இந்தியாவின் பிரமோஸுடன் ஒப்பிடப்படும் பாகிஸ்தான் ஏவுகணை - வலிமை என்ன?

    • எழுதியவர், உமைர் சலீமி
    • பதவி, பிபிசி உருது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் ஃபதா-3 க்ரூஸ் ஏவுகணையை அறிமுகப்படுத்தியுள்ளது, இது இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையுடன் ஒப்பிடப்படுகிறது.

மே 7 அன்று, பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐ.எஸ்.பி.ஆர் ), ராணுவத் தயாரிப்புகள் குறித்த விளம்பர வீடியோவில் ஃபதா-3 க்ரூஸ் ஏவுகணையின் படத்தைக் காட்டியது.

ஃபதா-3 க்ரூஸ் ஏவுகணையின் திறன்களை ஐ.எஸ்.பி.ஆர் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், இது ஒலியின் வேகத்தை விட மூன்று முதல் நான்கு மடங்கு வேகமாக செல்லக்கூடிய சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துப்படி, எதிர்காலத்தில் துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்காக பாகிஸ்தான் இதனை உருவாக்கியுள்ளது.

சமூக ஊடகங்களில், பல விமர்சகர்கள் இதனை பிரமோஸ் ஏவுகணையுடன் ஒப்பிட்டுள்ளனர்.

ஃபதா-3 மற்றும் பிரமோஸ் ஏவுகணைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன என்பதையும் அவற்றின் திறன்களின் அடிப்படையில் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் கண்டறிய நாங்கள் முயற்சி செய்துள்ளோம்.

ஃபதா-3 'சூப்பர்சோனிக்' க்ரூஸ் ஏவுகணையின் சிறப்பு என்ன?

பாதுகாப்பு ஆராய்ச்சியாளரும், டொராண்டோவை தளமாகக் கொண்ட 'குவ்வத்' என்ற பாதுகாப்புச் செய்தி மற்றும் பகுப்பாய்வுக் குழுவின் நிறுவனருமான பிலால் ஹுசைன் கான் கூறுகையில், ஃபதா-3 பற்றி இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள், பாகிஸ்தான் ராணுவம் தனக்கென ஒரு சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை உருவாக்கி வருவதைக் காட்டுகின்றன என்றார்.

ஃபதா வரிசையில் வரும் ஏவுகணைகள் நீண்ட தூர 'துல்லியத் தாக்குதல்களுக்கு' பயன்படுத்தப்படும் வழக்கமான ஆயுதங்களாகும். இவை குறைந்த உயரத்தில் பறப்பதால் இவற்றை இடைமறிப்பது கடினம்.

இவற்றில், ஃபதா-1 இன் வரம்பு 140 கிலோமீட்டராகவும், அதே சமயம் ஃபதா-2 இன் வரம்பு 400 கிலோமீட்டர் வரையும் உள்ளது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஃபதா-2 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதாக, 2026 ஏப்ரல் 28 அன்று பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

750 கிமீ வரம்பு கொண்ட ஃபதா-4 ஏவுகணையும் தரையிலிருந்து ஏவப்படும் க்ரூஸ் ஏவுகணையாகச் சோதனை செய்யப்பட்டிருந்தாலும், ஃபதா-3 தற்போது குறிப்பாக ஒரு சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையாக உருவாக்கப்பட்டுள்ளது என்று பிலால் ஹுசைன் கூறுகிறார்.

ஐ.எஸ்.பி.ஆர் வெளியிட்ட வீடியோ மற்றும் படங்கள், ஒரு சிறப்பு ரேம்ஜெட் என்ஜின் உதவியுடன் ஃபதா-3 ஏவுகணை ஒலியின் வேகத்தை விட வேகமாகச் செல்வதைக் காட்டுகின்றன என்று அவர் கூறுகிறார்.

அதன் வடிவமைப்பு "சீனத் தயாரிப்பான ஹெச்டி -1 ஏவுகணையை ஒத்திருப்பதாக" அந்தப் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஹெச்டி-1 என்பது ஒரு சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை ஆகும், இது முதன்முதலில் 2018 இல் ஒரு சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

அந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, இதன் வேகம் மணிக்கு 2,716 முதல் 4,321 கிலோமீட்டர்கள் ஆகும், இது ஒலியின் வேகத்தை விட பல மடங்கு அதிகம்.

பாகிஸ்தான் தனது பாதுகாப்பு உபகரணங்களில் பெரும்பாலானவற்றைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதால், ஹெச்டி-1 ஏவுகணையை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான உரிமத்தை பாகிஸ்தான் பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக பிலால் ஹுசைன் கான் நம்புகிறார்.

பிரமோஸுடன் ஃபதா-3 ஏவுகணையை ஒப்பிட முடியுமா?

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையும் ஒலியின் வேகத்தை விட வேகமாகப் பயணிப்பதற்கு ரேம்ஜெட் என்ஜினையே பயன்படுத்துகிறது என்றும், இலக்கை குறிவைத்து விரைய இதில் சில வழிகாட்டும் அமைப்புகள் உள்ளன என்றும் பிலால் ஹுசைன் கான் கூறுகிறார்.

"பிரமோஸ் ஏவுகணையைப் போலவே, ஹெச்டி -1 ஏவுகணையையும் தரை மற்றும் வானிலிருந்து ஏவ முடியும்."

பிரமோஸ் ஏவுகணை 290 கிலோமீட்டர் வரை சூப்பர்சோனிக் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்றும், இது பயண நேரத்தைக் குறைக்கிறது என்றும் இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்திகளின்படி, இது இலக்கு தன்னைத் தற்காத்துக்கொள்ள அவகாசம் தருவதில்லை. இதன் தாக்குதல் வேகம் மிக அதிகம் மற்றும் உலகின் எந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பாலும் இதைத் தடுப்பது கடினம்.

பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, எதிரியின் ரேடார் (விமானங்கள் மற்றும் பறக்கும் பொருட்களைக் கண்டறியும் கருவி) அமைப்பிலிருந்து தப்பிக்கும் திறன் இதற்கு உண்டு.

இது 'ஏவிவிட்டு மறத்தல்' என்ற கொள்கையின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. இலக்கை நோக்கிய இதன் பாதை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதில்லை.

மறுபுறம், ஃபதா-3 ஏவுகணையின் வரம்பு பொதுவெளியில் வெளியிடப்படவில்லை, ஆனால் இது சீன ஹெச்டி -1 ஏவுகணையின் 'ஏற்றுமதி தரம்' எனக் கருதப்பட்டால், இதன் வரம்பு 280 கிலோமீட்டராக இருக்கும் என்று பிலால் ஹுசைன் கான் மதிப்பிடுகிறார்.

"இருப்பினும், பாகிஸ்தான் அதிக தூரம் செல்லும் ஏவுகணைகளை உருவாக்கியுள்ளதால், இதன் வரம்பு ஒருவேளை 400 முதல் 500 கிலோமீட்டராக அதிகரிக்கப்படலாம்" என்று அவர் கருதுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, நவீன சீன ஆயுதங்கள் அந்தத் திறனைக் கொண்டுள்ளதால், இந்த ஏவுகணைகளின் திறன் பிரமோஸ் ஏவுகணைக்கு நிகராக இருக்கலாம் என்றும் கூறினார்.

ஏவுகணைகளுக்கான ரேம்ஜெட் மற்றும் ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களை வடிவமைக்கவும் சோதிக்கவும் பாகிஸ்தானிடம் நவீன வசதிகள் இல்லை என்பதால், இதற்காக சீனாவின் உதவியைப் பெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளது என்று அவர் கருதுகிறார்.

2018ஆம் ஆண்டில் ஒரு சீன நிறுவனம் பாகிஸ்தானுக்கு ஹெச்டி -1 ஏவுகணையை வழங்க முன்வந்தபோது இதுகுறித்துப் பல ஊகங்கள் எழுந்தன என்றும், இந்த விஷயத்தில் தொழில்நுட்பப் பரிமாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

அவரது கூற்றுப்படி, மற்றொரு ஆதாரம் என்னவென்றால், சமீபத்திய ஃபதா-3 ஏவுகணை ஏவப்பட்ட காட்சிகளில் நமக்குத் தெரிந்த ஏவுதள வாகனங்கள் எதையும் காண முடியவில்லை.

இந்தியா பிரமோஸ் ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரித்தாலும், அதன் ரேம்ஜெட் என்ஜின்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

ஃபதா-3ஐப் பொறுத்தவரை, பாகிஸ்தான் அநேகமாக அதனைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து, சீனாவுடன் இணைந்து அதன் வழிகாட்டுதல் அமைப்பை மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

எதிர்கால ராணுவ மோதல்களில் க்ரூஸ் ஏவுகணைகள் என்ன பங்கை வகிக்கும்?

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த ராணுவ மோதலின்போது, இந்தியா பிரமோஸ் ஏவுகணையைப் பயன்படுத்திய வேளையில், பாகிஸ்தான் ஃபதா-1 ஏவுகணையைப் பயன்படுத்தியதாகப் பல ஊடகங்கள் குறிப்பிட்டன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமும் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் இருப்பதால், எதிர்கால போர்கள் கடந்த காலப் போர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீண்ட தூரம் செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் போலன்றி, க்ரூஸ் ஏவுகணைகள் ரேடாரில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டவை மற்றும் சூப்பர்சோனிக் வேகத்தில் செல்லக்கூடியவை, ஆனால் அவற்றின் தாக்குதல் வரம்பு குறைவானது என்று பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பிரிகேடியர் துக்ரல் யாமின் பிபிசியிடம் தெரிவித்தார்.

யுக்ரேன் போர் மற்றும் மத்திய கிழக்கில் நடந்து வரும் போர்களை உதாரணமாகக் குறிப்பிட்டு, போர்களில் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'ராக்கெட் ஃபோர்ஸ்' நிறுவப்பட்டதில் இருந்து பாகிஸ்தான் ஆயுதப் படைகள் பல ஏவுகணைகளைச் சோதித்துள்ளன.

பாகிஸ்தான் தனது மூலோபாய அணுஆயுத ஏவுகணைகளை வழக்கமான ஏவுகணைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்ட விரும்பியதே ராக்கெட் ஃபோர்ஸ் நிறுவப்பட்டதன் நோக்கம் என்று பாகிஸ்தான் முன்னாள் ராணுவ பிரிகேடியரும் பாதுகாப்பு நிபுணருமான துக்ரல் யாமின் கூறுகிறார்.

"போரில் பயன்படுத்தப்படும் வழக்கமான ஏவுகணைகள், முடிவெடுப்பதை எளிதாகவும் வேகமாகவும் மாற்றுவதற்காகத் தனியாக வைக்கப்பட்டன" என்று அவர் கூறினார்.

ஃபதா-3 ஏவுகணைகளின் பயன்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஃபதா-3 போன்ற துல்லியமான தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணைகள் எதிரியின் பாதுகாப்பு கட்டமைப்பைக் குறிவைக்க முடியும் என்றும், உங்களின் முதல் தாக்குதல் அல்லது தற்காப்புத் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்தால், போரை மிகக் குறைந்த காலத்திலேயே முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் ராணுவக் கொள்கை ஆக்கிரமிப்பு சார்ந்தது அல்ல, மாறாகத் தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதன் அடிப்படையிலானது. எனவே டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் சைபர் தாக்குதல் திறன்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு