"இறப்புக்கு முதல்நாள் அடித்தனர்": பட்டியல் சாதி இளைஞர் மரணத்தால் மயிலாடுதுறையில் பதற்றம்

மயிலாடுதுறை, பட்டியல் சாதி இளைஞர் கொலை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, உயிரிழந்த பார்த்திபன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்

(எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.)

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த இளைஞரும் மாற்று சாதியைச் சேர்ந்த சிறுமியும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

"முதல்நாள் என் மகனை அவர்கள் அடித்தபோதே காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தோம். நேற்று (ஜூன் 30) அதிகாலை 1.30 மணியளவில் காணாமல் போன என் மகனை சடலமாகப் பார்த்தேன். அந்தப் பெண்ணின் இறப்பிலும் மர்மம் உள்ளது," என்கிறார், இளைஞரின் தந்தை மாரிமுத்து.

இந்தக் குற்றச்சாட்டை பெண்ணின் பெற்றோர் மறுத்துள்ளனர். இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆன்மிக பணிகளில் ஆர்வம் கொண்டவராக அறியப்படும் இவருக்கு நிரந்தர வேலை என எதுவும் இல்லை என உறவினர்கள் கூறுகின்றனர்.

இவரின் மகன் பார்த்திபன், எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். தனித்தேர்வராக பிளஸ் 2 தேர்வை எழுதும் முயற்சியிலும் இவர் ஈடுபட்டு வந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனது மகன் காதலித்து வந்ததாகக் கூறுகிறார், இளைஞரின் தந்தை மாரிமுத்து.

கொட்டகையில் உயிரிழப்பு - என்ன நடந்தது?

மயிலாடுதுறை, பட்டியல் சாதி இளைஞர் கொலை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகம்

கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கொட்டகை ஒன்றில் கடந்த 30 ஆம் தேதியன்று இருவரும் தூக்கிட்டு இறந்துவிட்டதாக ஊருக்குள் தகவல் பரவியது.

"முதல்நாள் இரவு எங்களுடன் பார்த்திபன் தூங்கிக் கொண்டிருந்தான். அதன்பிறகு அவனைக் காணவில்லை. சுமார் 2.30 மணியளவில் காவல்நிலையத்தில் இருந்து எனக்கு போன் வந்தது," என்கிறார் மாரிமுத்து.

காவல்நிலையத்துக்குச் சென்றபோது அங்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரின் உறவினர்களும் கூடியிருந்தனர். 'மகளைக் காணவில்லை' என அவர்கள் புகார் கொடுக்க வந்திருந்ததாக பிபிசி தமிழிடம் மாரிமுத்து தெரிவித்தார்.

"வீட்டில் மகனின் செருப்பு மட்டும் கிடந்தது. அவனின் செல்போனுக்கு அழைப்பு சென்றாலும் எடுத்துப் பேசவில்லை. உறவினர்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடினோம். காலை சுமார் 6.30 மணியளவில் இருவரும் இறந்த நிலையில் கிடப்பதாகக் காவல்துறை தெரிவித்தது," என அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய மாரிமுத்து, "காதல் விவகாரம் காரணமாக சில நாட்களுக்கு முன்பு என் மகனை பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் அடித்துள்ளனர். அப்போதே காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது." என்கிறார்.

சம்பவத்துக்கு முதல்நாள் புகார்

29-ஆம் தேதியன்று இதுதொடர்பான புகாரை காவல்நிலைய ஆய்வாளரிடம் பார்த்திபன் அளித்துள்ளார்.

அதில், 'குளத்துக்குக் குளிக்கச் சென்ற என்னை அதே கிராமத்தைச் சேர்ந்த இறந்துபோன சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் அடித்தனர்' எனக் கூறியுள்ளார்.

'குளத்துக்குக் குளிக்க வரக் கூடாது' எனக் கூறி சாதி பெயரைச் சொல்லி தன்னைத் திட்டியதாக புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் சிறுமியின் தந்தை உள்பட சிலர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"அவர்கள் அடித்ததால் என் மகனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டிச் சென்றேன். வீட்டுக்கு வந்த பிறகு வெளியில் உறங்கிக் கொண்டிருந்தான். மறுநாள் காலையில் பிணமாகத்தான் பார்த்தேன்," என்கிறார் மாரிமுத்து.

இந்தச் சம்பவத்தில் சில சந்தேகங்கள் எழுவதாகவும் அவர் கூறினார். "29 ஆம் தேதியன்று என் மகனைச் சிலர் அடித்தபோது ஊருக்குத் தொடர்பில்லாத சிலர் அந்தக் கூட்டத்தில் இருந்துள்ளனர்." என்கிறார்.

மயிலாடுதுறை, பட்டியல் சாதி இளைஞர் கொலை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, தரங்கம்பாடி- சென்னை சாலையில் நடைபெற்ற போராட்டம்

"மகன் இறந்த இடத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த அறிகுறிகளையும் பார்க்க முடியவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

"எனக்கு ஒரு மகனும் மகளும் இருந்தனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் தொட்டியில் விழுந்து மகள் இறந்துவிட்டாள். இப்போது மகனும் இறந்துவிட்டார். என்ன செய்வது எனத் தெரியவில்லை," எனக் கூறி வேதனையை வெளிப்படுத்தினார் மாரிமுத்து.

பட்டியல் சாதி இளைஞரை சாதி காரணமாக மாற்று சாதியினர் ஆணவக் கொலை செய்துவிட்டதாக அப்பகுதியில் தகவல் பரவியுள்ளது. இதனால் சிறுமியின் வீட்டை சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த இரு சக்கர வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

'இளைஞர் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்' எனக் கூறி தரங்கம்பாடி- சென்னை சாலையில் அமர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதிப் பேச்சுவார்த்தை - காவல்துறை குவிப்பு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதையடுத்து, காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 'இளைஞரின் சடலத்தைப் பெற மாட்டோம்' என அவரின் உறவினர்கள் கூறியதால், வருவாய்த்துறை அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் (ஜூலை 1) நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, 'பிரேதப் பரிசோதனையின் முதல்நிலை அறிக்கை தரப்பட வேண்டும் எனவும் தங்களால் பரிந்துரைக்கப்படும் இரண்டு மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்' எனவும் இறந்த இளைஞரின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் இளைஞரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

வழக்கில் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளைச் சிறுமியின் பெற்றோர் மறுத்துள்ளனர்.

'அவர்கள் தான் காரணம்' - பெண்ணின் பெற்றோர்

செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ள சிறுமியின் தாய், "எங்களுக்கு ஒரு பெண் குழந்தை தான் உள்ளது. அவளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என விரும்பினோம். நாளை கல்லூரி திறக்கப்பட உள்ளது. முதல்நாள் இரவு வரை நன்றாகப் பார்த்துக் கொண்டோம்." எனக் கூறியுள்ளார்.

"இரவு சுமார் 1.30 மணிக்கு மேல் எங்கே சென்றாள் எனத் தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ள அவர், "நாங்கள் அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறுகின்றனர். பெண்ணைப் பறிகொடுத்துவிட்டு இப்படி செய்வாமோ?" எனக் கேள்வி எழுப்பினார்.

"இந்தச் சம்பவத்தில் எங்கள் வீட்டை அடித்து நொறுக்கிவிட்டனர். என் அக்கா மகனுக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் உறவினர்களை போலீஸ் கைது செய்துவிட்டது" எனவும் அவர் தெரிவித்தார்.

பெண்ணின் தந்தை அளித்துள்ள பேட்டியில், "என் பெண்ணை நானே கொன்றுவிட்டதாகக் கூறுகின்றனர். என் மகளின் இறப்புக்கு அவர்கள் தான் காரணம்" என்கிறார்.

29 ஆம் தேதியன்று பார்த்திபனை தாக்கியதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் அந்தப் பையனை தாக்கவில்லை" என்று மட்டும் லட்சுமிகாந்தன் பதில் அளித்தார்.

"பார்த்திபன் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்யுமாறு காவல்துறையிடம் கூறினோம். ஆனால், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்," என்கிறார், மயிலாடுதுறை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்குமார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியான பிறகு மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்பதால் அதன்பிறகு முடிவெடுக்கலாம் எனக் காவல்துறை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு