தவெகவின் 'இருமுனை கத்தி' சமூக ஊடக பிரசாரம் ஆட்சியை கைப்பற்ற உதவியதா?

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"மை டியர் விர்ஷுவல் வாரியர்ஸ்" தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு ஆற்றிய உரையில் கவனம்பெற்ற வரி இது.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக சமூக ஊடகம் மற்றும் இணைய வெளியில் வேலை செய்பவர்களைச் சுருக்கமாக விர்ஷுவல் வாரியர்ஸ் (இணையப் போராளிகள்) என விஜய் விளிக்கிறார்.

விஜய் தனது உரையின் இறுதியில் முக்கியமாக இரு தரப்புக்கு தனியாக நன்றி தெரிவித்தார்.

''குட்டி நண்பா, நண்பீஸ். அவங்களாலதான் இது நடந்திருக்கு. உங்களுக்கு நன்றிக்கடன் செய்யனும், உங்களுடைய எதிர்காலத்தை மனசுல வச்சுக்கிட்டு எல்லா நல்ல விஷயங்களையும் இந்த விஜய் மாமா செய்து கொடுப்பான்." எனத் தெரிவித்தார் விஜய்.

அதனைத் தொடர்ந்து பேசிய விஜய், "உங்களை எப்படி மறப்பேன், நீங்க தான் என்னோட உயிராச்சே, உண்மையைச் சொல்லனும்னா நீங்க இல்லாம எதுவுமே இல்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களே, நீங்கள் இல்லனா எதுவுமே இல்லை. என்னுடைய கழக தோழர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கும், மை டியர் விர்ஷுவல் வாரியர்ஸ். உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்" என்றும் தெரிவித்தார்.

ரசிகர் மன்றங்காக தொடங்கி விஜய் மக்கள் இயக்கமாக மாறி இன்று தமிழக வெற்றிக் கழகமாக உருவெடுத்து நிற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் தேர்தல் வெற்றிக்குப் பின்னால் சமூக ஊடகம் முக்கியமான பங்கு வகித்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தேர்தலில் சமூக ஊடகம் உள்ளிட்ட டிஜிட்டல் பரப்புரையில் தவெக கோலோச்சியது என்றே கூற வேண்டும் என்கிறார் சைபர் பாதுகாப்பு மற்றும் ஏஐ நிபுணர் ஹரிஹரசுதன் தங்கவேலு.

இதனை 'டிஜிட்டல் பம்பார்டிங்' என்றும் அழைப்பார்கள் என அவர் குறிப்பிடுகிறார்.

இதனை மேலும் விவரித்த அவர், "இந்த வகையான தேர்தல் பிரசாரங்கள் அமெரிக்காவில் பிரபலமானவை. ஒரு தரப்பு தனக்குச் சாதகமான செய்திகளையும், போட்டியாளருக்கு எதிரான செய்திகளையும் ஒரே நேரத்தில் இணைய வழியாக திணிக்கும் முறை இது. பார்வையாளர்களை வாக்காளர்களாக மாற்றும் உத்தி என்றும் அழைக்கலாம்." என்றார்.

"இந்தியா டிஜிட்டல் நுகர்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று. பாரம்பரிய ஊடகங்களைத் தாண்டி சமூக ஊடகங்களை அனைத்து கட்சிகளும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தவெக இந்த முறை அதனை மிக எளிமையாகவும், துரிதமாகவும் பயன்படுத்தியுள்ளனர். விஜயின் பேச்சு மற்றும் பரப்புரை காணொளிகள்தான் தவெக பிரசாரம் முழுவதும் நிரம்பியிருந்தன," எனத் தெரிவிக்கிறார் ஹரிஹரசுதன்.

"விஜய் பரப்புரைகளில் வெள்ளை நிற சட்டை பழுப்பு நிற பேண்ட் அணிந்து வருவதை வழக்கமாக வைத்து வந்தார். தேர்தல் நெருங்கிய சூழலில் தவெக ஐடி விங் தற்செயலாக யாராவது அதே போன்ற உடை அணிந்து வந்தாலும் அதனை அவர்களுக்கு ஆதரவானது எனப் பரப்பினார்கள். தற்செயலாக நடந்த ஒன்றையும் பரப்புரையாக மாற்றினார்கள். இது மக்களை, குறிப்பாக இளைஞர்களைச் சென்றடைந்தது.'' என்றார் ஹரிஹரசுதன்.

கட்சி என்கிற அளவில் திமுக தனது பரப்புரை பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது எனக் கூறும் ஹரிஹரசுதன் தவெகவினர் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தான் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார்கள் என்கிறார்.

அதே போல விஜயின் பேச்சுக்கள் தொடர்ந்து நேரலை செய்யப்பட்டதும் மக்களை அதிகம் சென்றடைந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

"பேச்சு வழக்கில் பிரசாரம்"

தவெக கவனம் செலுத்திய விஷயங்களும் மொழியும் எளிமையாக இருந்தது என ஹரிஹரசுதன் குறிப்பிடுகிறார்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், "திமுக - தவெக இடையே போட்டி என்பதைத் தொடர்ந்து கூறிவந்தார். ஒவ்வொரு வீட்டிலும் விஜய் அல்லது விஜி இருக்கிறார்கள் என்றும் கூறினார். இந்த இரண்டு விஷயங்களையும் மக்களால் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. தேர்தல் பிரசாரத்தில் பேச்சு வழக்கில் விஜய் பேசிய அடுக்குமொழி வசனங்களை குழந்தைகள் கூட பேசி வந்தனர். இவையெல்லாம் சமூக ஊடகம் மூலம் குடும்பங்களை குறிப்பாக இளைஞர்களைச் சென்றடைவதில் தவெகவிற்கு உதவியாக இருந்துள்ளது." என்றார்.

குழந்தைகள் தங்களின் பெற்றோரிடம் தவெகவிற்கு வாக்களிக்குமாறு கூறுங்கள் என்று விஜய் பேசி வந்த நிலையில் குழந்தைகளை தனது தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்துகிறார் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

விஜய் பதவியேற்பு விழாவில் நிதிநிலை பற்றி தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவிலும் பேச்சு வழக்கிலான வாக்கியங்கள் இடம்பெற்றதும் இந்த தாக்கத்தின் விளைவாக இருக்கலாம் என்றும் ஹரிஹரசுதன் கூறுகிறார்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், "இதில் விஜயின் தனிப்பட்ட செல்வாக்கும் முக்கியமான பங்கு வகித்துள்ளது. தனிநபரைச் சுற்றிய பிம்பம் மற்றும் தீவிர அரசியல் கருத்துக்கள் இல்லாத எளிதில் மக்களால் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய அம்சங்கள்தான் தவெகவிற்குச் சாதகமாக அமைந்துள்ளது.

சமூக ஊடகத்தில் ஏதாவது டிரென்ட் ஆகும்போது நாமும் அதில் இடம்பெற வேண்டும் என்கிற மக்களிடம் இயல்பாக இருக்கும். அப்படிச் செய்யவில்லை என்றால் நாம் அதில் விடுபட்டுவிடுவோமோ என்கிற உணர்வும் ஏற்படும். தவெகவிற்கு சமூக ஊடகங்கள் மூலம் கிடைத்த வரவேற்புக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தற்போதைய சமூக ஊடகத்தின் தன்மை என்பது உரையாடுவதாக இல்லாமல் எதிர்வினையாற்றுவதாக மாறியுள்ளது. தவெகவின் பரப்புரை வடிவம் இதற்கு சிறப்பாக பொருந்திப் போகிறது." எனத் தெரிவித்தார்.

"ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்"

தவெகவின் பிரசார அணுகுமுறையை வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்தில் டிஜிட்டல் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் மணிகண்டன் பகிர்ந்து கொண்டார்.

தவெகவின் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகப் பரப்புரையை வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனம் மேற்கொண்டது.

ஒவ்வொரு வாக்குச்சாவடி என்பதையும் தாண்டி ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என்பது இலக்காக இருந்தது என அவர் தெரிவிக்கிறார். தொலைக்காட்சி விளம்பரங்களைவிடவும் சமூக ஊடகத்திற்கே கூடுதல் கவனம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

30 நிமிடத்திற்குள் மக்களை டிஜிட்டல் வழியில் அடைந்துவிட வேண்டும் என்கிற அடிப்படையில் வேலை செய்ததாக தெரிவிக்கிறார் மணிகண்டன்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், "ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முகவருடன், ஒரு சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் இருந்தார். அவர் வாக்குச்சாவடிக்கு என தனிக்குழுக்களை உருவாக்கி பரப்புரை செய்திகள், காணொளிகளைத் தினமும் பகிர வேண்டும். தலைமையகத்தில் இருந்து அனுப்பப்படும் செய்தி மாவட்டம், தொகுதி மற்றும் வாக்குச்சாவடி என நான்கு நிலைகளில் பகிரப்பட்டது. ஃபேஸ்புக் மற்றும் யூ-ட்யூப்பை விடவும் இன்ஸ்டாகிராம் தான் மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. ரீல்ஸ் தான் முதன்மையான தேர்வாக இருந்தது" என்றார்.

"விஜயின் பேச்சுக்களை நிகழ் நேரத்தில் ரீல்ஸாக வாட்ஸாப் குழுக்கள் மூலமாகப் பகிர்ந்தோம். கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் சில இடங்களில் தொகுதி வாரியாகவும் தனித்தனி சமூக ஊடகப் பக்கங்கள் உருவாக்கப்பட்டன. சில காணொளிகளை தயாரித்தே வழங்குவோம். சில நேரங்களில் விஜய் என்ன பேசினார், எந்தச் செய்தியை பரப்ப வேண்டும் என்கிற தகவல்களை மட்டும் கொடுத்துவிடுவோம்." என்றார்.

மேலும் அவர், "தென் மாவட்டங்களில் பேச்சு வழக்கு ஒன்றாக இருக்கும், மேற்கு மாவட்டங்களில் பேச்சு வழக்கு ஒன்றாக இருக்கும். எனவே அந்தந்த உள்ளூர் பேச்சு வழக்கிற்கு ஏற்றவாறு வீடியோவாக தயார் செய்து அவர்கள் பரப்புவார்கள். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பரப்புரை வீடியோக்களையும் அதிக அளவில் பகிர்ந்தோம். ஆனால் அதைவிடவும் உள்ளூர் அளவிலான தொண்டர்கள், இன்ஃப்ளுயன்சர்கள் நேரடியாக ரீல்ஸ் போன்ற வீடியோக்களை தயார் செய்து பகிர்வதையும் ஊக்குவித்தோம்." எனத் தெரிவித்தார்.

"ரெட்டிட் தளத்தில் தவெக பரப்புரை"

கள யதார்தத்தை சரியாக கணிக்க முடியாமல் போனதாக திமுகவின் சமூக ஊடக பிரசார திட்டமிடல் குழுவில் வேலை செய்யும் நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசினார்.

தவெகவின் சமூக ஊடகக் குழு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல தளங்களையும் தாண்டி ரெட்டிட் போன்ற அதிக அறிமுகம் இல்லாத தளங்களிலும் பரப்புரையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறுகிறார்.

இது தொடர்பாக மேலும் விவரித்த அவர், "தொடர்ச்சியான இடைவெளியில் செல்போன் அழைப்புகள் மூலம் கள நிலவரம் அறிய சர்வே எடுக்கப்பட்டு வந்தது. ஒரு தொகுதிக்கு ஒரு கள ஒருங்கிணைப்பாளர் வேலை செய்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களே திமுகவின் பரப்புரைகளில் அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஏற்கெனவே உள்ள வாக்காளர்களை தக்க வைக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது. ஆனால் அது நடக்காமல் போனது. விஜய் அனைத்து ஊர்களுக்கும் செல்லவில்லை. பெரும்பாலும் கூறிய விஷயங்களையேதான் தொடர்ந்து பேசி வந்தார். ஆனாலும் அவை மீண்டும் மீண்டும் பகிரப்பட்டன. திமுகவை மையப்படுத்தியே தவெக தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டது அவர்களுக்குப் பலனளித்திருக்கலாம்." எனத் தெரிவித்தார்.

'இருமுனைக் கத்தியைப் போன்றது தவெகவின் பிரசார அணுகுமுறை'

தவெகவின் வெற்றியில் சமூக ஊடகத்தின் பங்கு என்பது ஆளுமையை மையப்படுத்திய பரப்புரைக்கு மிகச் சிறந்த உதாரணம் என்கிறார் உண்மை சரிபார்ப்பு நிபுணருமான முரளிகிருஷ்ணன் சின்னதுரை.

இது தொடர்பாக மேலும் விவரித்த அவர், "தவெக என்றால் விஜய், விஜய் என்றால் தவெக என்பதான ஆளுமை சார்ந்த பரப்புரைக்கு சமூக ஊடகம் முக்கியமான பங்காற்றியுள்ளது. இதனை ஆங்கிலத்தில் 'கம்ப்யூட்டேஷனல் பிரபகண்டா' என்று சொல்வார்கள்.

இதில் உண்மைத்தன்மை உறுதி செய்ய வேண்டிய தேவை மற்றும் அவகாசம் இருக்காது. உண்மைகளோடு உறுதிபடுத்தப்படாத தகவல்களும் இத்தகைய பரப்புரைகளில் ஆதிக்கம் செலுத்தும். ஒரு ஆளுமை மிக்க முகமாக விஜய், அவரை மையப்படுத்திய உணர்வுப்பூர்வமான செய்தியைப் பகிர்வது பரப்புரையில் அடிப்படையாக இருந்துவந்தது.

விஜயைத் தவிர்த்து கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் அல்லது தலைவர்களை மிகவும் அரிதாகவே பார்க்க முடியும். அந்த அளவிற்கு இந்தப் பரப்புரை விஜயை மட்டுமே மையப்படுத்தியதாக இருந்தது.இந்தப் பாணியிலான பரப்புரை இருமுனைக் கத்தி போன்றது. சில நேரங்களில் பாதகமாகவும் அமையலாம். தவெக புதிய கட்சி என்பதால் நிர்வாகம், அரசு என வருகிறபோது அவர்களுக்கு கடந்த கால விமர்சனங்கள், சுமைகள் எதுவுமில்லை" எனத் தெரிவித்தார்.

ஆனால் இதே அணுகுமுறை பரப்புரை என்பதைக் கடந்தும் தற்போது ஆட்சியிலும் தொடர்வதாக சில உதாரணங்களோடு அவர் தெரிவிக்கிறார்.

"தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக சார்பில் பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டு பட்டியலின வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் எனச் செய்தி பரவியது. ஆனால் சிறிது நேரம் கழித்து அது உண்மையில்லை எனத் தெரியவந்தது. அதற்குள் இந்தச் செய்தி வைரலாகப் பரவியது."

இதே போல நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை, அரசு கஜானா தொடர்பாகவும் பல தரப்பட்ட தகவல்கள் வைரலாக பகிரப்பட்டன எனக் கூறும் அவர் இந்தப் போக்கு இனியும் தொடர வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு