இந்தியா, பாகிஸ்தான் இடையே கொழும்பில் மறைமுக பேச்சுவார்த்தை நடந்ததா? முழு பின்னணி

ராம் மாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராம் மாதவ் 2014 முதல் 2020 வரை பாஜக-வின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தார்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

என்ன நடக்கிறது என்பது வெளியில் தெரிவதில்லை, வெளியில் தெரிவது நடப்பதில்லை என்று ராஜ்ஜீய பேச்சுவார்த்தைகள் குறித்துப் பல நேரங்களில் சொல்லப்படுவது உண்டு.

அரசியல் அறிக்கைகளின் அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா இடையிலான உறவுகளை உற்று நோக்கினால், இரு நாடுகள் இடையே மூச்சுவிடக்கூட இடமில்லாத அளவுக்குப் பதற்றம் மிக அதிகமாக இருப்பது போலத் தோன்றும்.

ஜூன் 27 அன்று, லண்டனை சேர்ந்த ஒரு சிந்தனைக் குழு கொழும்பில் பிராந்திய பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்து இருந்ததாகவும், அதில் இந்திய, பாகிஸ்தானிய தூதுக் குழுக்கள் டிராக் 2 பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாகவும் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' ஆங்கில நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ராட்டஜிக் ஸ்டடீஸ் அமைப்பின் இந்தப் பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான், பிரிட்டன் உள்படப் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இந்திய, பாகிஸ்தானிய பிரதிநிதிகள் இடையே ஒன்றரை நாட்களாகப் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் வட்டாரங்களை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளது.

இந்த இந்திய தூதுக்குழுவில், 2014 முதல் 2020 வரை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகப் பணியாற்றியவரும், தற்போது புது டெல்லியை தளமாகக் கொண்ட 'இந்தியா பவுண்டேஷன்' சிந்தனைக் குழுவின் தலைவராக இருப்பவருமான ராம் மாதவ் இடம் பெற்றிருந்தார்.

ஜெனரல் எம்.எம். நரவனே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெனரல் எம்.எம். நரவனே 2019 முதல் 2022 வரை இந்திய ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்தார்

ராம் மாதம் எதிர்வினை என்ன?

ராம் மாதவ் ஜூன் 27 அன்றே இந்த அறிக்கை குறித்துத் தனது எதிர்வினையைத் தெரிவித்திருந்தார். அதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், "இது முற்றிலும் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையான டிராக்-2 பேச்சுவார்த்தையும் அல்ல. இது ஐஐஎஸ்எஸ் அமைப்பின் வருடாந்திர தெற்காசிய உரையாடல். இதில் இந்தியா, இலங்கை, அமெரிக்கா, பிரிட்டன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்" என்று எழுதியுள்ளார்.

மேலும், "கடந்த காலங்களில், அதிகாரிகளும் இந்த வருடாந்திர உரையாடலில் பங்கேற்றுள்ளனர். இத்தனை நாடுகளுடன் டிராக்-2 பேச்சுவார்த்தைகள் எதுவும் நடப்பதில்லை. இந்த இரண்டு நாள் உரையாடலில் நான் முழுமையாகப் பங்கேற்கவில்லை. ஒரேயொரு அமர்வில் பேசுவதற்கு மட்டுமே எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அமர்வில் பங்கெடுத்து, எனது கருத்துகளை முன்வைத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டேன். இது தேவையின்றி பெரிதாக்கப்பட்டுள்ளது" என்றும் எழுதியுள்ளார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த 2019 முதல் 2022 வரை இந்திய ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் எம்.எம். நரவனேவும் இந்தத் தூதுக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

ஜூன் 24 அன்று, எம்.எம். நரவனே ஒரு சமூக ஊடகப் பதிவின் மூலம் தனது கொழும்பு பயணத்தை உறுதிப்படுத்தினார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, முன்னாள் இந்திய தூதர் ருச்சி கன்ஷ்யாமும் இந்தத் தூதுக் குழுவில் இடம்பெற்றிருந்தார். அவர் 1990களின் பிற்பகுதியில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய முதல் பெண் தூதர்களில் ஒருவர்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திப்படி, இந்தச் சந்திப்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றும் ஒரு தூதருடன், தெற்காசியா மற்றும் சார்க் விவகாரங்களுக்கான இயக்குநர் ஜெனரல் சஜ்ஜாத் ஹைதர் கானும் கலந்துகொண்டார்.

அவருடன், 2011 முதல் 2013 வரை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராகப் பணியாற்றிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஷெர்ரி ரஹ்மானும் உடனிருந்தார்.

பாகிஸ்தானிய தூதுக் குழுவில், இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் அமைப்பில் பணியாற்றியவரும், இயந்திரமயமாக்கப்பட்ட படைப் பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கியவருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) இஸ்ஃபந்தியார் அலி படோடியும் இடம்பெற்றிருந்தார்.

பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபின் பிஎம்எல்-என் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணியில் பிபிபி கட்சி ஓர் அங்கமாக உள்ளது. மே 2025இல் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட நான்கு நாள் மோதலுக்குப் பிறகு, இரு நாடுகள் இடையிலான இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஏப்ரல் 2025இல் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் இந்தியா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியபோது இந்தப் பதற்றம் தொடங்கியது.

விக்ரம் மிஸ்ரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி

இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுவது என்ன?

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை உதவிச் செயலாளர் எஸ். பால் கபூர் ஜூன் 21 முதல் 24 வரை இலங்கைக்குப் பயணம் செய்தார். மாநாட்டில் பங்கேற்றவர்களுக்காக ஐஐஎஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்திலும் கபூர் கலந்துகொண்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் எழுதியுள்ளது.

ஜூன் 29 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் டிராக்-2 பேச்சுவார்த்தையில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டது. இந்தச் சந்திப்புகள் தனிப்பட்ட முயற்சிகள் என்றும், இதில் அரசின் அதிகாரபூர்வ ஈடுபாடோ, ஆதரவோ இல்லை என்றும் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெளிவுபடுத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்த செய்திகள் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த மிஸ்ரி, இத்தகைய பேச்சுவார்த்தைகள் புதியவை அல்ல என்றும், இந்திய அரசு இவற்றை எந்த அதிகாரபூர்வ செயல்முறையின் அங்கமாகவும் கருதவில்லை என்றும் கூறினார்.

மேலும் அவர், "நான் இந்த செய்திகளைப் பார்த்திருக்கிறேன், இது குறித்து எனக்குத் தெரியும். முதலாவதாக, உலகெங்கிலும் பல இடங்களில் பல்வேறு தலைப்புகளில் இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. எனவே இதில் புதியதாகவோ, சிறப்பாகவோ எதுவுமில்லை" என்றார்.

அதோடு, "பாகிஸ்தான் அரசாங்கம் சார்பாக என்னால் பேச முடியாது, ஆனால் இந்திய அரசுத் தரப்பில் இதில் எந்தவித அதிகாரபூர்வ ஈடுபாடோ, ஆதரவோ அல்லது எந்தவொரு அதிகாரபூர்வமான பங்களிப்போ இல்லை என்பது மட்டும் தெளிவு" என்று மிஸ்ரி கூறியிருந்தார்.

வெளியுறவு அமைச்சகத்தின் இந்த அறிக்கை குறித்த தனது கருத்தை பாகிஸ்தானிய பாதுகாப்பு ஆய்வாளர் ஆயிஷா சித்திகா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், "லண்டன் ஐஐஎஸ்எஸ் அமைப்பின் தெற்காசியா பிரிவின் தலைவர் இதைக் கேட்டு மிகவும் ஏமாற்றமடைவார் என்று தோன்றுகிறது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்த முயன்று லண்டன் தொடர்ந்து பணத்தைச் செலவழித்து வருகிறது. ஆனால் எந்தப் பலனும் தென்படவில்லை. அதன் டிராக்-2 பேச்சுவார்த்தை உண்மையில் நல்லுறவை மேம்படுத்துவதைப் பற்றியதாக இல்லாமல் இருக்கவும் சாத்தியமுள்ளது" என்று எழுதியுள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஷெர்ரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஷெர்ரி ரஹ்மானும் கொழும்பில் இருந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் என்ன நடந்தது?

கொழும்பில் நடந்த இந்தச் சந்திப்பு 'டிராக்-2' என்று அழைக்கப்படுகிறது என்றாலும், இது ஐஐஎஸ்-ஏஇஎஸ்ஏ டிராக் 1.5 தெற்காசிய பாதுகாப்பு உரையாடலின் 10வது வருடாந்திர கூட்டமாகும்.

இதற்கு முந்தைய கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம், அதாவது 'ஆபரேஷன் சிந்தூர்' நடந்த இரண்டே மாதங்களுக்குப் பிறகு நடைபெற்றது. இத்தகைய சந்திப்புகள் வழக்கமானவைதான், கடந்த காலங்களில் ஊடகங்கள் அவற்றுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

ஆனால் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களைத் தவிர, பேச்சுவார்த்தை தொடர்பான ஏதேனும் ஒரு விஷயம் வரும்போதெல்லாம், ஊடகங்கள் அதற்கு குறிப்பிடத்தக்க கவனத்தை அளிக்கின்றன. இது குறித்த பொது விவாதம் திடீரென அதிகரித்து இருப்பதற்குக் காரணம், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தொடர்புகள் முற்றிலும் முடிவுக்கு வரவில்லை என்ற செய்தியை சில தரப்பினர் கொண்டு சேர்க்க முயல்வதுதான் எனலாம்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்களான மோகன் பகவத், தத்தாத்ரேயா ஹோசபாலே, சுனில் அம்பேகர் ஆகியோர் இரு நாடுகளிடையே "மக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை" ஆதரித்துப் பேசி வரும் வேளையில் இவை அனைத்தும் நடக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில், இந்தச் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்ற கேள்வி எழுவது இயல்பானதே. குறிப்பாக, பாகிஸ்தானுக்கான கதவுகளை இந்தியா முற்றிலும் மூடிவிடக் கூடாது என்று தனது அமைப்பில் இருந்து முதன்முதலில் கூறிய தலைவரான ஹோசபாலே, தனது அமெரிக்க பயணத்திற்குப் பிறகுதான் இந்த கருத்தைத் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின்போது, அவரும் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவும் வாஷிங்டன் டிசியில் உள்ள ஒரு பழமைவாத சிந்தனைக் குழுவில் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஏப்ரல் 2025இல் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் இந்தியா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியபோது இரு நாடுகள் இடையிலான பதற்றம் தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏப்ரல் 2025இல் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் இந்தியா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியபோது இரு நாடுகள் இடையிலான சமீபத்திய பதற்றம் தொடங்கியது.

'தி ஹிந்து' ஆங்கில நாளிதழின் பாகிஸ்தான் செய்தியாளராக இருந்த நிரூபமா சுப்ரமணியன், டிராக்-2 பேச்சுவார்த்தை குறித்து 'தி ட்ரிப்யூன்' ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், "மேற்கத்திய வரையறைப்படி, டிராக்-2 பேச்சுவார்த்தை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க, ஆனால் அதிகாரபூர்வமற்ற நபர்களுக்கு இடையிலான ஒரு சந்திப்பு" என்று சுப்ரமணியன் எழுதியுள்ளார்.

மேலும், "டிராக் 1 என்பது அதிகாரபூர்வ ராஜ்ஜீய பேச்சுவார்த்தை" என்று குறிப்பிட்டுள்ள அவர், "மறுபுறம், டிராக் 1.5 என்பது மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரபூர்வமற்ற பங்கேற்பாளர்கள் இருவரையும் உள்ளடக்கியது. இருப்பினும், இந்தியாவில், டிராக் 2 அல்லது டிராக் 1.5 என்பது பெரும்பாலும் 'ரகசிய' அல்லது 'பின்னணி'யில் செயல்படும் ராஜ்ஜீயத்துடன் குழப்பிக் கொள்ளப்படுகிறது. ஆனால் அது இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது" என விவரித்துள்ளார்.

இதற்கிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்களால் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜம்மு-காஷ்மீரின் இரண்டு முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, ஆர்ஜேடி எம்.பி மனோஜ் ஜா, முன்னாள் டிஎம்சி அமைச்சர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் அடங்குவர்.

இரு நாட்டு பிரதமர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், இரு நாட்டு மக்களின் நலன்கள், நல்வாழ்வு மற்றும் கனவுகளைக் கருத்தில் கொண்டு, அமைதியை மீட்டெடுக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த முயற்சிக்கும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.

மூத்த காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பாகிஸ்தானில் இருந்து வந்த ஆயுதக் குழுவினரால் மதம் பார்த்து அடையாளம் காணப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி இந்திய பயணிகளின் உயிரைவிட, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்ற உணர்வுபூர்வமான கற்பனையான யோசனையே முக்கியம் என்று சிலர் கருதுகிறார்கள்" என எழுதியுள்ளார்.

மேலும் , "கடந்த 55 ஆண்டுகளில் பாகிஸ்தான் உருவாக்கியுள்ள ராணுவ-ஜிஹாதி உள்கட்டமைப்பை அது தகர்க்கும் என்பதற்கு எந்த உறுதியான, சரிபார்க்கவல்ல உத்தரவாதமும் இல்லாதபோது, பாகிஸ்தானுடன் ஒரு போலி இயல்புநிலையை ஊக்குவிக்கும் அந்த கண்ணுக்குத் தெரியாத சக்தி எது?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு