விஜய்க்கு இந்திய கம்யூ. ஆதரவு - ஆட்சியமைக்க இன்னும் 4 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை

தவெக, விஜய், தமிழ்நாடு, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
படக்குறிப்பு, கோப்புப் படம்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லியில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழ்நாட்டில் மத சார்பற்ற அரசு அமைக்க தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நிலையில், மாலை 3.30 மணியளவில் தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் அங்கு சென்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதிதாக அமையும் சட்டப்பேரவைக்கு ராமச்சந்திரன் மற்றும் மாரிமுத்து ஆகிய 2 பேர் தேர்வாகியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சேர்த்து தவெக ஆட்சியமைக்க இதுவரை 114 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இன்னும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

'3 கட்சிகளும் ஆதரிக்கும்' - பேபி சூசகம்

முன்னதாக, விசிக மற்றும் இடது சாரிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்த நிலையில், அக்கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளிக்கக் கூடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி சூசகமாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பேபி, "புதிய கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சிக்கு பெரும்பான்மைக்கு சில தொகுதிகளே தேவைப்படுகின்றன. அக்கட்சியை ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். மர்மமான காரணங்களால், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவரை ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் அழைக்கவில்லை. அக்கட்சியை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும். தனிப்பெரும் கட்சியின் தலைவரை ஆளுநர் சந்தித்திருக்கிறார். ஆனால்,ட யார் உங்களுக்கு ஆதரவு தருவார்? பெரும்பான்மையை எவ்வாறு காட்டுவீர்கள்? என்று ஆளுநர் கேட்டிருக்கிறார். அது ஆளுநரின் பொறுப்பு அல்ல.

13 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வாஜ்பேயி அரசு அமைந்த போது, அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான பலம் உள்ளதா என்று குடியரசுத் தலைவர் கேட்கவில்லை. பிறகு வாஜ்பேயிக்கு ஒரு மாத அவகாசம் அளிக்கப்பட்டது. இங்கே, தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் மட்டுமே அவகாசம் கேட்டிருக்கிறார். மத்தியிலும் பல மாநிலங்களிலும் பின்பற்றப்பட்ட மரபை ஆளுநர் கடைபிடிக்காதது துரதிர்ஷ்டவசமானது." என்று அவர் கூறினார்.

தவெக, விஜய், தமிழ்நாடு, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி

மேலும் தொடர்ந்த அவர், "விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் நான் ஆகிய மூவரும் கலந்தாலோசித்தோம். இதுதொடர்பாக ஆலோசித்து அடுத்தக்கட்ட பொருத்தமான முடிவை எடுக்குமாறு மாநில கட்சி நிர்வாகங்களிடம் அறிவுறுத்தியிருந்தோம். ஆகவே, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தவெகவால் ஆளுநர் முன்னிலையிலும் கூட அறுதிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். அப்போது தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு தெரிவுகள் இருக்காது.

மூன்று கட்சிகளும் இன்று மாலை மீண்டும் இதுகுறித்து கலந்தாலோசிக்கும். இன்று மாலைக்குள் இந்த செயல்முறை நிறைவடையும் என்று எண்ணுகிறோம். எல்லாமே தெளிவாகிவிடும். ஆகவே, தனிப்பெரும் கட்சியின் தலைவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கும் நிலை உருவாகும்." என்று தெரிவித்தார்.

பேபியின் பேட்டி மூலம் தவெக ஆட்சியமைக்க விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் இன்று தங்களது ஆதரவை உறுதிப்படுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த 3 கட்சிகளுக்கும் உள்ள 6 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் விஜயால் தமிழக சட்டப்பேரவையில் அறுதிப் பெரும்பான்மையை நிரூபித்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக முன்னுள்ள வாய்ப்புகள்

இப்போதைய கள நிலவரப்படி,

  • தவெக வென்ற தொகுதிகள் 108. இரு தொகுதிகளில் வென்றுள்ள விஜய், ஒன்றில் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதால் தவெகவின் பலம் 107 ஆகும். அப்போது, அவையின் பலம் 233ஆக குறையும் என்பதால் பெரும்பான்மைக்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு போதும். சபாநாயகர் தவெக எனும் பட்சத்தில், அந்த எண்ணிக்கையை அடைய தவெகவுக்கு 11 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு உறுதி ஆகிவிட்டதால் தற்போதைய நிலையில், தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
  • திமுக கூட்டணியிலிருந்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கோரப்பட்டுள்ளது. இன்று (மே 8) இவர்கள் முடிவெடுத்து தவெகவை ஆதரிப்பதாகக் கடிதம் கொடுத்தால் மேலும் 6 உறுப்பினர்களுடன் தனிப் பெரும்பான்மை கிடைத்துவிடும். அவர்களின் ஆதரவுக் கடிதத்தையும் இணைத்து மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தால் ஆளுநர் அழைத்தேயாக வேண்டுமென்ற நிலை ஏற்படும்.
  • ஒருவேளை தற்காலிக சபாநாயகரைத் தேர்வு செய்யும்போது உறுப்பினர் எண்ணிக்கை ஒன்று குறைவதாக இருந்தால் வெளியிலுள்ள கட்சியில் இருந்து, உதாரணமாக தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர் பிரேமலதாவை நியமித்து (தேமுதிக ஏற்கும் பட்சத்தில்) நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வென்றுவிடலாம்.
  • ஒருவேளை பிரேமலதா இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அல்லது பாமக எம்எல்ஏக்களில் ஒருவரையும் இப்படி நியமிக்கலாம். அதுவும் இல்லாவிட்டால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை தற்காலிக சபாநாயகராகவும், தேர்தல் அலுவலராகவும் வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு