பாகிஸ்தான் - அமீரகம் உறவில் விரிசலா? இந்தியாவை குறிப்பிட்டு கவலை எழுப்பும் பாக். ஊடகம்

    • எழுதியவர், ஷாயிஸ்தா ஃபாரூக்கி
    • பதவி, தெற்காசிய நிபுணர், பிபிசி கண்காணிப்பு
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே நீண்ட காலமாக மிகவும் நெருக்கமான உறவு இருந்து வருகிறது. ஆனால், சமீப காலமாக இந்த உறவுகள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த யூகங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் சமீபத்திய ஒரு முடிவிலிருந்துதான் தொடங்கின. ஐக்கிய அரபு அமீரகத்திடம் கடனாகப் பெற்ற டெபாசிட் தொகையைத் திருப்பிச் செலுத்தப் போவதாக பாகிஸ்தான் எடுத்த முடிவே அதற்குக் காரணம்.

முன்னதாக, இது போன்ற டெபாசிட் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு வழக்கமாக நீட்டிக்கப்பட்டு வந்தது.

கருத்து வேறுபாடுகள் இருக்கிறதா என்பது போன்ற ஊகங்களை இருதரப்புமே பகிரங்கமாக மறுத்துள்ளன. பதற்றம் நிலவுவதாகக் கூறப்படும் ஊகங்களை நிராகரித்துள்ள பாகிஸ்தான், தங்களது உறவு இப்போதும் வலுவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தும் காலமும், அந்தத் தொகையின் அளவும் பாகிஸ்தான் ஊடகங்களில் புதிய விவாதங்களையும் ஊகங்களையும் கிளப்பியுள்ளன.

ஊகங்களின் தொடக்கம்

பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள், ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியான ஊடகச் செய்திகளுக்குப் பிறகு மேலும் வலுவடைந்தன. ஏப்ரல் மாதத்தில் அமீரகத்தின் கடனை பாகிஸ்தான் திருப்பிச் செலுத்தவுள்ளதாக அந்தச் செய்திகள் தெரிவித்தன.

இந்தத் தொகை சுமார் 3.5 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளதாக 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்' அறிக்கை வெளியிட்டுள்ளது. இது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பில் சுமார் ஐந்தில் ஒரு பங்காகும்.

இரான் போருக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம் தனது முழுத் தொகையையும் திரும்பக் கேட்டதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் உள்ளிட்ட சில செய்திக் குறிப்புகள் தெரிவித்தன.

இது பாகிஸ்தானின் வெளிநாட்டு நிதி நிலைமை குறித்த கவலையை அதிகரித்தது. ஏப்ரல் 4-ஆம் தேதி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வைப்புத் தொகை இருதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் வைக்கப்பட்டிருந்தது என்றும், இது பாகிஸ்தானின் பொருளாதார நிலைத்தன்மைக்கு அபுதாபி அளிக்கும் ஆதரவைக் காட்டுகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த வைப்புத் தொகையின் காலக்கெடு இப்போது முடிவடைந்துவிட்டதால், அது 'ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான்' மூலம் திருப்பி அனுப்பப்படும் என்று அமைச்சகம் கூறியது.

இருப்பினும், அந்த அறிக்கையில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய தொகையின் அளவு குறித்த விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

செலுத்தப்படும் காலம் மற்றும் தொகையின் அளவு குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்தபோதிலும், பாகிஸ்தானோ அல்லது ஐக்கிய அரபு அமீரகமோ தங்களது உறவில் எந்தப் பதற்றமும் இருப்பதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதனை ஒரு "வழக்கமான நடைமுறை" என்று விவரித்ததோடு, கருத்து வேறுபாடுகள் குறித்த ஊகங்களை "தவறானவை" என்றும் கூறியது. ஐக்கிய அரபு அமீரகத்துடன் பாகிஸ்தான் கொண்டுள்ள வலுவான உறவையும் அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

இது ஏன் முக்கியமானது?

பாகிஸ்தானைப் பொருத்தவரை கடன் திருப்பிச் செலுத்தும் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் பாகிஸ்தான் தனது 7 பில்லியன் டாலர் சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் கீழ் தனது வெளிநாட்டு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இருதரப்பு வைப்புத்தொகைகளையே பெருமளவில் சார்ந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், போதுமான வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பை பராமரிக்க சீனா, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிடம் இருந்து சுமார் 12.5 பில்லியன் டாலர் நிதியாதார உத்தரவாதம் மற்றும் 'ரோல்ஓவர்' வசதிகளை பாகிஸ்தான் தக்கவைக்க வேண்டியுள்ளது.

'கடனை ரோல்ஓவர் செய்தல்' என்பது, காலக்கெடு முடிந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பதிலாக, புதிய நிபந்தனைகள் அல்லது புதிய கால அவகாசத்துடன் அதனைத் தொடர்வதாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த வைப்புத் தொகை "இந்த நிதி ஏற்பாட்டின் மிக முக்கியமான ஒரு பகுதி" என்று பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான 'டான்' ஏப்ரல் 4-ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடன் தொடர்பான இந்த நிச்சயமற்ற நிலை 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நிலவுகிறது. இந்த வைப்புத் தொகைகளை நீண்ட காலத்திற்கு நீட்டிப்பதற்குப் பதிலாக, அமீரகம் ஒவ்வொரு மாதமும் குறுகிய கால நீட்டிப்புகளை மட்டுமே வழங்கத் தொடங்கியது. ஆனால் பாகிஸ்தானோ, 2025 டிசம்பரில் இரண்டு ஆண்டுகால 'ரோல்ஓவர்' வசதியைக் கோரியிருந்தது.

இது முந்தைய நடைமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் இத்தகைய வைப்புத் தொகைகள் பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் நீட்டிக்கப்படுவது வழக்கம்.

ஏப்ரல் 6-ஆம் தேதி 'தி நியூஸ் டெய்லி' வெளியிட்ட அறிக்கை, இந்தக் கொள்கை மாற்றத்தை "மோசமடைந்து வரும் நிதி நிலைமையின்" அறிகுறி என்று குறிப்பிட்டது. அதேசமயம் 'டான்' நாளிதழ், இது "இந்த ஒப்பந்தத்தைத் தொடர்வதில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இருக்கும் அசௌகரியத்தைக்" காட்டுவதாகத் தெரிவித்தது.

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியில், இந்தத் திருப்பிச் செலுத்தும் விவகாரத்தால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வலுவிழக்கக்கூடும் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் ஆரம்பத்தில் கவலை தெரிவித்தன.

இருப்பினும், ஏப்ரல் 15-ஆம் தேதி பாகிஸ்தான் நிதி அமைச்சர் முகமது ஔரங்கசீப் வெளியிட்ட அறிவிப்பு இந்தக் கவலைகளைத் தணித்தது. சௌதி அரேபியா கூடுதலாக 3 பில்லியன் டாலர் வைப்புத் தொகையை வழங்கும் என்றும், தற்போதுள்ள 5 பில்லியன் டாலர் வசதியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

சில பிராந்திய வல்லுநர்களும் ஊடக நிறுவனங்களும் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்படுவதாகக் குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில், சர்வதேச ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் ஊடகங்கள் சிலவும் இந்தத் தொடர் பதற்றம் குறித்துச் செய்திகளை வெளியிட்டுள்ளன.

கத்தாரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'அல்-அரபி அல்-ஜதீத்' நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், பாகிஸ்தானை "பொருளாதார ரீதியாக ஒடுக்கியும், நிதி ரீதியான இழப்புகளை ஏற்படுத்தியும் ஐக்கிய அரபு அமீரகம் மிகக் கடுமையான தண்டனை" வழங்க முயற்சிப்பதாகத் தோன்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, சௌதி அரேபியாவுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள அரசியல் மற்றும் ராணுவ ரீதியான நெருக்கம் முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மறுபுறம், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் சமீபத்தில் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்ததும் மற்றொரு காரணமாக இருக்கலாம் என அந்த அறிக்கை கூறுகிறது. அவர் இஸ்ரேலை "மோசமான நாடு" என்றும் "மனிதகுலத்திற்கே சாபம்" என்றும் வர்ணித்திருந்தார்.

இதற்கிடையில், 'யுஏஇ71' இணையதளம், 'தி டிப்ளமேட்' இதழின் அறிக்கையை மேற்கோள் காட்டி, பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரக உறவில் நிலவும் 'நம்பிக்கை இல்லாமை' குறித்து சுட்டிக்காட்டியுள்ளது.

இரான் போர் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நிலவும் "விரிசல்களை அம்பலப்படுத்தியுள்ளது", ஆனால் "இந்த அதிருப்தி பல ஆண்டுகளாகவே வளர்ந்து வருகிறது" என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் முகமது ஃபைசல் அந்த அறிக்கையில் வாதிடுகிறார்.

பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விருப்பத்திற்கு மாறாக, பாகிஸ்தான் அமீரகத்தை விட சௌதி அரேபியாவிற்கு அதிக முன்னுரிமை அளிப்பதே இதற்கு ஒரு காரணம் என்று அவர் கூறுகிறார்.

இரான் போர் குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஐக்கிய அரபு அமீரக சமூக வலைதளப் பயனர்கள் விமர்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் பத்திரிகையாளர் டாம் ஹுசைன், ஹாங்காங்கின் 'சவுத் சீனா மார்னிங் போஸ்ட்' இதழில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

"காலாவதியான வைப்புத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முடிவு வெறும் பொருளாதாரத் தேவைக்காக மட்டுமே எடுக்கப்பட்டது அல்ல என்பதை சமூக வலைதள எதிர்வினைகள் உறுதிப்படுத்துகின்றன. இதனை இஸ்லாமாபாத் (பாகிஸ்தான் அரசு) மறுத்தாலும் இதுவே உண்மை" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவை குறிப்பிட்டு கவலை எழுப்பும் பாகிஸ்தான் ஊடகம்

ஏப்ரல் 13-ஆம் தேதியன்று 'தி டிப்ளமேட்' இதழில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் முகமது ஃபைசல் எழுதிய கட்டுரையில், "கால மாற்றத்திற்கு ஏற்ப, மாறிவரும் பிராந்திய சூழலில் பாகிஸ்தானும் ஐக்கிய அரபு அமீரகமும் தங்களது உறவை மீண்டும் ஒருமுறை மறுமதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 10-ஆம் தேதி 'டான்' நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், ஆசியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் நிலவி வந்த பழைய கூட்டணிகள் முறிந்து வருவதாகவும், அதே நேரத்தில் புதிய கூட்டணிகள் தற்போது நிலையற்ற நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் பிற வளைகுடா நாடுகளிடமிருந்து விலகிச் செல்வதும், பாகிஸ்தானிடம் கடனைத் திருப்பித் தருமாறு கோருவதும், மேற்கத்திய முதலாளித்துவ முறைக்கு எதிராக 'குளோபல் சவுத்' நாடுகள் கருத்தியல் ரீதியாக ஒன்றுபடவில்லை என்பதையே காட்டுகிறது என்றும் அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஏப்ரல் 15-ஆம் தேதியன்று 'பாகிஸ்தான் அப்சர்வர்' நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை நேரடியாகக் குறிப்பிடாமல், பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரக உறவுகளுக்கு "கூடுதல் மூலோபாயம் மற்றும் சமநிலையான அணுகுமுறை" தேவை என்று கூறியுள்ளது.

மேலும், "ஐக்கிய அரபு அமீரகம் தன்னை விட்டு விலகிச் செல்வதையோ அல்லது இந்தியாவுடன் அளவுக்கு அதிகமான நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதையோ பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது; அப்படி நடந்தால் அது பாகிஸ்தானின் ராஜீய வெளியைக் குறைத்துவிடும்" என்றும் அந்த கட்டுரையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு