You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஊரு சனம் தூங்கிருச்சு' - பாடகி ஜானகியின் 10 பிரபல பாடல்கள்
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி, தனது 17வது வயதில் சலபதிராவ் இயக்கத்தில் வெளியான 'விதியின் விளையாட்டு' (1957) என்ற படத்திற்காக 'பெண் என் ஆசை பாழானது' என்ற முதல் சினிமா பாடலை பாடினார்.
அடுத்த நாளே அவருக்கு ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 1957ம் ஆண்டு மட்டும் 5 மொழிகளில் பல பாடல்களை பாடியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு கொங்கணி, துளு, சவுராஷ்டிரா, இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடியுள்ள ஜானகிக்கு ஏப்ரல் 23 அன்று பிறந்த நாள்.
'ஜானகி பாடல்கள் குறித்து மாதக்கணக்கில் பேசலாம்'
எஸ்.ஜானகி பாடல்களில் உங்களுக்கு பிடித்த 10 பாடல்களை சொல்ல முடியுமா என்று ராகமாலிகா டிவி என்ற இசை சேனல் மூலம் பிரபலமானவரும், இசை ஆய்வாளருமான சுபஸ்ரீ தணிகாசலத்திடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
"அவர் பாடல்களை பற்றி நாட்கணக்கில், மாதக்கணக்கில் பேசலாம். அவரின் சாதனைகள் அப்படிப்பட்டது." என்ற சொல்லத்தொடங்கிய அவர் தன் மனதுக்கு நெருக்கமான ஜானகியின் 10 பிரபல பாடல்கள் குறித்து பேசினார்.
நாதம் என் ஜீவனே
காதல் ஓவியம் படத்தில் இளையராஜா இசையில் எஸ்.ஜானகி பாடிய பாடல். என் வாழ்க்கைக்கும், என் இசை வேலைக்கும் மிகவும் நெருக்கமான பாடல் இது. குறிப்பாக, 'இசையை அருந்தும் சாதகப் பறவை போல நானும் வாழ்கிறேன்' என்ற வரிகளை அவர் பாடும்போது, நானே என்னை மறப்பேன். பாரதிராஜா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகி ராதாவுக்காக பாடிய பாடல் காலத்தை கடந்து நிற்கிறது.
தாரா.. அவர் வருவாரா?
ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில், கருணாநிதி கதை வசனத்தில் எம்ஜிஆர், பத்மினி, ராஜசுலோச்சனா நடித்த அரசிளங்குமரி படத்தில் இடம் பெற்ற பாடல் இது. எனக்கு மிகவும் பிடித்த, சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.ராமநாதன் இசையில் எஸ்.ஜானகி சில பாடல்களையே பாடியிருக்கிறார். அதில் சிறந்த பாடல் இது என்பேன். இந்த பாடலின் இசை, அம்மாவின் (ஜானகி) வாய்ஸ், இசைக்கருவிகளின் லயம் மனதை மயக்கும்.
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை...
ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த போலீஸ்காரன் மகள் படத்தில் விஜயகுமாரி அம்மாவுக்காக, எஸ்.ஜானகி அம்மா பாடிய பாடல். எம்.எஸ்.வி, ராமமூர்த்தி இசையமைத்து இருந்தனர். இந்த பாடலில் அவரது மென்மையான குரல் செய்யும் மாயம் அலாதியானது.
சிங்கார வேலனே தேவா
கொஞ்சும் சலங்கை படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை யார்தான் மறக்க முடியும். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில், காருகுறிச்சி அருணாசலம் நாதஸ்வரத்துடன் இணைந்து பாடிய எஸ்.ஜானகியின் குரலுக்கும் நிகர் ஏது? அந்த காலத்தில் இப்படிப்பட்ட பாடலை நாதஸ்வரம், குரலுடன் இணைத்து எப்படி ரிக்கார்டிங் செய்து இருப்பார்களோ? என பலமுறை வியக்கிறேன். இன்றைக்கும் எத்தனையோ இசைநிகழ்ச்சிகளில் இந்த பாடல் பாடப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
பொன்மேனி உருகுதே
முன்றாம்பிறை படத்தில் இளையராஜா இசையில் இந்த பாடலை எஸ்.ஜானகியை தவிர வேறு யாராலும் சிறப்பாக பாட முடியாது என்பேன்.அந்த பாடலில் உருகும், உணர்ச்சிகரமான அவர் வாய்சை கேளுங்கள், அது புரியும். கமல், சில்க் ஸ்மிதா ஆடும் இந்த பாடலுக்கு தனது காந்த குரலில் அவர் கலக்கியிருப்பார்.
பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
இன்று நீ நாளை நான் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா. இசை தெரிந்தவர்களுக்கு இந்த பாடலின் ஸ்டெக்சர் நன்கு தெரியும். 7, 8 ரிதத்தில் ரொம்பவே கஷ்டமான, வித்தியாசமான இசைக்கோர்வையில் வரும் பாடல். ஆனாலும் தனது திறமையால் சிறப்பாக பாடியிருப்பார்.
ஊரு சனம் தூங்கிருச்சு
மெல்லத்திறந்தது கதவு படத்தில் வரும் மென்மையான பாடல். இரவின் அமைதி, பிரிவின் தவிப்பை ஒரு மெட்டில் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. இளையராஜா, எஸ்.ஜானகி இணைந்து அதை இந்த பாடலில் தந்தார்கள், கவிஞர் வாலியின் வரிகளும் பாடலுக்கு கூடுதல் பிளஸ்.
ராதைக்கு ஏற்ற கண்ணனோ
சுமைதாங்கி படத்தில் வரும் அழகான பாடல். எஸ்.எஸ்.வி, ராமூர்த்தி, எஸ்.ஜானகி அம்மா கூட்டணியில் வந்த அருமையான, மென்மையான பாடல். எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படியொரு வசீகரக்குரல்.
தூரத்தில் நான் கண்ட உன் முகம்?
நிழல்கள் படத்தில் இளையராஜா இசையில் உருவான பாடல். அடடா, என்னவொரு இதம். எவ்வளவு டென்சன் இருந்தாலும் குறைந்துவிடும். தெலுங்கில் இந்த வெர்ஷனுக்காக அவருக்கு தேசியவிருதே கிடைத்தது.
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
அச்சாணி படத்தில் இடம் பெற்ற ஆன்மிக பாடல். இன்றைக்கும் மாதாவை போற்றும் சிறந்த பாடலாக ஒலித்து வருகிறது. காதல் பாடல், கிறங்க வைக்கும் பாடல் மட்டுமல்ல, மனம் உருக பாடும் ஆன்மீக பாடலையும் பாடமுடியும் என இதில் நிரூபித்தார் . பாடலில் ஒரு தாய் அன்பும் ஒளிந்திருக்கும். அது அவர் குரலில் தெரியும்
'அமர் என பாசமாக அழைப்பார்'
பாடகி எஸ்.ஜானகி குறித்து இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''சின்ன வயதில் இருந்தே எஸ்.ஜானகி பாடல்களை கேட்டுதான் நான் வளர்ந்தேன். சென்னைக்கு வந்து தேவராஜ், அர்ஜூன்சார் உட்பட பல்வேறு இசையமைப்பாளர்களிடம் நானும், அண்ணன் இளையராஜாவும் பணியாற்றினோம். இசையமைப்பாளர் ஜி.கே வெங்கடேஷிடம் பணியாற்றியபோது எஸ்.ஜானகி அம்மா பழக்கம். அவர் இசையில் தேன் சிந்துதே வானம் உட்பட ஏகப்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அந்த மாதிரி பல பாடல்களுக்கு நான் கிடார் வாசித்து இருக்கிறேன்.'' என்றார்.
''அண்ணன் இளையராஜா இசையமைப்பாளர் ஆன முதல்படமான அன்னக்கிளியில் அவரை அன்னக்கிளி உன்னை தேடுதே, மச்சானை பார்த்தீங்களா பாடலை பாட பாட வைத்தார். அந்த பாடல்கள் ஹிட்டானது.
16 வயதினிலே படத்தில் அண்ணன் இசையில் நான் எழுதிய செந்தூரப்பூவே பாடலை அவர்தான் பாடினார். இன்றும் அந்த பாடல் சாகாவரம் பெற்ற பாடலாக ஒலித்துக்கொண்டுஇருக்கிறது. அந்த பாடல் ரிக்கார்ட்டிங் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. அன்றைக்கு எனக்கு காய்ச்சல். ஆனாலும், பாடல் பதிவு முடிந்த சந்தோஷத்தில் நான் பலருக்கும் பார்ட்டி கொடுத்தேன்.'' என்றார் கங்கை அமரன்
''என் இசையில், என் படங்களில் பல பாடல்களை பாடியிருக்கிறார். என் இசையில் மெளனகீதங்கள் படத்தில் மூக்குத்தி பூ மேல காத்து எனக்கு பிடித்த பாடல். அதேபோல் , ஓடத்துல தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீர் பாடலை என் இசையில் பாடிவிட்டு, வரிகள், ட்யூன் கேட்டு அவர் கண் கலங்கி மனம் உருகி பாடினார். ஜானகி அம்மா என பாசமாக அழைப்பேன், அவரோ அமர் என்று என்னை செல்லமாக அழைப்பார். எங்கள் குடும்பத்துடன், எங்கள் இசையுடன் அவர் குரல் கலந்து இருக்கிறது'' என்றார்.
பிரபல நடிகை பூர்ணிமாபாக்யராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''என் சினிமா வாழ்க்கையில் அவர் எத்தனையோ ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். அவர் பாடல்களால் என்னை மாதிரி ஹீரோயின்கள் வளர்ந்தோம் என்று கூட சொல்லலாம். தங்கமகனில் எனக்காக அவர் பாடிய பூ மாலை ஒரு பாவை ஆனது
ராத்திரியில் பூத்திருக்கும், வா வா பக்கம் வா பாடல்களை மறக்க முடியுமா?. தமிழில் மட்டுமல்ல, மலையாளத்தில் கூட எனக்கு ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்தார். என் முதல் படமான மஞ்சுவிரிஞ்சுபூக்களுக்கு அவர்தான் பாடினார்.
குழந்தை முதல் வயதானவர் வாய்ஸ்வரை அவர் சரளமாக பாடுவார். பலமுறை அவரை நேரில் பார்த்து பேசியிருக்கிறேன். என் கணவர் இயக்குனர் கே.பாக்யராஜுக்கும் விருப்பமான பாடகி. அவர் படங்களில் பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். அவரை பார்க்கும்போது கை எடுத்து கும்பிடத்தோன்றும். அவர் குரலுக்கு என்னை மாதிரியான ஹீரோயின்கள் நடித்தது பாக்கியம்'' என்கிறார்.
'உங்களுக்கு பிடித்தமாதிரி பாடியிருக்கிறேனா'
தமிழில் ஜீவா, நயன்தாரா நடித்த திருநாள் (2016) படத்துக்காக, ஸ்ரீகாந்த்தேவா இசையில் தந்தையும் யாரோ என்ற பாடலை ஜானகி பாடியிருந்தார். பின்னர் பாடுவதை நிறுத்திவிட்டார்.
இந்த படத்தின் இயக்குனர் ராம்நாத் பிபிசி தமிழிடம்,''ஸ்ரீகாந்த்தேவா இசையில் அந்த பாடலை அவர்தான் பாட வேண்டும் என்று அடம்பிடித்து பாட வைத்தோம். ஐதராபாத்தில் மணிசர்மா ஸ்டூடியோவில் பாடிக்கொடுத்தார். அவரை பார்த்தவுடன் பலரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். சில மணி நேரத்தில் பாடிவிட்டு, என்னை தனியே அழைத்து உங்களுக்கு பிடித்தமாதிரி பாடியிருக்கிறேனா? உங்களுக்கு திருப்தியா என என்னிடம் கேட்டார்.
அவர் எவ்வளவு பெரிய மேதை, இப்படி கேட்கிறாரே என நினைத்து நான் அவர் காலில் விழுந்துவிட்டேன். பின்னர், தனக்கு உடல்நலம் சரியில்லை. இல்லாவிட்டால் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து இருப்பேன் என்றார். இந்த பாடல் நன்றாக இருக்கிறது. இதை இரவில் நான் கேட்டு துாங்குவேன். இந்த பாடலில் ஒரு காப்பியை கொடுங்கள் என்று அன்போடு வாங்கி சென்றார்'' என்கிறார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு