சிஎஸ்கே பின்னடைவுக்கு கேப்டனும் ஒரு காரணமா? அடுத்த சீசனுக்கு நம்பிக்கை தரும் விஷயங்கள்

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், பாபா இந்திரஜித்
- பதவி, கேகேஆர் முன்னாள் வீரர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஐபிஎல் 2026 சீசனின் லீக் சுற்றுகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.
அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் 6 வெற்றிகளை மட்டுமே பெற்று 8வது இடத்தில் முடித்திருக்கிறது. இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது சீசனாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியிருக்கிறது சிஎஸ்கே.
இந்த சீசனில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்து சீசனைத் தொடங்கிய சிஎஸ்கே, அதன்பிறகு நல்லதொரு கம்பேக் கொடுத்தது. 11 போட்டிகளின் முடிவில் 12 புள்ளிகள் பெற்றுவிட, பிளே ஆஃப் போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதப்பட்டது. நம்பிக்கை அதிகரித்த நேரத்தில் கடைசி 3 போட்டிகளிலும் தோற்று ஏமாற்றமடைந்திருக்கிறது சிஎஸ்கே.
இந்த முடிவுகள் அணிக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி நிச்சயம் வருத்தமளிப்பதாகவே இருக்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ரசிகர் மத்தியில் சூப்பர் கிங்ஸ் மீதான நம்பிக்கை ஒட்டுமொத்தமாகக் குறைந்துவிட்டதைக் காண முடிகிறது. நிறைய கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
ரசிகர்களின் சில கேள்விகளும் விமர்சனங்களும் நியாயமானவையே. அதேசமயம், இது முற்றிலும் ஏமாற்றங்கள் மட்டும் நிறைந்த சீசனும் கிடையாது. சில பிரச்னைகள் இருந்தாலும், சில நேர்மறையான விஷயங்களும் இந்த சீசனில் இருக்கவே செய்தன. அவை அடுத்த சீசனுக்கான நம்பிக்கையாக அமைந்திருக்கின்றன. சஞ்சு சாம்சன், கார்த்திக் ஷர்மா, உர்வில் பட்டேல் ஆகியோரின் பேட்டிங், வேகப் பந்துவீச்சாளர்கள் எழுச்சி போன்ற விஷயங்களை முன்னேற்றத்துக்கான உறுதியான அடித்தளமாகவே நான் பார்க்கிறேன்.
இந்தக் கட்டுரையில் நான் இதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் - சிஎஸ்கே தடுமாறியதற்கான காரணங்களை அலசுவதோடு, அவை சரியாகக் கூடியவையா என்பதையும் விவாதிக்க வேண்டும். இந்த 14 போட்டிகளில் இந்த அணி கொடுத்த நம்பிக்கைகளாக நான் கருதுவதையும் முன்வைக்க விரும்புகிறேன். அவை அனைத்தையும் ஒரு தராசில் வைத்து இந்த அணி அடுத்த சீசனில் மீண்டு வர முடியுமா என்பதையும் அலசுவோம்.
பின்னடைவுக்கான 2 முக்கிய காரணங்கள்

பட மூலாதாரம், ANI
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பின்னடைவுக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். ஒன்று, காயங்கள். அணியின் 4-5 பிரதான வீரர்களை காயம் காரணமாக இழக்க வேண்டியிருந்தது. இது நிலையான ஒரு பிளேயிங் லெவனை உறுதிப்படுத்த விடவில்லை. அப்படி தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்படும்போது அது உங்களின் சிறந்த வீரர்களிடமிருந்து சிறந்த செயல்பாடுகளையும் பெற்றுக் கொடுக்காது.
நாதன் எல்லிஸ், கலீல் அஹமது, ஆயுஷ் மாத்ரே என பல முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக பாதிக்கப்பட்டார்கள். அது அணியை பெருமளவு பாதித்தது. ஆனால், சூப்பர் கிங்ஸை இன்னும் அதிகமாக பாதித்தது ஜேமி ஓவர்டனின் காயம் தான். ஏனெனில், அவர் இந்த சீசனின் சிறந்த வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். அதுமட்டுமல்லாமல், அவரைப் போன்ற இன்னொரு வீரர் சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லாததும் கூடுதல் பிரச்னையாக அமைந்துவிட்டது.
நன்கு வேகமாக கூடுதல் பவுன்ஸ் ஏற்படுத்தக் கூடியவர் ஜேமி ஓவர்டன். மிடில் ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தார். பேட்டிங்கிலும் கடைசி கட்டத்தில் நல்ல தாக்கம் ஏற்படுத்தினார். இப்படி ஆல்ரவுண்டராக சோபிக்கக் கூடிய அவருக்கு இணையான வீரர்கள் இல்லாதது, அந்த வெற்றிடத்தைப் பெரிதாக்கிவிட்டது. ராமகிருஷ்ணா கோஷ் தான் ஓரளவு அந்த இடத்தில் விளையாடக் கூடியவராக இருந்தார். ஆனால், அவரும் காயமடைந்துவிட, சிஎஸ்கே-வுக்கு மேலும் பின்னடைவாக அமைந்துவிட்டது.
சூப்பர் கிங்ஸின் தடுமாற்றத்துக்கான இரண்டாவது காரணம், பேட்டிங்கில் ஒன்றிரண்டு வீரர்களையே பெருமளவு சார்ந்திருந்தது. சீசன் தொடங்கும்போது பேட்டிங் பலமாக இருக்கிறது, பந்துவீச்சுதான் பிரச்னை என்று நினைத்திருந்தோம். ஆனால், பந்துவீச்சு எதிர்பார்ப்பை மீறி செயல்பட, பேட்டிங் ஏமாற்றமாக அமைந்துவிட்டது.
அணித் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம்

பட மூலாதாரம், ANI
அணித் தேர்வு, வீரர்கள் பயன்பாடு போன்ற விஷயங்களில் நிச்சயம் எனக்கும் சில வருத்தங்கள் உண்டு. அகீல் ஹொசைன், இந்த சீசன் சூப்பர் கிங்ஸின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தார். ஆனால், அவரை எல்லாப் போட்டிகளிலும் விளையாட வைக்கவில்லை. ஒரு போட்டியில் களமிறக்குவது, அடுத்த போட்டியில் வெளியே அமரவைப்பது என தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருந்தது சரியான விஷயம் அல்ல.
மேட்ச் அப்கள் யோசித்து அணியைத் தேர்வு செய்வது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். ஆனால், நல்ல தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வீரர்களை அப்படி மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை. அது நிலைத்தன்மையை பாதிப்பதோடு அந்த வீரரின் செயல்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றிலும் எதிர்மறையான தாக்கம் ஏற்படுத்திவிடும்.
அதேபோல், சிறப்பாகக் கையாண்டிக்கலாம் என்று நான் கருதும் இன்னொரு விஷயம் பிரஷாந்த் வீரை பந்துவீச்சில் பயன்படுத்தியது. இந்தத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய அவர் வீசியது என்னவோ வெறும் 2 ஓவர்கள் தான். ஆல்ரவுண்டரான அவரை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம். அந்த ஓவர்களில் ஒன்று பவர்பிளேவில் கொடுக்கப்பட்டது. மிடில் ஓவரில் அவருக்கு சில ஓவர்கள் கொடுத்துப் பார்த்திருக்கலாம். அவருக்கான போதுமான வாய்ப்பு அங்கு வழங்கப்படவில்லை என்று நான் கருதுகிறேன்.
சிஎஸ்கே பின்னடைவுக்கு கேப்டனும் ஒரு காரணமா?
இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் கொடுத்த செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அவருடைய செயல்பாடும், அணியின் இடமும் எப்போதுமே ஒன்றையொன்று பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கின்றன. 2021 சீசனில் அவர் ஆரஞ்ச் கேப் வாங்கியபோது அணி சாம்பியன் ஆனது. 2023 சீசனில் 590 ரன்கள் எடுத்தபோதும் சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், இம்முறை இரண்டுமே பின்தங்கிவிட்டன.
கெய்க்வாட்டின் இந்த செயல்பாட்டுக்கு அவர் பேட்டிங் செய்த போதும் கேப்டனாகவே இருந்ததுதான் பிரச்னை என்று தோன்றுகிறது. நீங்கள் கேப்டனாக இருந்துகொண்டு பேட்டிங் செய்வது எளிதான விஷயமில்லை. அதை நானும் அனுபவித்திருக்கிறேன். நீங்கள் பிட்ச்சுக்கு நடுவே இருக்கும்போது, அதுவும் தொடக்க வீரராக இருக்கும்போது சுதந்திரத்தோடு விளையாட வேண்டும். ருதுராஜ் அப்படி ஆடவில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது.

பட மூலாதாரம், ANI
எதிர்பார்ப்பு பாரமாக மாறி அவருக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்துவிட்டது. அதனால் தான் அவரால் அப்படி சுதந்திரமாக பேட்டிங் செய்ய முடியவில்லை என்று நான் கருதுகிறேன். ஒருசில போட்டிகளில் அவர் சுதந்திரமாக ஆடியிருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. அடுத்த சீசன் ருதுராஜ் கெய்க்வாட் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன். அவர் பேட்டிங் செய்ய வரும்போது கேப்டன் என்பதை மறந்துவிட்டு விளையாட வேண்டும். அப்போதுதான் அவருடைய இயல்பான ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்த முடியும்.
அதேபோல் ருதுராஜின் கேப்டன்சி மீதும் சில விமர்சனங்கள் இருக்கிறது. அவர் ஸ்பின்னர்களைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்ற விமர்சனம் பல காலமாகவே இருக்கிறது. இந்த சீசன் தொடக்கத்தில் அவர் ஸ்பின்னர்களை சரியாகப் பயன்படுத்தவில்லைதான். ஆனால், சீசன் போகப் போக அது மாறத் தொடங்கியது. சீசனின் இரண்டாவது பாதியில் அவர் ஸ்பின்னர்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினார், பௌலிங் மாற்றங்களையும் அவர் சிறப்பாக செய்தார். அகீல் ஹொசைன், ஜேமி ஓவர்டன் ஆகியோரைப் பயன்படுத்திய விதம் எனக்குத் தனிப்பட்ட முறையில் ரொம்பவே பிடித்திருந்தது.
சீசனின் முதல் 7 போட்டிகளில் சில தவறான முடிவுகளை அவர் எடுத்திருந்தாலும், அடுத்த 7 போட்டிகளில் நிறைய மாற்றங்கள் காட்டினார். முடிவுகளில் முதிர்ச்சியைப் பார்க்க முடிந்தது. அது எனக்கு நம்பிக்கை கொடுப்பதாக இருக்கிறது. அவர் தன் மாநில அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுவருகிறார். போகப் போக அவரது தலைமைப் பண்பில் முன்னேற்றம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இளம் வீரர்கள் செயல்பாடு நம்பிக்கையா ஏமாற்றமா?
இந்த சூப்பர் கிங்ஸின் தடுமாற்றத்துக்கு ஏலத்தில் செயல்பட்ட விதமும் காரணம் சொல்லப்படுகிறது. இளம் வீரர்களில் அதீதமாக முதலீடு செய்துவிட்டதால் சரியான பேலன்ஸ் இல்லை என்று கருத்து நிலவுகிறது. என்னைப் பொறுத்தவரை, ஏலத்தில் சிஎஸ்கே எடுத்த முடிவுகளை நான் முற்றிலும் தவறானது என்று சொல்லிவிட மாட்டேன்.
2025 சீசனுக்கு முன்பான மெகா ஏலத்தின்போது அவர்கள் பழைய சூப்பர் கிங்ஸ் டெம்ப்ளேட் வீரர்களைத்தான் வாங்கியிருந்தார்கள். ஆனால், அது அவர்களுக்கு பலன் தரவில்லை. கடந்த சீசன் மற்ற அணிகளின் செயல்பாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர்கள் தடுமாறினார்கள். அதனால், புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்று முடிவெடுத்து இந்தப் பாதையில் பயணித்திருக்கிறார்கள்.
இளம் வீரர்களை வாங்கும்போது அது எல்லா அணிகளுக்கும் நல்ல முடிவுகளைக் கொடுத்துவிடாது. 10 அணிகளில் 2-3 அணிகளுக்குத்தான் அது உடனடியாக நல்ல பலனைக் கொடுக்கும். அதனால் அந்த வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும்போதுதான் அவர்களால் இந்த அரங்கில் சோபிக்க முடியும். அப்படி சிஎஸ்கே கொடுத்த தொடர் வாய்ப்புகளின் பலன்தான் கார்த்திக் ஷர்மா போன்ற ஒரு வீரர் நல்ல எழுச்சி கண்டதற்கான காரணம். இந்த சீசனில் 32.78 என்ற சராசரியில் 295 ரன்கள் எடுத்திருக்கிறார் அவர்.
இளம் வீரர்கள் மீது செய்த முதலீடு ஓரளவுக்கு சூப்பர் கிங்ஸ் அணிக்கு பலன் கொடுத்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் இளமைக்கும், அனுபவத்துக்குமான சமநிலையை சரியாகக் கொண்டுவருவது எப்படி என்று வேண்டுமானால் சூப்பர் கிங்ஸ் யோசிக்க வேண்டும் என்று சொல்வேன். ஆனால், அதை அவர்களின் செயல்பாடு பின்தங்கியதற்கான காரணமாகச் சொல்ல மாட்டேன்.

பட மூலாதாரம், ANI
அடுத்தது என்ன?
அடுத்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் நல்ல முன்னேற்றம் காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த சீசனிலேயே நிறைய நேர்மறையான விஷயங்கள் இருக்கின்றன. சஞ்சு சாம்சன் முதல் சீசனிலேயே நல்லபடியாக அணியோடு ஒன்றிவிட்டார். புதிய அணிக்கு வந்து 2 சதங்கள் அடிப்பது சாதாரண விஷயமில்லை. அதேபோல், இளம் வீரர்கள் கார்த்திக் ஷர்மா, ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல் ஆகியோரும் சிறப்பாக பேட்டிங் செய்து எதிர்காலத்துக்கான நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். அடுத்த சீசன் இவர்கள் நிச்சயம் பேட்டிங்கை வலுசேர்ப்பார்கள்.
பந்துவீச்சுமே ஓரளவு நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். அன்ஷுல் கம்போக் சிறப்பாக செயல்பட்டார். கடைசி 3 போட்டிகளில் அவர் ரன்கள் அதிகம் வழங்கியிருந்தாலும், டெத் ஓவர்களில் தன்னால் சிறப்பாக வீசமுடியும் என்ற நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அடுத்த சீசன் எல்லிஸ் அணிக்குத் திரும்பும்போது அது டெத் பௌலிங்கை பலப்படுத்தும். அதேபோல், மிடில் ஓவர்களுக்கு ஒரு கூடுதலான ஆப்ஷனாக குர்ஜப்னீத் சிங் உருவெடுத்திருக்கிறார். இரண்டு வெளிநாட்டு ஸ்பின்னர்களுமே நல்ல பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி தொடர் முழுவதுமே பல பாசிடிவான விஷயங்கள் இருக்கின்றன. அதேசமயம் பிரச்னைகளும் இருக்கவே செய்திருக்கின்றன. அதை அணி நிர்வாகம் நிச்சயம் கண்டறிந்திருக்கும். அவற்றை சரிசெய்வது அவ்வளவு கடினமாக இருக்காது என்றே நான் நினைக்கிறேன். காயமடைந்திருந்த வீரர்கள் ஃபிட்டாக வரும்போது பல பிரச்னைகள் சரியாகிவிடும். அதுபோக, மீதமிருக்கும் பிரச்னைகளை சரிசெய்வது எளிதுதான். 5-6 வீரர்களுக்கு மேல் ரிலீஸ் செய்ய வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கிறேன். அணியின் காம்பினேஷனைப் பார்த்து அதற்கேற்ப ஒருசில இடங்களைப் பலப்படுத்தினாலே போதும். அது நிச்சயம் அவர்களை 2027 சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு எடுத்துச் செல்லும்.
(கட்டுரையாளர் பாபா இந்திரஜித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர். இந்தியா ஏ அணிக்காக அவர் விளையாடியிருக்கிறார். தற்போது தமிழ்நாடு அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























