'ஆசைப்பட்டு வேலைக்கு சென்றான்' - கத்தார் தொழிற்சாலை வெடிப்பு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினர் வேதனை

கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த தமிழரான பபித்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த தமிழரான பபித்
    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) இரவு ஏற்பட்ட விபத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பபித் (26), சஜித்குமார் (25), சுவின் (24) ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களது உடல்களை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொண்டுவருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கத்தாரின் ராஸ் லஃப்பானில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 66 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்றும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

'தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட விபத்து' என இதை விவரித்துள்ள கத்தாரின் உள்துறை அமைச்சகம், "காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் பணிகள் முடிவடைந்துள்ளன" எனத் தெரிவித்துள்ளது.

கத்தார் நாட்டின் தொழிற்துறை மண்டலத்தில் கடந்த 21ம் தேதி ஏற்பட்ட தீ விபத்து.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கத்தார் நாட்டின் தொழிற்துறை மண்டலத்தில் கடந்த 21ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது

'ஒரே பகுதியைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு'

இந்த விபத்தில் இறந்த தமிழர்கள் மூவருமே திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதில் அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த 24 வயதான பொறியாளர் சுவின் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் தனது முதல் வேலைக்காக கத்தார் சென்றுள்ளார்.

"அவன் ஆசைப்பட்டு அந்த பணிக்குச் சென்றான். இரான் தாக்குதல்கள் நடந்தபோது, இந்த வேலை வேண்டாம் வந்துவிடு எனச் சொன்னேன், ஆனால் அவன் 'இந்த வேலையில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்' எனக் கூறினான்" என்கிறார் சுவினின் தந்தை மைக்கேல்.

"அங்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை தான் விடுமுறை. சனிக்கிழமை இரவு கூட பேசினேன். இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து திங்கள்கிழமை காலை எங்களுக்கு அவனுடன் பணிபுரிபவர்கள் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார்கள். பிறகு, இன்று (ஜூன் 23) காலை இந்திய தூதரகத்திடம் இருந்து அழைத்து சுவின் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்கள்" என்கிறார் அவர்.

தனது மகனின் உடலை விரைவாக தமிழகம் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார் மைக்கேல்.

சுவினின் தந்தை மைக்கேல்
படக்குறிப்பு, சுவினின் தந்தை மைக்கேல்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த விபத்தில் உயிரிழந்த ராதாபுரத்தில் உள்ள சிவகாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சஜித்குமார், கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கத்தாரில் பணிபுரிந்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தார்கள்.

"சஜித்தின் அப்பா கூலித்தொழிலாளி, கஷ்டப்பட்டு தனது மகனை பொறியியல் படிக்க வைத்தார். இவன் தான் அவனது பெற்றோருக்கு ஒரே மகன், குடும்ப கஷ்டத்துக்காக அவன் இந்த வேலைக்குச் சென்றான். இப்போது இந்தக் குடும்பம் அவனை இழந்து நிற்கிறது" என்கிறார் சஜித்தின் சித்தப்பா முத்து கிருஷ்ணன்.

ராஸ் லஃப்பான் துறைமுகம் உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை துறைமுகமாகும், மேலும் இது உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி வசதியைக் கொண்டுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரானிய தாக்குதல்களுக்கு இலக்கானது.

"இரான் தாக்குதல்கள் நடைபெற்றபோது, நாங்கள் பணிக்குச் செல்லவில்லை, அறையில் தான் தங்கியிருந்தோம். அப்போது தான் அறை அதிரும் அளவுக்கு வெடிச்சத்தங்கள் கேட்டன. அதன் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) இரவு தான் மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது" என்று கூறுகிறார் சஜித்தின் உறவினரான அருள்.

சஜித்தின் சித்தப்பா முத்து கிருஷ்ணன்
படக்குறிப்பு, சஜித்தின் சித்தப்பா முத்து கிருஷ்ணன்

ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தின் பார்சான் உள்ளூர் எரிவாயு விநியோக நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் அருள்.

"ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10.30 மணி அளவில் ஒரு பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டது. மீண்டும் இரான் தாக்குதல் நிகழ்ந்துள்ளது என நாங்கள் நினைத்து, அறைகளை விட்டு வெளியே வரவில்லை" என்கிறார் அவர்.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த வெடிப்பு கட்டடங்களின் ஜன்னல்களை அதிர வைத்ததுடன், மத்திய தோஹா முழுவதிலும் உணரப்பட்டது, இது ராஸ் லஃப்பானில் இருந்து 70 கிமீ தொலைவில் வசிக்கும் மக்களிடையே கூட பதற்றத்தை ஏற்படுத்தியது.

"ஞாயிற்றுக்கிழமை இரவு ஷிஃப்ட்டில் சஜித் மற்றும் பபித் வேலைக்குச் சென்றுள்ளார்கள் என்பது அப்போது எங்களுக்கு தெரியவில்லை. அடுத்த நாள் காலை தான் எங்களுக்கு இந்த விபத்து குறித்தும் அதில் சஜித் மற்றும் பபித் மாட்டிக்கொண்டதும் தெரியவந்தது. இதில் பபித்தின் உடலை கண்டுபிடித்துவிட்டோம் என காலையில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள். சஜித்தின் உடல் குறித்து இன்னும் எங்களுக்கு விவரம் தெரியவில்லை" என்கிறார் அருள்.

கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த தமிழரான சஜித்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த தமிழரான சஜித்

கத்தாரின் அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனமான கத்தார் எனர்ஜி, "ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் பார்சான் உள்ளூர் எரிவாயு விநியோக நிலையத்தில் வெடிப்பு நிகழ்ந்ததை" உறுதிப்படுத்தியுள்ளது.

கத்தாரின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தச் சம்பவம் நடந்த உடனேயே, ராஸ் லஃப்பான் தொழிற்துறை மண்டலத்தில் உள்ள அவசரகால மீட்புக் குழுக்களுடன் இணைந்து பாதுகாப்பு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கினர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர், சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகள் முடிவடைந்துள்ளன." எனத் தெரிவித்துள்ளது.

"நான் இங்கு பணிக்குச் சேர்ந்து 7 மாதங்கள் தான் ஆகிறது, சஜித் இருந்த நம்பிக்கையில் தான் எனது பெற்றோர் என்னை இங்கு அனுப்பி வைத்தார்கள். இப்போது எனக்கும் எனது பெற்றோருக்கும் இந்தச் சம்பவத்தால் ஒரு பெரும் அச்சம் உருவாகியுள்ளது" என்கிறார் அருள்.

தமிழக அரசு கூறியது என்ன?

கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த தமிழரான சுவின்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த தமிழரான சுவின்

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பபித் (26), சஜித்குமார் (25), சுவின் (24) ஆகியோர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், "இந்த விபத்தில் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள மூன்று தமிழர்களும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். மூவரது உடல்களையும் விரைவாக தமிழகம் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு