மேகேதாட்டு அணை: மத்திய அரசின் பதிலுக்கு தமிழக தலைவர்கள் எதிர்ப்பு - தீர்ப்புகள் கூறுவது என்ன?

காவிரி, மேகேதாட்டு, உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு, கர்நாடகா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காவிரி (கோப்புப் படம்)
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டில் புதிய அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதல் தேவை என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தக் குறிப்பும் இல்லை என, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது.

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான மேகேதாட்டு அணை விவகாரம் மீண்டும் அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் மத்திய அரசின் இந்தப் பதில் வந்துள்ளது.

இதற்கு தமிழ்நாட்டில் பெருமளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி வேளாண் அமைப்புகள் வரை இதற்கு எதிர்வினையாற்றி உள்ளனர்.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் தலையிட்டு மத்திய அமைச்சரின் பதிலைத் திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

"காவிரி வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, தென் இந்தியாவின் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் மக்களின் உயிர்நாடி," என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"ஒன்றிய அரசு எல்லா நேரங்களிலும் தமிழ்நாடு அரசின் நலன்களுக்கு எதிராக பாரபட்சமாகச் செயல்படுகிறது," என தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியாளர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.

மத்திய அமைச்சரின் பதில் என்ன?

காவிரி, மேகேதாட்டு, உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு, கர்நாடகா

பட மூலாதாரம், dr_rajbhushan

படக்குறிப்பு, மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி

மேகேதாட்டு அணை தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்திடம் பாமக தலைவரும் எம்.பி-யுமான அன்புமணி ராமதாஸ் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அன்புமணியின் கேள்விகள்

  • 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி மேல்நிலை ஆற்றுப்பகுதி (Upper riparian states) மாநிலமான கர்நாடகா காவிரியின் குறுக்கே எந்த விதமான கட்டுமானத்தையும் மேற்கொள்ள வேண்டுமென்றால் கீழ்நிலை ஆற்றோர மாநிலங்களான (Lower riparian states) தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது மத்திய அரசுக்குத் தெரியுமா?
  • மேகேதாட்டு திட்டத்துக்கான கர்நாடகா கீழ்நிலை ஆற்றோர மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளதா?
  • மத்திய அரசின் முன் உள்ள முன்மொழிவின் தற்போதைய நிலை என்ன?

மத்திய அமைச்சரின் பதில்கள்

  • 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கர்நாடகா மற்ற ஆற்றோர மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என எந்தக் குறிப்பும் இல்லை. 2007-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் தீர்ப்பாய தீர்ப்பின் 18-ஆவது பிரிவை சரியானது எனக் கூறிய நீதிமன்றம், "இத்தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், தங்கள் எல்லைக்குள் நீர் பயன்பாட்டை முறைப்படுத்தவோ அல்லது அந்தந்த மாநிலத்துக்குள் உள்ள நீரின் பலனை அனுபவிக்கவோ எந்தவொரு மாநிலத்துக்கும் உள்ள உரிமையையோ, அதிகாரத்தையோ அல்லது வல்லமையையோ இத்தீர்ப்பாயத்தின் உத்தரவில் உள்ள எதுவும் பாதிக்காது" என்றும் தனது உத்தரவில் மீண்டும் வலியுறுத்தியது.
  • 2019-ஆம் ஆண்டில் மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி திருத்தி அனுப்புமாறு கோரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

மோதிக்கு விஜய் எழுதிய கடிதத்தில் கூறியது என்ன?

காவிரி, மேகேதாட்டு, உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு, கர்நாடகா

பட மூலாதாரம், X/DIPR

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

முதலமைச்சர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் மத்திய அமைச்சரின் பதில் ஏமாற்றமளிக்கும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில், "கீழ்நிலை ஆற்றோர மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பான தற்போதைய சட்ட நிலை மற்றும் நிலைபெற்ற சட்ட விதிகள் ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் அளிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது," என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் காவிரியில் கட்டுமானப் பணிகளுக்கு இதர மாநிலங்களின் ஒப்புதல் தேவை என்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சில தீர்ப்புகளையும் தன்னுடைய கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.

காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டிய விஜய், ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய எல்லைக்குள் தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறாதவாறு நீரை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை பாதுகாக்கிறது என்கிறார்.

"அந்த விதத்தில் தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட நீரோட்டத்தை பாதிக்கும் சாத்தியம் கொண்ட எந்தவொரு திட்டமும் தீர்ப்பின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும்." என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மேகேதாட்டு திட்டம் காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, 2018-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் கீழ்நிலை ஆற்றோர மாநிலங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலே மதிப்பிடப்பட வேண்டும் என்றும் விஜய் கோரியுள்ளார்.

அரசியல் தலைவர்களின் எதிர்வினை என்ன?

இது தொடர்பாக எதிர்வினையாற்றியுள்ள தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பதிவில், "டெல்லி எஜமானர்களைப் பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.

இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என உதயநிதி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் பதிலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதில் தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் பழனிசாமியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்று 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களின் வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில், ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதைப் பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது' எனத் தெரிவித்துள்ளது." என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி, மேகேதாட்டு, உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு, கர்நாடகா

பட மூலாதாரம், X

இது தொடர்பாக எதிர்வினையாற்றியுள்ள தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும் 'வீ த லீடர்ஸ்' அமைப்பை தொடங்கியவருமான அண்ணாமலை, "கர்நாடகாவில் தேர்தல் ஆதாயங்களைப் பெறுவதற்காக, பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பரிசீலனையிலிருந்தே புறக்கணித்துள்ளது என்பதையே இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது." என்று தெரிவித்துள்ளார்.

ஜல் சக்தி துறை முன்னாள் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாக காணொளி ஒன்றைப் பகிர்ந்த அண்ணாமலை, "2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று, அப்போதைய மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நாடாளுமன்றத்தில் பேசுகையில், விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு கர்நாடக மாநில அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்கு உட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தொடர்பான சட்டத்தின்படி, மாநிலங்களுக்கு இடையே பாயும் நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கு, கீழ்நிலை ஆற்றோர மாநிலங்களிடமிருந்து (இவ்வழக்கில் தமிழ்நாடு) அனுமதி பெறுவது கட்டாயம் என்றும் கூறியிருந்தார்." எனத் தெரிவித்துள்ளார்.

காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும்

காவிரி நதி நீர் விவகாரத்தில் காவிரி தீர்ப்பாயம் 2007-ஆம் ஆண்டு வழங்கிய இறுதித் தீர்ப்பும், உச்ச நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பும் தான் அதிகமாக மேற்கோள் காட்டப்படுகிறது. அந்தத் தீர்ப்புகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் பல ஆண்டுகள் விசாரணை நடத்தி 2007-ஆம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதன்படி, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆண்டுதோறும் கிடைக்கும் நீரின் அளவு 740 டிஎம்சி எனக் கணக்கிடப்பட்டது.

இந்த நீரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவை பகிர்ந்து கொள்கின்றன.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்ட நீரின் அளவு

கர்நாடகா - 270 டிஎம்சி

தமிழ்நாடு - 419 டிஎம்சி

கேரளா - 30 டிஎம்சி

புதுச்சேரி யூனியன் பிரதேசம் - 7 டிஎம்சி

தமிழ்நாட்டுக்கான பங்கு என்பது தமிழ்நாட்டின் நீர்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நீர் ஆகிய இரண்டையும் உள்ளடக்கும். அதன்படி, கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பில், காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கான நீர் ஒதுக்கீட்டை மட்டும் மாற்றியமைத்தது.

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ஒதுக்கீடு 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டு 177.25 டிஎம்சி என நிர்ணயிக்கப்பட்டது. அதே வேளையில், கர்நாடகாவுக்கான ஒதுக்கீடு 14.75 டிஎம்சி அதிகரிக்கப்பட்டது.

காவிரி, மேகேதாட்டு, உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு, கர்நாடகா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காவிரி (கோப்புப் படம்)

'தண்ணீர் ஒதுக்கீட்டுக்கு மட்டுமே உச்ச நீதிமன்ற தீர்ப்பு பொருந்தும்'

மத்திய அரசின் பதில் தொடர்பாக தமிழ்நாடு பொதுப் பணித் துறை மூத்த அதிகாரிகள் அமைப்பின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் செயலாளரும் முன்னாள் பொதுப் பணித்துறை பொறியாளருமான வீரப்பன் அந்த அறிக்கையை பிபிசி தமிழுடன் பகிர்ந்தார்.

அந்த அறிக்கையின்படி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, தமிழ்நாட்டுக்கான நீர் ஓதுக்கீடு பாதிக்காத வரை கர்நாடக எல்லைக்குள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தமிழ்நாட்டின் முன்அனுமதி தேவையில்லை எனக் கூறுகிறது.

மேலும் அந்த அறிக்கையில், "காவிரி மேலாண்மை வாரியத்தின் முன் அறிவிப்பு மற்றும் ஆய்வுக்கு உட்படுத்துதல் இல்லாமல் எந்த மாநிலமும் காவிரிப் படுகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தண்ணீர் ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்பட்டதுடன் மட்டுமே தொடர்புடையது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

"காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் மற்ற விதிகள் அனைத்துமே அமல்படுத்தக்கூடிய ஒன்று தான். அவை மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே கட்டுமான பணிகள் மேற்கொள்வதை தடை செய்கிறது," என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது." என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

"முரண்பாடான நிலைப்பாடு" - தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்

மத்திய அரசின் நிலைப்பாடு முரண்பாடானது என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உமாபதி. இவர் தமிழ்நாடு அரசுக்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "காவிரி தீர்ப்பாயத்தில் ஏற்கெனவே உள்ள நதிநீர் திட்டங்கள் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேகேதாட்டு திட்டம் அதில் அனுமதிக்கப்படவில்லை. எனவே அதை மேற்கோள்காட்டி இதற்கு ஒப்புதல் தேவையில்லை எனக் கூற முடியாது. இதை தனியாகவே கையாள வேண்டும்." என்றார்.

காவிரி, மேகேதாட்டு, உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு, கர்நாடகா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காவிரி (கோப்புப் படம்)

பாஜகவின் நிலைப்பாடு என்ன?

மேகேதாட்டு திட்டம் தொடர்பாக மத்திய அரசும் மத்திய நீர்வளத் துறை இதுவரை எடுத்து வந்துள்ள நடுநிலையான, பொறுப்பான மற்றும் நியாயமான நிலைப்பாட்டை பாஜக முழுமையாக ஏற்றுக்கொள்கிறது என, அக்கட்சியின் மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் பதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட சட்டப்பூர்வ விளக்கம் மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "காவிரி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி காவிரி படுகையில் எந்தத் திட்டமும் நடைபெற முடியாது.

காவிரி மேலாண்மை ஆணையம், அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளையும் கொண்ட அமைப்பாக உள்ளபடியால் பல மாநிலங்களுக்கு எதிராக தீர்ப்பாயத் தீர்ப்பின்படி கீழ்நிலை மாநிலங்களின் நீர்ப் பங்கையோ, நீரை வெளியேற்றும் கால அட்டவணையையோ பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்காது.

மத்திய அரசு, காவிரி தீர்ப்பை நியாயமாக அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. தீர்ப்பை மீறும் அல்லது எந்த மாநிலத்தின் நலனையும் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்கப்படாது என அனைத்து காவிரி படுகை மாநில மக்களுக்கும் பாஜக உறுதியளிக்கிறது." என்றும் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு