அதிமுகவின் ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்த விஜய் - என்ன நடக்கிறது?

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஒரு தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தார்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்திக்க சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜயை, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய அதிமுக தலைவர்கள் வரவேற்றனர்.

விஜய்க்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை சி.வி சண்முகம் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ் பி வேலுமணி, சி வி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி விஜபாஸ்பகர், காமராஜ், தங்கமணி உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் விஜய் நன்று செலுத்தினார்.

சி.வி. சண்முகம் பேசியது என்ன?

முன்னதாக, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விஜய் அரசுக்கு தங்களது ஆதரவை அறிவித்தனர்.

இதுதொடர்பாக சென்னை எம்ஆர்சி நகரில் செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் பேசினார்.

"அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறது. அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்ற நிலையில் நிர்வாகிகள், தொண்டர்கள், எம்எல்ஏக்கள் உள்ளோம். தவெகவுக்கு குறிப்பாக முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அவர் முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அந்த தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்." என்று சி.வி.சண்முகம் கூறினார்.

மேலும் பேசிய அவர், "தேர்தலுக்கு பிறகு கலந்தாலோசித்தபோது அதிமுகவின் பொதுச் செயலாளர் சில முன்மொழிவுகளை எங்களிடம் வைத்தார். திமுகவை எதிர்த்து இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக நாங்கள் திமுகவை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறோம். இந்த நிலையில், நாங்கள் எதிர்த்த 'திமுகவின் ஆதரவுடன் அதிமுக என்னை முதலமைச்சராக்க ஒப்புக்கொண்டுள்ளனர், அதனை நாம், ஒப்புக்கொள்ள வேண்டும்' என அவர் சொன்னபோது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் அதற்கு சம்மதிக்கவில்லை, அதனை ஏற்றுக்கொள்ளவில்லை." என்றார்.

"நாங்கள் அதனால் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். எப்படி இதை சொல்கிறார் என நினைத்தோம். திமுகவுடன் இணைந்தால் அதிமுக என்பதே இல்லாமல் போய்விடும் என்று எங்கள் கருத்தை சொன்னோம். இதை வேண்டாம் என கூறினோம். ஆனால், அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்."என்றார் சி.வி.சண்முகம்

"அதனால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுவின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 'தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக படுதோல்வி அடைந்திருக்கிறது, அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், அதிமுக இனி எந்த கூட்டணியிலும் இல்லை. அதிமுக புதிய முடிவை எடுக்க வேண்டும். புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும். புதிதாக கூட்டணியை அமைக்க வேண்டும்' என கூறினோம். அதன்படி, முதலமைச்சர் விஜயின் ஆட்சியை ஆதரிப்பதாக அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிவெடுக்கப்பட்டது." என்றார் சி.வி.சண்முகம்.

மேலும், சட்டப்பேரவை அதிமுக குழு தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றும், கொறடாவாக சி.விஜயபாஸ்கர், துணை தலைவராக ஹரி, செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருப்பதாக சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

"இது அதிமுகவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவு. பல தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவருகிறோம். இந்த தோல்விகளுக்கு எல்லோரும் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறோம். அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்பதே இப்போது எங்களிருக்கும் கவலை. ஏன் தோற்றோம், அதற்கு என்ன காரணம் என்பதை ஆராய வேண்டும், எல்லோரையும் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என பொதுச் செயலாளரை அதிமுக பொதுக்குழுவை விரைந்து கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அதில் என்ன நடந்தது என்பதை நாம் ஆரோக்கியமாக விவாதிக்கலாம், எங்கு தவறு என்பதை ஆராயலாம் என கூறினோம். விரைந்து பொதுச் செயலாளர் பொதுக்குழுவை கூட்டுவார் என நம்புகிறோம். அப்போது நாங்கள் ஒற்றுமையாக கலந்தாலோசித்து அதிமுகவின் எதிர்காலத்துக்காக செயல்படுவோம்." என்று தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, "அதிமுகவை உடைக்கிறோம் என அவதூறு பரப்புகின்றனர். எங்களுக்கு அந்த நோக்கம் இல்லை. தொடர் தோல்வி ஏற்பட்டுள்ளது. அதனால் சில கேள்விகளை எழுப்பியுள்ளோம். அதிமுக எப்போதும் உடையாது, அதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம். பொதுக்குழுவை கூட்டி பொதுச் செயலாளர் முடிவெடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்பட்டது என்ன?

அதிமுகவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், "திமுகவுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக்கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக்கொண்டிருந்த மாபெரும் திட்டமா? அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு கேட்டிருப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா? கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?" என பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், 1,34,25,260 வாக்குகள் எடப்பாடி பழனிசாமிக்காக விழுந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

"இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்னை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் பதில் என்ன?

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்திலேயே தாங்கள் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என கூறிவிட்டார். எதிர்க்கட்சி தலைவர், கொறடா உள்ளிட்டோரையும் நியமித்துவிட்டார். கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றியும் தெரிவித்துவிட்டார். திமுக பல வெற்றி, தோல்விகளை பார்த்துள்ளது. ஆனால் எந்த சோதனையிலும் திமுக உடையாமல் நிலையாக உள்ளது" என்றார்.

அதிமுகவிலிருந்து நகர்ந்து போவதற்கு சி.வி.சண்முகம் திமுகவை காரணம் காட்டுவதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சித்தார்.

"சி.வி.சண்முகம் தொடர்ந்து பதவியிலேயே இருந்தவர். 2021-ல் அதிமுக தோற்றபோதும் எம்.பி-யானார். இதுவரை பார்க்காத அளவில் கட்சி தாவல், மைனாரிட்டி அரசு (பெரும்பான்மை இல்லாத அரசு) ஆகியவை தமிழ்நாட்டில் நடந்துள்ளது. அதிமுக உடைவதற்கு எங்களை காரணம் காட்டி திசைதிருப்புகின்றனர். திமுக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி என ஏற்கெனவே நான் கூறிவிட்டேன். அது தெளிவாகிவிட்டது." என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி அத்தகைய பேச்சுவார்த்தை நடந்ததாக கூறியதாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போது, "அதை வதந்தி என பேபி தெரிவித்துவிட்டார்" என்றார் ஆர்.எஸ். பாரதி.

"அதிமுகவை உடைத்துவிட்டு வருபவர்களை சேர்க்கப் போகிறாரா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும். இரண்டு திராவிட கட்சிகளே மாறிமாறி ஆள்வதாக விஜய் விமர்சித்தார். அப்படியிருக்கையில் அதிமுகவிலிருந்து வருபவர்களுக்கு விஜய் அமைச்சர் பதவி கொடுக்கப் போகிறாரா?" என அவர் கேள்வியெழுப்பினார்.

ஓ.எஸ். மணியன் கூறியது என்ன?

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் ஓ.எஸ்.மணியன் தலைமையில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்தனர்.

பின்னர், ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரட்டை இலை சின்னத்துக்கான சோதனைகளையெல்லாம் சந்தித்து ஆட்சி செய்தோம். இந்த தேர்தலில் அதிமுகவுக்கு 47 எம்எல்ஏக்களை பெற்றுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக கூட்டணியில் 53 உறுப்பினர்கள் வென்றுள்ளனர். திமுக-அதிமுக ஆதரவு என்பது உண்மை அறவே இல்லாத செய்தி. அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு லாபம் சேர்க்கும் வகையிலும் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்கும் வகையிலும் அவர்கள் பேசிவருகின்றனர்.

திமுக - அதிமுக எதிரெதிர் கட்சிகளாகத்தான் பயணித்துள்ளன. எடப்பாடி பழனிசாமிதான் சட்டப்பேரவை அதிமுக தலைவர் என்று 47 பேரும் கையெழுத்திட்டுள்ளனர். அதனடிப்படையிலேயே கொறடா, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுதொடர்பாக, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம். கட்சி தலைவருக்கு மட்டும்தான் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் உள்ளது. அதிமுக ஒன்றாகவே இருக்கிறது." என்றார்.

இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "நாளை தவெக அரசுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

திருமாவளவன் கூறியது என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "உங்களை முதலமைச்சராக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன, அதை காங்கிரஸ் முறியடித்ததாக கூறப்படுகிறதே" என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு திருமாவளவன், "காங்கிரஸ் அதில் எந்த வகையில் தலையிட்டது என்பது எனக்கு தெரியாது. திமுக-அதிமுக மற்றும் அவற்றின் கூட்டணியில் இடம்பெற்ற சில கட்சிகள் அந்த முயற்சியை மேற்கொண்டதாக எனக்கும் தகவல் கிட்டியது. நாங்கள் இடதுசாரிகள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் உயர்நிலைக்குழுவில் விவாதித்து தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்தோம். எல்லோரும் அதை தாமதமான முடிவு என விமர்சிக்கின்றனர். ஒரு அரசியல் கட்சியை நடத்துபவர்களுக்குதான் அதிலுள்ள சிரமங்கள் புரியும். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ஒரு முடிவை எடுக்க முடியாது." என்றார்.

தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க திமுக அழுத்தம் அளித்ததா என கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, "திமுக என்பது யாரோ கிடையாது. அவர்கள் எங்களின் கூட்டணிதான். நாங்கள் திமுக கூட்டணியில் நின்றுதான் வெற்றி பெற்றிருக்கிறோம். அப்படியெனில், திமுக ஒரு கருத்தை கூறும்போது நாங்கள் புறந்தள்ளிவிட முடியாது. அவர்கள் ஒரு முன்மொழிவை வைக்கிறார்கள் என்றால், அதை நாங்கள் புறந்தள்ளிவிட முடியாது. தவெக ஆட்சியை அமைப்பதற்கு மட்டுமே ஆதரவு என நாங்கள் தெரிவித்திருந்தோம். அமைச்சரவையில் இடம்பெற்றால் நாங்கள் திமுக கூட்டணியிலிருந்து முற்றாக வெளியேறுகிறோம் என்று பொருள். அந்த முடிவை எடுப்பதா, இல்லையா என்பது குறித்து எங்களுக்கு நெருக்கடி உள்ளது. அந்த முடிவை எடுக்க எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படாதா? மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் விஜய் இன்று என்னை சந்திக்க வருகிறார். அப்போது நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்க மாட்டோம்." என்றார்.

தவெக அரசை திமுக கூட்டணியில் 2 இடங்களை வென்ற விசிக வெளியில் இருந்து ஆதரிக்கிறது.

அதிமுகவில் என்ன நடக்கிறது?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களைப் பிடித்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதுமே அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்படலாம் என்று அரசியல் நிபுணர்கள் கூறினர். அதற்கேற்றபடியே, புதிதாக தேர்வான அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அதிமுக எம்எல்ஏக்களிடம் பேசினார்.

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிகள் நடப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருப்பதாக மூன்று நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தரப்பில் இதுகுறித்து வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், அதிமுக எம்எல்ஏக்களிடையே அதிருப்தி நிலவியது சட்டப்பேரவையின் முதல்நாளிலேயே வெளிப்பட்டது. புதிதாக வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் வந்தனர். எஸ்.பி.வேலுமணி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர்.

சட்டப்பேரவையில் பதவியேற்க வந்த சி.வி.சண்முகம் பதவியேற்பில் பங்கெடுக்காமல் பாதியிலேயே திரும்பிவிட்டார். பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக அவர் பெயர் அழைக்கப்பட்டும் பங்கேற்கவில்லை. பின்னர் பேரவைத் தலைவர் அறையில் சி.வி.சண்முகம் பதவியேற்றார்.

பின்னர், அதிமுகவின் சட்டமன்றக் குழுவின் தலைவர் உள்ளிடட் பொறுப்பாளர் நியமனம் தொடர்பாக ஓ.எஸ்.மணியன் தலைமையிலான எம்.எல்.ஏக்களும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏக்களும் தற்காலிக சபாநாயகரிடம் தனித்தனியே கடிதம் அளித்தனர்.

அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் யார் என்பது இன்னமும் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படவில்லை.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு