ஹோர்மூஸில் அதிகரிக்கும் பதற்றம்: 3 கப்பல்களை தாக்கி இரண்டை கைப்பற்றிய இரான்

    • எழுதியவர், கேலீன் டெவ்லின் மற்றும் பால் பிரவுன்
    • பதவி, பிபிசி
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்கா - மற்றும் இரான் இடையே அறிவிக்கப்பட்டிருந்த இரண்டு வாரகால போர்நிறுத்தம் இன்றுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இணக்க ஒப்பந்தம் எட்டப்படும் வரை இரான் உடனான போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார் டிரம்ப்.

அதே வேளையில் இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் ஹோர்மூஸ் நீரிணையில் வந்த மூன்று கப்பல்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் 'துப்பாக்கி பொருத்தப்பட்ட படகு' இந்த தாக்குதல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட கப்பல்கள் எவை?

ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முயன்ற 3 கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாக கடற்சார் உளவு நிறுவனமான வேன்கார்ட் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்துள்ளது

தாக்குதல் 1

முதலாவதாக குறிவைக்கப்பட்ட சரக்கு கப்பல் 'எபமினோண்டாஸ்' என்பதை பிபிசி வெரிஃபை அறிகிறது.

அது ஒரு கிரேக்க நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது. மெரைன் டிராஃபிக் இணையதளத்திலிருந்து வந்த ஏஐஎஸ் தரவுகளின்படி, நீரிணையைக் கடந்தபோது அந்தக் கப்பல், கண்டறியக்கூடிய சமிக்ஞைகளை வெளியிடவில்லை.

பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் மற்றும் வேன்கார்ட் ஆகிய இரண்டிலிருந்தும் வரும் தகவல்களின்படி, அந்தக் கப்பல் நீரிணையைக் கடப்பதற்கு அனுமதி இருப்பதாக கப்பலின் மாஸ்டருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அந்தக் கப்பலை அணுகிய படகு தாக்குதல் நடத்தி கப்பலுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் 2

இதனைத் தொடர்ந்து ஹோர்மூஸ் நீரிணையில் வந்த இரண்டாவது கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளது.

இரானுக்கு மேற்கே 8 கடல் மைல் தொலைவில் வெளியே சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தற்போது கடலிலே நிறுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டன் மையம் குறிப்பிட்டுள்ளது

தாக்குதலுக்கு உள்ளான இரண்டாவது கப்பல் பனாமா கொடி ஏற்றப்பட்ட யூபோரியா என்பதை பிபிசி வெரிஃபை அறிகிறது. இது ஒரு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.

கேப்லர் (Kpler) இணையதளத்திலிருந்து வரும் ஏஐஎஸ் தரவுகளின் இந்தக் கப்பல் ஏப்ரல் 22-ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 06:40 மணிக்கு நீரிணையைக் கடக்கத் தொடங்கியது.

சௌதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நோக்கி சென்று கொண்டிருந்த இந்தக் கப்பல் இந்திய நேரப்படி மதியம் 12:08 மணிக்கு தாக்குதலுக்கு உள்ளானது. கப்பலின் மாஸ்டர் கப்பலை நிறுத்தினார். குழுவினர் பாதுகாப்பாக உள்ள நிலையில் கப்பலுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் 3

கடைசியாக தாக்குதலுக்கு உள்ளான கப்பல் பனாமா கொடி ஏந்திய எம்.எஸ்.சி ஃப்ரான்செஸ்கா என்பது தெரியவந்துள்ளது. நீரிணையில் தெற்கு நோக்கி சென்று ஓமன் வளைகுடாவிற்குள் நுழைய முயன்றபோது இரான் கரையிலிருந்து 6 கடல் மைல் தொலைவில் கப்பல் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கப்பல், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் நங்கூரமிட அறிவுறுத்தப்பட்டதாகவும், கப்பலின் சில பகுதிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் வேன்கார்ட் தெரிவித்துள்ளது.

"புரட்சிகர காவல்படையின் படகு கப்பலை நெருங்கியதும் எந்த விதமான எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. அதன் பிறகு கப்பல் மீது புரட்சிகர காவல்படையின் படகு நடத்திய தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டது," என்று பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளது.

இரான் கூறுவது என்ன?

ஹோர்மூஸ் நீரிணையில் தாக்குதலுக்கு உள்ளான மூன்று கப்பல்களை இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இலக்கு வைத்ததாக இரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யூபோரியா என்கிற கப்பல் இலக்கு வைக்கப்பட்டு தற்போது இரான் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

இரான் கடற்படையின் அறிக்கையை மேற்கோள்காட்டி இரானிய ஊடகங்கள் வெளியிடும் செய்தியில், எம்.எஸ்.சி ஃப்ரான்செஸ்கா மற்றும் எபமினோண்டாஸ் ஆகிய கப்பல்கள் இரான் கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா - இரான் அமைதி உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் தாக்குதல்கள்

செபாஸ்டியன் உஷர், பிபிசி

அதிபர் டொனால்ட் டிரம்ப் போர்நிறுத்த நீட்டிப்பை அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஹோர்மூஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை இரான் தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. அமைதி உடன்படிக்கையை எட்டுவதில் முக்கியத் தடையாக ஹோர்மூஸ் இருந்து வருகிறது.

நீர்வழியைக் கடக்க முயன்ற கப்பல்களை இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் துப்பாக்கி பொருத்தப்பட்ட படகுகள் தடுத்து நிறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ இதுவரை பதிவாகவில்லை. இருப்பினும், இந்த நடவடிக்கை மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போர்நிறுத்தத்திற்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில், தற்போதைய முட்டுக்கட்டை நிலை மீண்டும் மோதலைத் தூண்டிவிடும் அபாயம் இருப்பதையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தனது சமீபத்திய கருத்துகளில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது இரானுக்கு அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு பொருளாதார பின்னடைவு என விவரித்தார்.

ஆனால், அமெரிக்க அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தத்தைக் கொடுப்பதிலேயே இரான் அதிக முனைப்பு காட்டுவது போல் தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு