வியப்பூட்டும் வகையில் யுக்ரேனுக்கு வலு சேர்த்த இரான் போர் - ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் விரைவில் வருமா?

யுக்ரேன், டிரோன்கள்
    • எழுதியவர், காட்யா அட்லர்
    • பதவி, ஐரோப்பா ஆசிரியர்
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி தீவிரமான முகத்தோடு கடந்த மார்ச் மாதம் சௌதி அரேபியாவிற்கு வந்த தருணம் இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய போரில் முக்கியமான பலரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.

"உயிர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

ரஷ்யா உடனான போரின் சுமையை தனது தோள்களில் சுமந்து கொண்டிருக்கும் ஜெலென்ஸ்கி இந்த தருணத்தை தனதாக்கிக் கொள்ள முயன்றார்.

டிரோன் போர் முறை தொடர்பாக போர்க்களத்தில் யுக்ரேன் கற்றுக்கொண்ட ராணுவ நுட்பத்தின் சர்வதேச மதிப்பு மற்றும் சந்தைப்படுத்தலை பொதுவெளியில் காட்டுவதற்காகவே இந்த வளைகுடா பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.

தற்போது சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் உடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டிருப்பதாக யுக்ரேன் தெரிவிக்கிறது. இந்த அனைத்து நாடுகளும் சமீப வாரங்களில் இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கப்பட்டன. இது டிரோன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கூட்டணிகளை வலுப்படுத்தி அந்த வணிகத்தின் மூலமும் பணக்கார அமெரிக்க கூட்டணி நாடுகளுடன் மேற்கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலமும் பலனடையவதை நோக்கமாக கொண்டுள்ளது.

"வளைகுடா நாடுகள் தங்களை தற்காத்துக் கொள்ள உதவுவதற்கு நாங்கள் விரும்புகிறோம். மற்ற நாடுகளுடனும் இதுபோன்ற கூட்டணிகள் மேற்கொள்வதை நாங்கள் தொடர்வோம்," என ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

எரிவாயு அழுத்தம்

ஆரம்ப கட்டத்தில் யுக்ரேன் மீதான இரான் மோதலின் தாக்கம் மிகவும் எதிர்மறையான ஒன்றாக தெரிந்தது. இது ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே அமைதி முயற்சிகளை எடுப்பதை விட்டுவிட்டு டிரம்பின் கவனத்தை திசைதிருப்புவதோடு வேகமாக குறைந்து வந்த ரஷ்யாவின் போர் கஜானாவில் பணத்தைக் கொட்டும் வேலையைச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

மத்திய கிழக்கு எண்ணெய் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து உலகளாவிய சந்தையை அடைய முடியாத சூழலில் தனது எண்ணெயை பல நாடுகளுக்கு அதிக விலையில் ரஷ்யாவால் விற்க முடிந்தது. உலகம் முழுவதும் எண்ணெய் விலை அதிகரித்து வரும் சூழலில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான தடை மீதான விலக்கை டிரம்ப் நீட்டித்துள்ளார்.

ரஷ்யாவிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ அவ்வளவு நீண்ட காலத்திற்கும், கோட்பாட்டளவில் பார்க்கையில் தீவிரமாகவும் அதனால் யுக்ரேன் போரை தொடர முடியும்.

ஆனால் பிப்ரவரி 2022-இல் ரஷ்யா யுக்ரேனை ஊருவியதிலிருந்து சர்வதேச எதிர்பார்ப்புகளை குழப்பத்துடனே யுக்ரேன் கையாண்டுள்ளது.

தற்போது அதையே மீண்டும் செய்துள்ளது. இரான் போரை தனது நலனுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள யுக்ரேன் முயல்கிறது. இது ரஷ்யா உடன் அமைதி பேச்சுவார்த்தைகள் ஏற்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில் அதற்கு முன்பு வலுவான நிலையை அடைந்துவிட வேண்டும் என்கிற முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது.

யுக்ரேன், டிரோன்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வளைகுடா நாடுகளிடம் தனது போர்த்திறனை யுக்ரேன் பறைசாற்றி வருகிறது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த புதன்கிழமை புதினுடனான "மிகவும் சிறப்பான" உரையாடலுக்குப் பிறகு யுக்ரேன் மீதான தீர்வு "எதிர்பார்ப்பதை விட விரைவில்" எட்டப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

"ஒப்பந்தம் மேற்கொள்வதை சிலர் அவருக்கு (புதினுக்கு) கடினமாக்கி இருக்கலாம் என நினைக்கிறேன்," என்றும் டிரம்ப் கூறினார்.

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாதமைக்காக ஜெலென்ஸ்கியை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிக்கும் அதே வேளையில் புதின் பற்றி நேர்மறையான கருத்துகளை டிரம்ப் தெரிவிப்பது இது முதல்முறை அல்ல.

ஒரு "தீர்வு" இன்னும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே எங்கெல்லாம் முடிகிறதோ அங்கு யுக்ரேனை வலுப்படுத்தும் வேலையை ஜெலென்ஸ்கி செய்து வருகிறார். சந்தர்ப்பவாதம் தான் அவரின் ஆற்றல் மிகுந்த ஆயுதங்களில் ஒன்றாக உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சௌதி அரேபியா சென்ற ஜெலென்ஸ்கி, "யுக்ரேன் மீது ரஷ்யா செலுத்தும் அதே வகையான பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை சௌதியும் எதிர்கொண்டது." எனத் தெரிவித்தார்.

ரஷ்யாவின் சொந்த டிரோன்களுடன் குறைந்த செலவில், நீண்ட இலக்குகளை தாக்கும் இரானின் ஷாஹேத் டிரோன்கள் அதன் மிகவும் வலிமையான ஆயுதங்களில் ஒன்றாக உள்ளன.

ஒரு ஷாஹேத் டிரோனைத் தயாரிக்க 80,000 டாலரிலிருந்து 1,30,000 டாலர் வரை ஆகின்றன. இவற்றை சுமார் 10,000 டாலர் மதிப்புள்ள தொழில்நுட்பம் மூலமே இடைமறிக்க முடியும் என ஜெலென்ஸ்கி தெரிவிக்கிறார். பல மில்லியன் டாலர் செலவாகும் பாரம்பரிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளைவிட இது மிகவும் மலிவானது.

ரஷ்ய டிரோன் அச்சுறுத்தலை சமாளிக்க நேட்டோ நாடுகள் இதில் கவனம் செலுத்துகின்றன.

யுக்ரேன், டிரோன்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, யுக்ரேன் மீதான தாக்குதல்கள் தொடரும் நிலையில் தன்னால் விரைவாக போர்நிறுத்தத்தை அடைய முடியும் என நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் இரு ஐரோப்பிய கூட்டாளிகளுடன் முக்கியமான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை யுக்ரேன் மேற்கொண்டுள்ளது. நார்வேயுடன் 8.6 பில்லியன் டாலர் ஒப்பந்தம் அதில் ஒன்று. மற்றொன்று ஜெர்மனியுடன் மேற்கொள்ளப்பட்ட 4.7 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தமாகும்.

இதில் "வெவ்வேறு வகையான டிரோன்கள், ஏவுகணைகள், தொழில்நுட்பங்கள், மென்பொருள் மற்றும் நவீன பாதுகாப்பு அமைப்புகள்" ஆகியவை உள்ளடங்கும்.

ரஷ்யாவுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள யுக்ரேனுக்கு வளைகுடா நாடுகள் உதவும் என ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் வளங்கள் அனைத்தும் மத்திய கிழக்கில் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில் யுக்ரேனுக்கு உதவுவதற்காக ஐரோப்பியர்களுக்கு விற்பதற்கு அமெரிக்காவிடம் குறைவான ராணுவ தளவாடங்களே உள்ளன.

ஆயுதங்கள் மடை மாற்றப்படுமா என டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "நாங்கள் எப்போதும் அதைச் செய்கிறோம். சில நேரங்களில் ஒரு இடத்திலிருந்து எடுத்து இன்னொரு இடத்தில் பயன்படுத்துவோம்." எனத் தெரிவித்தார்.

"எங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை மத்திய கிழக்கு நாடுகள் வழங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்," என்று பிரெஞ்சு நாளிதழான லே மோண்டிற்கு அளித்த பேட்டியில் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், "எங்களிடம் போதுமான அளவு இல்லாத வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அவர்களிடம் உள்ளன. அதில் தான் ஒப்பந்தம் மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம்." என்றார்.

"உள் கட்டமைப்பு மீதான தாக்குதல்"

இரான் மோதலில் இருந்து தனக்கு பயன்படும் முக்கியமான பாடம் ஒன்றையும் யுக்ரேன் கற்றுக்கொண்டுள்ளது. எதிராளியின் எண்ணெய் ஏற்றுமதி நிலைகளை தாக்குவதன் மூலம் ஏற்படும் பெரும் தாக்கம் தான் அது. யுக்ரேன் தயாரிப்பான நீண்ட தூர இலக்கு கொண்ட டிரோன்களின் முக்கியமான குறியாக ரஷ்யா எரிவாயு கட்டமைப்பு உள்ளது.

ஜெலென்ஸ்கியைப் பொருத்தவரை, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்த போதிலும் ரஷ்யா தனது எரிவாயு துறையில் பல பில்லியன் டாலர்கள் அளவில் "முக்கியமான" இழப்புகளைச் சந்தித்து வருகிறது.

விலை அதிகரித்து வருவதும், ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் தளர்த்தப்பட்டதும், இரான் போரின் மூன்றாவது வாரத்தில் ரஷ்யாவின் வருவாயை (டிசம்பர் - பிப்ரவரி நிலையில் இருந்ததைவிட) 2.3 மடங்கு அதிகரித்துள்ளதாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி தரவுகள் காட்டுகின்றன.

ஆனால் நான்காவது வாரத்தில் எரிவாயு உற்பத்தி கட்டமைப்பு மீதான யுக்ரேனின் டிரோன் தாக்குதல்கள் ரஷ்ய வருவாயை 1 பில்லியன் டாலர் வரை குறைத்துள்ளது. அதற்கு முந்தைய வாரங்களில் பெற்ற லாபத்தில் மூன்றில் இரண்டு பங்கை இது இல்லாமல் செய்துவிட்டது.

விளாதிமிர் புதின், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒப்பந்தம் மேற்கொள்வதை சிலர் அவருக்கு (புதினுக்கு) கடினமாக்கியுள்ளதாக டிரம்ப் தெரிவிக்கிறார்.

இரான் போரால் யுக்ரேனுக்கு ஏற்பட்ட மற்றுமொரு நன்மை என்னவென்றால் அது மிகவும் எதிர்பார்த்திருந்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு பெற்ற 90 பில்லியன் யூரோ கடனுக்கான பச்சைக் கொடி கிடைத்துவிட்டது தான். அடுத்த ஆண்டில் ராணுவ உபகரணங்களைக் கொள்முதல் செய்து தயாரிப்பதற்கு இந்தக் கடன் தேவை என யுக்ரேன் கூறிவந்தது.

இந்தக் கடன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான ஹங்கேரியின் ரஷ்ய ஆதரவு முன்னாள் பிரதமரான விக்டர் ஆர்பனால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் நடந்த தேர்தலில் ஆர்பன் தோல்வியடைந்த பிறகு தற்போது ரஷ்யாவிடம் அதிக அளவில் நட்பு பாராட்டாத பிரதமர் ஒருவர் ஹங்கேரியில் உள்ளார்.

டிரம்பின் நெருங்கிய நண்பராகவும் அவரைப் பின்பற்றுபவராகவும் ஆர்பன் இருந்தார். அது தேர்தல் காலத்தில் அவருக்கு உதவவில்லை. எரிவாயு விலையை உயர்த்திய இரான் போரால் தாங்கள் கோபமடைந்திருந்ததாக வாக்காளர்கள் தெரிவித்தனர். இது ஆர்பனின் தோல்விக்கு வித்திட்டது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் யுக்ரேனுக்கான கடன் விடுவிக்கப்பட உள்ளது,

இந்த வெற்றிகளுக்கு மத்தியில் முன்பு இருந்ததைவிட தற்போது ஒவ்வொரு மாதமும் அதிக அளவிலான எதிரி வீரர்களைத் தொடர்ந்து கொன்று வருவதாக யுக்ரேன் பெருமையுடன் கூறி வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் 30,000 ரஷ்யா வீரர்களைப் பணியில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போதைய சூழலில், தான் பின்னடைவைச் சந்திப்பதாக ஜெலென்ஸ்கி எண்ணவில்லை. ரஷ்யா உடன் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள சிறந்த நிலையில் இருப்பதாகவும் அவர் உணர்கிறார்.

யுக்ரேனின் அவசரம் என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது. மக்கள் சோர்வாக உள்ளனர், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய வீரர்களைச் சேர்ப்பது யுக்ரேனுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. போர்களத்தில் இருக்கும் வீரர்களும் வீடு திரும்புவதிலேயே கவனமாக உள்ளனர்.

"மரியாதை குறைவு"

இந்தச் சூழலில் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளின் நிலை என்ன? கிறிஸ்துமசுக்கு முன்பாக டிரம்ப் நிர்வாகத்தால் அவை பரவலாகப் பேசப்பட்டன.

மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு பேசிய டிரம்ப், யுக்ரேனில் நிகழ்ந்து வரும் வன்முறையை 24 மணி நேரத்தில் நான் நிறுத்துவேன் என்று கூறிவந்தார். தற்போது அவர் பதவியில் இருக்கும் சூழலில், யதார்த்தம் வேறாக உள்ளது.

டிரம்பின் அமைதிப் பேச்சுவார்த்தை தூதர்களான அவரின் உறவினர் ஜாரெட் குஷ்னர் மற்றும் முன்னாள் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஸ்டீவ் விட்காஃப்-இன் நகர்வுகளைப் பின் தொடர்வதே மிகப்பெரிய துப்பு. யுக்ரேன் பயணம் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தற்போது மத்திய கிழக்கில் உள்ளனர்.

அவர்கள் இல்லாதது அவமரியாதை செய்வதைப் போல உள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இரான் மோதல் முடிகிற வரையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாது என்றும் ஜெலென்ஸ்கி கூறுகிறார். அது எப்போது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

குஷ்னரும் விட்காஃபும் அதிகாரப்பூர்வ பொறுப்பின் கீழ் யுக்ரேனுக்கு எப்போதுமே சென்றதில்லை. யுக்ரேனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமைதி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்த நிலையில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதமும் இருவரும் ரஷ்ய தலைநகருக்குச் சென்று வந்தனர். விட்காஃப் எட்டு முறை மாஸ்கோவுக்குச் சென்று வந்துள்ளார். தனிப்பட்ட முறையில் அவர் ரஷ்யாவில் நிறைய வணிகம் மேற்கொள்கிறார். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் புதினைச் சந்தித்துள்ளார்.

ரஷ்யா மீது எந்தச் சார்பும் இல்லை என டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு உத்தியை வாசித்தபோது யுக்ரேனும் இதர ஐரோப்பிய நாடுகளும் அதிர்ந்து போயின. அதில் ரஷ்யா ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக குறிப்பிடப்படவில்லை. நேட்டோவில் உள்ள ஐரோப்பிய கூட்டாளிகளால் ரஷ்யா பார்க்கப்படும் விதத்திற்கு நேர்மாறாக இது உள்ளது.

யுக்ரேன், ரஷ்யா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வளைகுடாவில் ஜெலென்ஸ்கி அடைந்திருக்கும் வெற்றி என்பது ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையில் யுக்ரேனின் நிலையை வலுப்படுத்தியுள்ளது.

யுக்ரேனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதன் முக்கியத்துவம் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. யுக்ரேனில் நிலையான அமைதியை நிறுவுவதிலே கவனம் செலுத்தப்படவில்லை. மாறாக அமெரிக்காவின் இதர தேவைகளுக்கான வளங்களை விடுவிக்க ரஷ்யா உடன் "உத்திசார் நிலைத்தன்மை" மற்றும் சாத்தியமான கூட்டணியை உறுதி செய்வதே அதில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கமாக உள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை ரஷ்யாவை மகிழ்ச்சியடையச் செய்கிறது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு உத்தி ரஷ்யாவின் தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போவதாக உள்ளது என ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருந்தார்.

டிரம்பின் கீழ், யுக்ரேன் (அல்லது அதன் ஐரோப்பிய ஆதரவாளர்கள்) ஏற்றுக்கொள்ள சாத்தியமில்லாத கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் ஒன்று இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை வர வைக்க நிர்பந்திக்கும் கடுமையான பொருளாதார தடைகளை அறிமுகப்படுத்தவோ அல்லது பராமரிக்கவோ முடியவில்லை.

இதற்கிடையே யுக்ரேனுக்கான அமெரிக்காவின் ராணுவ மற்றும் பொருளாதார உதவி குறைந்துவிட்டது. இந்தச் சூழலில் யுக்ரேனுக்கு வழங்குவதற்காக ராணுவ தளவாடங்களை அமெரிக்காவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் வாங்கி வருகின்றன. ஆனால் இரான் மோதலின் விளைவாக தற்போது அந்த விநியோகமும் ஆபத்தில் உள்ளது.

அமைதிக்கான வாய்ப்புகள்

ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு வர வைக்க ஒரு நாட்டால் முடியுமென்றால் அது அமெரிக்காவால் மட்டுமே சாத்தியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

தானாகவே முன்வந்து மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த அறிகுறிகளும் புதினிடம் தென்படவில்லை.

அதற்கு மாறாக, இரான் மீதான போரில் உலகின் கவனம் திரும்பியிருக்கும் சூழலில் யுக்ரேன் பொதுமக்கள் மற்றும் பொது கட்டமைப்பு மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இது பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு முன்பான இறுதிகட்ட தாக்குதல்களா அல்லது இதனை மேலும் தொடர்வதற்கான உறுதிப்பாடா என்பதில் மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் பலரும் இதனை மேலும் தொடர்வதற்கான அறிகுறியாகவே பார்க்கின்றனர்.

சர்வதேச பொருளாதார தடைகளால் ரஷ்ய பொருளாதாரம் தடுமாறி வந்தாலும் அது முற்றிலும் சிதையவில்லை. அது தற்போது போர்க்கால அடிப்படையில் இயங்கி வருகிறது. அதனை முடிவுக்கு கொண்டு வருவது எளிதல்ல. யுக்ரேனில் அமைதி உறுதி செய்யப்பட்டாலும் ஐரோப்பாவில் வேறு ஒரு இடத்தில் ஒரு நேட்டோ நாட்டைக் குறிவைத்து ரஷ்யா நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றே பல ஐரோப்பிய நாடுகள் நம்புகின்றன. நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் நேட்டோ அதனை ஒரு சாத்தியமாகவே குறிப்பிட்டுள்ளன.

இதுபோக புதினின் பெருமையும் லட்சியமும் உள்ளது. யுக்ரேனில் தோல்வியை ஒப்புக்கொள்ள அவர் தயாராக இருப்பாரா என்கிற கேள்வியும் உள்ளது.

"ரஷ்யாவில் பகுத்தறிவுள்ள அரசாங்கம் இருந்தால் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும்," என்கிறார் லண்டன் பொருளாதார பள்ளியில் சர்வதேச விவகாரங்கள் ஆய்வாளரான லூக் கூப்பர். இவர் பீஸ்ரெப் என்கிற அமைப்பில் யுக்ரேன் திட்டத்துக்கான இயக்குநராகவும் உள்ளார்.

"பொருளாதார தேக்க நிலை அல்லது சரிவில் உள்ளது. பணியில் உயிரிழக்கக்கூடிய ஆயிரக்கணக்கான ஆண்களை ரஷ்யா அனுப்பி வருகிறது. போர் பொருளாதாரத்தால் தனிநபர் வர்த்தக சிவிலியன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் ரஷ்யா சாதித்தது என்ன? யுக்ரேன் நிலப்பரப்பின் ஒரு சிறிய பகுதி தற்போது அதன் வசம் உள்ளது. போர் நிறுத்தத்தில் பொருளாதார தடைகளில் இருந்தான நிவாரணம் உள்ளடக்கப்பட்டால் அது பயனுள்ளதாகவே இருக்கும். ஆனால் புதின் அந்த வழியில் யோசிக்கவில்லை. இது ஏகாதிபத்திய லட்சியங்களுடன் ஓர் எதேச்சதிகார அமைப்பை நடத்தி வரும் ஒரு நபரின் முடிவைப் பற்றியதே," என்று அவர் கூறினார்.

யுக்ரேனின் சந்தேகம்

அமெரிக்காவின் ஈடுபாட்டிற்காக யுக்ரேன் காத்திருக்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் பேசுகையில் பல யுக்ரேன் அதிகாரிகளும் அமைதிக்கு தேவையானது என தாங்கள் கருதும் நடவடிக்கைகளை டிரம்பின் கீழ் உள்ள அமெரிக்க நிர்வாகம் எடுக்குமா என்பதில் சந்தேகத்திலே உள்ளனர். போர் நிறுத்தம் என வைத்துக் கொண்டாலும் ரஷ்யா மீண்டுமொரு நாள் தாக்காது என்பதை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் அதில் இடம்பெற்றிருக்குமா என்பதையும் சந்தேகத்துடனே பார்க்கின்றனர்.

உத்திசார் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான மையத்தின் மூத்த ஆலோசகர் மார்க் கன்சியன் பிபிசியிடம் பேசுகையில், "அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நம்பகத்தன்மையுடன் உள்ளது என யுக்ரேனியர்கள் நம்புவதோடு ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்களும் ஏற்றுக்கொள்ளும் பாதுகாப்பு உத்தரவாதங்களை உருவாக்குவதும் மிகவும் கடினம்." என்றார்.

ராயஸ் சர்வீஸ் இன்ஸ்டிட்யூடில் நிதி மற்றும் பாதுகாப்பு மையத்தின் இயக்குநராக உள்ள டாம் கீட்டிங் கூறுகையில், "யுக்ரேனில் தான் வெற்றி பெற்றதாக ரஷ்யா உணர்ந்தால் அது பரந்துபட்ட கண்டத்தின் பாதுகாப்பிற்கே ஆபத்து என நம்பும் ஐரோப்பிய தலைவர்களுக்கு 'இழப்பதற்கான நேரம் எதுவும் இல்லை'." எனத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் போர் நீடித்தாலும், பொறுமையின்மைக்கு அறியப்பட்ட டிரம்புக்கு இரான் உடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது சிக்கலாக தெரிந்தால் எப்போது வேண்டுமானாலும் தனது கவனத்தை இரானிடமிருந்து வேறு பக்கத்திற்கு திருப்பலாம் என்கிறார் கீட்டிங்.

அவர் உடனடியாக ரஷ்யா - யுக்ரேன் கேள்விக்குத் திரும்பலாம். அதனால் யுக்ரேனில் இதுநாள் வரையில் மேற்கொண்டதைவிட மிகவும் தீர்க்கமான நடவடிக்கைகளை ஐரோப்பியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கீட்டிங் வலியுறுத்துகிறார்.

யுக்ரேனுக்கு உதவுவது தொடர்பான கேள்விகள் எழுகின்ற போது "எவ்வளவு காலம் எடுத்தாலும்" என்கிற பதத்தை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவது, ஐரோப்பிய தலைவர்கள் யுக்ரேனில் அமைதியைத் தீவிரமாக முன்னெடுப்பதை விடுத்து போரை 'நிர்வகிக்கும்' வேலையையே செய்து வருவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

யுக்ரேன், ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனிப்பட்ட முறையில் பேசுகையில் பல யுக்ரேன் அதிகாரிகளும் அமைதிக்கான தேவையானது என தாங்கள் கருதும் நடவடிக்கைகளை டிரம்பின் கீழ் உள்ள அமெரிக்க நிர்வாகம் எடுக்குமா என்பதில் சந்தேகத்திலே உள்ளனர்.

இது தொடர்பாக மேலும் விவரித்த கீட்டிங், "அனைத்து உரைகள், யுக்ரேன் பயணங்கள், யுக்ரேனுக்கான ஆயுதங்களுக்கு செலவிட்ட தொகை என அனைத்துக்கும் அப்பால் கடுமையான பொருளாதார தடைகள் என்று வருகையில் 'ஐரோப்பியர்கள் அமெரிக்கர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்'. ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரிய வர்த்தக அமைப்பாக இருந்தாலும் அச்சத்துடனே செயல்படுகின்றன." எனத் தெரிவித்தார்.

ரஷ்யாவுக்கு எதிரான 21வது பொருளாதார தடைக்கான தொகுப்பை ஐரோப்பிய ஒன்றியம் தயார் செய்து வருகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆளுகையின் கீழ் குறிப்பாக பெல்ஜியத்தில் உள்ள, ரஷ்ய மத்திய வங்கியின் 210 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் என்னவாகும் என்கிற கேள்வி உள்ளது. அந்தப் பணத்தை பயன்படுத்தி யுக்ரேனுக்கு உதவலாம் என்கிற கருத்து ஒருபக்கம் இருந்தாலும் 90 பில்லியன் யூரோ மதிப்புள்ள கடனை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தயார் செய்துள்ளனர்.

ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் தாக்கம் ஏற்படுத்தும் விதத்தில் ஐரோப்பிய தலைவர்கள் செயல்படலாம் என்கிறார் கீட்டிங், "போரை முடிவுக்கு கொண்டு வர அவர்கள் தயாராகவோ அல்லது ஒன்றுபட்டோ இல்லை." என்றும் அவர் தெரிவித்தார்.

யுக்ரேனில் மோதல் முடிவுக்கு வர வேண்டும் என ஐரோப்பிய தலைவர்கள் உண்மையில் விரும்பினாலும் தங்களின் எல்லைகளில் நீடித்த அமைதி நிலவவும் போர்நிறுத்தம் ஏற்படவும் சில அசௌகரியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. யுக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் விரைவாக உறுப்பினராவதை ஆதரிக்கும் நாடுகள் குறைவாகவே உள்ளன.

யுக்ரேனில் மோதல் முடிவுக்கு வந்த பிறகு அங்கு யுக்ரேனில் நீடித்த அமைதியை பேண 'விருப்பமுள்ள நாடுகளின் கூட்டணி' (Coalition of the Willing)எனப்படும் பிரான்ஸ், பிரிட்டன் தலைமையிலான கூட்டுப்படைக்கு எத்தனை நாடுகள் எவ்வளவு காலம் துருப்புகளை அனுப்பும்? குறிப்பாக, அமெரிக்காவின் வான் பாதுகாப்பு இல்லாத சூழலில் என்பது கேள்விக்குறி.

வளைகுடாவில் டிரோன் தொழில்நுட்பத்தை யுக்ரேன் விற்பதை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. அமெரிக்க நிர்வாகத்துடனும் டிரோன் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஜெனெல்ஸ்கியின் முன்மொழிவையும் டிரம்ப் பொருட்படுத்தவில்லை.

ஆனால் இந்த விஷயங்கள் ஜெலென்ஸ்கியைப் பாதிப்பதாக தெரியவில்லை. அவர் தலைப்புச் செய்தியாக இருக்கின்ற வரையில் யுக்ரேன் மறக்கப்படாது என்றும் விரைவில் அமெரிக்காவின் கவனம் இந்தப் பக்கம் திரும்பும் என்றும் அவர் நம்புகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு