்தடிமை முறை காரணமாக பழங்குடியின கர்ப்பிணிப் பெண்ணும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். ஆனால், அதற்கேற்ற பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை" என்கிறார், காஞ்சி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ்.
'பழங்குடியின பெண் மரணத்தில் கொத்தடிமை முறை இருந்ததா?' என்பதைப் பற்றி காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் புவனேஷ்ராம் விசாரணை நடத்த உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தி.சினேகா ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இதனைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் பேசிய மகேஷ், "வருவாய்த்துறை அதிகாரிகளின் அறிக்கையைப் பெற்ற பிறகே வழக்குப் பதிவு செய்ய முடியும் எனக் காவல்துறை தெரிவித்தது. ஆனால், 'வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ள கொத்தடிமைத்தனம் தொடர்பான பிரிவுகளைப் பயன்படுத்தலாம்' என வாதிட்டோம்" என்கிறார்.
தொடர்ந்து, பொன்னேரிக்கரை காவல் நிலையம் முன்பாக இருளர் பழங்குடி மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மரக்கிடங்கு உரிமையாளர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
'தினமும் 11 மணிநேர வேலை'

பட மூலாதாரம், Handout
ஆனந்தனின் மகள் காவ்யாவிடம் பிபிசி தமிழ் பேசியது. "அங்கு ஆறு மாதமாக வேலை பார்த்து வந்தோம். காலை 7 மணிக்கு வேலைக்குப் போவோம். மாலை 6 மணி வரை வேலை பார்ப்போம்" என்கிறார்.
"அவரிடம் (ஆறுமுகம்) அப்பா 20 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியிருந்தார். அதனை அடைக்கும் வரை சொந்த வீட்டுக்குப் போக முடியவில்லை. மரத்தை வெட்டிக் கடனை அடைத்துவிட்டுத் தான் போக வேண்டும் என உரிமையாளர் கூறுவார்" என அவர் தெரிவித்தார்.
இவர்கள் வேலை பார்த்து வந்த வெள்ளை கேட் என்ற பகுதிக்கும் சொந்த வீடு அமைந்துள்ள சிங்காடிவாக்கம் பகுதிக்கும் இடையே சுமார் 15 கி.மீ தொலைவு உள்ளது.
"அவசர வேலையாக சிங்காடிவாக்கம் வந்தாலும் போன் செய்து உடனே வருமாறு ஆறுமுகம் கூறுவார். அங்கு மின்சாரம் உள்பட எந்த வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வந்தோம்" என்கிறார்.
"மரக்கிடங்கில் என்ன சம்பளம் வழங்கப்பட்டது?" எனக் கேட்டபோது, "அதுபற்றிய விவரம் எதுவும் தெரியாது" என்று மட்டும் பதில் அளித்தார்.
பழங்குடியின பெண் இறப்பு தொடர்பான வழக்கில் மரக்கிடங்கின் உரிமையாளர் ஆறுமுகம் தற்போது வரை கைது செய்யப்படவில்லை. அவரிடமும் அவரின் மகன் தட்சிணாமூர்த்தியிடமும் பேசுவதற்கான தொடர் முயற்சிகளில் பிபிசி தமிழ் ஈடுபட்டது.
ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. அவர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.
'அதிர்ச்சிகரமான எடுத்துக்காட்டு' - பெ.சண்முகம்
பழங்குடியின பெண் மரணம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "நிறைமாத கர்ப்பிணிக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட நேரத்தில் வெறும் 20 ஆயிரம் ரூபாய்க்காக அவரை மருத்துவமனைக்குச் செல்லவிடாமல் தடுத்தது கொடூரமானது" எனக் கூறியுள்ளார்.
பழங்குடி மக்களின் வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களைக் கடன் மற்றும் உழைப்புச் சுரண்டலுக்குத் தள்ளும் நடைமுறைக்கு இந்தச் சம்பவம் அதிர்ச்சிகரமான எடுத்துக்காட்டாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் கூறுவது என்ன?
கொத்தடிமை முறையில் தாங்கள் வைக்கப்பட்டிருந்ததாக புகார் மனுவில் ஆனந்தன் கூறியுள்ளது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.அரவிந்திடம் பிபிசி தமிழ் கேட்டது.
"வழக்கில் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது. கொத்தடிமை முறை இருந்ததா என்பதைக் கண்டறிய சார்-ஆட்சியரின் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொத்தடிமை முறை இருப்பது தெரியவந்தால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மட்டும் பதில் அளித்தார்.
இதே தகவலை பிபிசி தமிழிடம் பகிர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா, " பழங்குடி மக்கள் மத்தியில் சிறப்பு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்" என்கிறார்.
இவற்றில் மருத்துவ முகாம்கள், பள்ளிக் கூடங்களில் மாணவர் சேர்க்கை ஆகியவை முக்கியமானதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"அரசின் நலத்திட்டங்களில் பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் தாமதமாக பதிவு செய்தாலும் பிறப்புச் சான்றிதழ் கிடைப்பதை உறுதி செய்யும் சிறப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது" என்கிறார், மாவட்ட ஆட்சியர் தி.சினேகா.
காஞ்சிபுரத்தில் கொத்தடிமை முறை குறித்து ஆய்வு செய்யும் பணிகளில் வருவாய் கோட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இணைந்து தொடர் ஆய்வுகளை நடத்தி வருவதாகக் கூறுகிறார், பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர்.
"சமீபகாலமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொத்தடிமை முறை இருப்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை" என அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























