டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பு: இருநாட்டு தலைவர்களும் பேசியது என்ன?

பட மூலாதாரம், CGTN
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முக்கியமான இரண்டு நாள் பயணத்துக்காக புதன்கிழமை மாலை பெய்ஜிங் வந்தடைந்தார். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
வியாழக்கிழமையன்று பெய்ஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்' எனும் அரச கட்டடத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான வரவேற்பு விழா அமெரிக்க அதிபரின் முதல் அதிகாரபூர்வ நிகழ்வாக இருக்கும்.
டிரம்ப் தற்போது அங்கு சென்றடைந்துள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் கைகுலுக்கினார்.
கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள் என்பது தியானன்மென் சதுக்கத்துக்கு மேற்கே அமைந்துள்ள ஒரு அரசு கட்டடமாகும். இது பிற அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கும், வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இங்கு இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, மாலையில் அரச விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஷி ஜின்பிங் பேசியது என்ன?
சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது தொடக்க உரையில், "உலகம் முழுவதும் நமது சந்திப்பை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது, கடந்த ஒரு நூற்றாண்டில் காணப்படாத அளவிலான மாற்றங்கள் உலகம் முழுவதும் வேகமெடுத்து வருகின்றன; மேலும், சர்வதேச சூழல் நிலையற்றதாகவும் கொந்தளிப்பு நிறைந்ததாகவும் உள்ளது," என்று ஷி ஜின்பிங் குறிப்பிட்டார்.
"உலகம் ஒரு புதிய திருப்புமுனையை எட்டியுள்ளது. சீனாவும் அமெரிக்காவும் 'துசிடிடிஸ் பொறி'யைக் (Thucydides trap) கடந்து, உறவுகளுக்கான ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்க முடியுமா?" என்று ஷி கேள்வி எழுப்பினார்.
துசிடிடிஸ் பொறி என்பது, வளர்ந்து வரும் வல்லரசு, ஏற்கெனவே இருக்கும் ஆளும் வல்லரசுக்கு சவாலாக விளங்கும்போது, அவற்றுக்கிடையே போர் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகளைக் குறிக்கும் ஒரு அரசியல் கோட்பாடாகும்.
டிரம்ப் மற்றும் அமெரிக்காவுக்கு 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார்.
"நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை விட, பொதுவான நலன்களே அதிகம் என்று நான் எப்போதும் நம்புகிறேன். ஒரு நாட்டின் வெற்றி என்பது மற்றொரு நாட்டுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது; மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையான உறவு உலகுக்கே நன்மையளிப்பதாகும்," என்று அவர் கூறினார்.
"டிரம்புடன் கலந்துரையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும், 2026-ஆம் ஆண்டை ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துவைக்கும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் ஆண்டாக மாற்றும் வகையில், சீனா-அமெரிக்க உறவுகள் எனும் பிரமாண்டக் கப்பலின் திசையை நிர்ணயித்து வழிநடத்த, அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும்" ஷி ஜின்பிங் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், CGTN
டிரம்ப் பேசியது என்ன?
தனது தொடக்க உரையில், இன்று ஷி ஜின்பிங்கை சந்திப்பது "ஒரு கௌரவம்" என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
"நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாகவே இருந்து வந்திருக்கிறோம்; இடையில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தபோது, அவற்றை நாம் பேசித் தீர்த்துக்கொண்டோம். நான் உங்களை அழைப்பேன், நீங்களும் என்னை அழைப்பீர்கள்," என்று டிரம்ப் கூறினார். "பலருக்கும் இது தெரியாது; நமக்கு எப்போது ஒரு பிரச்னை ஏற்பட்டாலும், அதை நாம் மிக விரைவாகத் தீர்த்துவிட்டோம்."
"நான் அனைவரிடமும் இதை சொல்வதுண்டு: நீங்கள் ஒரு சிறந்த தலைவர்," என்று டிரம்ப் கூறினார்.
இந்தப் பயணத்தில், "உலகின் மிகச்சிறந்த [வணிகத் தலைவர்களை]" தன்னுடன் அழைத்து வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்தார். "உங்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவே, மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் மட்டுமே இன்று இங்கு வருகை தந்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
சிலர் இந்தச் சந்திப்பை "இதுவரையிலான மிகப்பெரிய உச்சிமாநாடு" என்று வர்ணித்திருப்பதாகவும், இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தான் "மிகவும் ஆவலுடன்" எதிர்நோக்கி இருப்பதாகவும் டிரம்ப் மேலும் குறிப்பிட்டார்.
"உங்களுடன் இருப்பது ஒரு கௌரவம்; உங்கள் நண்பராக இருப்பது ஒரு கௌரவம்," என்று கூறிய அவர், அமெரிக்கா-சீனா உறவுகள் "முன்னெப்போதையும் விடச் சிறப்பாக" அமையப்போவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

பட மூலாதாரம், CGTN
இறக்குமதி வரிகள், தொழில்நுட்பப் போட்டி, இரான் போர் மற்றும் தைவான் ஆகியவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் தூதுக்குழுவில், டெஸ்லாவின் ஈலோன் மஸ்க் மற்றும் என்விடியாவின் ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளும் அடங்குவர்.
அதிபர் வாகன அணிவகுப்பில் டிரம்ப் வந்தடைந்தபோது, பிராஸ் பேண்ட் இசைக்குழுவுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் டிரம்பை முழக்கமிட்டு வரவேற்றனர்.
அங்கு அமெரிக்க மற்றும் சீனக் கொடிகளும் ஏற்றப்பட்டன. இது, முக்கியமான இரண்டு நாள் சந்திப்புக்கு முன்னதாக ஒற்றுமையின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அதிபர் டிரம்ப் மற்றும் அவரது தூதுக்குழுவினரை வரவேற்க சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலிருந்து டிரம்ப் இறங்கிய பிறகு, அவரை வரவேற்பதற்காக துணை அதிபர் ஹான் ஜெங் ஓடுபாதையில் இருந்தார்.
ஹான் ஜெங் சீனாவின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவர் என்பதால், அவரை வரவேற்க அனுப்புவது, பெய்ஜிங் டிரம்புக்குக் காட்டும் மரியாதையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, 2017 பயணத்தின்போது, டிரம்பை வரவேற்பதற்காக சீனா ஒப்பீட்டளவில் கீழ்நிலைத் தலைவரான, அரசு ஆலோசகர் யாங் ஜியேச்சியை அனுப்பியிருந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டிரம்பின் பதவியேற்பு விழாவிலும் ஹான் ஜெங் கலந்துகொண்டார்.
டிரம்பின் சீன பயணம் குறித்த கட்டுரையை படிக்க..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































