சொரியாசிஸ் தொற்று நோயா? குணப்படுத்த முடியுமா? சில கேள்விகளும் பதில்களும்

சருமம் செதில்களாக மாறுதல், அரிப்பு, அதனால் ஏற்படும் தடிப்புகள் என சொரியாசிஸ் உடலை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவரின் மனதையும் பாதிக்கும் ஒரு நோயாகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
    • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்

சொரியாசிஸ்.

சிவந்த சருமம், வெங்காயத் தோல் போன்று உரியும் சருமம்.

நெற்றி, தலை அல்லது வயிற்றுப் பகுதியைக் கூட இதன் பாதிப்புகள் விட்டுவைப்பதில்லை.

சருமம் செதில்களாக மாறுதல், அரிப்பு, அதனால் ஏற்படும் தடிப்புகள் என சொரியாசிஸ் உடலை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவரின் மனதையும் பாதிக்கும் ஒரு நோயாகும்.

சருமத்தில் சிவந்த, செதில்களுடன் கூடிய தடிப்புகள் தோன்றும்போது, பலரும் இது ஒரு சாதாரண தோல் நோய் என்று நினைக்கின்றனர்.

ஆனால், இந்தப் பிரச்னை அடிக்கடி ஏற்பட்டாலோ, அரிப்பு அல்லது எரிச்சல் இருந்தாலோ, அது சொரியாசிஸ் எனப்படும் நீண்டகால நோயாக இருக்கலாம்.

பலர் இதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், சொரியாசிஸ் குறித்து இன்னும் பல தவறான புரிதல்கள் உள்ளன.

இந்த நோய் தொற்றக்கூடியதா?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இது சருமத்துக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துமா? இதை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்த முடியும்?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் புரிந்துகொள்ள, முதலில் சொரியாசிஸ் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

சொரியாசிஸ் என்பது ஒரு ஆட்டோ இம்யூன் நோய்.

அதாவது, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தவறுதலாக உடலில் உள்ள சொந்த சரும செல்களையே தாக்குகிறது.

இதன் விளைவாக, புதிய சரும செல்கள் மிக வேகமாக உருவாகின்றன. அவற்றின் செதிலான அடுக்குகள் சருமத்தில் சேரத் தொடங்குகின்றன.

இதனால் சருமம் சிவந்து, தடிமனாகி, செதில்களுடன் காணப்படலாம். தடிப்புகளும் தோன்றலாம். இந்தத் தடிப்புகள் பெரும்பாலும் முழங்கைகள், முழங்கால்கள், தலையின் மேற்பகுதி மற்றும் முதுகில் காணப்படும்.

ஆனால், சொரியாசிஸின் பாதிப்பு சருமத்துடன் மட்டுமே நின்றுவிடுகிறதா என்பது தான் கேள்வி.

நிபுணர்களின் கூற்றுப்படி, 'இல்லை' என்பது தான் இதற்கான பதில்.

சில நோயாளிகளுக்கு இந்த நோய் மூட்டுகளையும் பாதிக்கலாம். இது சொரியாட்டிக் ஆர்த்ரைட்டிஸ் என்று அழைக்கப்படுகிறது.

இதனால் மூட்டு வலி, வீக்கம் மற்றும் அசைவதில் சிரமம் ஏற்படலாம். அதாவது, இந்த நோய் சருமத்தைத் தாண்டி உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கக்கூடும் என்பது தான் இதன் பொருள்.

சொரியாசிஸின் பாதிப்பு சருமத்துடன் மட்டுமே நின்றுவிடுகிறதா என்பதுதான் கேள்வி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

எனினும், அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. சிலருக்கு சிறிய தடிப்புகள் மட்டுமே காணப்படும். மற்றவர்களுக்கு சருமம் பெரிதளவில் பாதிக்கப்படலாம்.

அப்படியானால், இந்த அறிகுறிகளைத் தூண்டுவது எது?

சொரியாசிஸ் இருந்தால் என்ன நடக்கும்?

சொரியாசிஸ் என்பது நீண்டகாலமாகத் தொடரக்கூடிய, நோய் எதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடைய அழற்சி நோயாகும்.

மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கூட்டு விளைவால் இது ஏற்படுகிறது.

மரபணு ரீதியான பாதிப்பு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகமாகச் செயல்பட்டு, தவறுதலாக அழற்சியைத் தூண்டுகிறது. இதனால் சரும செல்கள் இயல்பை விட வேகமாக உருவாகி, உதிர்கின்றன.

இதன் விளைவாக தடிமனான, சிவந்த, செதில்களுடன் கூடிய தடிப்புகள் ஏற்படுகின்றன.

தொற்று, சருமத்தில் ஏற்படும் காயம், சில மருந்துகள், புகைப்பிடித்தல், உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் ஆகியவை சொரியாசிஸைத் தீவிரப்படுத்தும் பொதுவான காரணிகளாகும்.

சொரியாசிஸ் பார்ப்பதற்கு எப்படித் தெரிந்தாலும், இது தொற்று நோயோ அல்லது ஒவ்வாமையோ அல்ல. இது நோய் எதிர்ப்பு அமைப்பில் ஏற்படும் ஒரு கோளாறு என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

தொற்று, சருமத்தில் ஏற்படும் காயம், சில மருந்துகள், புகைப்பிடித்தல், உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் ஆகியவை சொரியாசிஸைத் தீவிரப்படுத்தும் பொதுவான காரணிகளாகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

சுகாதாரமற்ற சூழ்நிலைகளால் சொரியாசிஸ் ஏற்படுகிறது என்பது பொதுவாக நிலவும் ஒரு தவறான கருத்தாகும்.

இது குறித்து பிபிசி மராத்தி, தானேவில் உள்ள கேஐஎம்எஸ் மருத்துவமனையின் ஆலோசனை தோல் மருத்துவர் விஷாலாட்சி விஸ்வநாத்திடம் பேசியது.

மருத்துவர் விஷாலாட்சி கூறுகையில், "சொரியாசிஸுக்கும் தூய்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது தொற்றக்கூடிய நோயும் அல்ல. இது நீண்டகால ஆட்டோ இம்யூன் நோய்.

"இந்தக் கோளாறு ஏற்படும்போது, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தவறாகச் செயல்படத் தொடங்கி, சரும செல்களின் அசாதாரண வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதனால் சருமத்தில் தடிமனான, சிவந்த, செதில்களுடன் கூடிய தடிப்புகள் தோன்றுகின்றன.

"சொரியாசிஸ் என்பது பல காரணிகளால் ஏற்படும் நோய். மரபணு ரீதியான பாதிப்பு, நோய் எதிர்ப்பு அமைப்பில் ஏற்படும் கோளாறு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கூட்டு விளைவாக இது ஏற்படுகிறது.

"சரும ஆரோக்கியத்துக்கு தூய்மை முக்கியமானது என்றாலும், அது சொரியாசிஸை ஏற்படுத்தாது. அதேபோல், தூய்மை மட்டும் சொரியாசிஸை குணப்படுத்தாது" என்றார்.

“சொரியாசிஸ் என்பது பல காரணிகளால் ஏற்படும் நோய். மரபணு ரீதியான பாதிப்பு, நோய் எதிர்ப்பு அமைப்பில் ஏற்படும் கோளாறு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கூட்டு விளைவாக இது ஏற்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

தொடர்ந்து பேசிய அவர், "துரதிர்ஷ்டவசமாக, இந்த நோய் குறித்த தவறான புரிதல்களால் பல நோயாளிகள் இன்னும் சமூகத்தில் அவமதிக்கப்படுகிறார்கள். சொரியாசிஸ் என்பது தொற்று அல்லது சுகாதாரமற்ற சூழ்நிலையின் அறிகுறி அல்ல என்பதை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். இது பாகுபாட்டைக் குறைக்கவும், நோயாளிகள் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையைப் பெற ஊக்குவிக்கவும் உதவும்" என்றார்.

"நவீன சிகிச்சை முறைகளின் உதவியுடன் சொரியாசிஸை திறம்படக் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் நோயாளிகள் ஆரோக்கியமான சருமத்துடனும், சிறந்த வாழ்க்கைத் தரத்துடனும் வாழ முடியும்" என்று மருத்துவர் விஷாலாட்சி கூறுகிறார்.

சொரியாசிஸ் பற்றிய சில தவறான கருத்துக்களும் அவற்றுக்கான பதில்களும்

சொரியாசிஸ் குறித்து இன்னும் பல தவறான புரிதல்கள் உள்ளன. சொரியாசிஸ் குறித்த சில நம்பிக்கைகள், அதைப் பற்றிய தவறான தகவல்கள் பரவுவதற்கு வழிவகுக்கின்றன.

அதனால், சொரியாசிஸ் தொடர்பான சில தவறான புரிதல்களுக்கு பதில்களைப் பெற மருத்துவர் ரேஷ்மா விஷ்ணானியை அணுகினோம்.

மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ஆலோசனை தோல் மருத்துவர், டிரைக்காலஜிஸ்ட் (முடி உதிர்வு சிகிச்சை நிபுணர்) மற்றும் அழகியல் தோல் மருத்துவராக மருத்துவர்ரேஷ்மா பணியாற்றுகிறார்.

பிபிசி மராத்தியின் பின்வரும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

சொரியாசிஸ் தொற்றக்கூடிய நோயா? தொடுதல் அல்லது நெருங்கிய தொடர்பு மூலம் இது பரவுகிறது என்று பலர் இன்னும் ஏன் நம்புகிறார்கள்?

சொரியாசிஸ் தொற்றக்கூடியது அல்ல. இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது.

தொடுதல், கட்டிப்பிடித்தல், கைகுலுக்குதல், ஒன்றாகச் சாப்பிடுதல், நீச்சல் குளத்தைப் பயன்படுத்துதல் அல்லது உடலுறவு மூலம் இது பரவாது.

மரபணு ரீதியான அதிக உணர்திறன் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பின் அசாதாரண செயல்பாடு காரணமாக சொரியாசிஸ் ஏற்படுகிறது.

இது எந்த பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சையாலும் ஏற்படுவதில்லை. எனவே, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது பரவாது.

சருமத்தில் காணப்படும் சிவந்த, செதில்களுடன் கூடிய தடிப்புகள் தொற்று ஏற்படுத்தும் தோல் நோய்களைப் போலத் தோன்றலாம். இதனால்தான் இந்தத் தவறான புரிதல் ஏற்படுகிறது.

இந்தத் தவறான புரிதலால், சொரியாசிஸ் பாதித்தவர்கள் சமூகத்தில் அவமரியாதையையும் தனிமையையும் எதிர்கொள்கின்றனர். சொரியாசிஸ் என்பது நோய் எதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடைய நோய் என்பதைப் புரிந்துகொள்வது, பாகுபாட்டைக் குறைக்க முக்கியம்.

சருமத்தில் காணப்படும் சிவந்த, செதில்களுடன் கூடிய தடிப்புகள் தொற்று ஏற்படுத்தும் தோல் நோய்களைப் போலத் தோன்றலாம். இதனால்தான் இந்தத் தவறான புரிதல் ஏற்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

சொரியாசிஸ் சருமத்தை மட்டுமே பாதிக்கும் நோயா? அல்லது உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்குமா?

சொரியாசிஸ் சருமத்தை மட்டுமே பாதிக்கும் நோய் அல்ல என்பது பலருக்குத் தெரியாது. தற்போது, இது முழு உடலையும் பாதிக்கும் அழற்சி நோயாகக் கருதப்படுகிறது.

சுமார் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு பின்னர் சொரியாட்டிக் ஆர்த்ரைட்டிஸ் ஏற்படலாம். இதனால் மூட்டு வலி, இறுக்கம் மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

மிதமானது முதல் தீவிரமான சொரியாசிஸ் உள்ளவர்களுக்கு இதய நோய், மெட்டபாலிக் சிண்ட்ரோம், டைப் 2 நீரிழிவு, குடல் அழற்சி நோய் மற்றும் மனச்சோர்வு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

நகங்களில் மாற்றங்களும், கண்களில் அழற்சியும் ஏற்படலாம். எனவே, சொரியாசிஸ் சிகிச்சையில் சருமத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது.

சொரியாசிஸ் பரம்பரை நோயா? குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் இருந்தால், மற்றவர்களுக்கு ஏற்படும் அபாயம் எந்த அளவுக்கு அதிகரிக்கும்?

சொரியாசிஸில் மரபணுக்கள் நிச்சயமாகப் பங்கு வகிக்கின்றன. ஆனால், இதை அவ்வளவு எளிமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

இதுவரை, இந்த நோய்க்கான மரபணு பாதிப்புடன் தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட மரபணு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், HLA-C*06:02 முக்கியமான மரபணு காரணியாகக் கருதப்படுகிறது.

நெருங்கிய குடும்ப உறுப்பினருக்கு சொரியாசிஸ் இருந்தால், இந்த நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ஆனால், குடும்பத்தில் பலருக்கு இந்த நோய் இருந்தபோதிலும், சிலருக்கு சொரியாசிஸ் ஏற்படுவதில்லை. அதேபோல், குடும்பத்தில் யாருக்கும் இந்த நோய் இல்லாத சிலருக்கும் சொரியாசிஸ் ஏற்படலாம்.

எனவே, மரபணுக்கள் மட்டுமே போதுமான காரணம் அல்ல. சுற்றுச்சூழல் காரணிகளும், நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாடும் முக்கியம். ஒட்டுமொத்தமாக, சொரியாசிஸ் என்பது பல காரணிகளால் ஏற்படும் நோயாகும்.

சில குறிப்பிட்ட உணவுகள் சொரியாசிஸை ஏற்படுத்துமா? அல்லது உணவுக்கும் சொரியாசிஸுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் சிக்கலானதா?

குறிப்பிட்ட எந்த உணவும் சொரியாசிஸை ஏற்படுத்தும் என்பது நிரூபிக்கப்படவில்லை.

எனினும், உணவுக்கும் சொரியாசிஸுக்கும் இடையிலான தொடர்பை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அதிக உடல் எடை கொண்டவர்கள் ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது முக்கியம். ஏனெனில், உடல் பருமன் உடலில் அழற்சியை அதிகரிக்கச் செய்வதுடன், சிகிச்சையின் செயல்திறனையும் குறைக்கக்கூடும்.

செலியாக் நோய் இருப்பது கண்டறியப்பட்டவர்களுக்கு, குளூட்டன் இல்லாத உணவு பயனளிக்கலாம்.

ஆனால், அனைவரும் குளூட்டனைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

சமச்சீரான மத்திய தரைக் கடல் உணவு ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், அது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகாது.

உணவு தொடர்பான ஆலோசனைகள் எப்போதும் தனிநபரின் நிலைக்கு ஏற்பவும், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.

சொரியாசிஸை முழுமையாகக் குணப்படுத்த முடியுமா? அல்லது வாழ்நாள் முழுவதும் கட்டுப்படுத்த வேண்டிய நோயா?

சொரியாசிஸ் என்பது நீண்டகால நோயாகும். தற்போது இதற்கு நிரந்தரமான குணப்படுத்தும் சிகிச்சை இல்லை. எனினும், தற்போது கிடைக்கும் சிகிச்சைகளின் மூலம் இதை திறம்படக் கட்டுப்படுத்த முடியும்.

பல நோயாளிகள் நீண்ட காலத்துக்கு சருமத்தில் தடிப்புகள் முழுமையாகவோ அல்லது கிட்டத்தட்ட முழுமையாகவோ இல்லாத நிலையைப் பராமரிப்பதில் வெற்றி பெறுகின்றனர்.

சிகிச்சைகளில் சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள், ஒளிக்கதிர் சிகிச்சை, மெத்தோட்ரெக்சேட் போன்ற பாரம்பரிய மருந்துகள் மற்றும் குறிப்பிட்ட அழற்சி ஏற்படுத்தும் பாதைகளை இலக்காகக் கொண்ட நவீன உயிரியல் சிகிச்சைகள் ஆகியவை அடங்கும்.

ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிதல், தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது, சிகிச்சையை முறையாகப் பின்பற்றுவது மற்றும் தொடர்புடைய பிற நோய்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவை நீண்டகால கட்டுப்பாட்டுக்கும், வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும்.

சிகிச்சைகளில் சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள், ஒளிக்கதிர் சிகிச்சை, மெத்தோட்ரெக்சேட் போன்ற பாரம்பரிய மருந்துகள் மற்றும் குறிப்பிட்ட அழற்சி ஏற்படுத்தும் பாதைகளை இலக்காகக் கொண்ட நவீன உயிரியல் சிகிச்சைகள் ஆகியவை அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

தற்போது என்னென்ன புதிய சிகிச்சை முறைகள் உள்ளன?

கடந்த பத்தாண்டுகளில் சொரியாசிஸ் சிகிச்சையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நோயின் தீவிரத்தைப் பொறுத்து, சருமத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள், ஒளிக்கதிர் சிகிச்சை, வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மற்றும் அழற்சியை ஏற்படுத்தும் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு அமைப்பு பாதைகளை இலக்காகக் கொண்ட நவீன சிகிச்சைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இன்று, பல நோயாளிகள் சருமத்தில் தடிப்புகள் முழுமையாகவோ அல்லது கிட்டத்தட்ட முழுமையாகவோ இல்லாத நிலையைப் பராமரிப்பதுடன், தங்களது வாழ்க்கைத் தரத்தையும் கணிசமாக மேம்படுத்திக்கொள்ள முடிகிறது.

சொரியாசிஸ் மற்றும் மனநலம்

சொரியாசிஸ் என்பது வெறும் தோல் நோய் மட்டுமல்ல.

சொரியாசிஸ் என்பது சருமத்தை மட்டுமே பாதிக்கும் நோய் அல்ல. இது ஒருவரின் மனநலத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆய்வுகளின்படி, சொரியாசிஸ் உள்ளவர்களில் சுமார் 30 முதல் 50 சதவீதம் பேர் மனச்சோர்வு அல்லது பதற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

சருமத்தில் ஏற்படும் அறிகுறிகள், ஒருவரின் சுயமரியாதை, சமூக நம்பிக்கை மற்றும் நெருக்கமான உறவுகளைப் பாதிக்கக்கூடும்.

மேலும், மன அழுத்தம் சொரியாசிஸ் தீவிரமடைவதை அதிகரிக்கலாம். அதே நேரத்தில், சொரியாசிஸும் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். இதனால் ஒரு தீய சுழற்சி உருவாகிறது.

சருமத்தில் ஏற்படும் அறிகுறிகள், ஒருவரின் சுயமரியாதை, சமூக நம்பிக்கை மற்றும் நெருக்கமான உறவுகளைப் பாதிக்கக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

சொரியாசிஸ் உள்ளவர்களிடம் உளவியல் ரீதியான பாதிப்பை எவ்வாறு அடையாளம் காண்பது, எப்போது மனநல நிபுணரின் உதவியை நாட வேண்டும் என்பது குறித்து, புனேவைச் சேர்ந்த மூத்த மருத்துவ உளவியல் நிபுணர் விஜய் மஹாலேவிடம் கேட்டோம்.

விஜய் மஹாலே கூறுகையில், "சொரியாசிஸ் உள்ளவர்களிடம் மன உளைச்சல் பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியாது. எனவே, நிபுணர்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள், நோயாளிகளுடனான உரையாடல்கள் மற்றும் அவர்களின் நடத்தையைக் கவனிப்பதன் மூலம் இந்த மன உளைச்சலைக் கண்டறிய முயற்சிக்கின்றனர்.

"மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை அளவிட ஹெச்ஏஎம்-டி (HAM-D) மற்றும் ஹெச்ஏஎம்-ஏ (HAM-A) போன்ற தரப்படுத்தப்பட்ட பரிசோதனைகளைப் பயன்படுத்தலாம் என்றார்.

"'சொரியாசிஸ் உங்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?' அல்லது 'இந்த நோய் உங்களை எப்போதாவது மிகவும் சோகமாகவோ அல்லது பதற்றமாகவோ உணரச் செய்கிறதா?' போன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம், நோயாளிகள் எதிர்கொள்ளும் உணர்வுபூர்வமான சிரமங்கள் குறித்து தகவல்களைப் பெற முடியும்.

"தற்கொலை எண்ணங்கள், கடுமையான மனச்சோர்வு, சமூக அல்லது தொழில்முறை வாழ்க்கையில் பெரும் பாதிப்பு அல்லது உளவியல் காரணங்களால் சிகிச்சையைத் தவிர்ப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், நோயாளி உடனடியாக மனநல நிபுணரை அணுக வேண்டும்" என்றார்.

(தற்கொலை என்பது ஒரு தீவிரமான மன மற்றும் சமூகப் பிரச்னையாகும். நீங்களும் மன அழுத்தத்தில் இருந்தால், இந்திய அரசின் ஜீவன் சாத்தி உதவி எண் 18002333330-ஐ அணுகலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் நீங்கள் பேச வேண்டும்.)

நோயாளிகளுக்கு அறிவுரை கூறாதீர்கள், ஆதரவு அளியுங்கள்

சொரியாசிஸ் போன்ற ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு தேவை. அவர்களின் உணர்வுகள், ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைக் கவனிப்பதும், தொடர்ந்து அறிவுரைகளை வழங்குவதற்குப் பதிலாக அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் முக்கியம்.

சொரியாசிஸ் போன்ற ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆதரவு தேவை. அவர்களின் உணர்வுகள், ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைக் கவனிப்பதும், தொடர்ந்து அறிவுரைகளை வழங்குவதற்குப் பதிலாக அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் முக்கியம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

இது குறித்து விஜய் மஹாலே கூறுகையில், "சொரியாசிஸ் உள்ள ஒருவருக்கு உதவுவதற்கான மிக முக்கியமான வழி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வதாகும். அவர்கள் விரக்தியாகவோ, சங்கடமாகவோ, கோபமாகவோ அல்லது சோகமாகவோ உணரக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆனால், உடனடியாக தீர்வுகளை வழங்க அவசரப்பட வேண்டாம்.

"தேவையில்லாத மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்குப் பதிலாக, 'உங்களுக்கு ஆலோசனை வேண்டுமா அல்லது உங்கள் மனதில் இருப்பதைச் சொல்ல விரும்புகிறீர்களா?' என்று கேட்கலாம். அவர்களை சரும நோய் உள்ள ஒருவராக மட்டும் பார்க்காமல், முழுமையான ஒரு மனிதராக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களின் வரம்புகளை மதியுங்கள். சமூக நிகழ்வுகளில் பங்கேற்குமாறு அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்.

"சொரியாசிஸ் குறித்து நீங்களே தெரிந்துகொள்வதன் மூலம், அதைப் பற்றி மற்றவர்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்க வேண்டிய சுமையை அவர்களுக்கு குறைக்கலாம்.

"எது சரி, எது தவறு என்று தீர்ப்பளிப்பதைவிட, அவர்களின் பேச்சைக் கேட்டு, அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணரச் செய்வதே முக்கியம்" என்றார்.

சொரியாசிஸ் உள்ளவர்களுக்கு சிகிச்சையாளர்கள் எவ்வாறு உதவ முடியும் என்று கேள்வி எழுப்பினோம். விஜய் மஹாலே அதற்கு பதில் கூறுகையில், "சிகிச்சையாளர்களாகிய எங்களது பங்கு உளவியல் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. நோயாளிகள் தங்களைத் தாங்களே அதிக அன்புடனும் கருணையுடனும் பார்க்க உதவுவதும் அதே அளவு முக்கியமானது. அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) , எதிர்மறையான சிந்தனை முறைகளை மாற்ற உதவும். அதேநேரத்தில், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் உறுதிப்பாட்டு சிகிச்சை (ACT ), உடல் ரீதியான அசௌகரியம் இருந்தாலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ ஒருவருக்கு உதவுகிறது" என்றார்.

மேலும், "நோயாளிகள் தங்களைத் தாங்களே கடுமையாக நடத்திக்கொள்ளக் கூடாது. மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, யோகா ஆகியவற்றைச் சார்ந்திருக்க வேண்டும். மேலும், படிப்படியாக சமூக வாழ்க்கையில் மீண்டும் ஈடுபட வேண்டும்.

"ஆலோசனை, ஆதரவுக் குழுக்கள் மற்றும் தோல் மருத்துவர்கள், மனநல நிபுணர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவை நீண்டகால சிகிச்சை மேலாண்மையின் முக்கிய பகுதிகளாகும்" என்றும் தெரிவித்தார்.

நோயாளிகளைப் புரிந்துகொள்வது முக்கியம்

சொரியாசிஸைச் சுற்றி சமூகத்தில் காணப்படும் எண்ணம், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இந்த நோய் தொற்றக்கூடியது அல்லது சுகாதாரமற்ற நிலையுடன் தொடர்புடையது என்ற தவறான புரிதல்கள், மக்கள் கைகுலுக்குதல், உடல் ரீதியான தொடர்பு அல்லது பொது இடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வழிவகுக்கலாம். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் தனிமை உணர்வுக்கு ஆளாகலாம்.

பள்ளிகளில் குழந்தைகள் கேலி, கிண்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அதேநேரம், பெரியவர்கள் பணியிடங்களில் பாகுபாடு, வேலை நேர்காணல்களில் சங்கடமான சூழ்நிலைகள் மற்றும் சமூக அல்லது விளையாட்டு நிகழ்வுகளில் தயக்கம் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.

காலப்போக்கில், இது தன்னம்பிக்கையைப் பாதித்து, பதற்றம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கலாம். அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே இந்த அணுகுமுறையை மாற்ற முடியும்.

காலப்போக்கில், இது தன்னம்பிக்கையைப் பாதித்து, பதற்றம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கலாம். அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே இந்த அணுகுமுறையை மாற்ற முடியும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மைண்ட்ஃபுல்னெஸ் எனப்படும் விழிப்புணர்வு அடிப்படையிலான பயிற்சியை ஒரு வழியாக மருத்துவர் கேதார் தில்வே பரிந்துரைக்கிறார். இவர் முலுண்டில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை மற்றும் வாஷியில் உள்ள ஃபோர்டிஸ் ஹிரானந்தனி மருத்துவமனையில் ஆலோசனை மனநல மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

மருத்துவர் தில்வே கூறுகையில், "மைண்ட்ஃபுல்னெஸ் அடிப்படையிலான மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களைத் தொடர்ந்து பயிற்சி செய்வது இந்த நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

"பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதும், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பதும் இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளும் திறனை அதிகரிக்கும். மேலும், சரியான நேரத்தில் மனநல நிபுணரை அணுகுவது, தீவிரமான மனநல நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்கலாம்" என்றார்.

“பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதும், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பதும் இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளும் திறனை அதிகரிக்கும். “மேலும், சரியான நேரத்தில் மனநல நிபுணரை அணுகுவது, தீவிரமான மனநல நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்கலாம்” .

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

சொரியாசிஸ் நோயாளிகளிடம் பேசும்போதும், அவர்களுடன் வாழும்போதும் நாம் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் உள்ளன. நமது நடத்தையும், குடும்ப உறுப்பினர்களின் நடத்தையும் அவர்களின் நிலையை மோசமாகப் பாதிக்கக்கூடும். அவர்களை நன்றாகப் புரிந்துகொள்வது முக்கியம்.

குடும்பத்தினரும் நோயாளிகளும் தவிர்க்க வேண்டிய தவறுகள் குறித்து கேள்வி எழுப்பினோம். ​​மருத்துவர் கேதார் தில்வே அக்கேள்விக்குப் பதில் கூறுகையில், "நோயாளிகள் வெளிப்படுத்தும் மனநலப் பிரச்னைகளைப் புறக்கணிப்பது அல்லது முற்றிலும் அலட்சியப்படுத்துவது பொதுவான தவறு.நடத்தையில் திடீர் மாற்றங்கள், மனநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் அல்லது சிகிச்சையைத் தொடர்ந்து முறையாகப் பின்பற்றாமல் இருப்பது போன்ற எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிப்பது தீவிரமான மனநலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்"என்றார்.

"தொடர்ச்சியான அன்றாட நடைமுறைகள், நல்ல பணி-வாழ்க்கை சமநிலை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆகியவை மனநலத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

"மேலும், மைண்ட்ஃபுல்னெஸ் அடிப்படையிலான மன அழுத்த மேலாண்மை நுட்பங்களைப் பயன்படுத்துவதும், சரியான நேரத்தில் அருகில் உள்ள மனநல நிபுணரின் உதவியை நாடுவதும் மிகவும் முக்கியம்" என்றார்.

சொரியாசிஸ் நோயாளிகளிடம் பேசும்போதும், அவர்களுடன் வாழும்போதும் நாம் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் உள்ளன. நமது நடத்தையும், குடும்ப உறுப்பினர்களின் நடத்தையும் அவர்களின் நிலையை மோசமாகப் பாதிக்கக்கூடும். அவர்களை நன்றாகப் புரிந்துகொள்வது முக்கியம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

உங்கள் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய விரும்பினாலோ, உங்கள் உணவுமுறையை மாற்றினாலோ, மருந்துகளை எடுத்துக்கொண்டாலோ, அல்லது உடற்பயிற்சியைத் தொடங்கினாலோ, ஒரு மருத்துவர் மற்றும் தகுதிவாய்ந்த பயிற்சியாளரின் உதவியை நாடுவது அவசியம்.

மருத்துவரிடம் உடலையும் அறிகுறிகளையும் முறையாகப் பரிசோதித்து, அவர்களின் ஆலோசனையுடன் மட்டுமே வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்வது சிறந்தது.

மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்வது ஆபத்தானதாக அமையலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு