'அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை' - டிரம்புக்கு பின்னடைவாக அமைந்த தீர்ப்பில் நீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர், வெள்ளை மாளிகை செய்தியாளர் & கெய்லா எப்ஸ்டீன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை பெற அரசியலமைப்பு ரீதியான உரிமை உள்ளது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் 150 ஆண்டுகள் பழமையான இக்கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டொனால்ட் டிரம்ப்பின் முயற்சியை நிராகரித்துள்ளது.
6-3 என்ற விகிதத்திலான முடிவில், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், அமெரிக்காவில் "சட்டவிரோதமாக அல்லது தற்காலிகமாக தங்கியிருக்கும் பெற்றோர்களுக்கு" பிறக்கும் குழந்தைகள், 14-வது திருத்தத்தின் கீழ் "பிறப்பிலேயே குடிமக்கள்தான்" என்று தீர்ப்பளித்தார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் இந்த உரிமையைக் கட்டுப்படுத்த முயன்றார், ஆவணமற்ற குடியேறியவர்கள் மற்றும் சில தற்காலிகப் பயணிகளின் குழந்தைகள் "அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள்" அல்ல, எனவே அவர்கள் பிறப்புரிமைக் குடியுரிமைக்குத் தகுதியற்றவர்கள் என்று வாதிட்டார்.
இந்தத் தீர்ப்பு டொனால்ட் டிரம்ப்பின் குடியேற்றம் தொடர்பான திட்டத்திற்கு ஒரு பெரிய பின்னடைவாகும். இது சிவில் உரிமைக் குழுக்களால் வரவேற்கப்பட்டுள்ளது.
ட்ரூத் சோஷியலில், நீதிமன்றத்தின் முடிவு "மிகவும் மோசமானது" என்று டொனால்ட் டிரம்ப் கூறினார், மேலும் சட்டத்தின் மூலம் பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரத் தொடர்ந்து போராடப் போவதாக கூறினார்.
"நீண்ட மற்றும் சிக்கலான அரசியலமைப்பு திருத்தம் எதுவும் தேவையில்லை," என்று அவர் கூறினார். "நமது நாட்டிற்கு மிகவும் செலவு வைப்பதும், அநீதியானதுமான பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணிகளை நாடாளுமன்றம் தொடங்க வேண்டும்." என கூறியுள்ளார்
அமெரிக்கா 1868 முதல் நாட்டில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை வழங்கி வருகிறது, இந்த உரிமை அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிந்தைய அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளால் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்னணியில் அப்போது விடுவிக்கப்பட்ட அடிமைகளுக்காக உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 14-வது திருத்தம், "இங்கு பிறந்து அல்லது குடியுரிமை பெற்று, அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து நபர்களும் அமெரிக்காவின் குடிமக்கள் ஆவர்" என்று கூறுகிறது.
"குடியுரிமை என்பது, அப்போதும் இப்போதும், உரிமைகளைப் பெறுவதற்கான உரிமையாகும் - நமது அரசியல் சமூகத்தில் சுதந்திரமாகப் பங்கேற்பதற்கானது," என்று நீதிபதி ராபர்ட்ஸ் பெரும்பான்மை கருத்தில் எழுதினார். "பதினான்காவது திருத்தத்தை உருவாக்கியவர்கள் அந்த வாக்குறுதியை 'இந்த நிலத்தில் சுதந்திரமாகப் பிறந்த ஒவ்வொரு நபருக்கும்' நீட்டித்தனர்," என்று அவர் எழுதினார்.
"நாங்கள் இன்று அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறோம்," என்று தலைமை நீதிபதி கூறினார்
14-வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள்" என்பதிலிருந்து நாட்டில் நிரந்தரமாக வாழாத மக்களின் குழந்தைகளை விலக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வாதிட்டது.

பட மூலாதாரம், Reuters
தீர்ப்புக்கு எதிர்ப்பு நீதிபதிகள் கூறியது என்ன?
நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளில், நீதிபதிகள் கிளாரன்ஸ் தாமஸ், நீல் கோர்சுச் மற்றும் சாமுவேல் அலிட்டோ ஆகிய மூவர் இந்த தீர்ப்பிலிருந்து மாறுபட்டனர்.
நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ், 14-வது திருத்தச் சட்டம் அரசியல் நோக்கங்களுக்காக வேறு விதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். மேலும், இந்தத் திருத்தம் முதலில் யாருக்காக உருவாக்கப் பட்டதோ அந்த விடுவிக்கப்பட்ட அடிமைகள் பிற நாடுகளுக்கு விசுவாசம் இல்லாத "அமெரிக்கர்கள்" என்றும் வாதிட்டார்.
மாறுபட்ட கருத்துடைய மற்றொரு நீதிபதியான சாமுவேல் அலிட்டோ, " ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு பின்னர் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பும் வெளிப்படையான நோக்கத்துடன் அமெரிக்காவிற்கு வருபவர்கள் உட்பட இந்த நாட்டில் பிறக்கும் எவருக்கும் குடியுரிமையை வழங்கும் இந்த தீர்ப்பு ஒரு "கடுமையான தவறு" என்று விவரித்தார்.
இந்த வழக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அவர் ஏப்ரல் மாதத்தில் வாய்மொழி வாதங்களைப் பார்ப்பதற்காக நீதிமன்றத்திற்கு குறுகிய ஆனால் வரலாற்று சிறப்புமிக்க வருகை தந்தார்.
கடுமையான குடியேற்ற விதிகளின் தீவிர ஆதரவாளரான வெள்ளை மாளிகையின் சீஃப் ஆஃப் ஸ்டாப் ஸ்டீபன் மில்லர் உச்ச நீதிமன்ற வரலாற்றில் "மிகவும் அழிவுகரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் முடிவுகளில் ஒன்று" என்று எக்ஸ் தளத்தில் இதைக் குறிப்பிட்டார்.
ஆனால் குடியேற்ற ஆதரவாளர்களும் நிர்வாகத்தை விமர்சிப்பவர்களும் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடினர்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினரை வழிநடத்தும் ஹக்கீம் ஜெப்ரிஸ், சட்டத்தைப் பிரயோகித்து, அரசியலமைப்பால் வழிநடத்தப்பட்டதன் மூலம், உச்ச நீதிமன்றம் "இறுதியாக அமெரிக்காவில் பிறந்த அனைத்து நபர்களும் அமெரிக்க குடிமக்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது" என்று கூறினார்.
"இதில் எந்தக் கேள்வியும் இல்லை, இருக்கவும் கூடாது," என்று ஜெப்ரிஸ் கூறினார்.
சட்டத்தின் கீழ் சிவில் உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் குழுவின் தலைமை வழக்கறிஞர் டேரியலி ரோட்ரிக்ஸ், இந்தத் தீர்ப்பு "நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாம் உண்மை என்று அறிந்ததை உறுதிப்படுத்துகிறது" என்று கூறினார்.
"அவர்களின் பெற்றோரின் சட்டப்பூர்வ நிலையைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க மண்ணில் பிறக்கும் எவரும் அமெரிக்க குடிமக்களாகவே பிறக்கிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார். ஒரு தேசமாக நமது கூட்டு விருப்பத்தின் மீதான நம்பமுடியாத சோதனையை நாம் சகித்துக்கொண்டு வெற்றி பெற்றுள்ளோம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























