"தகுதிநீக்க கோரிக்கை முதல் பொதுக்குழு வரை"- அதிமுக எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவை, கட்சி நிர்வாகம் என்கிற இரு வேறு நிலைகளில் அதிமுக சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பும் தனியாக ஆலோசனை நடத்தினர். பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என சிவி சண்முகம் கோரிய நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் அடங்கிய தரப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரி வருகிறது.

இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் தன்னை கொறடாவாக நியமித்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் கூறிய சி.விஜயபாஸ்கர், நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை எதிர்த்து வாக்களித்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மறுபுறம் கட்சி பொதுக் குழுவை கூட்ட உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் எஸ்.பி.வேலுமணி தரப்பு ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவர், கொறடா நியமனம் மற்றும் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதும் பொதுக் குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதும் தமிழக அரசியல் அரங்கில் உற்றுநோக்கப்படுகிறது.

"தலைவர்களின் ஈகோ கட்சி வளர்ச்சியை தடுக்கிறது"

அதிமுகவில் இருநது விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர் செம்மலை செய்தியாளர்களிடம் பேசுகையில், தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் இடையே இருக்கிற ஈகோ (Ego) கட்சியின் வளர்ச்சியை தடுத்து வருவதாக கூறினார்.

"கட்சி வளர்க்கப்படும் என்ற எண்ணம் இருந்தாலொழிய இந்தக் கட்சியை அரசியலில் காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும். இந்த இயக்கம் தமிழக அரசியலிலே நிலையாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும் அதிமுகவின் இருப்பு அவசியம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்." என்று அவர் கூறினார்.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தனது எக்ஸ் பக்கத்தில், "கட்சித் தாவல் தடைச் சட்ட புகாருக்கு ஆளாகிய ஒருவரை தகுதி நீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை சபாநாயகருக்கு அதிகாரம் தருகிறது. அவ்வாறு புகாருக்கு உள்ளானவரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் முன் பிரிவு 163 - ன் படி முதல்வரிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்தி அடைவது அவசியம்!.

விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதை எதிர் கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் பிரிவு 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யலாம்! மணிப்பூர் மாநில அமைச்சர் தௌனாவ்ஜம் ஷியாம்குமார் சிங் வழக்கில் 2020-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதற்கு நல்ல உதாரணம்! ஆக எல்லா நிலைகளிலும் அரசியலமைப்பு சட்டமே மேலோங்கி நிற்கும்! இதுதான் நமது அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பாகும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் தரப்பு எம்.எல்.ஏவான லீமா ரோஸ். "தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தொகுதியின் வளர்ச்சிக்காகவும் கூட்டணியில் இணைந்துள்ளோம். அதிமுகவை ஒன்று சேர்ப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது." எனத் தெரிவித்தார்.

பொதுக் குழு விவகாரத்தில் முரண்படும் அதிமுக குழுக்கள்

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிவி சண்முகம் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் எனத் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர், "2019-இல் இருந்து தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும், கலந்தாலோசிக்க வேண்டும். அதிமுகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்து வலிமைப்படுத்த வேண்டும். இதற்கான கோரிக்கைகளை நாங்கள் வைத்தோம்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "2024 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் சேர்க்க வேண்டும் எனக் கூறினோம்.

"தவெக உடன் இணைந்து வலிமையான கூட்டணியை அமையுங்கள் என நாங்கள் கூறினோம். தவெக தரப்பில் இருந்தும் கூட்டணி வைக்க பேச்சு நடந்தது. கூட்டணி பேச்சு நடத்த வந்தவர்களை உதாசீனப்படுத்தினார். தவெக மட்டுமல்ல, தேமுதிக மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியையும் கூட்டணியில் சேர்ப்பதற்கும் அவருக்கு மனமில்லை. தேமுதிக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். ஓ.பி.எஸ்-ஐ உறுப்பினராகக் கூட சேர்க்கவில்லை. அதிமுகவை படுதோல்வி அடையச் செய்ததற்கு யார் காரணம். நாங்கள் யாரையும் குறை சொல்லவில்லை, தவறுகளைத் தான் சுட்டிக் காட்டினோம்." என்றார்.

பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எனக் கோருவதாகக் கூறும் சிவி சண்முகம், "ஒருபுறம் பேசலாம் என்கிறார், ஆனால் மறுபுறம் நிர்வாகிகளைக் கட்சியிலிருந்து நீக்குகிறார். அச்சுறுத்தலிலே வைத்திருந்தால் கட்சி வளர முடியாது. கட்சி பிளவு ஏற்படுகிறபோது பொறுப்பில் இருப்பவர்கள் கையெழுத்திட வேண்டும். நீதிமன்றத்திலோ தேர்தல் ஆணையத்திலோ வழக்கு வந்தால் நாங்கள் கையெழுத்திட்டால் தான் செல்லும். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் கையெழுத்திட்டால் செல்லாது." என்றார்.

பொதுக்குழு தொடர்பாக பேசிய அவர், "எங்களுக்கு வேண்டியது ஒற்றுமையான அதிமுக தான். ஆனால் பொதுக் குழுவை கூட்டச் சொன்னால் மறுக்கிறார்கள்." என்றும் தெரிவித்தார்.

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. மறுபுறம் எஸ்.பி.வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினரும் ஆலோசனை நடத்தினர்

அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பிவி ரமணா, "இன்று கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். பொதுக்குழு மற்றும் செயற்குழு பற்றி எதுவும் பேசப்படவில்லை என்று கூறிய அவர் அது தொடர்பான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார்." என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ் மணியன் பொதுக்குழுவை நடத்துவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தார்.

"கேள்விக்கு உள்ளாக்கப்படும் தலைமை"

அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருவதால் கட்சியை ஒன்றுபடுத்த வேண்டும் என்கிற குரல்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா

"பல கட்சிகளிலும் விலகிச் சென்றவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். ஆனால் அதிமுகவில் அது நடக்கவில்லை. கட்சியை மீட்டெடுக்க தலைவர்கள் விவாதிக்க வேண்டும். தலைமை கேள்விக்கு உள்ளாக்கப்படுவது இயல்பு," என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுக்குழுவைப் பொருத்தவரையில் எண்ணிக்கை என்பது முக்கியப் பங்கு வகிக்கும் என்கிறார் துரை கருணா.

"அதிமுகவின் பொதுக் குழுவில் 2000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பாலான உறுப்பினர்கள் பொதுக் குழுவை கூட்ட வேண்டும் எனக் கோரினால் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்பந்தம் ஏற்படும். அவ்வாறு செய்ய மறுத்தால் அடுத்து நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையத்தை அணுகலாம். கட்சி மீது உரிமை கோருவது, சின்னம் தொடர்பாக சிக்கல்கள் எழுவது எல்லாம் கடைசி கட்டமாகத் தான் நிகழும்." என்றார்.

தேர்தல் ஆணையத்தின் விதிகளைப் பொருத்தவரை குறிப்பிட இடைவெளியில் கட்சிப் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

அதிமுகவின் பொதுக்குழு விதிகள் என்ன?

தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள அதிமுக கட்சி விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை கட்சிப் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் அல்லது பொதுச் செயலாளர் எப்பொழுது தேவை எனக் கருதுகிறாரோ அப்போது 15 நாட்கள் அறிவிப்புடன் நடத்தப்பட வேண்டும். பொதுக் குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் கலந்து கொள்ள வேண்டும்.

ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சிறப்பு பொதுக் குழு நடத்த வேண்டும் எனக் கோரினால் பொதுச் செயலாளர் 30 நாட்களுக்குள் பொதுக் குழுவை கூட்ட வேண்டும்.

நீதிமன்றத்தை நாட முடியுமா?

சட்டப்பேரவையைப் பொருத்தவரை பேரவைத் தலைவரின் அதிகாரம் தான் இறுதியானது என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பேரவைத் தலைவர் முடிவெடிக்கிற வரையில் நீதிமன்றம் தலையிட முடியாது. அவர் எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம், காலம் தாழ்த்தலாம். கடந்த கால முன்னுதாரணங்கள் நிறைய இருக்கின்றன.

பேரவைத் தலைவர் முடிவெடுத்த பிறகு நீதிமன்றத்தை அணுகலாம் அல்லது கால தாமதம் ஆகின்றது என நீதிமன்றத்தை நாடினால் முடிவெடுக்குமாறு அவருக்கு உத்தரவிடலாம் அல்லது காலக்கெடு நிர்ணயிக்கலாம்.

பொதுக்குழு என்று வருகையில் அங்கு எண்ணிக்கை முதன்மையானது, கட்சி தலைவருக்கு அதிகாரம் இருந்தாலும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடலாம்." என்று தெரிவித்தார்.

"கடந்த கால உதாரணங்கள்"

சட்டப்பேரவையைப் பொருத்தவரை அதிமுக இரு வேறு தரப்புகளாக இயங்க வாய்ப்புள்ளது எனக் கூறும் துரை கருணா அதற்கு ஓர் உதாரணத்தையும் முன்வைக்கிறார்.

"1989-இல் அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்றே அங்கீகரிக்கப்பட்டிருந்தன. கட்சி இரு குழுக்களாக இருந்தாலும் ஒரே கட்சியாக இருந்தாலும் சட்டப்பேரவையில் இருவேறு குழுக்களாக அங்கீகரிப்பதற்கே வாய்ப்பு அதிகம் உள்ளது," எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் விவரித்த அவர், "பேரவைத் தலைவருக்கு அதிகாரமும், பேரவைக்கு என்று இறையாண்மையும் உள்ளது. எனவே சட்டப்பேரவைப் பொருத்தவரை தலைவரின் முடிவு தான் இறுதியானது. ஒரு தரப்பு எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது எனக் கூற முடியாது. கட்சித் தாவல் தடை சட்டத்தில் உள்ளபடி மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கை இல்லையென்றால் கட்சித் தலைவரின் கடிதத்திற்கு செல்வாக்கு அதிகம்.

ஆனால் பேரவைத் தலைவர் அதில் முடிவெடுக்காமல் இருக்கலாம், அல்லது காலம் தாழ்த்தலாம் அல்லது தனிக் குழுக்களாக அங்கீகரிக்கலாம். இந்தச் சூழலில் இரண்டு தரப்பும் கடிதம் கொடுத்துள்ள நிலையில் இரண்டையும் அங்கீகரிக்காமல் அவர் விடலாம். அது அவரின் முடிவுக்கு உட்பட்டது. கொறடாவே இல்லாத சூழலில் கொறடா உத்தரவை அமல்படுத்த முடியாத சூழலும் உருவாகலாம். பேரவைத் தலைவர் ஒரு முடிவை எடுத்தால் அதன் பிறகு சட்டப் போராட்டங்கள் நடக்கலாம். ஆனால் இதற்கு நீண்ட காலம் எடுத்துவிடும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு