மெட்டா அலுவலகங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
இந்தியாவில் உள்ள பல மெட்டா அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி போராட்டம் நடத்திய காட்சி இது.
காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர், தங்களது உறுப்பினர்களின் சில இன்ஸ்டாகிராம் கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கியதைக் கண்டித்து, அந்நிறுவனத்தின் அலுவலகங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக அந்த அமைப்பு வெளியிட்ட காணொளிகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில், மெட்டா அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பதாகைகளை ஏந்தி முழக்கமிட்ட அவர்கள், அங்கிருந்த பூந்தொட்டிகளைத் தரையில் வீசி உடைத்ததுடன் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.
அதேபோல மும்பையில் உள்ள மெட்டா அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் வெளிப்புறச் சுவர்களில், மெட்டா நிறுவனத்திற்கு எதிரான வாசகங்களை காங்கிரஸ் கட்சியினர் கருப்பு நிற ஸ்பிரே பெயின்ட் மூலம் எழுதினர். அவர்களைத் தடுக்க முயன்ற பாதுகாப்புப் பணியாளர்களுடனும் அவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
புதுடெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, "இளைஞர் காங்கிரஸ் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மெட்டா (Meta) மறுத்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



