'தோண்ட தோண்ட எலும்புக் கூடுகள்': இலங்கையின் செம்மணி - சித்துபாத்தி புதைகுழி கவனம் பெறுவது ஏன்?

செம்மணி - சித்துபாத்தி பகுதியில் தொடர்ந்து நடைபெறும் அகழ்வு பணிகள்.

பட மூலாதாரம், Parathan

படக்குறிப்பு, செம்மணி - சித்துபாத்தி பகுதியில் தொடர்ந்து நடைபெறும் அகழ்வு பணிகள்.
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

(எச்சரிக்கை: கட்டுரையில் உள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 17 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், இன்றைய காலத்திலும் அதன் பாதிப்புகள் மக்கள் மத்தியில் இருந்த வண்ணமே காணப்படுகின்றது.

குறிப்பாக மனித புதைக்குழிகள், புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அவ்வப்போது தோண்டப்பட்டு வருகின்ற பின்னணியில் தற்போது யாழ்ப்பாணத்தில் தோண்டப்பட்டு வரும் செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து ஜூன் 17 அன்று வரை சுமார் 360க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் தோண்ட தோண்ட முறையற்ற விதத்தில் புதைக்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான மேலும் பல மனித எலும்புக்கூடுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு தொடர்ந்து அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செம்மணி மனிதப் புதைகுழி என்றால் என்ன?

யாழ்ப்பாணம் நகருக்குள் பிரவேசிக்கும் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள ஒரு இடமே செம்மணி பிரதேசமாகும்.

இந்த செம்மணி பகுதியில் 1999ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது அந்த இடத்தில் மனிதப் புதைகுழியொன்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

வட பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து (LTTE) யாழ்ப்பாணத்தை, இலங்கை அரசாங்கம் 1995ம் ஆண்டு கைப்பற்றியிருந்தது.

இந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காணாமல் போனதாக கூறப்படும் தமிழர்கள் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு வெளியான தகவல்களின் அடிப்படையில் 1999ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் அந்த இடத்தில் மனிதப் புதைகுழி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகளில் பல எலும்புக்கூடுகள் அந்த காலப் பகுதியில் மீட்கப்பட்டதுடன், அந்நடவடிக்கை இடைநடுவில் கைவிடப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், செம்மணி பகுதியிலுள்ள சித்துபாத்தி இந்து மயான பூமியின் அபிவிருத்தி பணிகளுக்கான நடவடிக்கை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் முறையற்ற விதத்தில் புதைக்கப்பட்ட சடலங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழி
படக்குறிப்பு, மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (கோப்புப்படம்)

செம்மணியில் தோண்டப்படுவது உண்மையாகவே மனிதப் புதைகுழியா? அல்லது மயானமா?

செம்மணி - சித்துபாத்தி இந்து மயானம் என்ற போதிலும், அந்த இடத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள விதம் முறையற்ற முறையில் காணப்படுவதாக, வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''இதுவொரு இந்து மயானம். இந்து மயானத்தில் சடலங்கள் புதைக்கப்படமாட்டாது. தகனம் செய்யப்படும். அவ்வாறு புதைக்கப்படுவதாக இருந்தாலும், அதற்கான முறையொன்று இருக்கின்றது. எந்த பக்கத்தில் தலை வைக்க வேண்டும், கையை எப்படி வைக்க வேண்டும், காலை எப்படி வைக்க வேண்டும் என்ற முறையொன்று இருக்கின்றது. இது அப்படியில்லை. ஒரு சடலத்துக்கு மேல் இன்னுமொரு சடலத்தை வைத்து, ஒரு பக்கத்தில் தலை, மறுபக்கத்தில் மற்றைய தலை உள்ளது, மேலும் கால்கள் மடிக்கப்பட்டு இருக்கின்றன, நீதிமன்றமே இதுவொரு குற்றப் பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளது." என வி எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

சித்துபாத்தியின் இன்றைய நிலைமை என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அரசாங்கத்தின் உதவியுடன் சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

ஒரே இடத்தில் இரண்டு மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டதாக, வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.

''ஒரே இடத்தில் இரண்டு மனித புதைக்குழிகள் கண்டறியப்பட்டன. இரண்டாவது மனித புதைக்குழியில் 9 மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அதை அதன் பின்னர் தற்காலிகமாக நிறுத்திவிட்டோம். சட்டரீதியான முறையில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், சித்துபாத்தி இந்து மயான சபையினரும் அது சம்பந்தமாக சில அறிக்கைகளை சொன்னார்கள்." என்றார்.

இந்து மயானத்தில் வயது குறைந்தவர்களை அடக்கம் செய்வதற்கும், நீதிமன்றத்திலிருந்து வருகின்ற உடல்களை அடக்கம் செய்வதற்கும் என்று இந்த இடத்தை ஒதுக்கியிருந்ததாகவும், அந்த புதைக்குழி தான் இரண்டாவது புதைக்குழியாக வருகின்றமையினால், தாங்கள் தோண்டுகின்ற போது உரிய முறையில் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவித்தார்.

"அது ஒரு சட்டரீதியான முறையில் காணப்பட்டமையினால் அதை நாங்கள் இடையில் நிறுத்தி விட்டோம். முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் தான் தற்போது ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன" என அவர் குறிப்பிடுகின்றார்.

சித்துபாத்தி மனித புதைக்குழியிலிருந்து இதுவரை 366 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் 357 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், எலும்புகள் அல்லாத பிற சாட்சி பொருட்கள் 119 அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் குறிப்பிடுகின்றார்.

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்காக 56 நாட்களுக்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

'இதில் என்னுடைய அவதானத்தின் படி, சிறுவர்கள் மூன்றில் ஒரு பகுதியை விடவும் சற்று அதிகமாகவே இருக்கலாம், ஆனால் சரியான கணக்கு இப்போதைக்கு தெரியாது. உரிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் போது தான் அதை சரியாக சொல்ல முடியும். மன்னார் சதொச மனித புதைக்குழியிலிருந்து ஆகக்கூடுதலான 276 மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இந்த தொகையை தற்போது இது மிஞ்சும் என்ற நிலைமை காணப்படுகின்றது." என அவர் குறிப்பிடுகின்றார்.

காணாமல் போனோரின் உறவினர்கள் என்ன சொல்கின்றார்கள்?

லீலா தேவி ஆனந்த நடராஜா

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, இனப்படுகொலை செய்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழங்கும் தண்டனையில் இனியும் தமிழர்கள் மீது கை வைக்க நினைப்போருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று லீலா தேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.

மனித புதைக்குழியிலிருந்து அகழ்வுகளை மேற்கொண்டு, அதிலிருந்து மீட்கப்படுவோருக்கு இறுதி கிரியைகளை செய்வதை விடவும், தமது உறவினர்களுக்கு இந்த நிலைமையை ஏற்படுத்திய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதே முக்கியமானது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலா தேவி ஆனந்த நடராஜா தெரிவிக்கின்றார்.

அவ்வாறு தண்டனை வழங்கப்படும் பட்சத்திலேயே இவ்வாறான இனப் படுகொலைகள் இனியும் நடக்காது தடுக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

'செம்மணியை மிகப் பெரிய மனித புதைக்குழியாக அடையாளப்படுத்தியதாக சொன்னால், அதில் ஒரு அர்த்தம் இருக்கின்றது, செம்மணியில் பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றது என்பது தான் நேரடியாகவே தெரியவருகின்ற கருத்து. அதை செய்தது யார் என்பதை நாங்கள் முதலில் அறிய வேண்டும்." என்றார் அவர்.

முன்னாள் ராணுவ அதிகாரியான சோமபால ராஜபக்ஸ சாட்சி சொல்ல முன்வந்துள்ளதாகவும், ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கைகளை எவரும் எடுக்கவில்லை என்றும் கூறிய அவர், பாதிக்கப்பட்ட மக்கள் என்ற விதத்தில் அது பெருமளவான கவலையளிக்கின்றது என்றும் லீலா தேவி ஆனந்த நடராஜா தெரிவிக்கின்றார்.

மனித புதைகுழியிலிருந்து மீட்கப்படுகின்ற எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து, அது யாருடைய உடல்கள் என்று கண்டறிவதில் என்ன பயன் இருக்கின்றது என்று அவர் கேள்வி எழுப்புகின்றார்.

"இதிலுள்ள எமது உறவுகளை கண்டுபிடித்து அவர்களுக்கான கிரியைகளை செய்ய வேண்டும் என்பது ஆசையில்லை. எமது உறவுகளுக்கு இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனையை வழங்க வேண்டும் என்ற எண்ணமே உள்ளது." என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கம் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குகின்றது?

செம்மணி மனித புதைக்குழியை தொடர்ச்சியாக அகழ்ந்து, அதற்கான ஆய்வுகளை செய்வதற்கான நிதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.

சித்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 27வது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக 56 நாட்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக, பெயர் தெரிவிக்க விரும்பாத உயர்மட்ட அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நீதி அமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நீதி அமைச்சர் உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் விரைவில் சித்துபாத்தி மனித புதைக்குழியின் அகழ்வு பணிகளை ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அனுமதி நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ள நிலையில், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தரப்பினர் விரைவில் சித்துபாத்தி பகுதிக்கு சென்று எதிர்வரும் நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் பிபிசி தமிழிடம் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடரும் மனித புதைக்குழிகளின் அகழ்வுகள்?

வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன்

இலங்கையில் 24க்கும் அதிகமான மனித புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அவற்றை உரிய முறையில் மேற்கொள்வதற்காக சட்டங்கள் இல்லை என, வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.

அவரது கூற்றுப்படி, இலங்கையில் இதுவரை 56க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் இருக்கின்றன. அவற்றில் 24 மனித புதைகுழிகள் அகழப்பட்டுள்ளன.

திருகேதீஸ்வரம், சதொச, கொக்குத்தொடுவாய், செம்மணி ஆகிய மனித புதைகுழி அகழ்வுகளில் ஈடுபட்டவர் என்ற அடிப்படையில் இதில் இப்போது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும், பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான சட்ட வரையறையொன்று இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

"இங்கு எலும்பு மாத்திரமே இருக்கின்றது. அதற்கான சட்டமோ அல்லது சட்டக்கோவையோ இதுவரை உருவாக்கப்படவில்லை." என்றும் அவர் தெரிவித்தார்.

"எமது தண்டனை சட்டக்கோவையின் கீழ் உள்ள உடற்கூராய்வு என்ற சரத்துக்களின் கீழ் தான் இந்த விடயங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. எலும்புகளுடன் எடுக்கப்பட்ட பிற பொருட்களை ஆய்வு செய்வது காலத்தை கணிக்கக்கூடியதாக இருக்கும். மற்றையது இந்த சட்ட மருத்துவ அதிகாரிகளினால் அந்த எலும்பு எத்தனையாவது வயதில் இருக்கின்றது. ஆணா, பெண்ணா? இறப்புக்கான காரணத்தை கண்டறிய முடியும் என்றால் இதை சொல்லிவிடுவார்கள். அதற்கான அறிக்கையை கொடுப்பார்கள். ஆனால் அது எந்த ஆண்டு இறந்தார்கள் என்பதை எவரும் சொல்ல மாட்டார்கள். அதை கண்டறிவதற்காக ஆய்வுகளை அமெரிக்காவின் ஃபுளோரிடாவுக்கு கொண்டு சென்றே செய்ய வேண்டும்." என அவர் தெரிவித்தார்.

சதொச மனித புதைக்குழிக்கு மாத்திரம் தான் அந்த ஆய்வுகளை செய்திருப்பதாக தெரிவித்த அவர், அது சரியான காலத்தைக் காட்டாது மாறாக, ஒரு கால எல்லையை மாத்திரமே காட்டும் எனவும் அவர் கூறினார். "அதனால் அதனூடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியுமா என்று சொல்ல முடியாது.' என வி.எஸ்.நிரஞ்ஜன் கூறுகின்றார்.

'காணாமல் போனோர் உறவினர்கள் இன்றும் தமது உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் டிஎன்ஏ மாதிரிகளையும், எலும்பு கூடுகளிலுள்ள மாதிரிகளையும் ஒப்பிட்டு பார்த்தால், ஏதாவது எமக்கு பிரயோசனமானதாக இருக்கும். ஆனால், அதற்காக தொழில்நுட்ப வசதிகளும், அரசாங்கத்தின் நிதி பங்களிப்பும், வசதி வாய்ப்புக்களும், அதற்கான நிறுவன அமைப்புக்களும் இலங்கையில் இல்லை." என அவர் குறிப்பிடுகின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு